Home Blog Page 145

மதுரை ஆலயங்களில் மஹா சிவராத்திரி; ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

shivrathri in madurai temples - 2026

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சங்காபிஷேகம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் கோலாகலம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்

மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று 1008 சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சிவபெருமானின் அருளை வேண்டி வழிபாடு செய்யக்கூடிய மிக முக்கிய நாளாக மகா சிவராத்திரி திருநாள் விளங்கி வரும் நிலையில், சிவபெருமானை வழிபட்டால் அனைத்து பாவங்களும் விலகும் என்பது ஐதீகமாக கருதப்படுவதால் மதுரை கோவில்களில் சிவராத்திரி ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அந்த வகையில் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு , 1008 சங்காபிஷேகம் கோவில் வளாகம் கொடி மரம் அருகில் உள்ள நந்தி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த சங்காபிஷேகத்தில் 1008 சங்குகள் லிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு அதில் புனித நீர் மற்றும் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.

இதனை அடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்கிட புனித நீர் குடங்கள் கொண்டும், பூஜையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சங்குகளில் இருந்த புனித நீர் கொண்டும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது . நிகழ்வில் ,ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர் .

சோழவந்தானில் சிவராத்திரி விழா

சோழவந்தான் பகுதி கோவில்களில் சிவராத்திரி விழா ஏராளமான பொதுமக்கள் இரவு முழுவதும் சிவனை தரிசித்து சென்றனர்.

சிவராத்திரி விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் இரவு முழுவதும் பொதுமக்கள் கோவிலில் தங்கி சிவனை தரிசனம் செய்தனர் தொடர்ந்து பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் உள்ள பிரளயநாத சிவன் கோவிலில் சிவனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாரதனைகள் நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிவனை இரவு முழுவதும் தங்கி தரிசனம் செய்தனர். மிகவும் பழமை வாய்ந்த பாண்டிய மன்னர் காலத்து திருத்தலமான திருவேடகம் ஏடகநாதர் ஏலவார்க் குழலி கோவிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பொதுமக்கள் கோவில் வளாகத்தில் தங்கி சிவனை தரிசனம் செய்தனர்.

அனைவருக்கும் கோவில் சார்பில் தேநீர் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் இரவு முழுவதும் வழங்கப்பட்டது சிறுவர் சிறுமிகள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது பொதுமக்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்கு அதிகாரிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இதே போல் சோழவந்தான் ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள ஆதி சிவன் கோவிலில் இரவு முழுவதும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தென்கரை அகிலாண்டேஸ்வரி கோவில் மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மேலக்கால் ஈஸ்வரன் கோவில் உள்பட சோழவந்தான் பகுதிகளில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் இரவு முழுவதும் சிவனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது அனைத்து சிவாலயங்களிலும் ஆயிரகணக்கில் பக்தர்கள் பொதுமக்கள் இரவு முழுவதும் தங்கி சிவனை தரிசனம் செய்தனர்.

மாசி மஹா சிவராத்ரி விழா: திரண்ட பக்தர்கள்.

மாசி சிவராத்திரியை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் குல தெய்வ கோவில்களில் விடிய விடிய லட்சக்கணக்கான மக்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் அதிகமான குல தெய்வ கோவில்கள் உள்ளன. பெரும்பாலும் மாசி சிவராத்திரி என்றால் சிவனுக்கு உகந்த தினமாக சிவன் கோவில்களில் பக்தர்கள் அதிகம் கூடும் சூழலில், தென் மாவட்டங்களில் குறிப்பாக உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் மாசி சிவராத்திரி தினத்தில் முன்னோர் வழிபாட்டு முறையான குல தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதை காலம் காலமாக செய்து வருகின்றனர்.

அதன்படி, மாசி சிவராத்திரியை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள குல தெய்வ கோவில்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் , பொங்கல் வைத்தும், மொட்டை போட்டும், கிடா வெட்டியும் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

இந்த மாசி திருவிழாவிற்காக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வசிக்கும் இந்த குல தெய்வங்களுக்கு பாத்தியப்பட்ட சொந்தங்கள் லட்சக் கணக்கானோர் ஒன்று சேர்ந்து இரவு முழுவதும் விடிய விடிய திருவிழா எடுத்து முன்னோர் வழிபாட்டு முறையை பின்பற்றி வருகின்றனர்.

மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி ஆலயத்தில், மகா சிவாராத்ரியை முன்னிட்டு, பிரளயநாதர், சௌந்தர நாயகி, புஷ்பகேசிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது. இதில் தொழிலதிபர் எம். வி. எம். மணி, நிர்வாக அதிகாரி ச. இளமதி, பள்ளித் தாளாளர் மருதுபாண்டியன், கவுன்சிலர் வள்ளி மயில், கோயில் கணக்கர் சி. பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், முதலைக் குளம் கருப்புச் சாமி கோயில், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூல நாதர், மதுரை அண்ணாநகர் யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயம், ஆவின் பால விநாயகர் ஆலயம், மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர், சௌபாக்கிய விநாயகர், மதுரை வைகை காலனி கிழக்கு சக்தி மாரியம்மன்
ஆலயங்களில், மஹா சிவராத்ரி பூஜைகள் நடைபெற்றது.

மழை வேண்டி அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம்!

amman manjal abhishekam in usilampatti - 2026

உசிலம்பட்டி: மதுரை, உசிலம்பட்டி அருகே மழை வேண்டியும், நோய் நொடி இல்லாமல் வாழ மாசி சிவராத்திரியை முன்னிட்டு வகுரணி காமாட்சியம்மன் கோவிலுக்கு 7 ஊர் மக்கள் ஒன்றிணைந்து மஞ்சள் நீர் எடுத்து வந்து மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி கிராமத்தில் அமைந்துள்ளது பழமையான காமாட்சியம்மன் திருக்கோவில் இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டின் மாசி சிவராத்திரி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

சிவராத்திரி திருநாளில் இந்த வகுரணி கிராமம் மட்டுள்ளாது அருகில் உள்ள 7 கிராம மக்களும், வீட்டிலிருந்து மஞ்சள் நீர் எடுத்து வந்து கோவிலின் முன்பு உள்ள தொட்டியில் நிரப்பினால், தொட்டி எவ்வளவு நிரம்புகிறதோ அதே அளவு மழை பெய்து அருகில் உள்ள வகுரணி கண்மாய் நிரம்பி செல்வ செழிப்பாகும் எனவும், இந்த மஞ்சள் நீரை வீட்டிற்கு எடுத்துச் சென்று தெளித்தால் நோய் நொடி அண்டாது என்பது இப்பகுதி மக்களின் ஐதீகமாக உள்ளது.

அவ்வாறு இந்த ஆண்டும் ஆதி வழக்கப்படி மாசி சிவராத்திரியை முன்னிட்டு வகுரணி, சந்தைப்பட்டி, நடுப்பட்டி, கணவாய்பட்டி, நாவார்பட்டி, குறுக்கம்பட்டி, அயோத்திபட்டி உள்ளிட்ட 7 கிராம மக்கள் ஒன்றிணைந்து வீட்டிலிருந்து மஞ்சள் நீரை ஊர்வலமாக எடுத்து வந்து காமாட்சியம்மனை வணங்கி கோவில் முன்பு இருந்த தொட்டியில் மஞ்சள் நீரை ஊற்றினர்.

