இந்தியாவில் இருந்து அதிகமான தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக ரஷ்யா உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.3 கோடியே 41 லட்சம் கிலோ தேயிலை தூளை, ரஷ்யா இந்தியாவிலிருந்து கொள்முதல் செய்துள்ளது. இது மொத்த ஏற்றுமதி சதவீதத்தில் 17 சதவீதம் ஆகும். இதன் மூலம் இந்தியாவிற்கு 612 கோடி ரூபாய் அன்னிய செலாவணி கிடைத்துள்ளது.
இதேபோல உக்ரைன் உள்ளிட்ட காமன்வெல்த்தை சேர்ந்த 12 நாடுகள் அதிகளவில் இந்தியாவில் இருந்து தேயிலைத் தூளை கொள்முதல் செய்து வருகின்றன. போர் தொடங்கிய சில நாட்களில் ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள் யாரும் தேயிலைத் தூளை ஏலம் எடுக்க முன்வராததால், தேயிலைத்தூள் தேக்கம் அடைந்துள்ளது. போர் நீடிக்கும் பட்சத்தில் தேயிலை வர்த்தகத்தில் மேலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக கடந்த 5 நாட்களாக தேயிலை ஏற்றுமதி முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் குன்னூரில் நடந்த தேயிலை ஏலத்தில் 32 சதவீத தேயிலை தூள் விற்பனையாகவில்லைஎன கூறப்படுகிறது. ரூ.4 கோடி மதிப்பிலான தேயிலை தூள் தேக்கம் அடைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தொழிலை நம்பி உள்ள தொழிற்சாலை தொழிலாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் சிறு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது

