Home Blog Page 27

நாசம் தோற்கும்; நம்பிக்கை வெல்லும்!

somnath temple - 2026

தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1026 ல் சோமநாதர் ஆலயம் முகம்மது கஜினியால் அழிக்கப்பட்டது. அதன் பிறகும் அது பல முறை தாக்கப்பட்டது.  இந்த ஆயிரம் ஆண்டுகளில் பாரதிய ஆன்மீக, கலாசார நினைவுச் சின்னங்கள் பலமுறை அழிவுகளைச் சந்தித்தன. இருப்பினும் அந்த முழு வரலாற்றை அழிவின் வரலாறாகக்  கருதுவதற்கு பதிலாக, பாரதிய ஹைந்தவ நம்பிக்கையின் உடைக்கமுடியாத வலிமையின் அடையாளமாக விவரிக்கலாம். 

சிதைக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் நம்பிக்கை கொண்ட பக்தர்கள் உறுதியுடன் மீண்டும் கட்டியெழுப்பினர். பக்ர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யவும் தயங்கவில்லை. சோமநாத், அயோத்தி, காசி, மதுரா என்ற அழிக்கப்பட்ட நான்கு பண்டைய வழிபாட்டுத் தலங்களும் இந்திய கலாசாரத்தின் சின்னங்கள். சுதந்திரத்திற்குப் பிறகு, கோடிக்கணக்கான மக்கள் அந்த அழிக்கப்பட்ட இடங்களில் கோயில்களை மீண்டும் கட்ட முயன்றனர். மதத்தின் பெயரால் நாடு மோசமாகப் பிரிந்து போனதால் நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர் முக்கிய ஆலயங்களையாவது மீட்டெடுக்க வேண்டும் என்று விரும்பினர். அதற்காகக் காத்திருந்தனர்.

ஆனால் இந்தியாவிலேயே ஆட்சியாளர்களில் சிலர் ‘திருப்திபடுத்தும்’ அரசியலால் ஹிந்து மத எதிர்ப்புடன் இந்த மறுசீரமைப்புப் பணியை மிகப் பெரும் பாவமாகக் கருதி   வரலாற்றுத் தவறை சரி செய்யவிடாமல் தடுத்துனர்.

ஆனால் ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபபாய் பட்டேலின் உறுதியாலும்  அர்ப்பணிப்பாலும் சோமநாதர் கோவில் கட்டுமானம் அற்புதமாக முடிந்தது. அப்போதைய ஜனாதிபதியுடன் சேர்ந்து பல பெரியவர்களும் அதில் பங்கேற்றார்கள். அந்த ஊக்கத்தோடு அயோத்தி போன்ற ஆலயங்களும் ஒவ்வொன்றாகக் கட்டப்பட வேண்டியவையே. ஆனால் அது நடக்கவில்லை. காரணம், பட்டேல், எந்த கட்சியில் இருந்தாரோ அதே கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அந்த முடிவுவை எதிர்த்தார்கள்.

பட்டேலின் மறைவுக்குப் பிறகு அந்த எதிர்ப்பும் திருப்திப்படுத்தும் அரசியலும் தொடர்ந்து மேலும் வலுவடைந்தது. அதனால்தான் அயோத்தியைப் புரனமைப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. அந்த தாமதம் மேலும் சில சிக்கல்களை உருவாக்கிப் பகைமையை வளர்த்தது. ஆனால் இரும்பு மனிதரைப் போன்ற மற்றொரு வலிமையான தலைவரின் திறமையால் அயோத்தியைக் கைப்பற்ற முடிந்தது. காசியும், மதுராவும் இன்னும் அப்படியே உள்ளன.

ஆயிரக்கணக்கான பெரிய கோவில்களைச் சீரமைப்பு செய்துகொள்ள இயலாமல் போனாலும் குறைந்த பட்சம் இந்த முக்கிய கோவில்களையாவது கட்டமைத்துக் கொள்ள வேண்டும என்ற இன்றைய குறைந்தபட்ச கோரிக்கைகள் மத அரசியலால் தீர்க்கப்படாமல் உள்ளன.

இருப்பினும் நாசம் விளைந்து ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்தச் சூழலில் வரலாற்றைத் திரும்பப் பார்த்தால், அந்த இடங்களில் ஏதோ ஒரு வடிவில் கோவிலை கட்டிக் கொண்டு, அதனையும் இடித்தபோது, மற்றொரு பிரதிஷ்டையைச் செய்து கொண்டு,   இடைவிடாமல் தொடர்ந்து நம்பிக்கையையும் பக்தியையும் வெளிபடுத்தி வரும்   இந்துக்களின் உறுதியை கவனிக்க வேண்டும்.

பல அழிவுகளுக்குப் பிறகு சிறந்த அரசியான ராணி அகல்யாபாய் ஹோல்கர் கட்டிய விஸ்வநாதர் ஆலயமும் சோமநாதர் ஆலயமும் சிதையாமல் நிற்றன. ஆனால் வெளிநாட்டவரின் வழிபாட்டு இடங்களாக  வன்முறையால் மாற்றப்பட்ட, உண்மையான கோவில்களை அதே தலத்தில் மீண்டும் புனரமைத்துக் கொள்ள இயலாமல் உள்ளோம், ஒரே ஒரு சோமநாதர் ஆலயத்தைத் தவிர.

