Home Blog Page 180

ஆடிப்பூரமும் வளையலும்!

adipuram valayal
#image_title

கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர் – கலைமகள்

ஆடி மாதம் என்பது தட்சிணாயன தொடக்க காலம்.சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணமாகும் காலமாகும். இதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன், தற்போது தெற்கு நோக்கிய பயணத்தைத் தொடங்கும் மாதம் இது என்பதால், சிவபெருமானின் இடப் பக்கமாக வீற்றிருக்கும் அம்பிகையை வழிபட உகந்த மாதம் ஆடி மாதம் என்கிறார்கள்.உலக மக்களைக் காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப் பூரம் என்று கூறப்படுகிறது!

திருமணம் ஆகி தாய்மை நிலையை அடைந்திருக்கும் பெண்ணை அவர்களுடைய வீட்டார் அழைத்து மகிழ்விக்கும் வகையில், அப் பெண்மணிக்கு வளைகாப்பு நடத்துவது போல் உலகத்தைக் காக்கும் அம்மனுக்கு வளையல்கள் அணிவித்து ஆடிப்பூரத்தை கொண்டாடுகிறார்கள். இந்நாளில் கோவில்களுக்குச் சென்று அம்மனை வழிபடுவதுடன் கோவிலில் தரும் வளையல் பிரசாதங்களை வாங்கி மகிழ்வார்கள்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம் நட்சத்திரம் என்பதால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரம் விழா 10 நாட்கள் மிகவும் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஆண்டாளைத் தரிசித்தால் அனைத்து நன்மைகளும் வந்து சேரும் என்பது ஐதீகம்!

வளையல் அணியும் பழக்கம் ஆதிகாலம் தொட்டே பெண்களுக்கு இருந்து வந்திருக்கிறது என்பது தொல்லியல் மூலம் தெரிய வருகிறது!சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றுவருகின்றன‌. அகழ்வாராய்ச்சி பணிகளில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள், தங்க அணிகலன்கள் வளையல்கள் தங்க பட்டை, சுடுமண் வணிக முத்திரை, சுடுமண் புகைப்பிடிப்பான், கல்லால் ஆன எடைக்கல், செப்பு நாணயம், கண்ணாடி மணிகள், சுடுமண் காதணி, யானை தந்தத்தால் ஆன பகடைக்காய், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைநியமிக்க சங்கு வளையல், சுடுமண்ணாலான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய காதணி ஆகியவற்றை கண்டெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்!

திருவிளையாடல் புராணத்தில் வளையல் வியாபாரியாக வலம் வந்தார் சிவபெருமான். சோமசுந்தரக் கடவுள் வளையல் வியாபாரியாக வேடம் தாங்கி வணிகத் தெருவிற்கு வந்தார். அத்தெருவில் இருந்த வணிக மகளிர் தத்தம் மாளிகைகளில் இருந்து வெளிப்பட்டனர். வளையல்களின் அழகை விட வளையல் வியாபாரியின் அழகு அவர்களைக் கவர்ந்தது. வளையல் போட்டுக்கொள்ள போட்டி இட்டு கைநீட்டினர்.

வளையல்போடும் சாக்கில் வியாபாரியாய் வந்த இறைவன் அவர்களைத் தொட்டு வளையல் அணிவித்தார். பின் வியாபாரி மறைய வானத்தில் சிவலிங்கம் தோன்றியது. ரிஷிபத்தினிகளின் முன்பொரு காலத்தில் சிவபெருமான் மீது மையல் கொண்டதால் சாபம் பெற்று மதுரையம்பதி வணிகர் தெருவில் பிறந்தனரென திருவிளையாடல் புராணக் கதையில் உள்ளது!

