
”பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு எதிர்ப்பு, தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க எதிர்ப்பு, விநாயகர் சதுர்த்திக்கு சுற்று சூழல் எதிர்ப்புக்கள் என தொடர்ந்து ஹிந்து மத பண்டிகைகளுக்கு எதிராக சதி நடக்கிறது,”என சிவகாசியில் பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச். ராஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சிவகாசியில் 8 லட்சம் மக்கள் வேலைவாய்ப்பு பெறும் பட்டாசு தொழிலுக்கு பல்வேறு மிஷினரிகள் மூலம் ஆபத்து ஏற்படுகிறது. தீபாவளிக்கு ஒரு நாள் பட்டாசு வெடிப்பதனால் காற்று மாசு ஏற்படுகிறது என கூறி சில தொண்டு நிறுவனங்கள் பெயரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தற்போது டில்லியில் காற்று மாசு காரணமாக 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுமாறும், வயதானவர்கள், குழந்தைகள் வெளியே வரவேண்டாம் எனவும் டில்லி அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை வழக்கு தொடர்ந்த தொண்டு நிறுவனங்கள் கூறவேண்டும். தமிழகத்தில் தேசிய ஒருமைப்பாடு குறித்த நிகழ்ச்சி எதாவது நடந்தால் தேச விரோதிகள் எதிர்ப்பது வழக்கமாக உள்ளது. காசி- ராமேஸ்வரம் இடையே உள்ள கலாசார தொடர்பு குறித்து உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் நவ., 17 முதல் டிச., 17 வரை தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை தடை செய்ய வேண்டும் எனக்கூறும் தி.க., தலைவர் வீரமணியை தண்டிக்க வேண்டும்.
மூன்று மாவட்டங்களில் அமைதியான முறையில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடந்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக நடக்கும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் தமிழக காவல்துறை ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்திற்கு எதிராக 27 மாவட்டங்களில் தமிழக உளவுத்துறை கொடுத்த தகவல்கள் ஏற்புடையது அல்ல என நீதிமன்றம் கடிந்துள்ளது. பி.எப்.ஐ., அமைப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களை தமிழக அரசு கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.