Home Blog Page 261

திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்!

srirangam adhyayana utsav day 1 - 2026
#image_title

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் திருஅத்யயன உத்ஸவமான வைகுந்த ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியுள்ளது. இன்று பகல்பத்து உத்ஸவத்தின் முதல் நாள்.

வைகுண்ட ஏகாதசி உத்ஸவம் தொடக்கம்!

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசித் திருவிழா தொடக்கமாக நேற்று திருநெடுந்தாண்டகம் தொடங்கியது. இன்று முதல் பகல் பத்து உத்ஸவம் தொடங்குகிறது. இதை அடுத்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அரங்கனை தரிசித்து வருகின்றனர். இன்று காலை மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பாடு நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் – நம்பெருமாள் பகல் பத்து திருமொழித் திருநாள் முதல் திருநாள் இன்று தொடங்கியது. இதை அடுத்து, பாண்டியன் கொண்டை, லட்சுமிபதக்கம், வைர அபயஹஸ்தம், பவள மாலை, சூரிய பதக்கம், முத்துமாலை, காதுகாப்பு உள்ளிட்ட திரு ஆபரணங்களுடன் சிறப்பு சேவையில் இன்று நம்பெருமாள் எழுந்தருளினார்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு உத்ஸவங்கள் வெகு விமரிசையாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உத்ஸவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனிச்சிறப்பு பெற்றது. பகல் பத்து, ராப் பத்து, இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்ட கம் நிகழ்ச்சியுடன் நேற்று (டிச.12) தொடங்கியது. பகல்பத்து உத்ஸவத்தின் முதல் நாளான திருமொழித் திருவிழா இன்று தொடங்கியது.

இதை முன்னிட்டு, நம்பெருமாள் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு அர்ஜுன மண்டபம் வந்தடைந்தார். காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப் பிரபந்த பாடல்களை அபிநயித்து, இசையுடன் பாடினார்கள்.

இரவு 7.30 மணிக்கு அர்ஜுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

பகல் பத்தின் முதல் நாளான இன்று மூலவர் அரங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறும். இதேபோல் பகல் பத்தின் ஒவ்வொரு நாளும் உத்ஸவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

பகல்பத்து உத்ஸவத்தின் 10வது நாள் (டிச.22) அன்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

டிச.23 ஆம் தேதி ராப்பத்து உத்ஸவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள். அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் பரமபதவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபத வாசலைக் கடந்து செல்வார்கள். பரமபதவாசல் 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

29ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். 30ஆம் தேதி பரமபதவாசல் திறப்பு இல்லை.

சொர்க்கவாசல் திறப்பு தினமான 23ஆம் தேதி முதல் ராப் பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உத்ஸவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ராப் பத்து ஏழாம் திருநாளான 29ஆம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான 30ஆம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறும்.

பத்தாம் திருநாளான ஜனவரி 1ஆம் தேதி தீர்த்தவாரியும், 2ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.

நாடாளுமன்ற தாக்குதல் 22வது நினைவு தினம்; அத்துமீறி நுழைந்த இருவர் புகைப் பொருள் வீசியதால் கைது!

attack on parliament day - 2026
#image_title

நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி நுழைந்த இருவர், பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து எம்.பி.,க்கள் இருக்கையின் மேல் ஏறி ஓடி, கையில் இருந்த வண்ணப் புகை வெடிபொருளை வெடிக்கச் செய்தனர். அவர்கள் இருவரும் காவலர்களால் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக கோஷமெழுப்பிய இருவர் நாடாளுமன்றத்துக்கு வெளியில் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான இன்று (டிச.13) மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து எம்.பி.,க்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்குள் குதித்து அத்துமீறிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கையில் வண்ண புகை வெடிபொருள்கள் வைத்திருந்தனர். அதனை பற்றவைத்து புகை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை எடுத்து எம்பி.,க்களே, அந்த இருவரையும் மேலும் ஓட விடாமல் தடுத்து பிடித்தனர். காவலர்கள் ஓடி வந்து அவர்கள் இருவரையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். இவர்கள் இருவரையும் வெளியே அழைத்து வந்தபோது இந்த இருவருக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் வெளியே ஆதரவாக குரல் எழுப்பிய இரு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்தக் களேபரங்களால் நாடாளுமன்ற இரு அவைகளும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன. .

parliament 22nd day - 2026
#image_title

முன்னதாக நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதலின் 22 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களை இன்று நினைவு கூரும் விதமாக, அவர்களின் படங்கள் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ராணுவ அஞ்சலி செலுத்தப்பட்டது.

