
தென்காசியைக் கட்டமைத்து, தென்காசி கோயிலைக் கட்டமைத்து ஊரை உருப் பெறச் செய்த மாமன்னர் பராக்கிரம பாண்டியருக்கு சிறப்பு செய்ய வேண்டும் என்று கடந்த காலங்களில் எனது கட்டுரைகளில் குறிப்பிட்டு வந்தேன்.
பராக்கிரம பாண்டியரைத் தொட்டு பிற்கால தென்காசிப் பாண்டியர்கள் என்ற வரிசை வரலாற்றில் பதிவானது. அந்த பொன்னின்பெருமாள் பராக்கிரம பாண்டியர் தென்காசியில் ஆட்சிப் பொறுப்பேற்றது பொ.ஆ. 1422 என்று குறிப்பிடப் படுகிறது. அந்த வகையில் இது பராக்கிரம பாண்டியரின் ஆட்சியாண்டு தொடங்கியதன் 600 ஆம் ஆண்டு நிறைவு.
பராக்கிரம பாண்டியருக்கு ஒரு சிறப்பு உண்டு. பதிவுகளின் படி, சிவபக்தரான பராக்கிரம பாண்டியரின் கனவில் சிவபெருமான் தோன்றி, தனது நகரான காசியை மிலேச்சர்கள் பாழ்படுத்தி கோயிலை இடித்து நாசப்படுத்தி விட்டதாகவும், பாண்டியனின் மண்ணில் தனக்கு ஒரு கோயிலைக் கட்டி விஸ்வநாதரான தன்னை எழுந்தருளச் செய்து பக்தர்கள் பூஜிக்க வழிசெய்ய வேண்டும் என்றும், பாண்டியனின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளது, அதன் வழியைக் காட்டிக் கொடுப்பேனென்றும் சொன்னாராம். அப்படித்தான் சித்ரா நதியான சிற்றாற்றின் கரையில் இருந்த செண்பக வனம் தென்காசி என உருப்பெற்றது.
(ஆய்க்குடிக்கு அருகே உள்ள) விந்தன்கோட்டையில் இருந்து தென்காசிக்கு தன் குடியிருப்பை மாற்றிக் கொண்டு, வடக்கே உள்ள காசிக்கு நிகராக தென்காசியை புகழ்பெறச் செய்தான் பராக்கிரம பாண்டியன். அதற்கு அவன் எடுப்பித்த கோயில் காரணமாயிற்று. அப்படி அவன் செண்பகவனத்துச் சிவபெருமானை பிரதிஷ்டை செய்ததன் 575வது ஆண்டு இது.
மெட்ராஸ் டே என்று கொண்டாடுகிறார்கள். ஏற்கெனவே இருந்த மாடமாமயிலை – திருவல்லிக்கேணிக் கண்டேனே என்று ஆழ்வார் பாடிய கிராமத்தை, பூம்பாவாய் என பதிகம் பாடிய சம்பந்தப் பெருமான் பாடிய மயிலைக் கிராமத்தைக் கொண்ட நிலப்பரப்பை, பின்னாளில் ஆங்கிலேயன் தன் வசதிக்காகக் கட்டமைத்த மெட்ராஸ் நகரின் தினத்தை, இன்று விழாப் போல கொண்டாடுகிறார்கள்.
அப்படி செண்பகவனமாய்த் திகழ்ந்த மண்ணை தென்காசி எனும் நகராய் மாற்றிய பராக்கிரம பாண்டியனின் நினைவைப் போற்றி இந்த வருடம் ‘தென்காசி 600வது ஆண்டு உதய தினம்’ என்று தென்காசிக்காரர்கள் கொண்டாடியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுப் பேசி வந்தேன். இதற்காக என் நட்பு வட்டங்களிடம் தனிப்பட்ட வகையில் பேசியிருந்தேன். அவர்களில் சிலர் ஆர்வமாகவும் இருந்தார்கள். ஆனால் எதைப் பற்றியும் யோசிக்காமல் உடனடியாகக் களத்தில் இறங்கியவர், என் பால்ய பருவத்து நண்பர் துரை. சம வயது என்பதால், செங்கோட்டையில் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக நட்புடன் ஒன்றாகவே இருந்து செயலாற்றி வருகிறோம்.