தொடர்ந்து, வீடுகளுக்கு தெளிக்க மஞ்சள் நீரை எடுத்து சென்றதுடன், இந்த 7 கிராமத்திலும் உள்ள மாமன் மைத்துனர்கள் மீதும் மஞ்சள் நீர் தெளித்து மஞ்சள் நீராடினர்.

7 கிராம மக்களும் சாதிமத பேதமின்றி ஒற்றுமையாக நடத்தி வரும் இந்த மஞ்சள் நீராட்டு விழாவின் காரணமாக நல்ல மழை பெய்து வகுரணி கண்மாய்க்கு பாத்தியப்பட்ட 7 கிராமங்களும் செழிப்படைந்து வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

உலகத்து  சமத்துவத்தின்  பெருவிழா

mahakumbamela 2025 crowd foriegn devotees praised - 2026

கவிஞர் கண்ணன் திருமலை அய்யங்கார்

உலகத்து  சமத்துவத்தின்  பெருவிழா – என்றும்
உயர்வான சனாதனத் திருவிழா!
திலகமென்று பாரதத்தின் உறுவிழா – இந்த
தரணிதனில்  புவி வியக்கும்  ஒரு விழா — 01

திரிவேணி சங்கமமே அமிர்தகலம்(ஸ்)- அதை
தெரிந்துரைத்தார் ருஷிதபஸர் சாது;முனி 
திரிகாலம் அறிந்தவரின் வாக்கேவேதம் 
திவ்யஒளி க்ரகக்கோட்டில் அமையுந்நாள்: — 02

பின்சந்ததி  சீர்வாழ்வின் பொருட்டாக- அவர்
படைத்திட்டார் புவிப்பெரிய மாந்தர்விழா!
இன்றுவரை தீர்த்தராஜ் ப்ராயாக்ராஜில் 
இனியபடி தொடர்கிறது; இனியுமுண்டு!!– 03

வர்ணத்து ஜாதியில்லை  பேதமுமில்லை – பொருள்
வைப்பெழுப்பும் வறியர்,வளர் பார்வைகளில்லை
தற்குறிக்கும் தலைமையர்க்கும் தனிவழியில்லை
தாய்மடியில்  குழந்தைகளாய் எல்லோர்மனது. — 04

மண்கடந்து மதங்கடந்து தானாய்வந்தார்- நம் 
மனுதர்ம மேன்மைகண்டு சங்கம்நின்றார் !
கண்கடந்த ஆத்மசுத்தி நாடிசென்றார்
கங்கைமடி யமுனைமடி புனிதமென்றார் !!– 05

கோடிகோடி  பக்தர்மூழ்கு  ப்ரயாக்ராஜில்-ஒரு
கொசுயில்லை குப்பையில்லை கொள்குறையில்லை
நாடிபாடி வந்தவர்க்கு பிணிபசியில்லை- முங்கு
நாளவர்க்கு பெருவீடு முன்மாதிரியாம். –06

மதமாற்றம் செய்யுமொரு நிகழ்வுமில்லை -எந்த
மதத்தோடும் பிணக்கில்லை போட்டியுமில்லை!
விதத்தேயாம் தொன்றுதொட்டு சனாதனரே – அதன்
விதை,தொடா மண்ணில்லை மனதுமில்லை!! — 07 

எச்சில்’துப்பி ‘உணவளித்த செய்திகளில்லை -அண்டும்
எதிர்மதத்தை தூற்றியதாய் தகவல்களில்லை
அச்சம்கொண்டு  “வஞ்சம்”மனம் கொள்ளவுமில்லை – கங்கை  
அன்னை போற்றி என்றுரைக்கா உதடுகளில்லை.  — 08

அரைநூறு கோடிபக்தர் தீர்த்தமிட்டும் – சங்கம் 
அதில்கிருமி கலங்கலில்லை; தெளிவோட்டம்:
நிறைஞான விஞ்ஞானர் ஆய்வுதேடும் – நம்
நிலம்வியக்கும் மெய்ஞ்ஞான ப்ரம்மவேள்வி !!  –09

பல்லினத்து சாதுக்கள் பற்றற்றோர் – குறு
பல்லாண்டு  காடிருந்த புண்யாத்மா
புள்பறக்கும் வானம்போல் சங்கம்வந்தார்
புத்துலகம் ஆக்கிட்டார் பாரதத்தை !  — 10

முனிரிஷிகள் சரண்தொட்ட திரிவேணி – புவி
மாந்தர்மெய் மனமலம்பும்; கதிதுலங்கும் 
இனியெவரும்  சனாதனம் பழிப்பரேல்
இடித்துரைக்கும்:  அவர்வழியில்  பதிலளிக்கும்,   –11      

ஆரியரோ திராவிடரோ அன்னியர்தானோ – நல்
ஆஸ்திகரோ நாஸ்திகரோ நாடிபார்பாரோ
 கூரியதாய் நிதமொளிரும்  யெம்சனாதனம்
காண்பார்க்கு காணும்வித மாயக்கண்ணாடி — 12

ஓய்வெடுக்கும் வாசுகிக்கும் நாவோட்டிக்கும் – வீதி
உயர்வான அன்னமிட்ட ப்ரபுமார்கட்கும்
சாயாமல் நகர்காத்த காவலர்கட்கும் – விழா
சரித்திர அரசுக்கும்  உலகார்நன்றி,– 13

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தரிசனம்!

gyanesh kumar election commissioner - 2026

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை என்றார்.

உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு 26 வது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்வதற்கு வருகை தந்தார். கோவிலுக்கு  வருகை தந்தவருக்கு கோவில் நிர்வாகம் சார்பாக மரியாதை வழங்கப்பட்டது.

தொடர்ந்து, கோவிலில் மீனாட்சி அம்மன்  சந்நிதி மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார். மேலும், பொற்றாமரை குளத்தில் நின்று குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர், கோவிலில் இருந்து வெளியே வந்த தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது:

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளோம்.  சிறப்பான தரிசனம் கிடைத்தது. மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை என்று கூறினார். மேலும் இ. வி. எம். இயந்திரம், தொகுதி மறுவரையரை குறித்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் சென்றார்.

கொங்கு பகுதி சக்தி பீடம்: குலங்கள் பல காக்கும் தெய்வம்!

muthanampalayam angalamman - 2026

ஒரு மரத்தில் எத்தனை கிளைகள் என்றும், அந்தக் கிளைகளில் எத்தனை இலைகள் என்றும் எப்படி எண்ண முடியாதோ அதுபோலத்தான் சமூகத்தில் எத்தனை சாதிகள், அந்த சாதிகளுக்குள் எத்தனை குலங்கள் என்பதையும் எண்ண முடியாது என்பர் ஆன்றோர். ஒரு குலத்துக்கு ஒரு குலதெய்வம் என்பதுதான் உலகில் பொதுவாக உள்ள நியதி.