பயங்கரவாதிகளின் ஆபத்தை எதிர்கொண்ட அவர்களின் துணிச்சலும் தியாகமும் நம் தேசத்தின் நினைவில் என்றும் நிலைத்து நிற்கும் இந்த நாளில், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும், வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டும் அரசியல் ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும், நாடாளுமன்றத்துக்குள் இருவர் அத்துமீறி நுழைந்து வண்ண புகை எழச்செய்த ஒரு சம்பவம் இது என்று கூறப்படுகிறது.

கடந்த 2001ம் ஆண்டு டிச.13ல் பலத்த பாதுகாப்பையும் கடந்து, நாடாளுமன்றவளாகத்தில் 9 பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தில்லி போலீசார் 14 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்தத் தாக்குதலின் 22வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, மக்களவையின் பார்வையாளர் அரங்கில் இருந்த 2 இளைஞர்கள் திடீரென எம்பி.,க்கள் அமர்ந்திருக்கும் அவைக்குள் குதித்து, எம்பி.,க்கள் அமரும் இருக்கைகளில் ஏறிக் குதித்து முன்னேறிச் சென்று, மறைத்து வைத்திருந்த வண்ணத்தை உமிழக் கூடிய கண்ணீர் புகை எரிபொருளை பற்ற வைத்து, அவைக் கட்டடத்தில் புகை மண்டலமாக்கினர். அப்போது அவர்கள் ‘சர்வாதிகாரம் ஒழிக’ என கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த எம்பி.,க்கள் அந்த இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களை காவலர்கள் கைது செய்தனர்.

அதே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே பெண்கள் இருவர் கோஷம் எழுப்பியவாறு, அத்துமீறி நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயற்சி செய்தார்கள். அவர்கள் ஹரியானாவைச் சேர்ந்த நீலம் (வயது 42), மஹாராஷ்டிராவைச் சேர்ந்த அன்மோல் ஷிண்டே (வயது 25) என தெரியவந்தது. அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் மக்களவைக்குள் புகைப் பொருளை வீசிய இருவரும், மைசூரை சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் சாகர் ஷர்மா என பெரிய வந்ததாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரிடமும் கர்நாடக பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா வழங்கிய அனுமதி சீட்டு எப்படி வந்தது என்பது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே பாதுகாப்பு குறித்த கேள்விகளை எதிர்க்கட்சி எம்பி.,க்கள் எழுப்பியுள்ளனர். காங்கிரஸ் எம்பி.,க்கள் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இதுகுறித்து கூறுகையில், நாடாளுமன்ற தாக்குதல் நடந்த தினத்தில், நடந்த மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறல் இது என்றார்.

சமாஜ்வாதி எம்.பி., டிம்பிள் கூறியபோது, இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். பாதுகாப்பு விதிமீறல் இது. மக்களவையில் எதுவும் நடக்கலாம் என்ற நிலை உள்ளது என்றார்.

காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டபோது, நாடாளுமன்ற தாக்குதல் நடந்த தினத்தில் நடந்த மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறல் இது என்று குறிப்பிட்டார். திரிணமுல் எம்.பி., சுதீப் பந்தோபாத்யாயா கூறிய போது, இது ஒரு மோசமான அனுபவம். அவர்கள் யாரைக் குறிவைத்து வந்தார்கள் என்ற தகவல் யாரிடமும் இல்லை. உடனடியாக அவையில் இருந்து வெளியேறி விட்டோம். ஆனால், இது பாதுகாப்பு விதிமீறல். புகை கக்கும் பொருளை எப்படி உள்ளே கொண்டு வந்தனர்.” என்று கேள்வி எழுப்பினார்.

சலசலப்பு சற்று ஓய்ந்த பிறகு மீண்டும் நாடாளுமன்ற மக்களவை கூடியது. அப்போது, காங்கிரஸ் எம்பி அதிர்ராஜன் சௌத்ரி, இந்த சம்பவத்தால் எம்.பிக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. பாதுகாப்பில் குளறுபடி உள்ளது. இது குறித்து விளக்க வேண்டும்” என்றார்.

