கோவை, மதுரையில் இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேனிக்கு மாற்றப் பட்டதாக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில், தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. மேலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.
இந்நிலையில் தேனி வட்டாட்சியர் அலுலகத்தில் 50 வாக்கு இயந்திரங்கள் வந்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்ததை அடுத்து, திமுக, காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள், உடனே தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு விரைந்தனர்.
கோவை, மதுரையில் வாக்குப் பதிவு செய்யப்பட்ட வாக்கு இயந்திரங்கள்தான் இங்கே கொண்டு வரப் பட்டுள்ளன. இங்கே வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை. இந்நிலையில் எப்படி வாக்குப் பதிவு இயந்திரங்களை இங்கே கொண்டு வரலாம் என்று வாக்குவாதம் செய்தனர். மேலும், வாக்கு பதிவு இயந்திரன்களுக்கு சீல் வைக்க வேண்டும் என்று கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் தேனி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதற்கு கோவை வருவாய் அலுவலர் சௌந்தர்ராஜன் இந்த வாக்கு இயந்திரங்கள் எதிலும் வாக்குகள் பதிவு செய்யப்படவில்லை; இவை வெற்று இயந்திரங்களே! என்று தெளிவுபடுத்தினர்.
ஆனாலும், எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இவற்றில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறி தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி யிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் இதற்கு விளக்கமளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, தேர்தலில் பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்கள்தான் அங்கே கொண்டு வரப் பட்டுள்ளன. அவை அலுவலகத்தில் வைக்கப் படும். இது எப்போதும் நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான் என்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.