ஆனால் திருப்பூரை அடுத்த முத்தணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள அங்காளம்மனை முதலியார், கவுண்டர், ஆசாரி, அய்யர், அய்யங்கார், தேவர், உடையார், வண்ணார், நாவிதர், போயர், படையாச்சி, சைவப்பிள்ளை என பல சாதியை சேர்ந்த பல்வேறு குலத்தவர்களும் குலதெய்வமாகப் போற்றி வணங்கி வருகிறார்கள்.

அரக்க சக்திகள் மடியவும், இந்திராதி தேவர்கள் உய்யவும் பார்வதிதேவி அங்காளம்மனாக அவதாரமெடுத்து மக்களுக்கு அருள்பாலிக்க வந்தாள். இப்படி வந்த அங்காளம்மன் திருக்கோயில்களுக்கெல்லாம் தலைமைப்பீடம் மேல்மலையனூர் என்பார்கள்.

காசிக்கு வாசி அவினாசி என்று கொங்குமண்டலத்தில் எழுந்தருளியுள்ள அவினாசி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருவதுபோல் மேல்மலையனூருக்கு வாசி இந்த முத்தணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி என்று, மக்கள் திரளாக வந்து குவிகிறார்கள். மேல்மலையனூரில் சுயம்புவாக உருவாகி வளர்ந்து வரும் புற்று, பக்தர்களுக்குள்ள எப்படிப்பட்ட பிணியையும் நீக்கி அருள்வதுபோல் இங்குள்ள சுயம்புப் புற்றும் தீராத நோயையும் தீர்த்தருளி வருகிறது.

இத்தலம், சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் எழுப்பப்பட்டிருக்கலாம் என்பது செவிவழிச் செய்தி. திருவண்ணாமலையில் அண்ணாமலையாரையும், மலையனூர் வாழ் அங்காளம்மனையும் வழிபட்ட கையோடு ஏராளமான பக்தர்கள் கொங்கு நாட்டிலிருக்கும் இத்தலத்திற்கும் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

முன்னொரு காலத்தில், இப்பகுதி புதர்கள் மண்டிக்கிடக்கும் ஒரு காடாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காட்டிற்குப் பக்கத்தில் ஒரு கிராமம் இருந்தது. அங்கிருந்து ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்காக இந்தக் காட்டிற்கு வரும். அப்படி வரும் போது அதில் ஒரு பசு மட்டும் புற்றுருவாய், பாம்புருவாய் எழுந்திருக்கும் கருநாக ரூபிணிக்கு பால் சுரந்து கொடுத்து விட்டுப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தது.

இந்நிலையில் ஒரு நாள் பசுவின் மடியில் பால் இல்லாததைப் பசுவின் சொந்தக்காரர் அறிந்து கொண்டார். உடனே கால்நடைகளை மேய்ப்பவனை அழைத்துக் கண்டித்து அனுப்பினார். மேய்ப்பவன் அப்பசுவினை கண்காணித்து வந்தான். அப்போது பசு மேய்ச்சலை முடித்து விட்டு வழக்கம் போல் புற்றில் தன் மடியிலிருந்த பாலை சுரந்து கொடுத்து விட்டு வந்ததை கண்டான். அவனால் அந்த அதிசயத்தை நம்ப முடியவில்லை. உடனே பசுவின் சொந்தக்காரரிடம் ஓடிப்போய் நடந்த விவரத்தைச் சொன்னான்.

அவன் சொன்னது உண்மை தானா என பசுவின் சொந்தக்காரர் யோசித்தார். `சரி…சரி… நீ போ…நாளை வந்து நான் பார்க்கிறேன்!’ என்று அவனிடம் சொல்லி அனுப்பினார். திருவண்ணாமலைக்கும், மலையனூருக்கும் சென்று வரும் பக்தர்களில் புற்றுக்கு பால் சுரந்து கொடுத்த பசுவின் சொந்தக்காரரும் ஒருவர்.

அன்றிரவு அவரது கனவில் அம்மன் காட்சியளித்து, “புதர்கள் மண்டிக்-கிடக்கும் காட்டில் புற்றுருவாய் நான் எழுந்தருளியிருக்கிறேன். மலையனூர் சென்று பக்தர்கள் ரொம்பவும் சிரமப்பட்டு வருகின்றனர். இனி அதற்கு அவசியம் இல்லை. என்னை தரிசிப்பதென்றால் இங்கு வந்து என்னை தரிசித்து விட்டுச் செல்லலாம்” என அருளியுள்ளார்.

மறுநாள், பசுவின் மடியில் நாகம் பால் அருந்திய தெய்வீக காட்சியையும் கனவில் அம்மன் தோன்றிய நிகழ்வையும் கண்டவர், மலையனூர் சென்று வரும் பக்தர்கள் மேல் இரக்கம் கொண்டு அம்மனே இங்கு எழுந்தருளியிருப்பதை நினைத்து உள்ளம் பூரித்தார்.

அம்மன் புற்றுருவாய் எழுந்தருளியிருக்கும் புதர் மண்டிக் கிடக்கும் அந்த இடத்தை வாங்கி அங்காளம்மனுக்கு ஓர் ஆலயம் கட்டினார், அந்த பக்தர்.
இங்கேயும் ஓர் மலையனூர் உருவாயிற்று. அதன்பின்னர் பிற்கால பாண்டியர்களான வீரபாண்டியன் (கி.பி 1265-1285), சுந்தரபாண்டியன் (கி.பி 1285-1300) காலங்களில் கோயில் விரிவுபடுத்திக்கட்டப்பட்டதாக வரலாற்றுச்செய்திகள் உள்ளன.

இக்கோயில் கருவறையை பழமையை மாற்றி புதுமையாக மாற்றியமைக்க அம்மன் உத்தரவு தரவில்லையாம். இப்போது பார்த்தாலும் கருவறையின் கற்சுவர்களில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மீன்சின்னங்களையும், பாலகனை முதலை உண்ட தோற்றச்சிற்-பங்களையும் பார்க்க முடிகிறது.

இக்கோயிலுக்குச் செல்லும் வழியான திருப்பூர் நல்லூரில் பரமசிவன் கோயில் ஒன்று உள்ளது. அம்மன் ஆலயம் எழுந்த போதே இக்கோயிலும் உருப்பெற்றது. இந்தப் பரமசிவன் வீற்றிருக்கும் இக்கோயிலையும் பக்தர்கள் தரிசித்து விட்டுச் செல்கின்றனர். ஆக இங்கேயும் ஓர் திருவண்ணாமலை விளங்கிக் கொண்டிருப்பது இன்னொரு அதிசயம்!

பக்தர்களுக்கு அருள்பாலிக்க திருவண்ணாமலையாரும், மலையனூர் வாழ் அங்காளம்மனும் இங்கே எழுந்தருளியிருக்கிறார்கள். கொங்கு நாட்டில் உள்ள சக்தி பீடங்களில் முதன்மையானதாக விளங்குகிறது இத்தலம்!

