பீப் பாடல் சிம்பு, அனிருத் கோவை காவல் நிலையத்தில் ஆஜராக அவகாசம் கேட்டு கடிதம்

 

கோவை மாவட்டம் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இன்று ஆஜராகவில்லை.

ஆஜராக ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர். நடிகர் சிம்பு பாடிய ஆபாச பாடல் சமீபத்தில் வெப்சைட்டில் வெளியாகி, பெண்கள் மத்தியில் பெரும் கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமுதாயத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கேவலமாக பாடப்பட்டிருப்பதாக கூறி இந்திய மாதர் சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இதன்படி கோவை மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ், கடந்த 12ம் தேதி நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தினர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். சென்னை போலீசார் உதவியுடன், சிம்பு, அனிருத்தை பிடிக்க கோவை போலீசார் முயற்சி செய்தனர். அனிருத் கனடாவில் இருப்பதாக தெரியவந்தது. சிம்பு எங்கேயிருக்கிறார் என தெரியவில்லை. சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரிடம் போலீசார் இன்றைக்குள் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் சிம்பு ஆஜராக சம்மன் கொடுத்தனர். அதேபோல் இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ராகவேந்திராவிடமும் போலீசார் சம்மன் கொடுத்தனர்.

இதையடுத்து சிம்பு, அனிருத் ஆகியோர் கோவை ரேஸ்கோர்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை. சிம்பு, அனிருத் சார்பில் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் இன்று கடிதம் ஒன்று வழங்கப்பட்டது. சிம்புவின் சார்பில் அவரது தந்தை கடிதம் அனுப்பியதாக தெரிகிறது.

இதில் சிம்பு தற்போது உள்ள நிலையில் காவல் நிலையத்தில் ஆஜராக முடியவில்லை. ஒரு மாதம் கால அவகாசம் வழங்கவேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதுபோல் அனிருத் தந்தை ராகவேந்திரா சார்பில் அளித்த கடிதத்தில் அனிருத் இந்த பாடலுக்கு இசை அமைக்கவில்லை. அனிருத்துக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. ஆனாலும் நேரில் ஆஜராக ஒரு மாத கால அவகாசம் வேண்டும்’ என்று கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சிம்பு, அனிருத் காவல் நிலையத்தில் ஆஜரானால் விசாரணைக்கு பிறகு கைது செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர். ஆஜரானால் போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற தகவல் கிடைத்ததால்தான் சிம்பு ஆஜராகவில்லை என்று தெரிகிறது.

கோவை மாநகர போலீஸ் துணை ஆணையாளர் நிஷாபார்த்திபன் கூறுகையில், ‘‘ சிம்பு, அனிருத் தரப்பில் கொடுக்கப்பட்ட கடிதம் பெறப்பட்டது. அவர்களை உடனடியாக கைது செய்ய திட்டமில்லை. சம்மனுக்கு ஏன் ஆஜராகவில்லை, என்ன காரணம் என தெரியவில்லை. இது தொடர்பாக விசாரிக்கிறோம் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.