1890 ல் கோவிலைப் பார்த்து வருந்தி, நெகிழ்ச்சியடைந்த சுவாமி விவேகானந்தர் 1897 ல் பேசுகையில், “சோமநாத் போன்ற தேவாயலங்கள் நமக்கு வரலாற்று புத்தகங்களை விட உண்மைகளை அதிகம் கற்பிக்கின்றன. தாக்குதலுக்கும் நாசத்திற்கும் உள்ளாகி, மீண்டும் மீண்டும் புனரமைக்கப்பட்ட இந்த கோவில்கள் பாரதத்தின் ஆத்மாவுக்கு வாழும் சாட்சிகள்” என்றார். பட்டேலுக்குத் துணையாக இருந்த கே.எம். முன்ஷி, ‘சோமநாத் தி ஷ்ரைன் எடர்னல்’ என்ற ஆதாரப்பூர்வமான நூலை அற்புதமாக எழுதினார்.

pm modi in somnath - 2026

“வெறுப்பு அழிக்கிறது. நம்பிக்கை சாஸ்வதமாக உருவாக்குகிறது” என்று இந்த ஆயிரம் ஆண்டு வரலாற்றை, இடைவிடாத நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக அண்மையில் வர்ணித்து, மாபெரும் தலைவர் மாண்புமிகு பிரதமர் ஸ்ரீநரேந்திர மோதி, சிறந்த ஊக்கமளிக்கும் செய்தியை வழங்கினார். சோமநாத் அறக்கட்டளையின் சேர்மனாகவும் இருக்கும் மோதிஜி, அன்றைய பட்டேலை நமக்கு நினைவூட்டினார்.

“வெறுப்போடு கூடிய கடந்த கால அழிவுகளின் வரலாற்றை அழித்து விட்டு, பக்தியின் வலிமையோடு தர்மத்தை சாதிக்கும் நம்பிக்கையின் வெற்றிகளையும், சிகரங்களோடும் கோபுரங்களோடும் உயர்ந்து நிற்கும் கம்பீரமான கோவில்களையும் நினைவூட்டினார்.

தலைமுறை தலைமுறையாக வரலாற்றுக்கும் புனிதத்திற்கும் தெய்வீகத்திற்கும் அடையாளமான ஆலயங்களைப் பாதுகாத்துக் கொள்வோம். நாட்டின் ஆத்மாவான ஆன்மீக சக்தியை நிலைநிறுத்திக் கொள்வோம்.

(source: தலையங்கம், ருஷிபீடம் பிப்ரவரி, 2026)

26-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்! சாதனைத் தமிழச்சி நிர்மலா சீதாராமன்!

nirmala seetharaman budget 2026 - 2026

2026-2027 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்.1 ஞாயிற்றுக்கிழமை இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை சந்தித்து பட்ஜெட் குறித்து விளக்கினார்.

முன்னதாக, கடந்த ஜன.28 அன்று, பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. அதில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை நிகழ்த்தினார். தொடர்ந்து,2026-2027ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யத் தொடங்கினார்  இது அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் என்பது குறிப்பிடத் தக்கது. 2024ல் இடைக்கால பட்ஜெட், வழக்கமான பட்ஜெட் என இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்ற வகையில்  இது அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது பட்ஜெட் ஆகிறது.இவ்வகையில், தொடர்ச்சியாக ஒன்பது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார்.

முன்னர், மொரார்ஜி தேசாய் 11 முறையும், ப. சிதம்பரம் 9 முறையும், பிரணாப் முகர்ஜி 8 முறையும், மன்மோகன் சிங் 5 முறையும் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இவர்களில்  நிர்மலா சீதாராமன் மட்டுமே, ஒரே பிரதமரின் ஆட்சியின் கீழ், தொடர்ச்சியான ஆண்டுகளில் 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார் என்பது ஒரு சாதனைதான்!

முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து விளக்கினார். அவருக்கு திரௌபதி முர்மு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார் . 

பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்து, நிதித்துறை அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இன்றுதான் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது .

பட்ஜெட் உருவாக்கக் குழு:

மத்திய பட்ஜெட் உருவாக்கக் குழுவின் தலைவர் நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமன்.  இந்தக் குழுவில்,  முதலில் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அனுராதா தாக்கூர், வருவாய்த் துறை செயலாளர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா, செலவினத்துறை செயலாளர் வும்லுன்மங் வுல்நம், நிதி சேவைத் துறை செயலாளர் நாகராஜூ, பொது சொத்துக்கள் நிர்வாகத்துறை மற்றும் முதலீட்டுத்துறை செயலாளர் அருணிஷ் சாவ்லா, பொது நிறுவனங்கள் துறை செயலாளர் மோசஸ் சலாய் ஆகியோர் பட்ஜெட் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

இரவில் இருந்து பகலுக்கு!

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 1999ம் ஆண்டு வரை, பிரிட்டிஷாரின் நேர வசதிக்கு ஏற்ற வகையில், மத்திய பட்ஜெட் தாக்கல் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும்.  ஆனால், 1999ல் வாஜ்பாய் ஆட்சியில்,  நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா, பட்ஜெட் தாக்கல் நேரத்தை காலை 11 மணிக்கு மாற்றினார். இதன் மூலம் பிரிட்டிஷ் அடிமைப் பழக்கம் முடிவுக்கு வந்ததுடன்,  பட்ஜெட் குறித்த செய்திகளை ஊடகங்களில் விவாதிக்கவும்,  பொது மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வுடன் பேசவும் வசதியாக அமைந்தது

பிப்.1 தான் கணக்கு!

பட்ஜெட் தாக்கல் என்பது, பிப்ரவரி மாத கடைசியில் இருந்து வந்த நிலையில் 2016ம் ஆண்டு முதல் பிப்ரவரி 1ம் தேதியன்று மாற்றப்பட்டது.  2016ம் ஆண்டு தொடங்கி ஆங்கிலேயர் கால நடைமுறையான பிப்ரவரி கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்வது மாற்றப்பட்டு, பிப்.1 என மாற்றப்பட்டது. இதுவும் பொதுமக்களின் வசதி கருதியே நிகழ்ந்தது. 