அதற்கு பதிலளித்த மக்களவை அவைத்தலைவர் ஓம்பிர்லா, பார்வையாளர் மாடத்திற்குள் இருந்து இருவர் நுழைந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அது சாதாரண வண்ணப் புகைதான் எனத் தெரியவந்துள்ளது. எல்லோருடைய கருத்தையும் ஏற்று பரிசீலித்து இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேசத்திற்காக சேவையாற்ற நாம் வந்திருக்கிறோம். எனவே நாடாளுமன்ற மக்களவை அலுவல்கள் தொடர்ந்து நடைபெறும். இருவரும் பிடிபட்டுள்ளனர், அவர்களிடமிருந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்” என்று கூறினார்.

குறிப்பாக, இந்த சம்பவத்துக்கு பிறகு, ‘புதிய நாடாளுமன்ற கட்டிடம் பாதுகாப்பு ஓட்டைகளுடன் கூடியது என்பதை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்துவதாக‘ எதிர்க் கட்சி எம்பிகள் வலியுறுத்திக் கூறியதால், இந்தச் சம்பவம் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டதைக் குறை கூறும் எதிர்ப்புக் குரலாகவே சமூக தளங்களில் அலசப்பட்டது.

கோவிலுக்குள் குண்டர்களா? அறநிலையத் துறையே அலட்சியம் வேண்டாம்!

kadeswara subramaniam hindu munnani - 2026

கோவிலுக்குள் குண்டர்களா..? அறநிலையத்துறையே அலட்சியம் வேண்டாம் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில்….

தமிழகத்தில் கோவில்கள் இந்து சமய அறநிலைத்துறை வசம் இருக்கும் காரணத்தினால் ஆளும் கட்சியாக எந்த கட்சியினர் இருக்கிறார்களோ, அவர்களுக்கு வருமானம் ஈட்டும் தொழிற்சாலையாக கோவில் மாறியுள்ளது.

அதன் அடிப்படையில் ஆளுங் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஆளுங்கட்சி பொறுப்பாளர்களுக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கும் அவர்களின் அல்லக்கைகளுக்கும் அடிவருடிகளுக்கும் கோவில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களை தனது எதேச்சதிகாரத்தை பயன்படுத்தி கொடுக்கின்றனர்.

அந்த ஒப்பந்ததாரர்கள் ஆட்சி இருப்பதற்குள் பெரும் பொருள் சம்பாதித்து விட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் சரியான முறையில் கோவிலுக்காக எந்த ஒரு நல்ல பணியையும் செய்வதில்லை. மாறாக ஊழல் செய்து கோவிலின் புனிதத்தை கெடுப்பது இது போன்ற சுயநல ஒப்பந்ததாரர்களின் வாடிக்கையாக உள்ளது.

பழனி, திருச்செந்தூர், மதுரை, ராமேஸ்வரம் போன்ற பிரசித்தி பெற்ற மக்கள் அதிகமாக வழிபடக்கூடிய கோவில்களில் ஒப்பந்த பணியாளர்கள் என்கின்ற பெயரில் ரவுடிகளும், குண்டர்களும் வலம் வருகின்றனர். இவர்கள் கோவிலின் உரிமையாளர்கள் போல் செயல்படுகின்றனர்.

வருகின்ற பக்தர்களை மதிப்பது என்பது துளி கூட கிடையாது. மாறாக பக்தர்களை தாக்குவதும், பக்தர்களை தரக்குறைவாக பேசுவதும், பக்தர்களுக்கு இடையூறு செய்வதும் இவர்களின் பிரதான வேலையாக உள்ளது. இதனை அந்த கோவிலை நிர்வாகிக்கும் ஆணையரோ மற்றும் இணை ஆணையர்களோ கண்டு கொள்வதில்லை. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு அவர்களின் செயலுக்கு ஜால்ரா தட்டுகின்றனர்.

பழனி திருச்செந்தூர் ஸ்ரீரங்கம் போன்ற கோவில்களில் வரக்கூடிய பக்தர்களை தாக்கும்போது அவர்களுக்கு பக்தி குறைய வாய்ப்புள்ளது. தெய்வத்தின் மீதான நம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. திமுக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்களா.? என்ற கேள்வி பொது மக்களிடம் எழுகிறது.

மேலும் பல கோவில்களில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ள பணியாளர்கள் பணியாற்றுவது வேதனைக்குரிய விஷயம். தினம்தோறும் பக்தர்களை தாக்குகின்றனர் பல பேர் புகார் கொடுப்பதில்லை கோவிலுக்கு வந்த இடத்தில் தனக்கு இப்படி ஒரு அவமானம் நேர்ந்தது என்று நொந்து மனம்வெதும்பி செல்கின்றனர்.

