
கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை சேர்ந்தவர் இளையராஜா. கோட்டக்குப்பத்தை அடுத்த அனுமந்தை குப்பத்தை சேர்ந்தவர் சவுமியா (வயது 20). இருவரும் நேரு வீதியில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் ஒன்றாக வேலை செய்து வந்தனர்.
இளையராஜாவும், சவுமியாவும் ஒரே கடையில் வேலை செய்து வந்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது. இதனைதொடா்ந்து இருவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்பு இருவரும் சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்கு செல்லாமல் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு புது தென்றல் வீதியில் குடியிருந்து வந்துள்ளனர்.
இளையராஜா சொந்தமாக லோடு லாரி ஒன்றை வாங்கி தொழில் செய்து வந்தார். இவர்களுக்கு நியா என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதே போல் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், மனவேதனை அடைந்த சவுமியா இரவு இளையராஜா தூங்கிய பின்பு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காலையில் எழுந்து பார்த்த இளையராஜா மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் இதுபற்றி ஆரோவில் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து சவுமியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சவுமியாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த சவுமியாவின் பெற்றோர் சவுமியாவின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
பின்னர் சவுமியாவின் தாய் சுமதி ஆரோவில் போலீசில் இளையராஜா மீது புகார் கொடுத்தார். அதில், இளையராஜா வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாகவும், எனவே, அடித்து கொலை செய்து இருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார்.
இந்த புகார் குறித்தும் கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா இதை சந்தேகத்துக்கிடமான மரணமாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் விசாரணை நடைபெறுகிறது.



