Home Blog Page 48

ஸ்ரீவிலி 108 வடபத்ர சாயி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா..

1000971439 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வடபத்ர சாயி பெரிய பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா விமர்சையாக நடைபெற்றுவருகிறது.முக்கிய விழாவாக செப்டம்பர் 29-ம் தேதி திருக்கல்யாணமும், அக்டோபர் 2-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா பிரம்மோற்சவம் ஆகும். இந்தக் கொடியேற்றத்துடன் தொடங்கி, பிரம்ம தேவர் பெருமாளுக்கு எடுத்த விழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒவ்வொரு நாளிலும், பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
திருவிழாவின் முக்கிய அம்சமாக பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் வேதங்கள் முழங்க, கருடக்கொடி தங்கக்கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து 9 நாட்களுக்கு, தினமும் காலை மற்றும் மாலையில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பிரம்ம தேவர் திருப்பதிக்கு வந்து பெருமாளுக்கு விழா எடுத்ததில் இருந்தே இந்த விழா கொண்டாடப்படுகிறது, இது பிரம்மோற்சவம் எனப்படுகிறது.
பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு பெருமாளின் தரிசனத்தைக் கண்டு மகிழ்கின்றனர்.

1000971467 - 2026

புரட்டாசி மாதத்தில் நடைபெறும் இந்த திருவிழா, பொதுவாக புரட்டாசி மாதத்திலேயே தொடங்கி வெகு சிறப்பாக நடைபெறும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு கடந்த புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 29-ம் தேதி திருக்கல்யாணமும், அக்டோபர் 2-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது.

108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி (பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு கருடக் கொடியேற்றம் நடைபெற்றது.

பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதில் 5-ம் நாள் விழாவான செப்டம்பர் 28-ம் தேதி தங்க கருட சேவையும், 29-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 30-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது.

9-ம் நாளான அக்டோபர் 2-ம் தேதி பெரிய பெருமாள் அவதரித்த திருவோண நட்சத்திரத்தில் செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது. அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் சக்கரையம்மாள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஆசியக் கோப்பை: இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மீண்டும் மோதும் பாகிஸ்தான்!

asia cup cricket 2025 - 2026

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2025

இந்தியா பாகிஸ்தான் ஃபைனல்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆசிய கோப்பை ஆட்டங்களின் முடிவுகள் எதிர்பார்த்தபடி போகவில்லை. கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இந்திய ஓமன் அணிகளிக்கிடையேயான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் சூப்பர் 4 பொட்டிகள் தொடங்கின. இதில் இந்திய அணியும் இலங்கை அணியும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டியின் முதல் அப்சட் இலங்கை வங்கதேச அணிகள் ஆட்டத்தில் நிகழ்ந்தது.

20ஆம் தேதி நடந்த முதல் சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேச அணி (19.5 ஓவர்களில் 169/6) இலங்கை அணியைத் (20 ஓவர்களில் 168/7) தோற்கடித்தது. 21ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் இந்திய அணி (18.5 ஓவர்களில் 174/4) பாகிஸ்தான் அணியை (20 ஓவர்களில் 171/5) தோற்கடித்தது. 23ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் இரண்டாவது அப்சட் நிகழ்ந்தது. பாகிஸ்தான் அணி (18 ஓவர்களில் 138/5) இலங்கை அணியை (20 ஓவர்களில் 133/8) வென்றது. 24ஆம் தேதி நடந்த மற்றொரு ஆட்டத்தில் இந்திய அணி (20 ஓவர்களில் 168/6) வங்கதேச அணியை (19.3 ஓவர்களில் 127) வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

25ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி (20 ஓவர்களில் 135/8) வங்கதேச அணியை (20 ஓவர்களில் 124/9) வென்றது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

நேற்று 26ஆம் தேதி நடந்த இந்திய அணி (20 ஓவர்களில் 205/5) இலங்கை அணிகளுக்கிடையேயான ஆட்டம் விறுவிறுப்பான ஆட்டமாக இருந்தது. அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 202 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை அணியில் பதுன் நிசாங்கா 107 ரன் கள் எடுத்தார். அவரது அதிரடி ஆட்டத்தில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

சூப்பர் ஓவரில் முதலில் இலங்கை அணி ஆடியது. இந்திய அணி தரப்பில் இருந்து ஆகாஷ்தீப் சிங் பந்துவீசினார். இலங்கை அணி ஒரு ஓவரில் 2 விக்கட் இழந்து 2 ரன் எடுத்தது. இந்திய அணி முதல் பந்திலேயே மூன்று ரன்கள் எடுத்து ஆட்டத்தில் வெற்றிபெற்றது.

இறுதிப்போட்டி இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் நாளை (28.09.2025) நடக்கவுள்ளது. இதுவரை நடந்த ஆட்டங்களில் அபிஷேக் ஷர்மா 309 ரன் களுடன் மட்டையாளர்களில் முதலிடத்தில் இருக்கிறார். பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் 13 விக்கட்டுகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

திருப்பதி பிரமோத்ஸவம்; ஆண்டாள் மாலை அனுப்பி வைப்பு!

andal maalai to thirupathi - 2026

திருப்பதி திருமலை ஸ்ரீ னிவாச பெருமாள் கோவிலில் நடக்கும் புரட்டாசி பிரமோத்ஸவத்தின் ஐந்தாம் திருநாளில் கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு சாற்றுவதற்காக, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் இன்று கோவிலில் இருந்து கொண்டு செல்லப்பட்டது. திரளான பக்தர்கள் வழியனுப்பி வைத்தனர்.