இதுவரை இந்த அரசாங்கம் ஒப்பந்ததாரர்களை நேர்மையானவர்களா? ஒழுக்கமானவர்களா? என்று விசாரிக்காமல் ஒப்பந்தங்களை வழங்கி உள்ளது. இது முழுக்க முழுக்க தவறுக்கு துணை போகும் செயலாகும். தமிழகத்திலே அதிக வருமானம் வரக்கூடிய துறையாக இருக்கக்கூடிய இந்து சமய அறநிலைத்துறை கோவில் வருமானத்தை மட்டும் பார்க்கிறதா?

மேலும் இந்த நாட்டின் ஆணிவேராக திகழக்கூடிய கோவிலை அழிக்க துடிக்கிறதா? பெரும்பான்மை மக்களின் பக்தியை மழுங்கடிக்கும் திட்டமா? என்று இந்து முன்னணி கேட்கிறது. உடனடியாக தமிழக அரசு தமிழக முழுவதிலும் உள்ள கோயில்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்காமல் கோவிலுக்காக சேவைமனப்பான்மையோடு பணியாற்றக்கூடிய, பக்தி உள்ள சமுதாய சிந்தனையுள்ள நேர்மையாளர்களாக இருக்கக்கூடிய தெய்வபக்தியும் தேசபக்தியும் நிறைந்த இளைஞர்களை பணியில் அமர்த்த வேண்டும்.

தற்போது இருக்கும் ஒப்பந்தங்களை, ஒப்பந்த பணியாளர்களின் நடவடிக்கைகள் பக்தர்களிடம் நடந்து கொள்ளும் முறை , கடவுள் மீதான நம்பிக்கை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் ஒப்பந்தம் மற்றும் பணியாளர்களை தொடர்ந்து நீடிக்க அனுமதிக்கலாம்.

இல்லையெனில் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அவர்களில் நேர்மையாளர் , பக்தியாளர், நற்சிந்தனையாளர் எனில் நிரந்தர பணியாளர்களாக கூட மாற்றலாம். இதுபோன்ற கோவில் சம்மந்தமாக நல்ல திட்டங்களை உடனடியாக நிறைவேற்றினால் மட்டுமே இந்துக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை மீது நம்பிக்கை வரும் என்பதை இந்து முன்னணி வலியுறுத்துகிறது…

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரதியின் 142வது பிறந்தநாள் விழா

bharathi vizha in madurai thiruvedagam college - 2026
#image_title

மதுரை: மதுரை அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பாரதிய சிந்தனை அரங்கத்தின் சார்பில் பாரதியாரின் 142 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பாரதிய சிந்தனை அரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் துறை பேராசிரியர் முனைவர் ராமர் வரவேற்புரையாற்றினார்.

முதல்வர் தி. வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார். கல்லூரி செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மனந்த முன்னிலை வகித்தனர். விவேகானந்த கல்லூரி வணிகவியல் துறையின் மேனாள் தலைவர் முனைவர் க.அழகேசன் ‘பாரதியும் பாச்சுவையும்’ என்ற தலைப்பிலே சிறப்புரையாற்றினார்.

மாணவர்கள் சோ.தரணி, சி.ராஜா ஆகியோர் பாரதியார் குறித்து உரையாற்றினர். மாணவர்கள் ப.விவேகானந்தன், க.விஷ்ணுபாலாஜி ஆகியோர் பாரதி குறித்த கவிதை வழங்கினர்.

வரலாற்றுத் துறை பேராசிரியர் முருகன் நன்றியுரை கூறினார். பொருளியல் துறை பேராசிரியர் அசோக் குமார் இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வில், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து  கொண்டனர்.

சிவகாசியின் தனியார் நிதி நிறுவனம் முற்றுகை! மோசடியா?!

sivakasi fund campany reko - 2026
#image_title
  • சிவகாசியில், தனியார் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள்…
  • பல லட்சம் ரூபாய் மோசடியா என்று போலீசார் விசாரணை!

சிவகாசியில், மாதச் சந்தா பணம் கட்டி முதிர்வு பெற்ற வாடிக்கையாளர்களுக்கு, உரிய நேரத்தில் பணம் வழங்காததால், நிதி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, ரத்ன விலாஸ் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள வணிக நிறுவனத்தின் மாடிப் பகுதியில், எஸ்எம்சி கூட்டுறவு வீட்டு வசதி சொசைட்டி லிமிடெட், மத்திய அரசு முழு அனுமதி பெற்றது, டெல்லி, என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

நசீர்அகமது (50) என்பவர் நிதி நிறுவனத்தின் மேலாளராக இருந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் 15 பேர் பணம் வசூலிக்கும் முகவர்களாக வேலை பார்த்து வருகின்றனர். தினசரி சந்தா பணம் கட்டினால் ஓராண்டு முடிவில் அதிக வட்டியுடன் பணத்தை திரும்பத் தருவதாக கூறியுள்ளனர். மேலும், டொசிட் செய்யும் பணத்திற்கு அதிக வட்டியுடன், தங்க காசு தருவதாகவும் கூறியுள்ளனர்.