முத்தணம்பாளையம்

ஒன்பது சக்தி பீடங்களில் ஏழாவது பீடமாகவும் அவதாரத்தலமாகவும் சிறப்பு பெற்றது இத்திருத்தலம். இத்தலத்தினுடைய திருப்பெயர் சிறப்பிற்குரிய ஒன்றாகக் கருதப்படுகிறது. முத்தணம்பாளையம் என்றும் தரள(ம்) நகர் என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது. “முத்தணம்” என்றால் மூன்று தனங்கள்” என்று பொருள்படும்.

அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று செல்வங்களை உடையது தான் இந்த முத்தணம்பாளையம். தரளம் என்றால் முத்து என்று பொருள். அங்காளம்மன் மாரியம்மனாக அவதாரம் எடுத்த போது தான் முத்து என்ற திருப்பெயர் அவளுக்கு சூட்டப்பட்டது. இத்திருப்பெயரே காலப்போக்கில் முத்தணம்பாளையம் என்றாயிற்று. இத்தலத்திற்கு வந்தவர்கள் நோய், நொடிகள் நீங்கி பூரண குணமாகிச் சென்றிருக்-கிறார்கள். கஷ்டங்கள், குறைகள் நீங்கி, மனநிறைவு பெற்றும், அருட்பெருஞ்செல்வங்கள் அடைந்திருக்கிறார்கள். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். அந்த அளவிற்கு அற்புதங்கள் இத்தலத்தில் நடந்திருக்கின்றன.

சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ள அம்மனை, திருமணத் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், குடும்பத்தில் பிரச்னை உள்ளவர்களும், செல்வ வளம் விரும்புவோரும், தீராத நோய் உள்ளவர்களும், சர்ப்பம் மற்றும் பிற தோஷம் உள்ளவர்களும் மனதார வழிபட்டு வந்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. அம்மனை குல தெய்வமாக வழிபடுபவர்கள் தங்களது முதல் குழந்தைக்கு முத்தம்மாள், முத்துசாமி என்று பெயர் சூட்டி அழைக்கிறார்கள்.

அம்மனின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தலைக்கட்டு பொங்கல் வைத்து, முடி காணிக்கை செலுத்தி, காது குத்தி தங்களது நன்றிக் கடனை செலுத்துகிறார்கள். அங்காளம்மனுக்கு மற்றொரு திருப்பெயர் காலராத்திரி என்பார்கள்.

மஹாசிவராத்திரி

சிவராத்திரி அன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் நடக்கும் மயானக்கொள்ளை பூஜை இங்கும் உண்டு. ஆனால் அது வித்தியாசமானது. கோயிலுக்கு அருகே உள்ள சுடுகாட்டுக்கு அருகில் ஒரு பிரமாண்ட அம்மன் மண்ணுருவம் படுத்த வாக்கில் செய்து அதற்கு கோர அலங்காரங்கள் செய்து பூஜை புனஸ்காரங்கள் செய்கிறார்கள்.

அந்த விழாவுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இதர மாநிலங்களி-லிருந்தும் பக்தர்கள் வருகிறார்களாம். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இந்தத் திருவிழா நடப்பதற்குப் பத்துப்பதினைந்து நாட்களுக்கு முன்பு ஊருக்குள் பெரியவர்கள் யாராவது வழக்கமாக இறந்து விடுவது வாடிக்கையாக இருந்துள்ளது.

இறந்தவர்கள் தலையை வெட்டி எடுத்து மயானத்தில் செய்து வைக்கப்பட்ட உருவத்துடன் பிணைத்து பூஜைகள் செய்வார்களாம். அதெல்லாம் இப்போது வழக்கொழிந்து விட்டது. அம்மனின் தீர்த்தம், மஞ்சள் காப்பு, விபூதி, குங்குமம் ஆகியவை பிணி பீடைகளை விலக்கும் சக்தி வாய்ந்தது. அம்மனின் குங்குமம் மஞ்சள் காப்பினை சுமங்கலிப் பெண்டிர் தங்கள் திருமாங்கல்யத்தில் அணிந்து கொள்ளும் வழக்கம் உள்ளது!

மகா சிவராத்திரி; இன்று நிறைவு பெறும் மகா கும்பமேளா! 63 கோடி பேருக்கு மேல் புனித நீராடல்!

2025 kumbamela - 2026

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் திரிவேணி சங்கமத்தில் கடந்த மகர சங்கராந்தியான  ஜன.13ம் தேதி தொடங்கிய மஹா கும்பமேளா 45 நாட்கள் நடைபெற்று, மகா சிவராத்திரியான பிப்.26 இன்று நிறைவு பெறுகிறது. இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் மஹா கும்பமேளாவில் கலந்து கொண்டு நீராடி இருக்கின்றனர்.

உ.பி. மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து மகா கும்பமேளா நிறைவு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்குள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மகர சங்கராந்தியான கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானோர் பங்கேற்று புனித நீராடினர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் வந்திருந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். 

பொது மக்கள், பக்தர்களுடன் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இதுவரை 63 கோடி பேருக்கும் மேல் புனித நீராடியுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. 

உத்தரப் பிரதேச மாநில சிறைக்கைதிகளும் புனித நீராட வசதியாக, திரிவேணி சங்கம புனிதநீர் மத்திய சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 44 நாட்களாக நடந்து வந்த மகா கும்பமேளா, 45-வது நாள் மகா சிவராத்திரி தினமான இன்றுடன் நிறைவுபெறுவதையொட்டி, நிறைவு நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. கங்கைக் கரையில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருக்கின்றன.  

நிறைவு நாளை முன்னிட்டு நேற்று முதலே லட்சக் கணக்கானோர் பிரயாக்ராஜ் நோக்கி செல்லத் தொடங்கினர். மகா சிவராத்திரி மற்றும் மகா கும்பமேளா நிறைவுநாளான இன்று ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜுக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில்,முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. 

நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதே நேரம், அத்தியாவசிய தேவைகளுக்காக மருத்துவர்கள், காவலர்கள், நிர்வாக அதிகாரிகள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் பகுதியில் எந்த இடத்தில் மக்கள் வருகின்றனரோ, அதன் அருகிலேயே நீராட வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

முன்னதாக, கும்பமேளாவில் நதி நீர் குளிக்கக் கூட லாயக்கில்லாத வகையில் அசுத்தம் அடைந்ததாக எதிர்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுக்கு உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத் பதில் அளித்தார். அப்போது அவர், கழுகுகள் அங்கே பிணங்களை பார்த்தன, பன்றிகள் அழுக்கை பார்த்தன, நம்பிக்கை கொண்டோர் ஒழுங்கைப் பார்த்தார்கள், பக்தர்கள் அங்கே கடவுளைப் பார்த்தார்கள் என்று கூறினார்.

சனாதன தர்மம், கங்கை மாதா, இந்தியா அல்லது மகா கும்பமேளா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைப்பதும், போலி காணொளிகளை பகிர்வதும் 56 கோடி மக்களின் நம்பிக்கையுடன் விளையாடுவதற்கு சமம் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.

