தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் மந்தம் ஏற்பட்டது. பின் மாலை நேரத்தில் வாக்குப்பதிவுக்கு மக்கள் அதிக அளவில் திரண்டனர். இந்நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.64 சதவீதம், தருமபுரி தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன. தொகுதி வாரியாக வாக்குப்பதிவு சதவீதம்…
ஆரணி- 73.77
கரூர் – 74.05
பெரம்பலூர்- 74.46
சேலம்- 74.55
சிதம்பரம்- 74.87
விழுப்புரம்- 73.49
ஈரோடு- 71.42
அரக்கோணம்- 73.92
திருவண்ணாமலை- 73.35
விருதுநகர்- 72.99
திண்டுக்கல்- 71.37
கிருஷ்ணகிரி- 72.96
|வேலூர்- 73.04
பொள்ளாச்சி- 72.22
நாகப்பட்டினம்- 72.21
தேனி- 71.74
நீலகிரி- 71.07
கடலூர்- 72.40
தஞ்சாவூர்- 69.82
மயிலாடுதுறை- 71.45
சிவகங்கை- 71.05
தென்காசி- 71.06
ராமநாதபுரம்- 71.05
கன்னியாகுமரி- 70.15
திருப்பூர்- 72.02
திருச்சி- 71.20
தூத்துக்குடி- 70.93
கோவை- 71.17
காஞ்சிபுரம்- 72.99
திருவள்ளூர்- 71.87
திருநெல்வேலி- 70.46
மதுரை- 68.98
ஸ்ரீபெரும்புதூர்- 69.79
சென்னை வடக்கு- 69.26
சென்னை தெற்கு- 67.82
மத்திய சென்னை- 67.35
தமிழகத்தில் காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. வாக்குச்சாவடியில் இருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்போட அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவு முடிந்த மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67%, குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 % என வாக்குகள் பதிவாகியுள்ளன. விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் – 56.68 % வாக்குகள் பதிவாகின.
கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, வேலூர், பொள்ளாச்சி, கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஸ்ரீபெரும்புதூர், தென்சென்னை, வடசென்னை, மத்தியசென்னை என 13 தொகுதிகளில் கூடுதலாக வாக்குப்பதிவு ஆகியுள்ளது. மற்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
தேர்தல் புறக்கணிப்பு
புதுக்கோட்டை வேங்கை வயல் கிராம மக்கள் லோக்சபா தேர்தலை புறக்கணித்துள்ளனர். வாக்குச்சீட்டு மையத்திற்கு பூத் ஏஜென்ட் கூட வரவில்லை. வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்ற அதிருப்தியில் மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்து உள்ளனர்.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கிராமத்தில் 1,400 வாக்குகள் உள்ள நிலையில், இங்கு வெறும் 9 வாக்குகளே பதிவாகி உள்ளன. தேர்தலை புறக்கணிப்பதாக அக்கிராம மக்கள் அறிவித்து உள்ளதால், மக்கள் யாரும் ஓட்டளிக்க வரவில்லை.
அதேபோல், திருவள்ளூர் குமாரராஜ பேட்டை வாக்குச்சாவடியில் யாரும் ஓட்டளிக்கவில்லை. 6 வழிச்சாலைக்கு நிலம் கையகபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு மாவட்டம் சரவம்பட்டி கிராம மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி பகுதி மக்கள் சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குப்பதிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதி கோரி திண்டுக்கல் மாவட்டம் சீரங்கம்பட்டி பகுதி மக்கள் , தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சாரம், சாலை வசதி கேட்டு, கன்னியாகுமரி மாவட்டம் வலிய ஏலா கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சித்தூரணி கல்லூரணி கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளனர். மதியம் 1 மணி வரை 2 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே குமாரகுடி, தெற்கு தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓலையாம்பட்டிபுத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த கார்குடி கிராமம் மாதாகோயில் தெரு பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் உள்ள வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ராயக்கோட்டை அருகே உள்ள கடவரஹள்ளி கிராமத்தில் சாலை வசதி மற்றும் வீட்டுமனை பட்டா வழங்காத காரணத்தால் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலத்தேமுத்துப்பட்டி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இளம் வாக்காளர்கள் 8 பேரைத் தவிர வேறு யாரும் வாக்குப் போடவில்லை.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற நடிகர் சூரிக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நடிகர் சூரி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். ஆனால் இந்த முறை என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். எனது மனைவியின் பெயர் உள்ளது. ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது. எங்கு தவறு நடந்ததென தெரியவில்லை. வேதனையுடன் கூறுகிறேன். தயவு செய்து அனைவரும் 100 சதவீதம் வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.