வீடுகள், கடைகளில் தினசரி 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வீதம் முகவர்கள் மூலமாக பணம் வசூலிக்கப் பட்டுள்ளது. தினசரி சந்தா தொகையாக 700 பேரும், 300 பேர் டெபாசிட் தொகை செலுத்தியவர்கள் என்று மொத்தம் ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த மாதம் முதிர்வு பெற்ற சீட்டுக்கு உரிய பணத்தை தராமல் காலதாமதம் செய்துள்ளனர். முதிர்வு பெற்ற தொகையே பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தாங்கள் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த வாடிக்கையாளர்கள் சிலர் இன்று, இந்த நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு உடனே தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை தர வேண்டும் என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சிவகாசி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் ரமேஷ்ராஜா மற்றும் போலீசார் விரைந்து சென்று, நிதி நிறுவன மேலாளரிடம் விசாரணை நடத்தினர்.

தங்களிடம் பணம் செலுத்திய வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வரும் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் பணத்தை முழுவதுமாக திருப்பிக் கொடுத்து விடுவோம் என்று மேலாளர் நசீர்அகமது, போலீசாரிடம் உறுதியளித்தார்.

இதனை அடுத்து, அங்கு திரண்டு நின்றிருந்த வாடிக்கையாளர்களை போலீசார் சமாதானம் செய்து திருப்பி அனுப்பி வைத்தனர். இது குறித்து ,போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை பல்கலை.,யில் பாரதியின் முழு உருவச் சிலை திறப்பு!

bharathi statue opened in mk university - 2026
#image_title

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறை சார்பில் பாரதியாரின் முழுத் திருவுருவச் சிலை திறப்பு.

மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறை சார்பாக மகாகவி பாரதியாரின் 141 பிறந்தநாள் விழா, மகாகவி பாரதியாரின் முழுத் திருவுருவச் சிலை திறப்பு விழா, மகாகவி பாரதியாரின் படைப்புகள் பன்முகப் பார்வை என்னும் பொருளில் பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் ஆய்வுக்கோவை வெளியீட்டு விழா, மகாகவி பாரதியாரின் கவிதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா ஆகிய நிகழ்வு இன்று மதுரை காமராசர் பல்கலைக்கழத் தமியற்புலத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறைத் தலைவரும் மகாகவி பாரதியாரின் திருவுருவச் சிலை ஏற்பாட்டளரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமாகிய முனைவர் போ.சத்தியமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.

விழாவிற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக மாண்பாமை துணைவேந்தர் பேராசிரியர் ஜா. குமார் அவர்கள் தலைமைேயேற்று பாரதியார் கவிதைத் தொகுப்பினை வெளிட்டார்.

மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல்துறை சார்பாகத் தமிழியற்புலக் கட்டிடத்தின் முன்பாக பாரதியாரின் 61/2 அடி திருவுருவச் சிலை யை மத்திய அரசின் மே னாள் செயலரும், இந்திய விமான நிலையங்களின் மேலாண்மை இயக்குநருமான திரு. சு. மச்சேந்திரநாதன் ஐ.ஏ.எஸ். அவர்கள் திறந்து வைத்து, கவிதைத் தொகுதி மற்றும் ஆய்வுக் கோவையைப் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் மேனாள் மேற்கு வங்க அரசின் கூடுதல் தலைமைச்செயலாளரும் மகாவி பாரதியாரின் திருவுருவச் சிலை நன்கொடையாளருமான திரு.கோ.பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்ஆய்வுக் கோவையை வெளியிட்டு விழாப் பேருரையாற்றினார்.

மேலும் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறும்போது…

உலகில் தமிழ், சமஸ்கிருதம் உள்ளிட்ட ஆறு மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆறு மொழிகளில் தமிழ், சமஸ்கிருதம் இந்தியாவில் இருந்து வந்தவை.

