
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்காவில் மீண்டும் குடியேறி விடுவார் என்று சமூக தளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் மதுரை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இப்போது செடி நடு விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.
தற்போதைய திமுக., அரசில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டு பெருமளவில் பேசியும் பேசப்பட்டும் வந்தவர் மதுரையின் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். ஜிஎஸ்டி கவுன்சிலில் முரண்டு பிடித்தது முதல், தனது துறை சார்ந்த அறிக்கைகளில் ‘ஒன்றிய’ச் சொல்லை வலுக்கட்டாயமாகத் திணித்து, மாநில அரசை தேசியத்துடன் ஒன்றாத அரசாகக் காட்டியவர். கடந்த இரு வருடங்களாக பட்ஜெட் தாக்கலின் போது, சபையில் தட்டுத் தடுமாறித் தமிழ் வாசித்து, தான் ஒரு அமெரிக்க ‘ரிட்டர்ன்’ என்று தமிழர்களின் மனத்தில் பதிய வைத்தவர். என்றாலும், திராவிட மாடல் அரசின் கொள்கைக்கு முரணாக மதுரைக் கோயிலின் பொறுப்புகளில் தாமாக முன்வந்து தலைகொடுத்து தன் பாரம்பரியப் பெருமையை அவ்வப்போது வெளிக்காட்டியவர்.
அண்மையில் தமிழக பாஜக., தலைவர் கே அண்ணாமலை வெளியிட்ட டிஎம்கே ஃபைல்ஸ் மற்றும், அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் குறித்த 30ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடான சொத்து சேர்ப்பு குறித்து வாய்ஸ் கொடுத்து, அது பரபரப்பாக வெளியானதால், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். மதுரையில் அவர் கலந்து கொள்வதாக இருந்த பல்வேறு கட்சி சார் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, ஒதுங்கியிருந்தார். அவரது 30 ஆயிரம் கோடி ரூபாய் பேச்சுக்குத் தண்டனையாக தமிழக நிதித்துறையை இழந்து ஐடி தொழில்நுட்பத் துறைக்கு அமைச்சராகவும் மாற்றப்பட்டார்.
இதனால், அவர் எப்போது வேண்டுமானும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடுவார் என்று சக கட்சியினர் வட்டாரத்திலேயே பரவலாகப் பேசப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு நாட்களாக, தனது குழந்தைகளின் படிப்புக்காக குடும்பத்தை மீண்டும் அமெரிக்காவில் செட்டில் செய்யவுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து அவரும் அமெரிக்காவுக்குச் சென்று வருவதாக திட்டமிட்டிருப்பதாகவும், இதனை சாக்காக வைத்து, தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்யவுள்ளதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.
இந்நிலையில், வெளி நிகழ்ச்சிகளில் தலை காட்டும் விதமாக, மதுரையில் ஒரு சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி சார்பில் செயல்படுத்தப் படும் “பசுமை மதுரை திட்டத்தின்” கீழ் வைகை தென்கரை முதல் யானைக்கல் பாலம் பேச்சியம்மன் படித்துறை சந்திப்பு வரை நடைபெற்ற செடிகள் நடும் இயக்கத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்டார். இதில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.