ஏப்ரல் 1ல் புதிய நிதி ஆண்டு தொடங்கும். பட்ஜெட் தாக்கலான ஒரு மாத காலத்துக்குள் மத்திய அரசின் புதிய கொள்கைகள், விதிமுறைகளுக்கு மாற அமைச்சகங்கள், வணிகங்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு போதுமான கால அவகாசம் கிடைக்காது. மேலும் மத்திய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் கிடைத்து, அமலுக்கு வருவதற்குள் புதிய நிதியாண்டு தொடங்கிவிடும். இதனால் பட்ஜெட் அமல் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டது. 2017ல்  அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, முதல்முறையாக பிப்ரவரி 1ல் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய நடைமுறையைத் தொடங்கி வைத்தார். இதனால் அனைவருக்கும் போதிய அவகாசம் கிடைத்தது. இந்நிலையில் பிப். 1 இன்று ஞாயிற்றுக் கிழமை என்ற போதும், அந்த நடைமுறைப்படி, பட்ஜெட் தாக்கலானது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபெருங் கோவிலுடையான் ராஜகோபுர விமானங்கள் பாலாலயம்!

srivilliputhur temple palalayam - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் வட பெருங்கோவில் உடையான் ராஜகோபுர விமானங்கள் திருப்பணி பாலாலயத்துடன் துவங்கியது

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆதி கோவிலானது வட பெருங்கோவில் உடையான் திருக்கோவிலாகும். இந்த திருக்கோவிலில் பெருமாள் வடபத்ர சாயி எனும் பெயரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

ஆண்டாள் இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்குத்தான் திருப்பாவை எனும் பாமாலைபாடி பூமாலையும் சூடிக்கொடுத்தாள். எனவேதான் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் என அழைக்கப்படுகிறார்.

பெரியாழ்வாரும் ஆண்டாளும் ஒருசேர மங்களாசாசனம் செய்த பெருமையுடைய இந்த பெருமாளின் திருக்கோயில் ராஜகோபுரம் மற்றும் உப சந்நிதி விமானம் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேக பெருவிழா நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான யாகசாலை பூஜைகள் அமைக்கப்பட்டு இரண்டு நாட்கள் பல்வேறு ஆகம பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நேற்று 28 ஆம் தேதி காலை 9:45 மணிக்கு மீன லக்னத்தில் வைகாசன முறைப்படி பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு தொடர்ந்து விமான ராஜகோபுரம் பால பிம்ப பிரதிஷ்டை, ஆராதனம், தீர்த்த கோஷ்டி எஜமான மரியாதை செய்யப்பட்டு பாலாலயம் துவங்கியது.

நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன், கண்காணிப்பாளர் அர்ஜுன் மற்றும் ஏராளமான பக்தர்கள் உபயதாரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இனிவரும் ஆட்சியில் மக்களுக்கு நல்லது நடக்கும்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

premalatha vijayakanth in srivilliputhur - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் சாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவரது மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேற்று ஆண்டாள் கோயில் வடபத்ர சயனர் கோயில் ஆகிய கோயில்களில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தென் மாவட்டங்களில் 3ம் தேதி சென்னைக்கு சென்ற பின்னர் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தலைமை கழகத்திலிருந்து அறிவிக்கப்படும். பிரச்சாரத்திற்கு செல்லும் அனைத்து இடங்களிலும் மக்களுடைய வரவேற்பு தேமுதிகவுக்கு அமோகமாக இருக்கிறது.

உள்ளம் தேடி இல்லம் நாடி நிர்வாகிகள் சந்திப்பு மக்களைத் தேடி மக்கள் தலைவருடைய ரத யாத்திரை என இரண்டு விதமான பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்களின் வரவேற்பும் ஆதரவும் அதிகமாக இருப்பதை காண முடிகிறது. இந்த நான்காம் கட்ட பயணம் கன்னியாகுமரியில் நிறைவடைய உள்ளது.

கூட்டணி தொகுதிகளின் எண்ணிக்கை முடிவான பின்னரே வேட்பாளர் மற்றும் தொகுதி குறித்து அறிவிக்க முடியும். அதுவரை எந்த தகவலும் சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் எங்களது தோழமைக் கட்சிகள். மதியில் இருப்பவர்களும் எங்களது தோழமை கட்சியினர்தான். கேப்டன் குருபூஜையில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர். அனைவரும் நட்புடன் உள்ளனர்.

கூட்டணி யாருடன் என்பதை மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுடன் தான் நிச்சயம் கூட்டணி இருக்கும். அதை உரிய நேரத்தில் அறிவிப்போம்.

கூட்டணி அறிவிப்பில் தாமதம் என்பது செய்தியாளர்களுக்கு மட்டுமே. இன்னும் தேர்தல் தேதியும், வேட்பு மனு தாக்கல் தேதியும் அறிவிக்கப்படவில்லை. மார்ச் மாதத்தில் தான் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும்.

எங்களது கட்சிக்கு எது நல்லது எப்போது அறிவிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதனால் எந்த கால தாமதமும் இல்லை. ஆனால் உரிய நேரத்தில் அறிவிப்போம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறி. பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இந்த ஆட்சிக்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்றால் 50 விழுக்காடு நல்ல விஷயங்களும் 50 விழுக்காடு நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளும் உள்ளது. இதை நான் பல முறை தெரிவித்துள்ளேன். எந்த மாற்று கருத்தும் கிடையாது. இனிவரும் ஆட்சி மக்களுக்கு நல்லது நடக்கும் ஆட்சியாக இருக்கும். தேர்தல் முடிவு தெரிந்த பின்னர் தான் ஆட்சி மாற்றம் வருமா என்பது தெரிய வரும்…. என்றார்.

முன்னதாக கோயிலுக்கு வருகை தந்த பிரேமலதாவையும் அவரது மகன் விஜய பிரபாகரனையும் தேமுதிக தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு வழங்கினர்.