மகிமை நிறைந்த மகா சிவராத்திரி!

mahasivarathri - 2026
  • பா.சுவாமிநாதன்

உறவொடு பகையறும் ஒருமுதல் அவன் எவன்?
இறுதியில் உலகருள் இறையவன் அவன் எவன்?
மறைமுடி வினில்நடம் வளர்பவன் எவன், எவன்?
அறிவினில் அறிபவன் அடியினை தொழுதனம்

சைவ சமயக் கடவுள்களுள் முதன்மையானவனும் முக்கியமானவனுமாக விளங்குபவன் ஈசன். இறையனாராக, தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவனாக இருந்த தமிழ்க் கடவுள். பிட்டுக்கு மண் சுமந்து, நரியைப் பரியாக்கி, கல்யானைக்கு கரும்பு கொடுத்து பல்வேறு திருவிளையாடல்கள் நிகழ்த்திய பெம்மான். உலகத்தை ஆட்டுவிக்கும் ஆடல்வல்லான். இவ்வாறு பல்வேறு பெருமைகளை தன்னகத்தே கொண்ட தனிபெருங் கடவுளான ஈசனுக்கு மிகவும் உகந்த நாள் மஹா சிவராத்திரி.

சிவராத்திரி என்பதற்கு “சிவனுக்கு உகந்த இரவு” என்பது பொருளாகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரியாக போற்றப்படுகிறது. ஆனால் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மஹா சிவராத்திரியாகப் போற்றப்படுகிறது. எத்தனையோ இரவுகள் இருக்க மாசி மாதத்து அந்த ஒரு இரவு மட்டும் சிவனுக்கு மிகவும் பிடித்ததாகிப் போனது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

மஹா ஜோதி
சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவிற்கு திடீரென்று ஓர் சந்தேகம் ஏற்பட்டது. ‘ நான் தானே இந்த உலகைப் படைப்பவன், நான் இல்லாவிட்டால் இந்த உலகில் உயிர்கள் ஏது, இயக்கம் ஏது? ஏன் இந்த உலகமே ஏது? – என்ற எண்ணம் தோன்றியது. சிருஷ்டி என்ற ஒன்று இல்லாவிட்டால் அப்புறம் இந்த உலகை யார், எப்படிக் காப்பது… ரட்சிப்பது… அழிப்பது!… ஆகவே காக்கும் கடவுளான திருமாலை விடவும், அழித்து ரட்சிக்கும் ஈசனை விடவும் நானே உயர்ந்தவன், சிறந்தவன். அளப்பரிய ஆற்றல் படைத்தவன்’ என்ற எண்ணம் உண்டானது. அதனால் அவருக்கு மிகுந்த தலைக் கனம் ஏற்பட்டது.

தன் செல்வாக்கை நிரூபிக்க நினைத்த பிரம்மன் வைகுண்டம் சென்றார். அறிதுயிலில் ஆழ்ந்திருந்த அரியுடன் மல்லுக்கு நின்றார். ‘நான் உன் நாபிக் கமலத்தில் தோன்றியவனே ஆனாலும் உன்னை விட உயர்ந்தவன், எல்லாம் தெரிந்தவன். எனவே மகன் தானே என நீ என்னை அலட்சியப்படுத்தாமல் எனக்குக் கட்டுப்பட்டு நட! நீ பலரது சாபத்திற்கு ஆளாகி பலமுறை பிறப்பெடுத்திருக்கிறாய். ஆனால் நானோ நித்யவாசம் செய்பவன். பிறப்பு, இறப்பு அற்றவன். நான் இந்த உலகத்தைப் படைக்காவிட்டால் எங்ஙனம் நீ காத்தல் தொழிலைச் செய்ய முடியும்? எனவே, நான் உன்னை விட உயர்ந்தவன் என்பதை உணர்ந்து கொண்டு எனக்கு ஏவல் செய்வாயாக’ என்றார்.

அதைக் கேட்டதும் மஹாவிஷ்ணுவுக்கு அளவற்ற சீற்றம் உண்டானது. ‘அடே, மூடனே, உன்னுடைய தலைகளில் ஒன்றை ஈசனார் பறித்து எறிந்த காலத்தில் எங்கே போயிற்று உனது படைப்பாற்றல்? நீ அளவற்ற ஆற்றல் உடையவன் என்பது உண்மை என்றால் அதனை மீண்டும் உன்னால் படைத்துக் கொள்ள முடியாதது ஏன்? சோமுகாசுரன் உன்னிடம் இருந்த வேதங்களைப் பறித்து எடுத்துச் சென்றபோது எங்கே போனாய் நீ? நானல்லவோ மச்ச அவதாரம் எடுத்து அதை உனக்கு மீட்டுத் தந்தேன். எனவே நான் என்ற அகங்காரத்தை விடு. நானே இந்த உலகைக் காப்பவன். நான் காக்கும் இத்தொழிலைச் செய்யாவிட்டால் இந்த உலகம் என்றோ அழிந்து விட்டிருக்கும். ஆகவே, நானே உன்னை விட உயர்ந்தவன். என்னிடம் தேவையில்லாமல் எதிர்வாதம் புரியாதே! பல அசுரர்களை அழித்த நான் உன்னையும் அழிக்கத் தயங்க மாட்டேன்’ என்றார்.

தொடர்ந்து வாக்குவாதம் முற்றியது. இறுதியில் அதுபெரும் போராக மாறியது. ஒருவரை விட ஒருவர் தாங்களே உயர்ந்தவர் என்று கூறி மிகக் கடுமையாகப் போர் புரிந்தனர். அதனால் அண்ட சராசரம் நடுங்கியது. மகா பிரளயம் உண்டானது. இந்திரன் திகைத்தான். முனிவர்கள், சித்தர்கள், யோகிகள் அனைவரும் அஞ்சினர். ஈசனிடம் சென்று உலகைக் காக்குமாறு கெஞ்சினர். ஈசனும் அபயஹஸ்தம் அருளினார்.

போர் புரிந்து கொண்டிருந்த அயன், அரிகளின் அருகே மிகப் பெரிய பேரொளி ஒன்று தோன்றிற்று. ’இந்த ஒளியின் அடியையும், முடியையும் எவர் கண்டறிகிறாரோ அவரே பெரியவர்’ என்ற அசரீரி ஒலித்தது. உடனே தாம் தான் பெரியவர் என மற்றவருக்கு நிரூபிக்க வேண்டிய ஆவலில் பிரம்மா அன்னப் பறவையாகி வானில் உயர்ந்தார். விஷ்ணுவோ வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்தார்.

பிரம்மா மேலே மேலே சென்றார். அன்னமாகிய பிரம்மாவின் சிறகுகள் அழலின் வெப்பத்தால் கருகின. உருகின. உதிர்ந்தன. இருந்தும் அவரால் திருமுடியைக் காண இயலவில்லை. விஷ்ணுவோ பூமியைக் குடைந்தார். பாதாளம் வரை கடைந்தார், ஆயினும் திருவடியைக் காண இயலவில்லை. ஆணவம் ஒழிந்த விஷ்ணு, அண்ணலைச் சரண் புகுந்தார்.