நெற்கட்டான்செவல் மாமன்னர் பூலித்தேவர் வாரிசுதாரர்களான துரை சூரிய பாண்டியன், அந்த வாரிசுதாரர்கள் அறக்கட்டளை மூலமே ஒரு சிறப்பு பூஜை நிகழ்ச்சியை நடத்தி விடுவோமே என்றார்.
மேற்படி பின்னணியை முன்னிட்டே தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் செயல் அலுவலர் முருகனைச் சந்தித்து, ஒரு விழா நடத்துவது குறித்துப் பேசினோம். இது குறித்த எனது மே 12ம் தேதியிட்ட பேஸ்புக் சுட்டி… ( https://www.facebook.com/senkottaisriram/posts/10223851379977081 )
அதன் சுருக்கம் …
கடந்த வருடமே இதுபற்றி பேஸ்புக்கிலும் எழுதியிருந்தேன். காசி தமிழ்ச் சங்கமம் குறித்த கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சி இது…
தென்காசி பெரிய கோயிலைக் கட்டி, தென்காசி என்ற நகரத்தைத் தோற்றுவித்து, நகரத்தை முறைப்படுத்தி வைத்த மன்னன் பராக்கிரம பாண்டியன் பொ.ஆ. 1422ல் முடி சூட்டிக் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்றார். அதன் பின் 40 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளார். கோயிலையும் படிப்படியாகக் கட்டியுள்ளார். அவர் முடிசூடியது, மிதுன மாசம் மிருகசீர்ஷ நட்சத்திரம் என்று கல்வெட்டுத் தகவல்கள் உண்டு. அதன்படி, இப்போது 600 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அதன்படி பார்த்தால், தென்காசி எனும் நகருக்கு இப்போது வயது 600.
அதே நேரம், கோயில் கட்டத் தொடங்கி, முறைப்படி சிவலிங்கப் பிரதிஷ்டையானது, சக வருஷம் 1369 மிதுன மாசம் 13ல் சனிக்கிழமையில் இரவில் மீன லக்னத்தில் நடந்துள்ளது. அதாவது 10-06-1447 என கணித்திருக்கிறார்கள். அதன்படி, சிவலிங்கப் பிரதிஷ்டை ஆகி இப்போது 575 ஆண்டுகள் ஆகின்றன.

இதைக் குறிப்பிட்டு, மன்னன் பராக்கிரம பாண்டியனுக்கு ஏதாவது சிறப்பு செய்ய வேண்டும், கோயிலில் உள்ள பராக்கிரம பாண்டியன் பஞ்சலோக திருமேனிக்கு பட்டாபிஷேக வைபவம் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை கோயில் செயல் அலுவலரிடம் தெரிவிப்பதற்காக, நேற்று தென்காசி உலகம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். ஈஓ முருகனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன்…
மாவட்ட நிர்வாகமும் யோசிக்க வேண்டும். பராக்கிரம பாண்டியனுக்கு பொது இடத்தில் (ரவுண்டனாவில் நீரூற்றுடன்) சிலை, தோரணங்கள் என அமைத்து அழகுபடுத்தலாம். தென்காசிக்கு அடையாளம் பராக்கிரம பாண்டியன். சரித்திர பூர்வமாக நகரத்தை முன்னிறுத்திய புண்ணியம் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேரும்.
- என்றவாறு குறிப்பிட்டிருந்தேன்.
பாண்டியருக்கு சிறப்பு செய்ய ஏதுவான நாளென பேசிக் கொண்டிருந்த போது, 10-06-1447-ல் லிங்கப் பிரதிஷ்டை ஆகியிருப்பதால், இப்போது அதே தினத்தை வைத்துக் கொள்வோமா என்று ஈ.வோ., கேட்க, அப்படியே செய்வோம் என்றோம். அதன்படியே நண்பர் துரையின் விண்ணப்பக் கடிதத்தில் 2023 ஜூன் 10ம் தேதி காலை சிறப்பு பூஜைகளைச் செய்யலாம் என கையெழுத்திட்டுக் கொடுத்து, கோயில் பட்டரை அழைத்து, என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லி ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டார்.