ஒப்பந்தங்களின் ‘தாய்’; இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தால் பலன் என்ன? 

india eu business forum meeting - 2026

பாரதத்தின் 77வது குடியரசு தின நிகழ்ச்சிகள் முடிந்த கையுடன், ஜன.27 அன்று, ஐரோப்பிய ஒன்றியம் பாரதத்துடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கிறது. 

20 ஆண்டுகளாக இம்மாதிரி ஒரு ஒப்பந்தம் போட பாரதம் முயற்சித்து இந்த ஆண்டு தான் வெற்றி பெற்றிருப்பதாகவும், இந்த ஆண்டு இது நிறைவேற முக்கியக் காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் என்கிறார்கள் ஐரோப்பாவில். டிரம்ப்பு மேற்கொண்ட நெருக்குதல்களால்,  இங்கே ஓடி வந்து ஐரோப்பிய ஒன்றியம் கையெழுத்திட்டிருக்கிறது. இவை, பாரதத்தை ஒரு காலத்தில் காலனி ஆக்கியவை என்பது குறிப்பிடத் தக்கது.

இரு சக்திவாய்ந்த தேசங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இது வெறும் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல; இரு தேச வளர்ச்சிக்கான ப்ளூபிரின்ட்; இருவருக்குமான உணர்வு உலக நன்மைக்கானது. 140 கோடி இந்தியர்களுக்கும், கோடிக்கணக்கான ஐரோப்பிய மக்களுக்கும் பெரிய வாய்ப்புகளை உருவாக்கும். ஜவுளி, நகைகள், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட இந்தியாவின் தொழில்சார்ந்த பொருட்களை, ஐரோப்பிய ஒன்றிய சந்தை எளிதில் அணுக இன்று வகை செய்யப்பட்டு உள்ளது. – என்று, ஐரோப்பிய யூனியனுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு பின் பிரதமர் மோடி பேசினார்.

இந்தியாவுடன் ஐரோப்பிய யூனியன் மேற்கொண்டுள்ள தடையற்ற வணிக ஒப்பந்தமானது அனைத்து வணிக ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று, ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான்டா் லெயன் தெரிவித்தார். பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு சாத்தியமாகியுள்ள இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் புதிய மைல்கல் என்றார் உா்சுலா. இதனால், ஆட்டோமொபைல், இயந்திர பாகங்கள், மருத்துப் பொருள்கள், ரசாயனம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஐரோப்பிய யூனியனின் 96% ஏற்றுமதி பொருள்களுக்கு வரி குறைப்பு சாத்தியமாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய – பாரத வர்த்தக ஒப்பந்தம் எவ்வளவு முக்கியமானது என்றால், ‘இது அநியாயம். எங்களை விட்டு இந்தியாவோடு ஒப்பந்தம் போடுவதா?’ என்று அமெரிக்கர்கள் கதறுவதிலிருந்தும், ‘ஒழிந்தது அமெரிக்கா’ என்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து குரல்கள் எழுவதிருந்தும் தெரிந்து கொள்ளலாம். 

இந்த மகத்தான வர்த்தக ஒப்பந்திற்கு நன்றி சொல்ல வேண்டியது அமெரிக்க அதிபர் டிரம்புக்குதான் என பலரும் குறிப்பிடுகிறார்கள்.  காரணம், ஐரோப்பிய நாடுகளும் பாரதத்தை சிரித்த முகத்துடன் காலனி ஆதிக்க அதிகாரப் பார்வையில்தான் பார்த்தன. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் நரேந்திர மோடி எனும் தேசபக்தனின் உறுதியான தலைமையில், இந்தியாவின் அசுர வளர்ச்சி, பிற நாடுகளுடன் நட்பு, உலக அரசியலில் நிலையான உறுதியான முடிவுகள், ஸ்திரமான சிறப்பான ஆட்சி, சுயசார்பு பொருளாதாரக் கொள்கைகள், கொரோனா காலத்தில் பாரதம் உலக நாடுகளுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்கி காப்பாற்றியது, ராணுவ வலிமை, தொழில்நுட்பத்தில் அதீத வளர்ச்சி, அமெரிக்கா, ரஷ்யா, சீனா இந்தியாவை சமமாக பாவிக்க வைத்த தன்மை, அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாத தன்மை, சீனா தானாகவே முன்வந்து இந்தியாவிடம் நட்பு பாராட்டுவது, இஸ்லாமிய நாடுகள் இந்தியாவைப் போற்றுவது… இவைகள்தான் இன்று ஐரோப்பிய யூனியன் இந்தியாவை நாடி வந்ததன் காரணங்கள் என்று சொல்லலாம்.

இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பாராளுமன்றங்களில் ஒப்புதல் பெற இன்னும் 6 மாதங்களாகும் என்றாலும், இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பில்லை என்பதால், ஒப்புதல் நிச்சயம் என்று தெரிகிறது.  கடந்த ஆறு ஆண்டுகளில் இது எட்டாவது வர்த்தக ஒப்பந்தம் என்கிறார் பாரத அமைச்சர் பியூஷ் கோயல். 

india eu trade deal - 2026

இந்த ஒப்பந்தங்கள் வெறும் ‘வர்த்தகம்’ சம்பந்தப்பட்டதில்லை என்பதே இதில் இருக்கும் முக்கியமான விஷயம்!

இந்த வர்த்தகம் அத்தனையும் யூரோ – ரூபாய் கரன்ஸிகளைக் கொண்டே நடக்கப் போகின்றன. டாலரில் இல்லை. எனவே, இது அமெரிக்க டாலருக்கு மிகப் பெரிய பின்னடைவு என்கிறார்கள். இதுகுறித்து, அமெரிக்காவில் ஏற்கெனவே புலம்பல் ஆரம்பித்து விட்டது.