இதில் சமஸ்கிருதத்திற்குப் பல பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் உள்ளன.ஆனால் இம்மொழி வாழும் மொழி அல்ல.செம்மொழிக்கான ஏழு தகுதிகளையும் கொண்ட ஒரே மொழியான தமிழுக்குப் பல்கலைக் கழகங்களில் இருக்கை இல்லை.தமிழ் மொழி குறித்தும் தமிழின் சிறப்புகள் குறித்தும் திருக்குறள் பெருமை குறித்தும் போகும் இடமெல்லாம் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருகின்றனர். மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் தமிழுக்கு இருக்கை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு பேராசிரியர் ம.இராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்வில் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகி டி.கிருஷ்ணாபுரம் திரு. அழகம்பெருமாள் கோனார் அவர்கள் பாராட்டப் பெற்றார்.

விழாவில் மாமல்லபுரம் படைப்புச் சிற்பிகள் கலைக் கூடத்தின் தலைவர், சிற்பி. டி.பாஸ்கரன் அவர்களுக்கு சர்வதேச அமைப்புகள் இணைந்து பண்பாட்டுக் கலைச்செம்மல் என்ற விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. நிகழ்வில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆய்வு மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி நீராட்ட உத்ஸவம் தொடக்கம்!

andal srivilliputhur

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி நீராட்ட உற்சவம் இன்று தொடக்கம்!
வரும் 23ம் தேதி பரமபத வாசல் திறப்பு!

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி நீராட்ட உற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று தொடங்குகிறது.

‘108’ வைணவ திருத்தலங்களில் மிக சிறப்பு பெற்ற, திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்ட உற்சவம் மற்றும் வைகுண்ட ஏகாதசி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஸ்ரீஆண்டாள் அனுசரித்த பாவை நோன்பு விரதத்தை கொண்டாடும் வகையில், மார்கழி நீராட்ட உற்சவம் சிறப்பாக நடைபெறும். பகல் பத்து உற்சவம் இன்று தொடங்குகிறது. இன்று மாலை ஸ்ரீஆண்டாளுக்கு தாய் வீட்டார் பச்சை காய்கறிகள் சீதனமாக வழங்கும் பச்சை பரப்புதல் நிகழ்ச்சி நடைபெறும்.

இதனையடுத்து பெரிய பெருமாள் கருட வாகனத்திலும், பெரியாழ்வார் யானை வாகனத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். பகல் பத்து உற்சவத்தின் போது தினமும் ஸ்ரீஆண்டாள் – ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். மார்கழி மாதத்தின் மிகப்பிரசித்தி பெற்ற பரமபத வாசல் திறப்பு என்ற வைகுண்ட ஏகாதசி திருவிழா, வரும் 23ம் தேதி (சனி கிழமை) நடைபெறுகிறது.

அன்று அதிகாலை 5.30 மணியளவில் பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், செயல் அலுவலர் முத்துராஜா மற்றும் அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

திணறும் சபரிமலை! தடுமாறும் போலீஸ்! ஏமாற்றத்தில் திரும்பும் பக்தர்கள்!

sabarimala - 2026
#image_title

சபரிமலையில் குவியும் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது கேரள போலீஸ்.

சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. போதிய அளவில் போலீஸ் இல்லாததால், சரிவர சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை என பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர். முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சன்னிதானம் வரை செல்ல முடியாமல் திரும்பும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

sabarimalai nadai open - 2026
#image_title

சபரிமலையில் நடப்பு மண்டல சீசனில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகம் உள்ளது. ஆன்லைன் முன்பதிவு வாயிலாக பக்தர்கள் வந்தாலும், தாங்கள் பதிவு செய்த நேரத்தில் இருந்து குறைந்தபட்சம், 24 மணி நேரம் கடந்த பின் தான் அவர்கள் பம்பை செல்ல முடிகிறது. அதன் பின் அங்கிருந்து மலையேறி 8 மணி நேரம் வரை வரிசையில் நிற்கின்றனர். இது பக்தர்களை பெரிதும் சிரமத்துக்கு உள்ளாக்குகிறது.