இதனை பெரிய அளவில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் என்று அழைப்பு விடுத்து சிறப்பாகச் செய்வோம் என்று நண்பர் சொன்னபோது, “வேண்டாம், ஆரவாரம் ஆர்ப்பட்டமின்றி, கோயில் அளவில், தனிப்பட்ட வகையில் முதலில் செய்து காட்டுவோம், பிறகு வேண்டுமானால் அதிகாரிகள் அளவில் போவோம்.” என்றேன். அப்படிப் போனால் பிள்ளையார் சுழி போடும்போதே பேனா இங்க் தீர்ந்துவிடும் என்பது நமக்குத் தெரியாதா என்ன?! கால் நூற்றாண்டு பத்திரிகை வாழ்வில் ஏற்பட்ட அனுபவம்!

அதனால்தான் முன்னரே பெரிதும் விளம்பரப் படுத்தாமல் பூஜைகள் முடிந்த பிறகு செய்தியாகப் போடுவோம், அதுவரை பொறுமையாக இருக்கவும் என்று நண்பருக்குச் சொல்லியிருந்தேன். ஆனால் அவர், ஆர்வத்தில் ஒரு முன்னோட்ட வீடியோ தயாரித்து வாட்ஸப்பில் அனுப்ப, அது அப்படியே பரவ… மிகச் சரியாக இதைச் சொல்லியே ஜூன் 9ம் தேதி இரவு ஈ.வோ., பிரச்னை செய்யத் தொடங்கியுள்ளார்.
இந்த வீடியோ ஜேசி.,க்கு போய், அவர் என்னை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். எனவே நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க முடியாது என்று சொல்லி பிரச்னை செய்தாராம். ஆனால் நண்பர் தரப்பில் இருந்து பல இடங்களில் அழுத்தம் கொடுத்து, ஒருவழியாக காவல்துறை ஒத்துழைப்பில் இந்த பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது.

(அடியேனுக்கு கால் வீக்கம், உடல் நலக் கோளாறு என்று இருந்ததால் கார் ஓட்டிக் கொண்டு செல்ல இயலாத நிலை. ஏனப்பா என்னையும் காலையிலேயே கூட்டிட்டுப் போகக் கூடாதா? நானோ தனிக்கட்டைன்னு தெரியாதா? என்று கேட்ட போது, நண்பர் துரை சொன்ன விருத்தாந்தங்கள் தான் இவை…. எனவே சிறப்பு பூஜை நிகழ்வுக்கு செல்ல முடியாமல் போனது. அதுவே பெரிய வருத்தமாகப் போனது எனக்கு!)
அன்று நடந்தவை குறித்து நண்பர் துரை அனுப்பிய விவரங்களை இங்கே அப்படியே தருகிறேன்…
*
தென்காசி கோவிலில் மன்னர் அரிகேசரித்தேவர் பராக்கிரம பாண்டியன் மணிமகுட திருநாள் நிகழ்ச்சி நேற்று 10- 06-2023 வெகு சிறப்பாக நடைபெற்றது..முதலில் அதை நடத்த அனுமதித்த கோவில் EO கடைசியில் ஏதோ ஒரு காரணம் சொல்லி தடை ஏற்படுத்தினார். அதன் பிறகு பல்வேறு பேச்சுவார்த்தைகள் நெல்கட்டான்செவல் பாண்டிய மாமன்னர் பூலித்தேவர் வாரிசுதாரர்கள் அறக்கட்டளை நிறுவனர் பூலி துரை சூர்யபாண்டியன் மற்றும் தென்காசி கோவில் AC , தென்காசி நகர காவல்துறை ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்றது. அதன் பிறகு 11 மணியளவில் அருள்மிகு காசிவிஸ்வநாதர் பூஜை மற்றும் மன்னர் பராக்கிரம பாண்டியன் பஞ்சலோக திருமேனிக்கு அலங்காரம் பூஜை