மேலே செல்ல முடியாமல் திகைத்த பிரம்மா, இறைவனின் திருமுடியிலிருந்து தவறி விழுந்து கொண்டிருக்கும் தாழம்பூவைக் கண்டார். தான் திருமுடியைக் கண்டதாகவும், அதை தாழம்பூ பார்த்ததாகவும் பொய் சாட்சி கூற வலியுறுத்தினார். படைப்புக் கடவுளான பிரம்மனே சாதாரண மலரான தன்னிடம் கெஞ்சுகிறானே என்ற எண்ணத்தில் தாழம்பூவும் உடன்பட்டது. அதை சாட்சியாக வைத்து, தான் திருமுடியைக் கண்டதாகவும், அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என்றும் பொய் சாட்சி கூறினார் பிரம்மா.

பேரொளி வெடித்துச் சிதற ஈசன் அளவிலாச் சீற்றத்துடன் அதிலிருந்து வெளிப்பட்டார். ’பிரம்மனே! என் திருவடியைக் காணாமலேயே கண்டு விட்டதாகப் பொய் புகன்ற உனக்கு இனி இவ்வுலகில் திருக்கோயில்களும், வழிபாடும் இல்லாமல் போகட்டும்’ என்று சாபம் இட்டார். பொய் சாட்சி கூறிய தாழம்பூவிடம், ‘நீதி தவறிய உன்னை இனி என் பக்தர்கள் யாரும் பூஜைக்குப் பயன்படுத்த மாட்டார்கள்” என்று சாபமளித்தார். சாபம் விடுத்தும் சீற்றம் அடங்காத சிவன் அக்கினிப் பிழம்பாய்த் தகித்தார். அஞ்சிய பிரம்மனும், விஷ்ணுவும் தங்கள் பிழை பொறுக்குமாறு வேண்டினர். தேவர்கள் பாடித் துதிக்க, முனிவர்கள் வேதம் ஓத, ஈசன் குளிர்ந்தார். அருணாசல லிங்கமாய் அமர்ந்தார்.

இவ்வாறு ஈசன் ஜோதிப் பிழம்பாய்த் தோன்றி பிரம்ம, விஷ்ணுக்களின் ஆணவம் அகற்றி மன்னுயிர்களை மாபெரும் அழிவிலிருந்து காத்த அந்த இரவு தான் மஹா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

பகவான் ரமணரும் இதனை

ஆதிஅரு ணாசலப்பேர் அற்புதலிங் கத்துருக்கொள்
ஆதிநாள் மார்கழியில் ஆதிரையச் – சோதியெழும்
ஈசனைமால் முன்அமரர் ஏத்திவழி பட்டநாள்
மாசிசிவ ராத்திரியா மற்று

என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சிவராத்திரி குறித்து மற்றொரு கதையும் கூறப்படுகின்றது. ஒரு காலத்தில் பிரளயத்தின் போது அனைத்து உயிர்களும் ஈசனிடம் சென்று ஒடுங்கின. உலக இயக்கமே நின்று போனது. இதனால் மனம் வருந்திய அன்னை உலகங்களும் உயிர்களும் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை நோக்கித் தவம் இருந்தாள். அவள் தவத்திற்கு மெச்சிய ஈசன், தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாக்கி உயிர்களைப் படைத்தருளினார். அப்பொழுது அன்னை, தாம் விரதம் இருந்து இறைவனை தியானித்துப் போற்றிய அக்காலத்தை அனைவரும் சிவராத்திரி விரதமாக கொண்டாட வேண்டும் என்றும், அவர்களுக்கு ஈசனின் பூரண அருள் எப்போதும் கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டாள். இறைவனும் அதற்கு அருள் புரிந்தார். அந்நாளே மஹா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது.

சிவராத்திரி பூஜை

சிவராத்திரி காலத்தில் நீராடி, நீறு பூசி, ஐந்தெழுத்து மந்திரத்தை விடிய விடிய ஓதி வருதல் சிறப்பு. சிவ புராணம் படித்தலும், திருமுறைகளை பாராயணம் செய்தலும் நற்பலனைத் தரக்கூடியதாகும். சிவன் ஜோதியாய்த் தோன்றி லிங்கமாய்க் குளிர்ந்த அண்ணாமலை தலத்தை கிரிவலம் வருதல் அளவற்ற புண்ணியத்தைத் தரும். அன்னை பார்வதி தேவியுடன், முப்பத்து முக்கோடி தேவர்களும், சித்தாதி யோகியர்களும், முனிவர்களும் மஹா சிவராத்திரி அன்று கிரிவலம் வருவதாக ஐதீகம்.

தென்னாடுயை சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய! ஓம் சிவாய நமஹ!

போன்ற மந்திரங்களை, சிவபுராணம் கூறித் துதித்து மஹா சிவராத்திரி அன்று ஈசன் அருள் பெறுவோம்.

‘தமிழ் வாழ்க’ எழுத்துகளுடன் மாலையிட்டு அமித்ஷாவை வரவேற்ற அண்ணாமலை!

annamalai welcome amit sha in combatore - 2026

ஈஷா யோகா மையத்தின் மஹா சிவராத்ரி விழா மற்றும் மாவட்ட பாஜக., அலுவலகங்களை திறந்து வைப்பதற்காக கோவைக்கு வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சால்வை அணிவித்து பாஜக.,வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். குறிப்பாக, ‘தமிழ் வாழ்க’ என்று எழுதப்பட்ட பெரிய மலர்மாலையை அமித் ஷாவுக்கு அணிவித்து வரவேற்றார் மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை. அதுபோல் தமிழ் எழுத்துகளுடன் கூடிய சால்வையை அணிவித்து வரவேற்றார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா நாளை கோலாகலமாக நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்கென அவர், இன்று இரவு கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

நாளை காலை கோவை பீளமேட்டில் பாஜக., மாவட்ட கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, மாநில கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். இரவு ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார்.

அமித் ஷா வருகையை முன்னிட்டு, கோவையில் அவர் தங்கியிருக்கும் ஹோட்டல், பாஜக., மாவட்ட அலுவலகம், ஈஷா யோகா மையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமித் ஷா தனது வருகை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்து…

“கோயம்புத்தூருக்கு (தமிழ்நாடு) வந்தடைந்தேன். நாளை, மகா சிவராத்திரியின் புனித நிகழ்வில் ஈஷா அறக்கட்டளையில் நடைபெறும் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறேன். பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Amit Shah on X: “Arrived in Coimbatore (Tamil Nadu). Tomorrow,  will attend the celebrations to be held at Isha Foundation on the sacred occasion of Maha Shivratri. Eagerly waiting to meet the devotees from different parts of Bharat and the globe. கோயம்புத்தூருக்கு (தமிழ்நாடு) வந்தடைந்தேன். https://t.co/lhCAZFLVaJ” / X

‘கெட் இன் அண்ணாமலை’ நிகழ்கிறது!

write thoughts - 2026
#image_title

‘கெட் அவுட் மோடி’ பலிக்கவில்லை. ‘கெட் இன் அண்ணாமலை’ நிகழ்கிறது!

— ஆர். வி. ஆர்

சமீபத்தில் பிரதமர் மோடியைக் கண்டித்துப் பேசிய தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “பிரதமர் இனி தமிழகத்துக்கு வந்தால் மக்கள் அவரை ‘கெட் அவுட் மோடி’ என்று சொல்லித் துரத்துவார்கள்” என்று எச்சரித்தார்.