பாரீஸ் ஒலிம்பிக் 2024; 11ம் நாள்: அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி அதிர்ச்சி தோல்வி!

paris olympics 2024 - 2026
#image_title

பாரீஸ் ஒலிம்பிக் 2024 – பதினொன்றாம் நாள் – 06.08.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஈட்டி எறிதல் – நீரஜ் சோப்ரா

          இன்று இந்திய அணியின் நட்சத்திர வீரர், நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் 89.34 மீட்டர் தூரம் எறிந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 86.59 மீட்டர் எறிந்துள்ளார். இதற்கிடையில், மற்றொரு இந்திய வீரர் கிஷோர் ஜெனா தனது தகுதிச் சுற்றில் 80.73 மீட்டர் எறிந்துள்ளார். அவருக்கு இறுதிப் போட்டியில் விளையாட அவர் தகுதி பெறவில்லை. ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்று ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும், ஆனால் இறுதிப் போட்டிக்கான இடத்தைப் பதிவு செய்ய விளையாட்டு வீரர்கள் சிறந்த 12 வீரர்களில் இருக்க வேண்டும் அல்லது தகுதித் தரமான 84-மீட்டரை மீற வேண்டும்.

மகளிர் மல்யுத்தம் – வினேஷ் போகட்

          இதற்கிடையில், இந்தியாவின் மூத்த மல்யுத்த வீரர் வினேஷ் போகட், காலிறுதிக்கு முந்தைய மற்றும் காலிறுதிச் சுற்றுகளில் முறையே ஒலிம்பிக் சாம்பியனான யுய் சுசாகி மற்றும் உக்ரைனின் ஒக்ஸானா லிவாச்சை தோற்கடித்து அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்..

நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.

பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் ஆரம்பம் முதலே இந்திய வீராங்கனை வினேஷ் போகட் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அடுத்தடுத்து ஸ்கோர் செய்து வந்த வினேஷ் போகட் இறுதியில் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகட் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியானது. இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

இறுதிப் போட்டியில் அவர் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருக்கிறார். இந்தப் போட்டி, இந்திய நேரப்படி இன்றிரவு 11.23 மணிக்கு தொடங்கும்.

டேபிள் டென்னிஸ்

          இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி (ஹர்மீத் தேசாய், ஷரத் கமல், மானவ் தாக்கர்) காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் 3-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

தடகளம்

          மகளில்ர் 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் ரீப்பேஜ் ஓட்டத்தில் இந்தியாவில் கிரன் பஹல் 6ஆவதாக வந்ததால் போட்டியிலிருந்து வெளியேறினார்.

ஹாக்கியில் அதிர்ச்சி தோல்வி      

    ஹாக்கி ரசிகர்களுக்கான மிகப்பெரிய போட்டியான இந்தியா மற்றும் ஜெர்மனி அரையிறுதி இந்திய நேரப்படி இரவு 10:30க்கு தொடங்கியது. இதில், இந்தியா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.

தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் கோல் அடித்தார். இதையடுத்து, ஆட்டத்தில் 18 ஆவது மற்றும் 27 ஆவது நிமிடங்களில் ஜெர்மனி வீரர்கள் கோல் அடித்தனர். இதனால் போட்டி விறுவிறுப்பானது. இந்திய வீரர்கள் பதில் கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தினர்.

இதற்கு பலன் அளிக்கும் வகையில், போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் சுக்ஜீத் சிங் கோல் அடித்தார். இதனால், இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருந்தன. இதையடுத்து இரு அணி வீரர்களும் மற்றொரு கோல் அடித்து வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் விளையாடினர்.

இறுதியில் போட்டியன் 54 ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கோல் அடித்தார். இதனால், ஜெர்மனி 3 கோல்கள் என முன்னிலை பெற்றது. இந்திய வீரர்கள் பதில் கோல் அடிக்க தீவிரம் காட்டினர். எனினும், அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.

இறுதியில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் ஜெர்மனி அணி ஒலிம்பிக் ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வெங்கல பதக்கத்துக்கான போட்டியில்…

அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்தியா அணி இன்று நடைபெற உள்ள வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் ஸ்பெயின் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு துவங்குகிறது.

