இந்தியா-மேற்கு இந்தியத் தீவுகள் மூன்றாவது டி20 போட்டி
சூர்யகுமார் யாதவின் அதிவேக அரை சதம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
நேற்று (02 ஆகஸ்டு,2022) பாசட்டரேவில் மீண்டும் ஒருமுறை இந்திய மே.இ. தீவுகள் அணிகளுக்கிடையேயான டி20 போட்டி நடைபெற்றது. இது இத்தொடரின் மூன்றாவது டி20 போட்டியாகும்.
மே.இ. தீவுகள் அணியை (20 ஓவர்களில் 164/5, கைல் மேயர்ஸ் 73, ரோவ்மன் போவெல் 23, புவனேஷ்குமார் 2/35) இந்திய அணி (19 ஓவரில் 165/3, சூர்யகுமார் யாதவ் 76, ரிஷப் பந்த் 33) வெற்றி பெற்றது.
பூவா தலையா வென்ற இந்திய அணி பந்துவீசத் தீர்மானித்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடினர். பவர் ப்ளேயில் அவர்கள் விக்கட் இழப்பின்றி 45 ரன்கள் எடுத்தனர். பிரண்டன் கிங் (20 பந்துகளில் 20 ரன்) 7.2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். ஒருபக்கம் கைல் மேயர்ஸ் (50 பந்துகள், 73 ரன்) நல்ல ஸ்ட்ரைக்ரேட் வைத்திருந்தபோதும் கிங், நிக்கோலஸ் பூரன் இருவராலும் ரன்ரேட்டை உயர்த்த முடியவில்லை.
அஷ்வின், பாண்ட்யா இருவரும் நன்றாகப் பந்துவீசினர். இந்தியப் பந்துவீச்சாளர்களில் ஆவேஷ்கான் அதிகமாக அடி வாங்கினார். 20 ஓவர் முடிவில் மே.இ. தீவுகள் அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 164 ரன் எடுத்தனர். ஆட்டம் தொடங்கும் முன்னரே ரோஹித் ஷர்மா எங்கள் அணி பவர் ப்ளே ஓவர்களில் அதிரடியாக ஆடும் எனச் சொல்லியிருந்தார்.
அதேபோல ரோஹித் ஷர்மா ஐந்து பந்துகளில் ஒரு ஃபோர், ஒரு சிக்சருடன் 11 ரன் அடித்தார். ஆனால் காயம் காரணமாக அவர் இரண்டாவது ஓவர், நாலாவது பந்தில் வெளியேறினார். பவர்ப்ளே முடிவில் இந்தியா 56 ரன் எடுத்திருந்தது. சூர்யகுமார் யாதவ் 17 பந்துகளில் 33 ரன் எடுத்திருந்தார்.
மற்றொரு பக்கம் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற கணக்கில் ஆடிக்கொண்டிருந்தார். 12ஆவது ஓவரில் 27 பந்துகளில் 24 ரன் அடித்து ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 14.3 ஓவர்கள் வரை விளையாடி 44 பந்துகளில் 76 ரன் அடித்து ஆட்டமிழந்தார். அவர் 26 பந்துகளில் அரைச் சதம் அடித்தது இன்றைய சாதனை. அப்போது 30 பந்துகளில் 29 ரன் தேவைப்பட்டது. அதனைச் சுலபமாக பந்த் அடித்து இந்திய அணிக்கு வெற்றி தேடித்தந்தார்.
சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
நாலாவது போட்டி ஃப்லோரிடாவில் ஞாயிற்றுக் கிழமை நடக்கிறது. இடையில் மூன்று நாள்கள் இடைவெளி இருப்பதால் அதற்குள் ரோஹித் ஷர்மா காயத்திலிருந்து குணமடைந்துவிடுவார் என எதிர்பார்க்கலாம்