சென்னை விருகம்பாக்கத்தில் சாலையில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது:
விருகம்பாக்கம் காந்தி நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர்கள் ஜெகா, அசோக் இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதற்காக அந்தப் பகுதியில் 2 பேரும் அறை எடுத்து தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இவர்களைப் பார்ப்பதற்காக ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து அவர்களது நண்பர் சதீஷ் சனிக்கிழமை இரவு விருகம்பாக்கம் வந்துள்ளார். அவரை அழைத்துக்கொண்டு 3 பேரும் அந்தப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 இளைஞர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டையை எடுத்து 3 பேரையும் தாக்கி அவர்கள் வைத்திருந்த செல்போனை பறிக்க முயன்றனர். இதில், காயமடைந்த அசோக், ஜெகா, சதீஷ் ஆகியோர் வலிதாங்க முடியாமல் கூச்சலிட்டனர். இதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதைப் பார்த்த கொள்ளையர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இந்தச் சம்பவம் நடக்கும்போது அந்தப்பகுதியில் சாணை பிடிக்கும் தொழிலாளி ஒருவர் சாலையோரம் தூங்கிக் கொண்டு இருந்தார். அவரைத் தட்டி எழுப்பிய கொள்ளையர்கள் அவரிடமிருந்த கைப்பேசியைப் பறித்தனர். அப்போது அவர் சத்தம் போட்டதில் அச்சமடைந்த கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த கத்தியை எடுத்து அந்த தொழிலாளியை சரமாரியாக குத்தினர். இதில் அவரது கை, இடுப்பு, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த தொழிலாளி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விருகம்பாக்கம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த தொழிலாளியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் அப்துல் ஜைனு(42) என்பது தெரியவந்தது. இவர் அரக்கோணத்தை சேர்ந்தவர். விருகம்பாக்கம், வடபழனி, உள்ளிட்ட பகுதிகளில் பகல் நேரத்தில் சாணை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர் இரவில் நடைபாதையில் தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இதுபோல் சனிக்கிழமை இரவு தூங்கியபோதுதான் கொள்ளையர்கள் பிடியில் சிக்கி உயிரிழந்தார். விருகம்பாக்கம் காவல் நிலையத்தினர் விசாரிக்கின்றனர்.