பாரீஸ் ஒலிம்பிக் 2024; பதினோராம் நாள்: அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி!

paris olympics 2024 - 2026
#image_title

பாரீஸ் ஒலிம்பிக் 2024 – பதினொன்றாம் நாள் – 06.08.2024

அரையிறுதியில் இந்திய ஹாக்கி அணி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          பாரிஸ் ஒலிம்பிக்கில் இன்று இந்தியா ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி அணியைச் சந்திக்கிறது. கடந்த ஐந்து போட்டிகளில், ஜெர்மனிக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இன்றைய ஹாக்கி அரையிறுதி ஆட்டம் இன்று இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது.

          கடந்த ​​டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பெற்ற வெண்கலப் பதக்கத்தை விட அதிக நிலை பதக்கத்தினை வெல்லும் நம்பிக்கையுடன் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இன்று களமிறங்குகிறது. 1980 மாஸ்கோ விளையாட்டுப் போட்டியில் இந்தியா தனது எட்டு ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களில் கடைசிப் பதக்கத்தை வென்றது. பாரிஸ் அவர்களுக்கு வரலாறு படைக்க ஒரு சிறந்த வாய்ப்பை கிடைத்துள்ளது.

          அரையிறுதியில் வெற்றி பெற்றால், 1960 ரோம் ஒலிம்பிக்சில் கடைசியாக வெள்ளிப்பதக்கம் வென்றது போல இம்முறையும் இந்தியாவுக்கு வெள்ளி கிடைக்கலாம். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த காலிறுதியில் பிரிட்டனுக்கு எதிராக இந்திய வீரர்கள் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

          இந்திய அணியும் ஜெர்மனி அணியும் இதுவரை விளையாடிய போட்டிகள் 103 ஆகும். அதில் இந்திய அணி 23இல் வெற்றி பெற்றுள்ளது. ஜெர்மனி 53இல் வெற்றி பெற்றுள்ளது. 27 போட்டிகள் டிரா ஆனது. 1976 ஆம் ஆண்டு  மாண்ட்ரீல் ஒலிம்பிக்கில் 7-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 1936இல்  பெர்லின் ஒலிம்பிக்கில் இந்தியா 8-1 என்ற கணக்கில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதுவரை ஜெர்மனிக்கு எதிராக இந்திய அணி அடித்துள்ள கோல்கள் 165. இந்தியாவிற்கு எதிராக ஜெர்மனி அடித்த கோல்கள் 222.

          ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணியும் ஜெர்மனி அணியும் நேருக்கு நேர் இதுவரை விளையாடிய மொத்த போட்டிகள் 12 ஆகும். அதில் இந்திய அணி 5 ஆட்டங்களில்  வென்றுள்ளது. ஜெர்மனி 4 ஆட்டங்களில் வென்றுள்ளது. ட்ரா ஆன ஆட்டங்கள் 3.

          இந்தியா மற்றும் ஜெர்மனி நேருக்கு நேர் மோதிய கடந்த ஐந்து போட்டிகளில்

இந்தியா 2-3 கணக்கில் வெற்றி ஜூன் 8, 2024

இந்தியா 3-0 கணக்கில் வெற்றி ஜூன் 1, 2024

இந்தியா 6-3 கணக்கில் வெற்றி மார்ச் 13, 2023

இந்தியா 3-2 கணக்கில் வெற்றி மார்ச் 10, 2023

இந்தியா 3-1 கணக்கில் வெற்றி ஏப்ரல் 15, 2022

          2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்திய அணி – கோல்கீப்பர்: பிஆர் ஸ்ரீஜேஷ், டிஃபெண்டர்கள்: ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங், சுமித், சஞ்சய்; மிட்பீல்டர்கள்: ராஜ்குமார் பால், ஷம்ஷேர் சிங், மன்பிரீத் சிங், ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத்; முன்கள வீரர்கள்: அபிஷேக், சுக்ஜீத் சிங், லலித் குமார் உபாத்யாய், மந்தீப் சிங், குர்ஜந்த் சிங்; மாற்று வீரர்கள்: நீலகண்ட சர்மா, ஜுக்ராஜ் சிங், கிரிஷன் பகதூர் பதக்

பாரீஸ் ஒலிம்பிக் 2024; பத்தாம் நாளில்…

paris olympics 2024 - 2026
#image_title

பாரீஸ் ஒலிம்பிக் 2024 – பத்தாம் நாள் – 05.08.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

