October 22, 2021, 1:32 am
More

  ARTICLE - SECTIONS

  தென்காசி: கணவன் சந்தேகத்தால் குழந்தைகளுடன் தீக்குளித்த மனைவி!

  kowri kanaka - 1

  கடையம் அருகேயுள்ள செக்கடியூர் பகுதியைச் சேர்ந்த தங்கையாவின் மகன் சுரேஷ் (35). அடிப்படையில் கூலித் தொழிலாளியான இவருக்கும் தென்காசி மங்கம்மாள் பகுதியைச் சேர்ந்த மோகன் ராஜ் மகள் கவுரி கனகா (30) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

  இவர்களுக்கு கீர்த்தனு (5) என்ற மகனும் இலக்கியா (3) என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் சென்னை மற்றும் கேரளா சென்று கூலித் தொழிலில் ஈடுபட்டுவந்தார். அவர் வீடு திரும்புகிறபோதெல்லாம் தன் மனைவி கவுரி மீது சந்தேகப்பட்டு, அடிக்கடி அவருடன் தகராறு செய்துவந்திருக்கிறார்.

  சந்தேகப் பேர்வழியான தன் கணவன் தன்னிடம் அடிக்கடி தகராறு செய்தது கண்டு வேதனை அடைந்த அவர், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் சுரேஷ் மீது புகார் அளித்திருக்கிறார்.

  ஆனால் அவர்கள் கணவன் மனைவி இருவரையும் வரவழைத்து, சமாதானம் பேசி அனுப்பியுள்ளனர். வீடு வந்த பிறகும் சந்தேகம் காரணமாக சுரேஷ் தன் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துவந்ததால் வெறுத்துப்போன கவுரி கனகா, குழந்தைகளுடன் தென்காசியிலுள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். கடந்த 5 மாதங்களாக கவுரி கனகா தனது தாய் வீட்டிலேயே இருந்திருக்கிறார்.

  அந்த சமயம் சுரேஷ் தன் மனைவி கவுரி கனகாவைப் பற்றி அவரது தாய் வீட்டின் பக்கத்தில் இருப்பவர் மூலமாகக் கேட்டறிந்ததாகத் தெரிகிறது.

  இந்த நிலையில், உறவினர்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தன் மனைவி மற்றும் குழந்தைகளைக் கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் செக்கடியூருக்குத் திரும்ப அழைத்து வந்திருக்கிறார் சுரேஷ்.

  வீடு திரும்பிய பிறகும் நடந்தவைகளை மனதில் வைத்துக்கொண்ட சுரேஷ், மனைவியின் நடத்தை குறித்து மீண்டும் பேசியிருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்குள் (14.07.2021) காலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

  இதன் பின் சுரேஷ், மதியம் அதே பகுதியைச் சேர்ந்த தன் உறவினரின் இறுதி நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டார். கணவரின் தன்மீதான சந்தேக நடவடிக்கைகளால் மிகவும் மனமுடைந்துபோன கவுரி கனகா, தனது வீட்டைப் பூட்டிவிட்டு, தன் இரண்டு குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றியவர், தனது மீதும் ஊற்றி தீவைத்து, தனது இரண்டு பிள்ளைகளையும் சேர்த்து கைகளால் கட்டிக்கொண்டு படுக்கையில் விழுந்திருக்கிறார்.

  சுரேஷ் வீட்டிலிருந்து புகை வருவதைக் கண்டு பதறிப்போன உறவினர் மற்றும் பொது மக்கள் பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கவுரி கனகாவும் குழந்தைகளும் உடல் கருகி இறந்துகிடந்தனர்.

  இதைக் கண்டு கதறி அழுத உறவினர்கள் போலீசுக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னிவளவன், கடையம் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் உள்ளிட்ட போலீசார் மூவர் சடலங்களையும் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர்.

  இதையடுத்து தடயவியல் துறை இணை இயக்குநர் ஆனந்தியும் வரவழைக்கப்பட, அவரது டீம் அங்குள்ள தடயங்களையும் சேகரித்தனர். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து மேல் விசாரணை நடத்திவருகின்றனர்.

  திருமணமாகி 6 ஆண்டுகளே ஆனதால் தென்காசி ஆர்.டி.ஓ. ராமச்சந்திரன் விசாரணை நடத்திவருகிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியைக் கனத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே நடந்த அந்த பரிதாப சோக சம்பவத்தால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ந்துபோயுள்ளனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,575FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-