August 2, 2021, 5:49 am
More

  ARTICLE - SECTIONS

  செய்யும் காரியத்தில் ஈடுபாடு! அனுமனின் அளவற்ற பக்தி!

  ramar
  ramar

  வனவாசம் முடிந்து அயோத்தியில் தன் அரசாட்சியைத் தொடங்கி நடத்திவரும் ஸ்ரீராமனுக்குத்தான் எத்தனை எத்தனை பணியாட்கள்… மற்றும் அவன் மேல் பேரன்பு கொண்டு அவனுக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் உறவினர்கள், சுற்றத்தார்கள்.

  இவ்வளவு பேர் இருந்தும் ராமசேவையை மட்டுமே மனதில் கொண்டு வேறு சிந்தனைக்கே இடம் கொடாமல் பணிபுரிந்து வந்த அஞ்சனை மைந்தன் மாருதிக்கு வந்த சோதனைதான் என்னே…!

  ராமனுக்கு விசிறி விடுவதும், உணவு பரிமாறுவதும், உடைகள், ஆபரணங்கள் கொண்டு அலங்கரிப்பதும், காலணி அணிவிப்பதும், அரசவைக்கும் மற்ற எல்லா இடங்களுக்கும் செல்லும்போதும் உடனிருந்து பணிபுரிவதும், என்று இராம பிரானின் பரிபூர்ண தாசனாக திகழ்ந்து வந்தார் அனுமான்.

  இதனைக் கண்டு சீதாதேவிக்கு அத்தனை ஆனந்தம். தன்னைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் எப்போதும் இராம சேவையிலேயே முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்கிறாரே என்று. இருப்பினும் சீதா தேவிக்கும் கொஞ்சம் நெருடல்.

  கருணை மனதுடன் அனுமனின் சேவையை புரிந்து கொண்டவள்தான்.
  ஆனாலும் கணவனுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமைகள் உண்டல்லவா!

  மேலும் இராமனுக்குரிய சகல சேவைகளையும் வாயுபுத்ரன் ஒருவனே செய்வதால் மற்ற எவர்க்குமே இந்த பாக்கியம் கிட்டாமல் போகிறதே. மற்றும் தனக்கான அடிப்படை உரிமையான சேவைகளைக் கூட செய்ய இயலவில்லை, அனைத்தையும் இவர் ஒருவரே செய்து விடுகிறாரே என்று சிறிது பொறாமையும் கொண்டாள்.

  அனுமனை முழுவதுமாய் புரிந்து கொண்ட சீதா தேவிக்கே இப்படியென்றால், மற்றவர்களின் மனக் கருத்துக்களைக் கேட்க வேண்டுமா? ஆனாலும் எல்லாருமே மனதிற்குள் தான் புழுங்கிக் கொண்டனர். வெளியே சொல்லவில்லை.

  இவ்விதமான சூழலை இராமன் காதுக்கு எடுத்துச் சென்றாள் சீதாதேவி. நிலைமையைப் இராமனும் புரிந்து கொண்டான். எப்போதுமே பிரஜைகளின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவது அரசனின் கடமைதானே! மற்றும் மனையாளின் சரியான விருப்பத்தையும் நிறைவேற்ற வேண்டிய கணவனுக்குரிய பொறுப்பும் இராமனுக்கு உண்டே.

  எனவே அனுமனை அழைத்து, சரி அனுமந்தா, உனக்கென ஏதேனும் ஒரே ஒரு வேலையை மட்டும் தேர்ந்தெடுத்து நீ செய். மற்ற அனைவரும் அவரவர்களுக்கு ஏதுவான காரியங்களில் ஈடுபடட்டும் என்று கட்டளையிட்டார்.

  கட்டளை இட்டது இராமனாயிற்றே, அவர் பேச்சை மீறவும் இயலாது. ஏன் இப்படி சொன்னீர்கள்? நான் தங்கள் பக்தன், தாஸன், என்னைத் தவிர வேறு ஒருவரும் தங்களுக்குப் பணிவிடை புரிய விட மாட்டேன் என்று கோபிக்கவும் இயலாது.

  எவ்வகையில் இச்சூழலை சமாளிப்பது என்று யோசித்தார். உனக்கான வேலை ஒன்றே ஒன்றில் மட்டும் ஈடுபாடு என்று சொல்லி உள்ளார். அவ்வாறாக எதில் ஈடுபடுவது என்று சிந்தித்தார்.