உதயநிதிக்குத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்தார். மோடியை உதயநிதி அவ்வாறு அவமதிப்பு செய்ததால், தமிழகத்தை சரியாக நிர்வாகம் செய்யாத முதல்வர் மு. க. ஸ்டாலினைத் தானும் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்று சொல்வதாகக் கூறினார். இரு தரப்பின் கெட் அவுட் கோஷங்களும் X தளத்தில் ஒரு நாளுக்கு மேல் பிரதானமாக வந்தன. இந்த இரண்டு கோஷங்களின் தொடக்கக் காரணம், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை, 2020.

மத்திய அரசு தனது புதிய தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல் செய்யவிருக்கிறது. அதன் மூலமாக பள்ளிக் கல்வி முறைகளில், பாடத் திட்டங்களில், சில முக்கிய மாறுதல்கள் வரும். ஆனால் தமிழகத்தை ஆளும் திமுக அரசு இதை எதிர்க்கிறது.

தேசிய கல்விக் கொள்கையின் எந்த அம்சத்தைத் திமுக எதிர்க்கிறது? ஏன் எதிர்க்கிறது?

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சம்: 5-ம் வகுப்பு வரை, முடிந்தால் 8-ம் வகுப்பு வரை, பள்ளி மாணவர்களுக்குப் பயிற்று மொழி அவரவர்களின் பிரதேச மொழியாக இருக்கும். தமிழ்நாடு என்றால், அது தமிழ்வழிக் கல்வியாக இருக்கும். இது அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். 5 அல்லது 8 வகுப்புகள் வரை இங்கிலீஷ் மீடியம் கல்வி இருக்காது என்றாகிறது. இந்த ‘தாய் மொழிக் கல்வி’ அம்சத்தைப் பற்றி திமுக குறிப்பாக ஒன்றும் சொல்லவில்லை.

தேசிய கல்விக் கொள்கையின் இன்னொரு அம்சம்: பிரதேச மொழி மற்றும் ஆங்கிலம் தவிர, மாணவர்கள் தாங்கள் விரும்பும் வேறொரு இந்திய மொழியைக் கற்க வேண்டும். தமிழ்நாட்டில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, மராத்தி, ஹிந்தி என்று ஏதாவது ஒரு பிற இந்திய மொழியை மாணவர்கள் தேர்வு செய்து பள்ளியில் பயில வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சத்தை மட்டும் வலியுறுத்திக் குறிப்பிட்டு, அதை ஒரு சாக்காகச் சொல்லி, தேசிய கல்விக் கொள்கையை ஒட்டுமொத்தமாக எதிர்ப்பது போல் திமுக நிலை எடுக்கிறது. அதாவது, ‘தேசிய கல்விக் கொள்கை பள்ளிகளில் மும்மொழி கற்பிக்க வைக்கிறது. அதனால் தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தவிர இன்னொரு இந்திய மொழியை மாணவர்கள் கட்டாயம் கற்கவேண்டும். இதன் மூலம் மத்திய அரசு பள்ளி மாணவர்களை ஹிந்தி கற்க கட்டாயப் படுத்துகிறது. இது ஹிந்தித் திணிப்பு’.

தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு அமல் செய்யத் தவறுவதால், அந்த வகையில் மத்திய அரசு தமிழகத்திற்காக ஏற்கவிருந்த ஆண்டுச் செலவு சுமார் 2,100 கோடி ரூபாயை மாநிலத்திற்கு விடுவிக்காமல் இருக்கிறது. இது தமிழக அரசுக்கு நெருக்கடி. இருந்தாலும் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது திமுக – கூடுதலாக சில அபத்தக் காரணங்கள் சொல்லி.

“தேசிய கல்விக் கொள்கை சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழுக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு, வேட்டு வைக்கும் கொள்கை. தமிழகம் அந்தக் கல்விக் கொள்கையை ஏற்றால் 2000 ஆண்டுகள் பின்னோக்கித் தமிழ்ச் சமுதாயம் போய்விடும்” என்று ஜன்னி கண்டவர் போல் கடலூர்க் கூட்டத்தில் இப்போது பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். சிரிக்காமல் அவர் அப்படிப் பேச முடிந்தது அதிசயம்.

திமுக-வின் எதிர்ப்பு வாதம் போலியானது, பித்தலாட்டமானது, சுயநலம் நிறைந்தது.

முதல் விஷயம்: தேசிய கல்விக் கொள்கையின் படி, தமிழகத்தின் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயில விரும்பும் மூன்றாவது மொழியாக ஹிந்தியைத் தேர்வு செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மற்ற எந்த இந்திய மொழியையும் அவர்களே தேர்வு செய்து படிக்கலாம். இது வெட்ட வெளிச்சம். இதை யாரும் எடுத்துச் சொல்லவேண்டியது இல்லை.

ஹிந்தி படித்தால் அகில இந்தியாவில் எங்கு சென்றும் சமாளிக்கலாம், நாட்டில் தமக்கு வேலை வாய்ப்புகளும் கூடும் என்று நினைத்து, தேசிய கல்விக் கொள்கையின் கீழ் அதிகமான தமிழக மாணவர்கள் எல்லாப் பள்ளிகளிலும் தாங்களாகவே ஹிந்தியைத் தேர்வு செய்து படிக்க ஆரம்பிக்கலாம். இந்த நடைமுறை உண்மைதான் திமுக-விற்கு கிலியைக் கொடுக்கிறது. ஏன் அந்த கிலி?

‘தமிழர்களின் தாய்மொழி உணர்வைக் கட்டிக் காப்பது திமுக மட்டுமே. ஹிந்தி தமிழகத்தில் பரவலாக நுழைந்தால் அது தமிழை நசித்துவிடும், தமிழர்களை அந்த அபாயத்திலிருந்து காத்து, அதற்காக உயிரையும் விடத் தயாரானவர்கள் திமுக-வினர்’ என்ற அடிப்படையில் ‘தமிழ்ப் பாதுகாவலர்கள்’ என்ற ஒரு பிம்பத்தை அப்பாவித் தமிழர்கள் மத்தியில் தனக்கு ஏற்படுத்தி இருக்கிறது திமுக.

பெருவாரியான தமிழக இளைஞர்கள் பள்ளிகளில் ஹிந்தி படிக்க ஆரம்பித்து, அதன் பின்னும் தமிழ் தழைத்தால் திமுக-வின் ‘தமிழ்ப் பாதுகாவலர்’ பிம்பம் உடையும், மொழி அடிப்படையில் திமுக தனக்கு வளர்த்து வைத்திருக்கும் வாக்கு வங்கி சேதப்படும். காலத்துக்கு ஏற்ப மாறி நின்று மக்கள் செல்வாக்கைப் பெறும் சிந்தை திமுக-விடம் இல்லை. இதனால் தேசிய கல்விக் கொள்கையிடம் திமுக அஞ்சுகிறது.

இன்னொன்று. தேசிய கல்விக் கொள்கையின் கீழ் அரசுப் பள்ளிகளின் தரம் தாமாக உயரும். அதனால் அரசியல்வாதிகள் குடும்பம் நடத்தும் தனியார் பள்ளிகளின் வியாபாரம் அடி வாங்கும். அந்தக் கவலை திமுக-வுக்கும் இருக்குமே?