ஐரோப்பிய ஒன்றியமும் பாரதத்தின் யுபிஐ-யும் இணைந்து செயலாற்றும் என்றும் தெரிகிறது.  ரூபாய் உபயோகத்தால் ரூபாயின் மதிப்பு உயர்வதுடன், ஒப்பந்தம் செய்திருக்கும் நாடுகளில் இனி இந்தியா விரோத பயங்கரவாதிகள் (உதாரணத்துக்கு காலிஸ்தானிகள்) பாரத விரோத செயல்களில் ஈடுபட முடியாது. ஒப்பந்தம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா போன்றவற்றில் ஏற்கனவே காலிஸ்தானிகள் முன்பு போல பாரத விரோத வேலைகளில் ஈடுபட முடியவில்லை என்பதை கவனிக்கலாம். மேலும் இனி பாரதத்திலிருந்து குற்றவாளிகள் எவரும் இந்த நாடுகளில் சென்று ஒளிந்து கொள்ள முடியாது. 

கனடாவும் ஒப்பந்தத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அஜித் டோவல் அடுத்த மாதம் கனடா செல்லவுள்ளார். வெவ்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்காக, பிரான்ஸின் ஜனாதிபதி மேக்ரோன், பிரேசில் லூலா, கனடாவின் கார்னி, இத்தாலி பிரதமர் மெலோனி, நெதர்லாந்து பிரதமர் என பலரும் அடுத்த சில நாட்களில் பாரதம் வருகிறார்கள். 

பாரதத்தை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறார் பிரதமர் மோதி. அவருக்கும், அவரது அணியின் ஜெய்ஷங்கர், பியூஷ் கோயல், ராஜ்நாத் சிங், அஜித் டோவல் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தச் செயல்பாடுகளில் பெரும் பங்கு உள்ளது.  

இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே ஏற்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் கிடைக்கும் பலன்கள் :

இந்தியாவுக்கும், 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதை, மகத்தான ஓர் ஒப்பந்தம் என்று குறிப்பிடும் வகையில், ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்தது. அப்படியெனில், இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமா என்ற எண்ணம் எழுவது இயல்புதான். ! மேலும் இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் பல்வேறு நலன்களை அளிக்கும் என்று கூறப்பட்டது. 

முதலில் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்ன என்று பார்ப்போம்!

  • ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மெஷினரி, எலக்ட்ரிக்கல் சாதனங்கள், ரசாயனங்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றின் மீதான வரி ரத்து செய்யப்படுகிறது
  • ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 90% பொருட்களின் மீதான வரி விதிப்பு ரத்து செய்யப்படுகிறது
  • அடுத்த 7 ஆண்டுகளில், 93% பொருட்களின் மீதான வரி விதிப்பு, பூஜ்ஜியம் என்ற நிலையை எட்டி விடும்
  • இரு தரப்புக்கும் இடையிலான 99.5% வர்த்தகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் பலன் கிடைக்கும்
  • இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆட்டோமொபைல் மற்றும் வேளாண் பொருட்கள் மீதான வரி விதிப்பு முற்றிலுமாக நீக்கப்படவில்லை
  • இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வரி விதிப்பு பூஜ்ஜியம் ஆக்கப்பட்ட துறைகள்:
    கடல் சார் பொருட்கள் ( தற்போதைய வரி 26% ),
    ரசாயனங்கள் ( தற்போதைய வரி 12.8% ),
    பிளாஸ்டிக்ஸ், ரப்பர் ( தற்போதைய வரி 6.5% ),
    தோல், காலணிகள் ( தற்போதைய வரி 17% ),
    ஜவுளி ( தற்போதைய வரி 12% ),
    ஆயத்த ஆடை ( தற்போதைய வரி 4% ),
    பேஸ் மெட்டல் ( தற்போதைய வரி 10% ),
    ஆபரணங்கள் ( தற்போதைய வரி 4% )
  • இந்த ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய நாடுகளின் சராசரி வரி விதிப்பு வகிதம், 3.8 %த்தில் இருந்து 0.1 %மாகக் குறைந்துள்ளது
  • ஐரோப்பிய ஒயின், பீர், ஆலிவ் ஆயில், பதப்படுத்தப்பட்ட உணவு, சில பழங்கள் மீதான வரி, இந்தியாவில் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது
  • பிரீமியம் ஒயின் மீதான இந்திய வரி விதிப்பு, 150 %த்தில் இருந்து 20%மாக படிப்படியாகக் குறைக்கப்படும்.
  • ஐரோப்பிய தயாரிப்பு கார்கள் விலை 17,800 டாலர்களுக்கு குறைவு என்றால், இந்த ஒப்பந்த விதிமுறைகள் பொருந்தாது. அதற்கு மேல் விலை கொண்ட கார்கள் என்றால், 3 பிரிவாக ஆக்கப்படும். ஒவ்வொரு பிரிவுக்கும் கோட்டா மற்றும் தனித்தனி வரி விதிப்பு இருக்கும் . பெரும்பாலான கார்களுக்கு 30 முதல் 35% வரி விதிப்பு இருக்கும் . (பிஎம்டபிள்யூ., வோக்ஸ்வேகன், மெர்சிடிஸ், ரெனால்ட் போன்ற ஐரோப்பிய இறக்குமதி கார்களின் மீதான வரி கணிசமாக குறையும்.)

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழா; தேரோட்டம்!

thiruparankundram murugan kalyanam - 2026

திருப்பரங்குன்றத்தில் தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது; பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.

மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்   தைப்பூசத்தை முன்னிட்டு, தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும் தெப்ப தேரோட்டம் நடைபெற்றது.

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தெப்பத் திருவிழா கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு, தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்க மயில் வாகனம், அன்னவாகனம், வெள்ளி பூத வாகனம், பச்சைக் குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.

thiruparankundram ther - 2026

விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக இன்று தை கார்த்திகையை முன்னிட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கு சுவாமிகள் முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக, உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் திருமஞ்சனம் மஞ்சள் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதணைகள் நடைபெற்றது. தொடர்ந்து, 16 கால் மண்டபம் அருகே உள்ள தேரில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார்.