கலையரங்கத்தில் உள்ள மன்னருக்கும் சிறப்பாக பூஜை தீப ஆராதனை செய்யப்பட்டது. அச் சமயத்தில் இந்த நிகழ்வு நடைபெற காலதாமதம் ஏற்பட்ட சூழ்நிலையில் இராமநாதபுரம் ராஜா திரு தினகர் ராஜா அவர்கள் இந்த விழா சம்பந்தமாக தென்காசி கோவில் JC திரு அன்புமணி அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்த போது JC அதனை எடுக்காததன் காரணத்தினால் அவர்களுக்கும் இந்துசமய அறநிலையத்துறை தலைமை அலுவலுகத்திற்கும் message ஒன்று அனுப்பி விழா நடத்த முயற்சிகள் மேற்க்கொண்டார்கள். இராமநாதபுரம் மன்னர் தினகர் ராஜா அவர்களுக்கு நெல்கட்டான்செவல் பாண்டிய மன்னர் பூலித்தேவர் வாரிசுதாரர்கள் அறக்கட்டளை சார்பில் நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம்… நன்றி
மேலே கண்ட தகவலை நண்பர் துரை அடியேனுக்கு அனுப்பி வைத்தார். இதைப் படிக்கும் போது பல கேள்விகள் நம்முள் எழுகின்றன…
மாமன்னர் பராக்கிரம பாண்டியன் தென்காசி கோயிலைக் கட்டியது பொதுமக்களின் வழிபாட்டுக்காக! இந்தக் கோயிலைக் காப்போரைக் குவலயம் அறியப் பணிந்து வணங்குகிறார் மன்னர் பராக்கிரம பாண்டியர்.

மனத்தால் வகுக்கவும் எட்டாத கோயில் வகுக்க முன்னின்று
எனைத்தான் பணிகொண்ட நாதன் தென்காசியை என்று மண் மேல்
நினைத்து, ஆதரஞ்செய்து, தன்காவல் பூண்டநிருபர் பதம்
தனைத் தாழ்ந்து, இரைஞ்சித் தலைமீது யானும் தரித்தனனே!
ஆராயினும் இந்தத் தென்காசி மேவும் பொன்னாலயத்து
வாராததோர் குற்றம் வந்தால், அப்போது அங்கு வந்து, அதனை
நேராகவே ஒழித்துப் புரப்பார்களை நீதியுடன்,
பாரார் அறியப் பணிந்தேன் பராக்ரம பாண்டியனே!
இந்தப் பாக்களெல்லாம் கல்வெட்டுக்களாய் பராக்கிரம பாண்டியன் பெயரைத் தாங்கி தென்காசி கோபுரத்தின் வாயிலில் வரலாற்றுச் சுவடுகளாய்ப் பதிந்துள்ளன. பக்தர்களுக்காகத் தாம் வகுத்த இந்தக் கோயிலை பக்தர்களே பாதுகாக்க வேண்டும், அந்த பக்தனது பாதத்தை என் தலையில் நான் தாங்குவேன் – என்ற கருத்தை நமக்கு வலுவாய்ப் பதிய வைத்தார் நம் பாண்டிய மன்னர்.
ஆனால்…. இன்றோ பக்தர்களின் பூசனைக்காகக் கட்டப்பட்ட கோயிலில் பக்தர்களின் வழிபாடு தடுக்கப் படுகிறது. காரணம் அரசுத் துறை. ஆயிரத்தெட்டு சாக்குப் போக்குகள். ஆயிரத்தெட்டு சால்ஜாப்புகள். ஒருவேளை பேப்பரும் பேனாவும் மனுக்களுமாய்ப் பேசினால் இவர்களுக்கு அந்த மொழி புரியாதோ? மன்னரின் நினைவுடன் வாள்களும் கேடயங்களுமாய்ச் சென்றால் தான் கோயிலின் உடமையாளனான இந்த மன்னரின் மனசு, வெறும் இந்தக் கணக்குப்பிள்ளைகளுக்குப் புரியுமோ என்னவோ?! என்றுதான் மனத்தில் தோன்றுகிறது!
- அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்