
கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வந்த பெண் ஒருவர் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த நபருடன் நட்பாக பழகியதால் அந்தப்பெண்ணை கணவனின் உறவினர்கள் அடித்துக்கொன்று எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஆறு பேரை கமுதி போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள டி வல்லக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி இவரது மகள் ராதிகா
ராதிகாவிற்கும், பார்த்திபனூர் அருகே உள்ள பிச்சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமாருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராதிகா தனது அப்பாவின் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டார் கடந்த சில ஆண்டுகளாக அப்பாவின் வீட்டில் இருந்து வந்த ராதிகா கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வீட்டை விட்டு திடீரென காணாமல் போய் உள்ளார்.
பின்னர் ராதிகாவின் பெற்றோர் மற்றும் உறவினா்கள் எங்கும் தேடியும் கிடைக்காமல் போகவே, அபிராமபுரம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் காவல்துறையினர் ராதிகாவை தேடி வந்த நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி உடல் எரிந்த நிலையில் ராதிகாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
உடலை கைப்பற்றிய போலீசார் கமுதி அரசு மருத்துவமனைக்கு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இது கொலைதான் என்றும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை ராதிகாவின் உடலை வாங்கப்போவதில்லை என்றும் ராதிகாவின் பெற்றோரும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் 5 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது அதனைப் பெற்றுக்கொண்ட ராதிகாவின் பெற்றோர் உடலை வாங்கி அடக்கம் செய்தனர்.
ஒரு வழியாக காவல்துறையினர் பெருமூச்சு விட்டாலும் ராதிகாவை கொன்றது யாராக இருக்கும் என்று தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தது.
ராதிகாவின் கணவரின் உறவினர்களே அடித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்றது தெரியவந்தது.
அப்பாவின் வீட்டில் இருந்த ராதிகா, அதே ஊரைச்சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த நபருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கணவர் அருண்குமாரின் உறவினர்கள் எச்சரித்தனர். இதை ராதிகா கேட்கவில்லை என்று தெரிகிறது.
இதனையடுத்தே ராதிகாவை அடித்து எரித்துக் கொன்றுள்ளனர்.
ராதிகா கொலை வழக்கு தொடர்பாக முருகன், மோகன், அழகர்சாமி, விக்னேஷ்வரன், பாபா, அழகர்சாமி ஆகிய 6 பேர் மீதும் கொலை, தடையங்களை மறைத்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