லக்ஷ்யா சென் – வெண்கலப் பதக்க ஆட்டத்தில் தோல்வி

          லக்ஷ்யா சென் மலேசியாவின் லீ ஜியாவிடம் கடினமான ஆட்டத்தில் தோற்று, வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார். பதக்கம் பெற லக்ஷ்யா சென் தவறவிட்டதால், 10வது நாளில் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் அவர் 21-13 16-21 11-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். போட்டிக்குப் பிறகு பேசிய லக்ஷ்யா, “இந்தப் போட்டியை நான் நன்றாகத் தொடங்கினேன், ஆனால் என்னால் முன்னிலை வகிக்க முடியவில்லை, பின்னர் அவர் நன்றாக விளையாடத் தொடங்கியபோது, எனக்கு கடினமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக, முடிவுகளில் சற்று ஏமாற்றம் அடைந்திருக்கிறேன்.

கலப்பு குழு ஸ்கீட் ஷூட்டிங்

          மகேஸ்வரி சிங் மற்றும் அனந்த் ஜீத் நருகா ஆகியோர் தங்கள் கலப்பு குழு ஸ்கீட் ஷூட்டிங் வெண்கலப் பதக்கப் போட்டியில் சீனாவிடம் 43-44 என்ற கணக்கில் தோல்வியடைந்தனர், இதனால் அவர்கள் பதக்கத்தை இழந்தனர்.

          முன்னதாக, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா காமத் மற்றும் மனிகா பத்ரா ஆகியோர் அடங்கிய இந்திய பெண்கள் டேபிள் டென்னிஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ருமேனியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. ஸ்ரீஜா அகுலா மற்றும் அர்ச்சனா காமத் இரட்டையர் ஆட்டத்தில் எளிதாக வென்றனர், அதைத் தொடர்ந்து முதல் ஒற்றையர் ஆட்டத்தில் மனிகா பத்ரா வெற்றி பெற்றார், இதன்மூலம் இந்தியா காலிறுதிக்குச் செல்ல ஒரு வெற்றியை எட்டியது. இருப்பினும், அகுலாவும் அர்ச்சனாவும் தங்கள் ஒற்றையர் ஆட்டங்களில் தோல்வியடைந்தனர்,

தடகளம்

          தடகளத்தில், கிரண் பஹல் பெண்களுக்கான 400 மீட்டர் சுற்று 1 ஹீட் 3 இல் ஏழாவது இடத்தைப் பிடித்தார், மேலும் ரெப்சேஜ் சுற்றுக்கு முன்னேறினார். ஆண்களுக்கான 3000மீ ஸ்டீபிள்சேஸ் சுற்று 1 ஹீட் 2ல் அவினாஷ் சேபிள் ஐந்தாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

துப்பாக்கி சுடுதல்

          மகேஸ்வரி சிங், அனந்த் ஜீத் சிங் ஆகியோர் அடங்கிய  கலப்பு குழு ஸ்கீட் தகுதிப் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கப் போட்டிக்கு வந்ததால், திங்களன்று நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. பின்னர் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் சீனாவின் யிட்டிங் ஜியாங்கிடம் 43-44 என இந்த ஜோடி தோல்வியடைந்தது.

மல்யுத்தம்

          பெண்களுக்கான 68 கிலோ எடைப்பிரிவில் மல்யுத்தத்தில், நிஷா தஹியா உக்ரைனின் டெட்டியானா சோவா ரிஷ்கோவை தோற்கடித்து பெண்களுக்கான 68 கிலோ காலிறுதிக்கு முன்னேறினார். ஆனால் காலிறுதியில் வடகொரியாவின் பாக் சோல் கம்மிடம் தோற்றார்.

டேபிள் டென்னிஸ்

          மகளிர் அணி 16வது சுற்றில் இந்தியா 3-2 என்ற புள்ளிக் கணக்கில் ருமேனியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது

படகோட்டம்

          விஷ்ணு சரவணன் 8 பந்தயங்களுக்குப் பிறகு 114 ரன்களுடன் 43 ஆண்களுக்கான டிங்கியில் 18ஆவது இடத்தைப் பிடித்தார்.

