ஈரோடு அருகே சிவகிரி பகுதியில் சுவாமி சிலைகள் உடைக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகிரி அருகே தொப்பபாளையம் பகுதியில் நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் சுவாமி சிலைகளை அடித்து உடைத்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் சிலைகள் உடைக்கப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த தொப்பபாளையத்தில் காளியண்ணன் சுவாமி கோயில் உள்ளது. இங்கு,திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் தலைக்கவசம், முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 7 பேர் கோயில் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் கைகளில் கடப்பாரை, கம்பிகள் கொண்டு சுமார் 5 அடி உயரமுள்ள காளியண்ணன் சிலைகளை சேதப்படுத்தி அடித்து உடைத்தனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்த தகவல் பரவியதால் அந்தக் கோயிலைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்தனர். இதனால் நேற்று அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக சிவகிரி, சந்தைமேடு, அம்மன்கோயில் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சக்திகணேஷ், மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜ், கோட்டாட்சியர் முருகேசன், வருவாய் கோட்ட அலுவலர் கவிதாஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.
இது இரு தரப்பு மோதலாகக் கூறப் படுகிறது, இருப்பினும், தெய்வங்களாக வ்ழிபடப் படும் ஒரு தரப்பினரின் சாமி சிலைகளை அடித்து உடைத்து வெறிச் செயலில் ஈடுபட்ட செயல் பெரும் அதிர்ச்சியையும் அருவெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.