எந்த வசதிகளும் இல்லாமல் பக்தர்கள் பெருமளவு நேரத்தை போக்குவரத்து சிக்கலிலேயே சந்திக்க நேரிடுகிறது. நிலக்கல் அருகே இலவுங்கல் முதல் ளாகா வரை 12 கி.மீ., தொலைவுக்கு வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுகின்றன. இதனால் பக்தர்கள் ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் கேரள அரசு பஸ்களும் தடுத்து நிறுத்தப்பட்டதால் நிலக்கல் – -பம்பை சேவை, பம்பை பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியூர் பஸ்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் சபரிமலையில் குவியும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த, சபரிமலைக்குச் செல்லும் பாதைகளில் முன்னதாகவே வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். தண்ணீரும், உணவும் கிடைக்காத இடங்களில் வாகனங்கள் பல மணி நேரம் தடுத்து நிறுத்தப்படுவதால், பக்தர்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இவ்வாறு பல மணி நேர காத்திருப்புக்கு பின் இவர்கள் நிலக்கல்லில் இறங்கி கேரள அரசு பஸ்களில் ஏறினால், பல மணி நேரம் கழித்துதான் அந்த பஸ்களும் பம்பைக்கு இயக்கப்படுகின்றன.

பம்பையில் கூட்டம் குறைவதைப் பொறுத்து, அங்கிருந்து நிலக்கல்லுக்கு பஸ்கள் அனுப்பப்படுவதாக போலீசார் கூறுகின்றனர். இதனால் நிலக்கல்லிலும் பக்தர்கள் பல மணி நேர காத்திருப்புக்கு உட்பட வேண்டி இருக்கிறது. இதனாலும் கடும் சோர்வு அடைகின்றனர்.

இந்த கூட்ட நெரிசலால் விபத்துகளும் ஏற்படுகின்றன. துலாப்பள்ளியில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த கேரள அரசு பஸ்சை டிரைவர் இயக்கிய போது, பஸ்ஸின் கீழே படுத்திருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் சாய் மகேஷ் ரெட்டி (32), சூர்யா பாபு(22) ஆகியோரின் கால்கள் மீது சக்கரம் ஏறி இறங்கியது. இதை அடுத்து இருவரும் கோட்டயம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலக்கல்லில் கேரள அரசு பஸ்சிலிருந்து ஒரு குழந்தை தவறி விழுந்ததை கண்டித்து, அங்கும் பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர். இவ்வாறு ஏற்கனவே உள்ள கூட்ட நெரிசல் போதாது என்று விபத்துகளால் ஏற்படும் சாலை மறியல்களால் மேலும் போக்குவரத்து பெரும் சிக்கலாகி இருக்கிறது.

இப்படி பல மணி நேரம் காத்திருந்து நிலக்கல்லில் இறங்கி பம்பை சென்று மலை ஏறிச் சென்றாலும் சரங்குத்தி, கியூ காம்ப்ளக்ஸ்களிலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. நாள் கணக்காக ஆகிவிடும் சூழலில் அதன் பின்னரே பக்தர்கள் ஐயப்பன் சன்னிதானத்துக்கு தரிசனத்திற்காக செல்ல முடிகிறது. இவ்வளவு சிரமப்பட்டு சாப்பாடு தண்ணீர் எதுவும் இல்லாமல் இயற்கை உபாதைகளை கூட சரியாக கழிப்பதற்கு வழி இன்றி, சன்னிதானம் சென்றாலும், முந்தைய காலங்களைப் போல் ஐயப்பனின் தரிசனம் கிடைப்பதில்லை என்று பக்தர்கள் மன வருத்தத்தில் கூறுகின்றனர்.

இதற்கிடையே, பக்தர்களுக்கு தேவையான வசதியை செய்து தரும்படி மாநில அரசுக்கு, கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவிசநல்லூர் ஐயாவாள் உத்ஸவம், செங்கோட்டையில் கோலாகலம்!

ayyahval utsav in sengottai - 2026
#image_title

திருவிசநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள் உத்ஸவம், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

கார்த்திகை அமாவாசையான டிச. 12 செவ்வாய்க் கிழமை நேற்று, திருவிசநல்லூரில் தன் வீட்டில் கங்கையை பொங்கச் செய்த மகான் ஸ்ரீதர வேங்கடேச அய்யாவாளின் உத்ஸவம் கொண்டாடப்படுகிறது. 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகான் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாளுக்கு சிஷ்யையாய் அமைந்து பாடல்கள் பல புனைந்தவர் செங்கோட்டையிலிருந்த ஆவுடையக்காள்.

இந்தத் தொடர்பினால் செங்கோட்டையில் உள்ள அம்மன் சன்னதி தெருவில் உள்ள ராம பஜனை மடத்தில் ஐயாவாளின் பாதுகைகள் பூஜைக்காக வைக்கப்பட்டு வழி வழியாக பூசிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஐயாவாளின் உத்ஸவம் செங்கோட்டையிலேயும் விமரிசையாக நடைபெறுகிறது.