          நேத்ரா குமணன் 9 பந்தயங்களுக்குப் பிறகு 155 மதிப்பெண்களுடன் 43 பேரில் 21ஆவது இடத்தைப் பிடித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சயனக் கோல சேவை

IMG 20240806 WA0001 - 2026
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருவாடிப்பூர பிரம்மோற்சவத்தில் 7 ஆம் நாள் திங்கட்கிழமை இரவு கிருஷ்ணன் கோயில் வளாகத்தில் ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனத் திருக்கோல நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்திய அளவில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீ ஆண்டாள் கோவில்‌ பிரபலமான திருவிழா ஆடிப்பூரத் தேரோட்ட .திருவிழா ஜூலை 30ல் வேத மந்திரங்கள் முழங்க காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம் வரும் ஆக. 7 ஆம் தேதி நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது.

இங்கு ஆண்டாளின் அவதார நாளான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் நடைபெறும் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு ஆடிப்பூரத் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

முதல் நாளான செவ்வாய்க்கிழமை இரவு ஆண்டாள் – ரெங்கமன்னார் பதினாறு வண்டி சப்பரத்தில் வீதி உலா வந்தனர். இதில் ஆகஸ்ட் 2ம் தேதி ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்திலும் எழுந்தருளினர்.

ஆக. 3-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனமும், அன்று இரவு ரெங்கமன்னார், பெரிய பெருமாள், திருவண்ணாமலை ஶ்ரீனிவாச பெருமாள், செண்பகதோப்பு காட்டழகர், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி 5 கருட சேவையும், நடைபெற்றது.

இன்று5-ம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும் நடைபெற்றது. 9-ம் நாள் ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 9:05 மணிக்கு திரு ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது

வாடிப்பட்டியில் களரி எடுப்பு உத்ஸவ விழா!

vadipatti kalari eduppu - 2026
#image_title

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி கருப்புசாமி மதுரை வீரன் சுவாமிகள் திருக்கோயிலில் மழவராயர் பங்காளிகள் களரி எடுப்பு உற்சவ விழா 2 நாட்கள்  நடந்தது. 

முதல் நாள் மாலை 3 மணிக்கு  கோவிலில் இருந்து பெட்டி எடுத்து வாடிப்பட்டி இந்துநாடார் உறவின் முறையினருக்கு பாத்தியப்பட்ட நந்தவனத்திற்கு சென்றனர். மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு 8 மணிக்கு ஆச்சி அம்மன் சாமிக்கு கரகம் ஜோடித்து பெரிய கருப்புசாமி, மதுரை வீரன், சங்கிலி கருப்பு, பட்டகொலைகாரன்,  பூச கருப்பு, ஆண்டி சாமிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலு க்கு வந்தனர்.

நள்ளிரவு12 மணிக்கு சுவாமிகளுக்கு காவு கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இரண்டாம் நாள் காலை8 மணிக்கு அனைத்து சாமிகளும் அருள்வாக்கு கூறுதல் மற்றும் குழந்தைகளுக்கு பெயர் சூட்டு நிகழ்ச்சி நடந்தது.11.30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

மாலை 3 மணிக்கு அனைத்து சாமிகளும் மழவராயர் பங்காளி மற்றும் சோழகர் மாமன் மைத்துனர் வீடுகளுக்கு  சென்று அருள் பாலித்து மஞ்சள் நீராட்டுதல் நடந்தது. இரவு 9 மணிக்கு கரகம் கரைத்தலோடு திருவிழா முடிந்தது.

இதன் ஏற்பாடுகளை, மழவராயர் பங்காளிகள் களரி எடுப்பு விழா குழுவினர் சோழகர் மாமன் மைத்துனர்கள் செய்திருந்தனர்.