தொடர்ந்து, இன்று இரவு சுப்ரமணியசுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை தெப்ப  திருவிழா நடைபெறும். விழாவினை முன்னிட்டு காலை 10 மணி அளவில் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தெப்பத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் தெப்ப தேரில் சுப்ரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருள்வார். அங்கு பக்தர்கள் மிதவை தேரினை வடம் பிடித்து இழுத்து தெப்பத்தினை மூன்று முறை சுற்றி வந்து சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதே போல, இரவு மின் ஒளியிலும் தெப்ப மிதவைத்தேரில் சுவாமி எழுந்தருள மூன்று முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் அறங்காவலர் குழுவினர் தலைமையில்,
பணிகள் நடைபெற்று வருகிறது.

அதிமுக.,வை ஒன்றிணைப்பதே நோக்கம்: ஓ. பன்னீர் செல்வம்

o panneerselvam in madurai airport - 2026

மதுரை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளைக் கேட்க முற்பட்டனர். ஆனால் பட்டும் படாமலும் பேசிவிட்டு காரில் ஏறிச் சென்றார்.

அப்போது அவர், என்னுடைய ஒற்றைக் கோரிக்கை எதுவென்றால், பிரிந்திருக்கும் அதிமுக.,வின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான்! அதுவே எங்கள் கோரிக்கை என்றார்.

அப்போது செய்தியாளர்கள், “மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா?” என்று கேட்டனர். அதற்கு, “அது ஆண்டவன் கையில் உள்ளது” என்றார்.

தொடர்ந்து, “யாராவது உங்களிடம் கூட்டணி குறித்துப் பேசினார்களா?” என்று கேட்டபோது, “ கேள்விக்கு, “டி.டி.வி. உள்பட யாரும் என்னை அழைக்கவில்லை” என்று சொல்லி விட்டு, ஓ.பன்னீர்செல்வம் காரில் ஏறிச் சென்றார்.

அருப்புக்கோட்யில் பிரேமலதா தேர்தல் பிரச்சாரம்..

1001216091 - 2026

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளம் தேடி இல்லம் நாடி சுற்றுப்பயணம் தமிழகம் முழுவதும் செய்து வருகிறார். இந்நிலையில் தூத்துக்குடியில் பிரச்சாரத்தை முடித்து முடித்துக் கொண்டு அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு வந்தார். அருப்புக்கோட்டை ஒன்றியம் செம்பட்டியில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்தும் கட்சி கொடி ஏற்றினார்.

அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு பிரச்சாரம் செய்தார்.
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் நெசவாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் எப்பொழுதும் பாதுகாப்பாக இருக்கும். இவர்கள் நன்றாக இருந்தால் தான் நாடு நன்றாக இருக்கும். ஆனால் நெசவாளர் கஷ்டப்பட்ட போது ஒரு கட்சியினர் பிரியாணியும், ஒரு கட்சியினர் கஞ்சித் தொட்டியும் திறந்தனர். ஆனால் நமது கேப்டன் 10 லட்சம் ரூபாய்க்கு நெசவாளர்களிடம் சேலைகளை வாங்கி ஏழை எளியவர்களுக்கு தமிழும் முழுவதும் இலவசமாக வழங்கினார்.

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த உண்மை மறைக்கப்பட்டு அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவித்துள்ளனர். ஆனால் நமக்கு மேல் கடவுள் இருந்தால் நிச்சயம் தர்மம் ஜெயிக்கும். நான் அருப்புக்கோட்டை மக்களுக்கு துணை நின்று இந்த தொகுதிக்கு அனைத்து நல்லதும் செய்வேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் நல்லது நடக்கும், தேமுதிக நீங்கள் பொதுமக்கள் தொண்டர்கள் விரும்பும் மகத்தான கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். என்று பேசினார். நிருபர்களிடம் கூறியதாவது. நாங்கள் எல்லா கட்சியுடனும் தோழமையுடன் தான் இருக்கிறோம். எங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும், அதிக தொகுதிகள் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறாரா? இல்லையா எந்த தொகுதியில் என்பது பின்னர் முடிவு செய்யப்படும். தேமுதிக எந்த தொகுதியில் எந்த கட்சியுடன் கூட்டணி என்று தெரிந்த பின்னர் போட்டியிடும் வேட்பாளரிடம் வேட்பு மனு வாங்கி பரிசீலனை செய்து போட்டியிடுவோம். கூட்டணிகுறத்து உரிய நேரத்தில் அறிவிப்போம் என்று பேசினார்.

ராஜபாளையம் சுதந்திர தின நினைவு வளைவில் குடியரசு தின விழா..

1001216078 - 2026

ராஜபாளையத்தில் பிரபலமான பொன்விழா மைதானம் அருகில் உள்ள சுதந்திர தின நினைவு வளைவில் ராஜபாளையம் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பாக 77 ஆவது இந்திய குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .

ராஜபாளையம் பொன்விழா மைதானம் அருகில் உள்ள சுதந்திர தின நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.சில ஆண்டுகளுக்கு முன் ராஜபாளையம் மக்களுக்கு சுதந்திர தின நினைவு சின்னமாக விளங்கும் இந்த வளைவில் லாரி மோதி சேதமானது.இந்த வளைவை ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நன்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் புதுப்பித்து ஆண்டு தோரும் குடியரசு தினம் சுதந்திர தினத்தன்று பாரம்பரிய முறைப்படி விழா கொண்டாடப்பட்டு பெரியோர்கள் கௌரவித்தது மரியாதை செய்யப்படுகின்றனர்.

