“வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் “

“வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் ”

(கண் தெரியாத சங்கரனுக்காக காஷ்டமௌனம்
கைவிட்ட பெரியவா)

(சற்று விரிவான புதிய தட்டச்சு)

சொன்னவர்-திருவாடானை ‘வன்தொண்டர்’
…………………….சங்கர அய்யர்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.

 தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

புதுக்கோட்டையில் ஆறாவது வகுப்பில் படித்துக்
கொண்டிருந்த போது ‘வெள்ளையனே வெளியேறு’

போராட்டத்தில் கலந்து கொண்டு துப்பாக்கிச்
சூட்டினால் அவருடைய கண்கள் பாதிக்கப்பட்டன.
முதுமலையில் தலைமறைவாக இரண்டு வருஷம்
இருந்தார். இரண்டு கண்களும் முழுதும் குருடாய்
விட்டன.சொல்ல முடியாத துக்கத்துடன்
 தேவகோட்டை ஜமீந்தார் என்று பிரசித்தி பெற்ற
 கொடை வள்ளலான நாட்டுக்கோட்டை 
செட்டியாருடன் 1950-ல் முதல் முதலில்
 ஸ்ரீபெரியவாளை தரிசனம் செய்தார்.
அதுவே அவர் வாழ்க்கையில் திருப்புமுனை.

ஸ்ரீபெரியவாள், “சங்கரா, நீ தொண்டு 

செய்வதற்காகவே உன்னைக் கடவுள் இப்படி
 சோதனைக்குட்படுத்தியிருக்கிறார். ஒரு குறைவும்
வராது. தொண்டு செய்து கொண்டே இரு” என்று
ஆசீர்வாதம் செய்த உடனேயே பல வருடங்களாக
அனுபவித்த துக்கம் இருந்த இடம் தெரியாமல்
மனது இலேசாகி விட்டது.

பிறகு,தமிழை நன்றாகக் கற்று சைவ,வைணவ
நூல்களை,முழுவதும் மனப்பாடம் செய்யும்

அளவிற்குத் தேர்ச்சி பெற்று,குழந்தைகளுக்கு
பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.
அருணகிரிநாதரின் கந்தரனுபூதி இவருக்குப்
பிரியமான நூல். இவருடைய சொந்தக்காரப் பெண்
ஒருத்தி தானாக முன் வந்து விவாஹம் செய்து
கொண்டாள். சங்கர அய்யர் ஊர் ஊராகச் சென்று
பையன்கள்,பெண்களுடன் பஜனை செய்வது
வழக்கம்.நாடகமும் நடத்துவார். குழந்தைகளுக்கு
பரீக்ஷை வைத்து பரிசுகள் கொடுப்பார். இதில்
கிருஸ்தவ,முஸ்லீம் மாணவர்கள் கூட சேருவதுண்டு

இவர் செய்யும் தமிழ் சேவையைப் பாராட்டி
கிருபானந்தவாரியார் இவருக்கு ‘வன்தொண்டர்’

என்று பட்டம் சூட்டினார்.

ஸ்ரீபெரியவாளை தரிசனம் செய்யும் போதெல்லாம்
தேவாரம்,திருவாசகம்,திருக்குறள் முதலியவைகளைப்
பற்றித்தான் பேச்சு. ஸ்ரீபெரியவாளைப் பற்றிக்
கூறினாலே கண்ணீர் பெருகும். ‘அவர்களைப் போல்
தமிழறிந்தவர்கள் வேறு யார் உளர்?’ என்ற வியப்பு.

இப்பொழுது அவருக்கு வயது எழுபத்தாறு.
(கட்டுரை வெளியான ஆண்டு 2005) அவருடைய
எழுபது வயதில், இப்போது முன்னேற்றமடைந்த கண்
சிகிச்சையினால் கண்பார்வை திரும்பக் கிடைக்கும்
என்று நண்பர்கள் விளக்கிய போது அவர் 

“ஸ்ரீபெரியவாள் அனுக்ரஹத்தினால் கண் 
தெரியாமலேயே சந்தோஷமாயிருக்கிறேன்.இனிமேல்
கண் பார்வை பெற்று என்ன ஆக வேண்டியிருக்கிறது?”
என்று மறுத்து விட்டார்.

1958ம் வருஷம் ஸ்ரீபெரியவாள் சென்னை சம்ஸ்கிருத
கலாசாலையில் முகாமிட்டிருந்த போது
விடியற்காலையில் விஸ்வரூப தரிசனத்திற்காக
தேவகோட்டை ஜமீந்தாருடன் சென்றிருந்தார்.
அப்பொழுதெல்லாம் பெரியவாள் காலை வேளையில்
காஷ்ட மௌனமாக இருப்பது வழக்கம். ஆனால்
இவர்கள் இருவரும் வந்ததும் பெரியவாள்,
“வா, சங்கரா, இப்படி வந்து உட்கார் ” என்று
சொன்னதும் எல்லோருக்கும் ஆச்சர்யம்.

சாயங்காலம் தீப நமஸ்காரம் ஆன பின்பு
ஸ்ரீபெரியவாள்,”இன்று காலையில் மௌனத்தை
விட்டுப் பேசியது உங்கள் எல்லோருக்கும்
ஆச்சர்யம். ஆனால் ஒருவருக்கும் காரணம்
தெரியவில்லை. நீங்கள் எல்லோரும் விடியற்
காலையில் என்னைக் கண்டு சந்தோஷப்படுகிறீர்கள்

ஆனால் கண் தெரியாத சங்கரனுக்கு எப்படி
சந்தோஷம் ஏற்படும்? அதனால்தான் என் குரலைக்
கேட்டாவது சந்தோஷப்படட்டுமென்று பேசினேன்”
என்றார்கள்.