ஆப்பிள் தயாரிப்பான ஐபோன், ஐபேட் சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடு!

apple iphone - 2026

ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐபோன்கள், ஐபேட்கள், உள்ளிட்ட சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக, இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்( CERT-In) எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதிப்பை ஏற்படுத்தும் ஆப்பிள் மென்பொருட்கள் விபரம்:

  • ஐஓஎஸ் மற்றும் ஐபேட்: 17.6 மற்றும் 16.7.9 முந்தைய பதிப்புகள்
  • மேக் ஓஎஸ் (OS) :14.6 13.6.8 மற்றும் 12.7.6க்கு முந்தைய பதிப்புகள்
  • வாட்ச் ஓஎஸ்: 10.6 பதிப்புக்கு முந்தையது
  • டிவி ஓஎஸ்: 17.6க்கு முந்தைய பதிப்பு
  • சபாரி: 17.6க்கு முந்தைய பதிப்பு

இந்த மென்பொருளில் உள்ள குறைபாடுகள் மூலம் சைபர் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் முக்கிய தகவல்களை திருடவும், பாதுகாப்பு குறைபாடுகளை ஏற்படுத்தவும் முடியும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆபத்துகளில் இருந்து தப்பிக்க, பயனர்கள் அனைவரும் ஆப்பிள் சாதனங்களின் மென்பொருட்களை அப்டேட் செய்ய வேண்டும் என சிஇஆர்டி- ஐஎன் அறிவுறுத்தி உள்ளது.

ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை

ஆப்பிள் நிறுவனமும், ஐபோன்களை குறிவைத்து ஸ்பைவேர் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது குறித்து மத்திய தகவல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. சிஇஆர்டி – ஐஎன் நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

போராட்ட எதிரொலி; வங்கதேச பிரதமர் ராஜினாமா, ஆட்சியில் ராணுவம்!

sheik hasina bangladesh - 2026
#image_title

மாணவர் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, சகோதரியுடன் ராணுவத்துக்குச் சொந்தமான சி-130 விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார். இதை அடுத்து வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலானது. ஷேக் ஹசீனா திரிபுரா தலைநகர் அகர்தலா சென்று, அங்கிருந்து தில்லி செல்ல உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் உ.பி. மாநிலம் ஹிண்டன் ஏர்பேஸுக்கு வந்தார்.  பின்னர் அவர் வேறு நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஷேக் ஹசீனாவின் மகள் வீடு லண்டனில் இருப்பதாகவும், அவர் அங்கே சென்று தங்கக் கூடும் என்றும் கூறப்பட்டது. எனினும் ஷேக் ஹசீனாவுக்கு லண்டனில் அரசியல் ரீதியாக அடைக்கலம் கொடுக்க அந்நாடு தயங்கியதாகவும் தகவல் வெளியானது. 

இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட மாணவர் போராட்டம் வலுவடைந்ததால் வேறு வழியின்றி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தலைநகரான டாக்காவை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து இங்கு ராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் பலர்  உயிரிழந்தனர் இதை அடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 2018-ல் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து அரசு நிறுத்தி வைத்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பேராட்டம் வன்முறையாக மாறியதில் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.  இதை அடுத்து அனைத்து பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழங்கள் மூடப்பட்டன. சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. வன்முறையில் பொது சொத்துக்கள் சேதமடைந்தன. குறிப்பாக வங்கதேச நாட்டின் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் சொத்துக்கள் குறிவைத்து சூறையாடப்பட்டன.  கடைகள் வணிகத்தலங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வந்த நிலையில் இன்று ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவர், டாக்காவை விட்டு வெளியேறி, தனது சகோதரி ஷேக் ரிஹானாவுடன் சேர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன..

இதன் பின்னர் போராட்டக்காரர்கள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் இல்லத்தை  முற்றுகையிட்டு சூறையாடினர்.  ஷேக் ஹசீனாவின்  படுக்கையறையில் படுத்துக் கொண்டும் வீட்டில் உள்ள பொருள்களை சுருட்டிக் கொண்டும், குறிப்பாக ஷேக் ஹசீனாவின் ஆடைகளை கையில் பிடித்தபடியும் படங்கள் எடுத்து அவற்றை சமூகத் தளங்களில் பகிர்ந்தனர். கடந்த வருடம் இலங்கையில் நடந்தது போன்ற அதே பாணியில் இந்த பிரச்சனைகள் நடந்து முடிந்தன.