இந்த சுதந்திர தின நினைவு வளைவில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.இங்கு வைத்து ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி என் சி சி மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை உடன் தீயணைப்பு நிலைய அதிகாரி பி. முத்து செல்வம் டைகர் பர்னிச்சர் அதிபர் டைகர் சம்சுதீன் ராஜுக்கள் கல்லூரி என்சிசி ஆசிரியர் ஜெகநாத் ஆகியோர் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தனர் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் அனைவரையும் வரவேற்று இனிப்புகள் வழங்கி 77 வது குடியரசு தின விழாவை சிறப்பாக கொண்டாடினர் .

நிகழ்ச்சியில் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற நண்பர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

பரமபதித்த ‘வைணவச் சுடர்’ தெ.ஞானசுந்தரம்!

the gnanasundaram - 2026

தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் ஞாயிற்றுக் கிழமை நேற்று காலமானார். அவரது மறைவு பற்றி அவரது குடும்பத்தினர் தெரிவித்த தகவல்…

எங்களது தகப்பனார் தெ.ஞா என அன்புடன் அழைக்கப்படும் ‘முனைவர் தெ.ஞானசுந்தரம்’ அவர்கள் நேற்று மாலை (25.1.26) 3.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்னாரது இறுதி ஊர்வலம் 28.01.2026 புதன்கிழமை காலை 8.30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு வேலங்காடு தகன பூமியில்(RTO அலுவலகம், New Avadi Road, கீழ்பாக்கம் Water tank அருகில்) 10.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.
இங்ஙனம்-
தி.மணிமேகலை (மனைவி), ஞா.அருண்மொழி(மகன்), ஞா.மாதவன்(மகன்).


தெ. ஞானசுந்தரம் 1941 செப்டம்பர் 24ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தின் தேரழுந்தூரை அடுத்த குழையூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். தமிழ்ப் பேராசிரியர், நூலாசிரியர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பல தளங்களில் முத்திரை பதித்தவர்.  கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பொருளியல் இளங்கலைப் பட்டம் பெற்றவர் பின்னாளில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். வைணவ உரைவளம் என்னும் பொருண்மையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாராய்ச்சி மணிப்ரவாள நடையில் அமைந்த திவ்யப் பிரபந்த உரைகளைப் பற்றியது. பேராசிரியர் மு. வரதராசனாரின் மாணவராகத் திகழ்ந்தவர்.

பச்சையப்பன் கல்லூரி, பரமத்தி வேலூர்க் கந்தசாமிக் கண்டர் கல்லூரி, சென்னைக் கந்தசாமி நாயுடு கல்லூரி ஆகியவற்றிலும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறையிலுமாக 37 ஆண்டுகள் தொடர்ந்து பணிசெய்துள்ளார். 1993ல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவரானார். மாலைக் கல்லூரிப் பொறுப்புப் பேராசிரியராகவும் அதே கல்லூரியில் பொறுப்பு முதல்வராகவும் பதவி வகித்து 2000ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார். 

புதுவை நடுவண் பல்கலைக்கழக கம்பன் இருக்கையின் முதல் பேராசிரியர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத்தலைவர் என பொறுப்புகள் வகித்தார். நூல்கள் பல எழுதியுள்ளார். விருதுகள் பல இவரை அலங்கரித்துள்ளன.


பேராசிரியர் தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் குறித்த அடியேனது நினைவலைகள்…

வயதில் மூத்த நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார்… ‘உன்னோட ஃபேஸ்புக் போஸ்ட்ல பெரும்பாலும் இரங்கல் குறிப்புதான் பெரிதா இருக்கு. ஆனா மனதின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமா இருக்கு, படிக்கும் போதே கண்கள் கலங்குகிறது’ என்றார். 12 வருடம் முன் அண்டை வீட்டுக்காரரான செங்கோட்டை வி. ஜனார்த்தனன் ஐயா காலமான போது அவருடனான அனுபவங்களை எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு கண்கலங்கியதாக தெரிவித்த தெ. ஞானசுந்தரம் ஐயா, ‘தங்கள் கட்டுரையைப் படித்தேன். கடைசிப்பகுதியில் இழையும் சோகம் கண்களைக் கலங்கச் செய்தது. நான் அவரைச் சென்று பார்த்த வீடு நீங்கள் சிறுவயதில் .ஓடியாடியது என்பதை அறிய மகிழ்ச்சி’ என்றார் தனிப்பட்ட தகவலில்! காரணம், அவர்கள் அந்நாளைய பட்டிமன்றம், இலக்கியக் கூட்டங்களில் ஒன்றாகப் பங்கெடுத்தவர்கள்.

உரையாடலில் தெ.ஞா. ஐயாவும் விளையாட்டாகச் சொன்னார், உங்கள் இரங்கல் குறிப்பைப் படிக்கும் போது, தன்னைப் பற்றியும் இப்படியான உள்ளந்தொடும் அனுபவங்களைக் கேட்டுவிட்டு, மனநிறைவுடன் உலகை விட்டுப் போகணும்னு ஒருத்தருக்குத் தோன்றும் என்றார். ஐயா இது அடியேனை கலம்பகம் பாடுநர் என்று குறிப்பிடுமாப் போலே தோன்றுதலால், அடியேனுக்குள் கலக்கம் அதிகமாகி விட்டது என்றேன்! சிரித்தபடியே கடந்தார்.