  ஒருபக்கம் அனைத்து ராம காரியங்களிலும் பங்கு கொள்ள முடிய வில்லையே என்ற வருத்தம் துக்கிக்கிறது. மறுபக்கம் புத்தி பலத்திற்கு பேர் போனவர் ஆயிற்றே அனுமன். எனவே யோசனையில் ஆழ்ந்தார்.

  விசிறி கொண்டு காற்று வீசலாம் என்று ஒரு யோசனை. ஆனால், விசிறி மேலும் கீழும் செல்லும்போது இராமனின் கருணை பொங்கும் முகத்தை முழுவதுமாக தொடர்ந்து காண முடியாது…!

  தனக்குள்ளாகவே பல வகையில் ராமனுடன் எப்போதும் இருக்க வேண்டும், என்ற இலக்கை மனதில் கொண்டு என்ன செய்தால் இராமனின் மிக அருகில் இருப்பதை யாரும் பிரிக்க முடியாதபடி செய்ய இயலும் என்று யோசித்தார். உண்மையான பக்திக்கு ஏதேனும் வழி கிட்டாமலா போய் விடும்?

  ஆஹா, கடைசியில் கிடைத்து விட்டது. ஆம் கேட்க மிக அற்பமாகத் தோன்றலாம், ஆனால் அந்த சேவைதான் இதற்கு சரியான வழி என்று குதித்தோடினார் ஆஞ்சநேயர். இராமரின் பக்கம் நின்று வினயமாக இதைத் தெரிவித்தவுடன் ஹோ….வென சிரித்து விட்டார் இராமர்.

  அது இராமர் கொட்டாவி விடும்போது வாயில் சிட்டிகை போடுவதுதான் அந்த வேலை! ஆஞ்சநேயரின் இந்த சேவையில் தான் எத்தனை அர்த்தங்கள் உள்ளது? இராமன் எப்போது கொட்டாவி விடுவார் என்பது இராமனுக்கே தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

  இந்த வேலையில் மட்டும்தான் ராமன் உண்ணும் போதும், உறங்கும் போதும், நிற்கும் போதும், அமர்ந்துள்ள போதும், நடக்கும் போதும், அரசாட்சியிலும், வெளியிடங்களுக்குச் செல்லும் போதும் என்று எல்லா இடங்களிலும், அனைத்துச் சூழலிலும் கூடவே இருக்கலாம்.

  எனது பணிக்காக காத்து உள்ளேன் என்று யார் வந்து சிறிது விலகச் சொல்லிக் கேட்டாலும் விலக மறுக்கலாம். எப்போதும் அவர் திருமுகத்தையே பார்த்துக்கொண்டிருக்கலாமே! கேட்டால் அவர் கொட்டாவி விடுகிறாரோ என்று பார்க்கிறேன் என்று சொல்லலாம்! எப்போதும் உரிமையுடன் இராமனுடன் இருக்க முடியும் என்றுதான் இப்படி ஒரு வேலையாக தேர்ந்தெடுத்தார்.

  இதனை அனைவரிடமும் தெரிவித்த இராமன் கூறினான், அனுமந்தனின் பக்தியையும், பூரித்துப் போகும் குழந்தைக்கு ஈடான நிர்மலமான மனோபாவத்தையும் பாருங்கள். எல்லோருமே யார் யார் எந்த காரியத்தில் ஈடுபடுகிறீர்களோ அதில் உள்ள திருப்தியை மறந்துவிட்டு அனுமனையை கவனித்து வந்தீர்கள்.

  அனுமனுக்கு இது சோதனையாகத் தோன்றினாலும் தன்னைத்தானே நிரூபிக்க, தன் சேவையில் மேலும் சிறப்பாக பணியாற்ற முயலுவான் என்பதால் தான் இவ்விதமாக சோதித்தேன்.

  யார் யார் எக்காரியத்தைச் செய்கிறீர்களோ அதில் உள்ள ஈடுபாட்டிலும், திருப்தியிலும்தான் இறைவன் சேவை நிறைந்துள்ளது என்றார். இதன் மூலம் மேலும் அனுமன் அவர்களுக்கு நெருங்கிய அன்புக்குரியவன் ஆனான்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  28FollowersFollow
  74FollowersFollow
  1,336FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-