இதுகுறித்து பிரதமர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “வன்முறை வெடித்ததும், பிரதமர் இல்லத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டார். டாக்காவில் நிலைமை பதற்றமாக உள்ளது. போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டுள்ளனர்” என்றார்.

ஷேக் ஹசீனா பதவி விலகியதை அடுத்து, போராட்டக்காரர்கள் வெற்றிப் பேரணி நடத்தினர். அப்போது, அந்நாட்டின் தந்தையும், முன்னாள் அதிபருமான முஜிபுர் ரஹ்மானின் சிலைகளை போராட்டக்காரர்கள் உடைத்தனர். முஜிபுர் ரஹ்மானின் மகள்தான் ஷேக் ஹசீனா என்பது குறிப்பிடத் தக்கது.

பதவி விலகி பிரதமர் வெளியேறிய நிலையில், வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலாகியுள்ளது. போராட்டம் வெடித்த நிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலகும்படி  ஷேக் ஹசீனாவுக்கு ராணுவமும் கெடு விதித்து இருந்தது.

வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலான நிலையில், அந்நாட்டு மக்களுக்கு ராணுவ தளபதி வக்கார் ஜமான் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார் அதில், ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். இடைக்கால ஆட்சி அமைக்க நாங்கள் உதவி செய்வோம். முக்கியக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ராணுவம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தக் கடினமான நேரத்தில் நாட்டு மக்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். அனைவரின் பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும். மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வீடுகளுக்குச் செல்ல வேண்டும். நாட்டில் அவசர நிலையோ அல்லது கட்டுப்பாடுகளோ தேவையில்லை. இன்று இரவுக்குள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டார். 

இந்நிலையில் இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா உத்தர பிரதேச மாநிலம் ஹிண்டன் ஏர்பேஸ் வந்தடைந்தார். அங்கே பாரதத்தின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

இதனிடையே ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்த நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்தும் உலக அரசியல் நிலவரம் குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

வங்கதேசத்தை அடுத்துள்ள மாநிலங்கள் உஷார் படுத்தப்பட்டன. எல்லைப்புற மாநிலங்களில் இரவு முதல் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வங்கதேசத்தில் கடும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் சிறுபான்மை இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியும் அவர்கள் மேற்கு வங்க எல்லை வழியாக இந்தியா வந்தால் அவர்களுக்கு மத்திய அரசால் அண்மையில் அமல்படுத்தப்பட்ட சிஏஏ சட்டம் மூலம் குடியுரிமை வழங்கி ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

வீட்டு வரைபட அனுமதிக் கட்டணம் உயர்வு: திமுக., அரசுக்கு அண்ணாமலை எதிர்ப்பு!

annamalai bjp tn leader - 2026

வீட்டு வரைபட அனுமதிக் கட்டணம் உயர்வுக்கு திமுக., அரசுக்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

ஆட்சிக்கு வந்ததில் இருந்து, சொத்து வரி, பதிவுக் கட்டணம், கட்டுமான பொருள்கள் விலை என அனைத்தையும் உயர்த்தி, பொதுமக்களின் சொந்த வீடு கனவைத் தகர்த்த திமுக அரசு, தற்போது, வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தையும் இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது. சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும், இந்த சுயசான்று அடிப்படையிலான வரைபட அனுமதிக் கட்டணம் இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு வரைபட அனுமதி வழங்குவதை எளிதாக்குவோம் என்று வாக்குறுதி வழங்கிய திமுக, சென்னையில், 1,000 சதுர அடி இடத்துக்கு, அனுமதி வழங்க சுமார் ரூ.40,000 ஆக இருந்த கட்டணத்தை, ரூ.1,00,000 ஆக ஆக்கியிருப்பதுதான் எளிமையாக்குவதா? ஏற்கனவே, குறித்த நேரத்தில், காலதாமதமின்றி வரைபட அனுமதி பெறப் பல தரப்பினருக்கும் கமிஷன் கொடுக்கும் நிலை இருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், சுயசான்று அடிப்படை என்று கூறி லஞ்ச ஊழலை அதிகாரப்பூர்வமாக்கியிருக்கிறது திமுக என்பதுதான் உண்மை.