அவருடனான பழக்கம் ஏற்பட்டது 2002ல். அப்போது சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில் ஒரு கருத்தரங்கு. சென்றிருந்தேன். அதில் பேசிய அறிஞர்களில் இவருடைய பாணி என்னை வெகுவாய் ஈர்த்திருந்தது. அந்த வருட கலைமகள் தீபாவளி மலரில் அறிஞர்களின் உரைகளைத் தொகுத்து எழுதினேன். அப்போதுதான் அவருடன் முதல் சந்திப்பு. பார்த்த மாத்திரத்தில் உள்ளத்தால் அணைத்துக் கொண்டார். (கலைமகள் தொகுப்பை இங்கே ஏற்கெனவே பதிவிட்டிருக்கிறேன். சுட்டி… https://www.facebook.com/share/1BknVMpLJp/ )

பின்னாளில் நான் தினமணி பணியில் இருந்த போது, அடிக்கடி பேசிக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. சொல் விளையாடல் மட்டுமல்ல, அவர் தினமணிக்காக நிறைய எழுதினார். தினமணியின் மீது தனித்துவமான விருப்பு அவருக்கிருந்தது. குறிப்பாக தமிழ் மணி கட்டுரைகள், நடுப்பக்க கட்டுரைகள் இவை மீது! சில கட்டுரைகள் குறித்து, அல்லது சில சொற்கள் குறித்து விளக்கமோ விமர்சனமோ தனிப்பட்ட வகையில் பேசிக் கொள்வோம். எனினும் அவர் எவரைக் குறித்தும் தனிநபர் விமர்சனமாக எதையும் முன்வைத்ததில்லை! அவை அடியேனுக்கு மேலும் பாடம் எடுப்பது போலிருக்கும். இறுதி மூச்சு உள்ள வரை நான் கற்கும் மாணவனே என்ற எண்ணம் எனக்குள் உண்டு. சார்ந்திருக்கும் துறை மட்டுமல்லாது வேறு துறைகளிலும் கவனம் செலுத்துவேன். ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு துறை சார்ந்து கற்றல் இருக்கும். தொழில்நுட்பம், மென்பொருள், வலைத்தள நுப்டம் இப்போது ஏஐ- செயற்கை நுண்ணறிவு சார் நுட்பங்கள் என…! இருந்தாலும், அடிப்படையை நாம் மறந்துவிடலாகாது என்பதற்கான ஊன்றுகோல்தான் தெ.ஞா. போன்ற அறிஞர்களின் நட்பும் தொடர்பும்!

தெய்வச் சேக்கிழார் மேடையில் அவரை முதலில் சந்தித்திருந்தாலும், வைணவ இலக்கியங்களில் கரை கண்டவர் தெ.ஞா. என்பதை அவருடனான பழக்கம் அடியேனுக்குப் புரிய வைத்தது. குறிப்பாக, மணிப்ரவாள நடை, வைணவ உரை நடை இவை குறித்து அடிக்கடி பேசிக் கொள்வோம். அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதும் இந்தத் தலைப்பில் தான் என்பதால், நமக்குக் கூடுதலாக இவை குறித்த தகவல்கள் அவரிடம் இருந்து வந்து சேர்ந்தன.

கல்கியின் தீபம் இதழ்ப் பணியில் இருந்த போது, நம் இதழ்களிலும் நீங்கள் எழுதலாமே! என்றேன். அப்போது தன் ஆசையை இப்படிப் பகிர்ந்து கொண்டார்…
“நூல் எழுதும் பணியில் உள்ளேன். திவ்வியப் பிரபந்த மலர்கள் என்னும் பெயரில் ஆழ்வார்கள் பாசுரங்களில் சிலவற்றைக் குறித்து எழுத வேண்டும் என்னும் வேட்கை உண்டு. பெருமாள் திருக்குறிப்பு இருக்குமேல் நிறைவேறும். |தங்களுக்கு இசைவாயின் இம் முயற்சியை மேற்கொள்வேன். அவ்வப்பொழுது எழுதித் தருகிறேன்.” – என்றார். ஆனால் அது நிறைவேறவில்லை. அதற்குள் காலம் பல மாறுதல்களை அவரவர் வாழ்க்கையில் தோற்றுவித்து விட்டது.

பேஸ்புக் தொடர்பில் வந்த பின் என் பதிவுகளுக்கு அடிக்கடி பதில் போடுவார். ஒரு முறை நேர்மறை – எதிர்மறை – உடம்பாடு – என்பது குறித்த சொற்களில் விவாதம் வந்தபோது, ஐயா, எதிர்மறையைத் தவறு என்று சொல்லவில்லை. உடம்பாடு என்பதை நேர்மறை என்று சொல்வது தான் தவறு என்று தெரித்துள்ளேன் – என்று பதில் விளக்கம் அளித்தார்.

அதுபோல், பிறந்த நாள் வாழ்த்தை பேஸ்புக் உள்டப்பியிலும் வாட்ஸ்அப்பிலும் தெரிவிப்பதில் அவர் தவறியதில்லை. ஒருமுறை தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதத்தில் என அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். பதிலுக்கு அவரும் அதே பாணியில் நன்றி தெரிவித்தார். எம்மொழியும் எனக்கு இனிய மொழியே! என்ற குறிப்புடன்! ஆக ஒரு சிறந்த தேசியச் சிந்தனையாளர் அவர். இப்போது பத்ம விருதுகள் பற்றி செய்தி எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் தெ.ஞானசுந்தரம் ஐயா பரமபதித்த செய்தி எட்டியது. அப்போது அடியேனுக்குத் தோன்றியது, இவரின் தெய்வத் தமிழ்ப் பணிக்காக மத்திய அரசு பத்ம விருது கொடுத்திருக்க வேண்டும்; முயற்சி செய்திருக்கலாம்! தவற விட்டுவிட்டோமே! என்று!

இன்னும் அவரைப் பற்றி நிறையக் குறிப்பிடலாம்தான். ஆனால் இரங்கல் குறிப்புகளை இனியும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க எனக்கு விருப்பம் இல்லை. இப்போதோ, எனக்கு நானே கலம்பகம் படித்துக் கொள்ளும் இயலா நிலைக்கு உடலும் உள்ளமும் தள்ளப்பட்டுவிட்டதால், அவர் நினைவுகளை உள்ளத்தில் இருத்தி வெறுமனே அசைபோடுகிறேன்!

அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்