தேசிய கல்விக் கொள்கையை அமல் செய்யும் மத்திய அரசின் சட்டத்திற்கும் உத்தரவுகளுக்கும் மாறாகத் தமிழக அரசு செயல்பட முடியாது. அதுதான் அரசியல் சட்டம். இருந்தாலும், மத்திய அரசு இதில் பொறுமை காக்கும், விட்டுப் பிடிக்கும்.

இந்தச் சூழலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ‘கெட் அவுட் மோடி’ என்ற திமிர் வார்த்தையைப் பேசினார். உதயநிதியின் அடாவடிப் பேச்சுக்கு, யாரும் எதிர்பாராத ஒரு பதிலைச் சொன்னார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதுதான் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ கோஷம். அந்தக் கோஷம் X தளத்தில் பத்து லட்சம் பதிவுகளைத் தாண்டி திமுக தலைமையை உலுக்கி இருக்கிறது. அதன் விளைவு, அடுத்த நாள் மு. க ஸ்டாலின் கடலூரில் பிதற்றிய அபத்தக் கருத்துக்கள்.

திமுக தலைவர்களின் பொதுவான அடாவடிப் பேச்சால், அவர்கள் தைரியசாலிகள், கெத்தனவர்கள், உறுதி மிக்கவர்கள், அவர்கள் பின் நிற்பது தமக்குப் பாதுகாப்பு என்று சாதாரண மக்கள் பலரும் அப்பாவியாக நினைக்கிறார்கள். அதே தைரியம், கெத்து, உறுதி ஆகிய குணங்களை ஒரு பாஜக தலைவரும் ஒரு யுக்தியாகத் திமுக-வுக்கு எதிராகத் தனது பேச்சில் அவ்வப்போது அளவாகக் காண்பித்தால்தான் அநேக சாதாரண மக்களைத் தங்கள் பால் பாஜக வேகமாக ஈர்க்க முடியும். அதைத் தனது ‘கெட் அவுட் ஸ்டாலின்’ எதிர்ப் பேச்சு மூலம் அண்ணாமலை முயன்றிருக்கிறார். பாஜக-வில் அவர்தான் இதற்குச் சரியானவர். நடைமுறை அரசியலில் இது பாஜக-வுக்கு நன்மை செய்யும்.

அண்ணாமலையின் சூடான எதிர்ப் பேச்சால், கணிசமான சாதாரணத் தமிழக மக்கள் – அதுவும் அண்ணாமலையின் பக்கம் மெள்ள மெள்ள அடி எடுத்து வைக்கிற தமிழர்கள் – அந்தத் தலைவரைத் தமது மனதிற்குள் “கெட் இன் அண்ணாமலை” என்று சட்டென்று சொல்வார்கள். நல்ல காரியம் நடப்பது சரிதானே?

Author: R. Veera Raghavan, Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

அமைச்சரவை அங்கீகரித்த புதிய கல்விக் கொள்கை!

national education policy - 2026

மத்திய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கையை அங்கீகரித்தது.

10வது வாரியத் தேர்வு நீக்கம், MPhil நிறுவனங்கள் மூடப்படும்

இன்று, மத்திய அமைச்சரவை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் முன்மொழிந்த புதிய கல்விக் கொள்கை 2020-ஐ அங்கீகரித்தது.

34 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

கல்வி கட்டமைப்பு
(5+3+3+4 சூத்திரம்)

1) 5 ஆண்டுகள் – அடிப்படைக் கல்வி
நர்சரி (4 வயது)
ஜூனியர் KG (5 வயது)
சீனியர் KG (6 வயது)
வகுப்பு 1 (7 வயது)
வகுப்பு 2 (8 வயது)

2) 3 ஆண்டுகள் – தயாரிப்புக் கல்வி
வகுப்பு 3 (9 வயது)
வகுப்பு 4 (10 வயது)
வகுப்பு 5 (11 வயது)

3) 3 ஆண்டுகள் – மேல்நிலை கல்வி
வகுப்பு 6 (12 வயது)
வகுப்பு 7 (13 வயது)
வகுப்பு 8 (14 வயது)

4) 4 ஆண்டுகள் – உயர்நிலை கல்வி
வகுப்பு 9 (15 வயது)
வகுப்பு 10 (SSC) (16 வயது)
வகுப்பு 11 (FYJC) (17 வயது)
வகுப்பு 12 (SYJC) (18 வயது)

சிறப்பு அம்சங்கள்:-

12வது வகுப்பில் மட்டும் வாரியத் தேர்வு

10வது வகுப்பு வாரியத் தேர்வு இனி கட்டாயமில்லை.

MPhil நிறுவனங்கள் மூடப்படும். MPhil படிப்பு நிறுத்தப்படும்.

4 ஆண்டு பட்டப்படிப்பு

கல்லூரி பட்டப்படிப்பு இனி
4 ஆண்டுகளாக இருக்கும்.

1 வருடம் படித்தால் சான்றிதழ்
2 வருடங்கள் படித்தால் டிப்ளமோ
3 வருடங்கள் படித்தால் பட்டம்
4 ஆண்டு பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக 1 வருடத்தில் MA படிக்கலாம்.

மொழிக் கல்வி

5வது வகுப்பு வரை தாய்மொழி, உள்ளூர் மொழி மற்றும் தேசிய மொழியில் கற்பித்தல். ஆங்கிலம் ஒரு பாடமாக மட்டும் கற்பிக்கப்படும்.

செமஸ்டர் முறை

9வது முதல் 12வது வகுப்பு வரை செமஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்படும்.

படிப்புகளுக்கிடையே மாற்றம்.

ஒரு படிப்பின் நடுவில் மற்றொரு படிப்பைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு இடைவெளி எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

உயர்கல்வியில் சேர்க்கை விகிதம்.

2035க்குள் உயர்கல்வியில் சேர்க்கை விகிதத்தை (GER) 50% ஆக உயர்த்துவது இலக்கு.

உயர்கல்வி சீர்திருத்தங்கள்

கல்வி, நிர்வாக மற்றும் நிதி தன்னாட்சி உள்ளிட்ட பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும்.

மொழி மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு.

பிராந்திய மொழிகளில் மின்னூட்கள் (E-courses) அறிமுகப்படுத்தப்படும்.
மெய்நிகர் ஆய்வகங்கள் (Virtual Labs) உருவாக்கப்படும்.

தேசிய கல்வித் தொழில்நுட்ப மன்றம் (NETF) நிறுவப்படும்.

ஒருங்கிணைந்த விதிமுறைகள்.

அரசு, தனியார் மற்றும் டீம் பல்கலைக்கழகங்களுக்கு ஒரே மாதிரியான விதிமுறைகள் பயன்படுத்தப்படும்.

இந்த புதிய கல்விக் கொள்கை, இந்திய கல்வி முறையை முழுமையாக மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்து வதற்கும், அவர்களின் திறன்களை முழுமையாக வளர்ப்பதற்கும் இந்த மாற்றங்கள் உதவும் என நம்பப்படுகிறது.