இதன்படி, செங்கோட்டை அம்மன் சந்நிதித் தெரு ஶ்ரீராம பஜனை மடத்தில் டிச.12 செவ்வாய் நேற்று, திருவிசநல்லூர் ஶ்ரீ ஶ்ரீதர வேங்கடேச ஐயாவாள் பாதுகை ருத்ராபிஷேக உத்ஸவம் காலை, மாலை, இரவு நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

காலை 8 மணிக்கு, செங்கோட்டையைச் சேர்ந்தவரும் தற்போது திருச்சி வாளாடியில் வசிப்பவருமான ராதாகிருஷ்ணன், முதல் முறையாக தீட்சை பெற்றுக் கொண்டு உஞ்சவிருத்தி பஜனையில் ஏற்று வர, ஶ்ரீ ஶ்ரீதர வேங்கடேச ஐயாவாள் பாதுகை ஊர்வலம் ஏழு தெருக்களிலும் நடைபெற்றது.

பின்னர் ஸ்ரீராம பஜனை மடத்தில் ஐயாவாள் பாதுகைகளுக்கு ருத்ர ஜப அபிஷேகத்தை செங்கோட்டை சிருங்கேரி மடத்தின் ஶ்ரீ பாரதீ தீர்த்த வேத பாடசாலை வித்யார்த்திகளும் வேத விற்பன்னர்களும் கலந்து கொண்டு நடத்தினார்கள். பின்னர் தீபாராதனையுடன் பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலையில் கிராம மகளிர் பஜனை மண்டலி குழுவினர், ஶ்ரீதர வேங்கடேச ஐயாவாளின் சிஷ்யையும், செங்கோட்டையில் பிறந்து வளர்ந்து அத்வைத ஞானத்தை உலகுக்குப் பரப்பிய ஆவுடையக்காளின் பாடல்களைப் பாடி இசை அஞ்சலி செய்தார்கள்.

இரவு நெல்லை ஶ்ரீ பாலகுருநாதர் பாகவதர் குழுவினர் நாமசங்கீர்த்தனம் செய்து நிகழ்ச்சியை சிறப்புற அமைத்தார்கள்.

செங்கோட்டை அம்மன் சந்நிதித் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் என்ற ஶ்ரீராம், மீனாட்சி சுந்தரம், ஶ்ரீனிவாசன் உள்ளிட்ட சிலர் கிராம ஜனங்களின் ஆதரவுடன் முன்னின்று சிறப்பாக இந்த உத்ஸவம் நடைபெற துணை புரிந்தார்கள்.

போதை ஆசாமிகளால் பேருந்துகளில் பயணிகள் அச்சம்!

madurai vadiaptti rto office - 2026

சோழவந்தான்: மதுரை, சோழவந்தான் பகுதிகளில் போதை ஆசாமிகளால் பேருந்துகளில் பயணிகள் அச்சத்துடனும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஒரு வித மன அழுத்தத்துடன் பணி செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக , குருவித்துறை, மன்னாடிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்தும் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்தும் தினசரி காலையில் பேருந்துகள் வந்து செல்கின்றன.

இந்த நிலையில், இன்று காலை எட்டு முப்பது மணி அளவில், குருவித்துறையில் இருந்து எம்ஜிஆர் பேருந்து நிலையம் செல்லும் 12 38 என்ற எண் கொண்ட93ம்நம்பர் பேருந்து சென்றது. இதில், பேருந்தின் உள்ளே,
மது போதையில் இளைஞர் ஒருவர் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் தகாத வார்த்தைகளால் பேசியும், பேருந்தில் இருந்த பயணிகளிடம் குறிப்பாக பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் சென்றுள்ளார்.

இதன் காரணமாக சோழவந்தான் வேப்பமர ஸ்டாப்பில் சிறிது நேரம் பேருந்தை நிறுத்தி போதை ஆசாமியை பேருந்தில் இருந்து இறக்கி விட முற்பட்டனர் . ஆனால் ,அவர் இறங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, விவேகானந்த கல்லூரி அருகே பேருந்தை நிறுத்தி போதை ஆசாமியை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டு சென்றனர். இதனால், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பயணிகள் ஆகியோர் நிம்மதி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்: காலையிலேயே மது அருந்திவிட்டு பேருந்தில் ஏறி சீட்டில் உட்கார்ந்து கொண்டு பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபடுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

ஆகையால், ஆங்காங்கே காவல்துறையினர் கண்காணித்து இது போன்ற போதை ஆசாமிகளிடம் இருந்து பயணிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.