பொதுமக்கள் சுயசான்று அளித்து, வரைபட அனுமதி பெற, அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது என்ன விதமான நடைமுறை? அதிகக் கட்டணம் செலுத்தினால், கட்டிட வரைபடம் சரிபார்த்தல், கட்டிடம் கட்டப்படும் இடத்தை நேரில் சென்று பார்வையிடல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளாமல் உடனேயே அனுமதி வழங்குவோம் என்றோ அல்லது, குறைந்த கட்டணம் செலுத்தினால், அனுமதி வழங்கத் தாமதமாக்குவோம் என்றோ கூறுகிறதா திமுக அரசு?

பொதுமக்கள் எதிர்பார்த்தது, சிக்கலற்ற நடைமுறைகள் மூலம், காலதாமதமின்றி வரைபட அனுமதி வழங்குவதையே தவிர, இரண்டு மடங்கு அதிகக் கட்டணத்தை அல்ல. உடனடியாக, சுயசான்று அடிப்படையில் வரைபட அனுமதி வழங்குவதற்கான பகல் கொள்ளை கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், வழக்கமான கட்டணத்தையே சுயசான்று அடிப்படையிலான அனுமதிக்கும் வசூலிக்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன். – கு.அண்ணாமலை


வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் 100%க்கும் அதிகமாக உயர்வு: ஏழை மக்களின் வீடு கட்டும் கனவை தமிழக அரசே தகர்ப்பதா? என்று குறிப்பிட்டு, இதனை திரும்பப் பெற பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலிறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:

தலைநகர் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை 100%க்கும் கூடுதலாக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. இரக்கமே இல்லாமல் கட்டிட அனுமதிக்கான கட்டணத்தை 112% அளவுக்கு உயர்த்தியிருப்பதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகட்டும் கனவை தொடக்க நிலையிலேயே தமிழக அரசு தகர்த்திருக்கிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நிலை உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் 2500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவிலான நிலத்தில், 3500 சதுர அடி வரையிலான பரப்பளவில் வீடு கட்டுவதற்கு ஆன்லைனில் அனுமதி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த மாதம் கொண்டு வந்தது. அதற்கான கட்டணங்கள் 100% வரை உயர்த்தபட்டன. அதைத் தொடர்ந்து பிற அளவிலான கட்டிடங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தையும் தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு அனுப்பியுள்ள அறிவிக்கையின்படி சென்னையில் 8900 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ. 9.54 லட்சமாக அதிகரித்திருக்கிறது. இது 112% உயர்வு ஆகும்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் கட்டிட அனுமதி பெறுவதற்காக சதுர அடிக்கு 126 ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இது கட்டிடம் கட்டுவதற்காக ஆகும் செலவில் கிட்டத்தட்ட 10% ஆகும். கட்டிட வரைபட அனுமதி பெறுவதற்கான கட்டணத்தை தமிழக அரசு இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. பத்திரப் பதிவுக் கட்டணம், நிலங்களின் வழிகாட்டி மதிப்பு, சொத்துவரி என அனைத்தையும் உயர்த்திய தமிழக அரசு, இப்போது வீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணத்தையும் உயர்த்தியிருப்பதன் மூலம் இனி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நிலம் வாங்கி வீடு கட்டுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.

தமிழக அரசு மக்களை பாதிக்காத வகையில் அதன் வருவாயை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக ஏழை மற்றும் நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் கட்டண உயர்வுகளை அறிவிக்கக் கூடாது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஆக. 05: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

gold rate today - 2026
#image_title

தங்கம் விலை இன்று சிறிதளவு அதிகரித்து, சவரன் விலை ரூ. 51,760 க்கு விற்பனை ஆகிறது.

தங்கம் நேற்றைய விலையில் இருந்து சவரன் ரூ. 160 உயர்ந்து ரூ.51,760க்கு விற்பனை ஆனது.

திங்கள்கிழமை இன்று காலை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,470 க்கு விற்பனையானது.

வெள்ளி விலை – நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு ரூ.1.00 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.91க்கு விற்பனையாகிறது.