இதனை முன்னிட்டு இன்று மதியம் 1:30 மணிக்கு வெள்ளி குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஆண்டாளுக்கு மாலை, கிளி, பரிவட்டம் சாற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் ஆண்டாளுக்கு சாற்றப்பட்ட மாலை, கிளி, பரிவட்டங்களை ஒரு கூடையில் வைத்து ஸ்தானிகம் ஹயக்ரீவாஸ், கோயில் பட்டர்கள் மாடவீதிகள் சுற்றி கொண்டு வந்தனர்.

பின்னர் கார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. விழாவில் அறநிலையத்துறை இணை ஆணையர் மாரியப்பன், செயல் அலுவலர் சக்கரை அம்மாள், ராம்கோ இயக்குனர் ஸ்ரீகண்டன் ராஜா, கோயில் பட்டர்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராம்கோ சேர்மன் வெங்கட்ராமராஜா குடும்பத்தினர் செய்திருந்தனர்.

இந்த மாலையை இன்று திருப்பதி கோவில் நிர்வாகம் பெற்றுக் கொள்கிறது. நாளை கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு சாற்றப்படுகிறது.

கரிசல்குடியிருப்பு மாகாளி அம்மன் கோயிலில் நவராத்ரி விழா!

mahakali amman temple golu - 2026

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கரிசல்குடியிருப்பு மாகாளிஅம்மன் கோவில் 36ஆம் ஆண்டு நவராத்திரி விழா.

செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கரிசல்குடியிருப்பு மாகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம் இந்தாண்டு நவராத்திரி திருவிழா  நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் அனைத்து இல்லங்களிலும், கோயில்களிலும் பக்தர்கள் கொலு வைத்து வழிபடத் தொடங்கினர்.

வரும் 1 ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், 2 ஆம் தேதி விஜயதசமி பூஜையோடு நவராத்திரி விழா நிறைவடைகிறது.

தென்காசி மாவட்டம் கரிசல்குடியிருப்பில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் திருக்கோவில் 36ஆம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை தொடங்கியது விழாவில் மாகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.  கோயிலில் நவராத்திரி கொலு படிகள் ஒன்பது என்ற ஒற்றைப் படை வரிசையில் அமைக்கப்பட்டு அதில் நேர்த்தியாக கொலு பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள், துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.

இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலு பீடத்தில் மாகாளியம்மன் வைத்தும்  இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் வரிசையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மகாகவி பாரதியார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் சமத்துவத்தை குறிக்கும் வகையில் சுவாமிவிவேகானந்தர் அன்னைதெரசா அப்துல்கலாம் ஆகியோரின் உருவ பொம்மைகளும் வைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விழாவிற்கான ஏற்பாடுகளை மாகாளியம்மன் திருக்கோவில் குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பக்தர்கள், சமுதாய பெரியோர்கள் விழாக்கமிட்டியினா் சிறப்பாக செய்து வருகின்றனர்.

செங்கோட்டையில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த வரவேற்பு வளைவு இடித்து அகற்றம்!

sengottai arch removed - 2026
செங்கோட்டையில் கனத்த இதயத்துடன் அகற்றப்பட்ட நுழைவுவாயில்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், கேரளத்துக்குக் கொண்டு செல்லப்படும் தமிழகத்தின் கனிம வளங்களைச் சுமந்து செல்லும் அளவில் பெரிய லாரிகள், கண்டெய்னர் வாகனங்கள் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து வசதிக்காக நூற்றாண்டுகள் பழமையான வரவேற்பு வளைவு இன்று காலை இடித்து அகற்றப்பட்டது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் செங்கோட்டை பகுதி இருந்த போது, சமஸ்தானத்துக்குள் நுழையும் வகையில் வைக்கப்பட்ட வரவேற்பு வளைவு மேலே சங்கு முத்திரையுடன் காணப்படும். இருபுறமும் துவாரபாலகர் சிலைகளுடன் ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் பெற்ற அம்சத்துடன் இருந்தது இந்த வரவேற்பு வளைவு. இது போன்ற அமைப்பு நாட்டில் வேறு எங்கும் காண முடியாது. வெறும் வரவேற்பு வளைவுகள் மட்டும் தான் இருக்கும். ஆனால் இது ஆன்மிக அடையாளத்துடன் துவாரபாலகர்கள் சிலைகளுடன் அமைந்திருந்ததால் தனித்துவம் பெற்றுத் திகழ்ந்தது.

கோவில்கள் அதிகம் இருந்த இடம். திருவிதாங்கூர் பூமியே ஆன்மீக பூமி என்பதால் அந்தக் காலத்தில் இப்படி ஆலயங்களுக்கு வைப்பது போல் துவாரபாலகர் சிலைகளை வைத்து வழிபட்டு இருக்கிறார்கள். கோயில்களுக்கு வெளியே அல்லது சந்நிதிக்கு வெளியே இப்படி துவாரபாலகர் சிலைகள் இருப்பது நாம் அறிந்தது. ஆனால் இங்கே இந்த பூமியே க்ஷேத்திரம் என்பதால் இந்த சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. துவாரபாலகர்கள் ஒற்றை விரல் காட்டி ஏகாக்ர சிந்தையோடு உள்ளே வாருங்கள் என்று சொல்வதாக அமைப்பு.

சபரிமலை செல்லும் அன்பர்கள் இந்த வழியாகச் செல்லும் போது புகழ்பெற்ற ஐயப்பன் தலங்களான ஆரியங்காவு, அச்சன்கோவில், குளத்துப்புழை, பந்தளம், எரிமேலி உள்ளிட்ட அனைத்து ஐயப்பன் படை வீடு தலங்களுக்கும் செல்வதற்கு இதுவே நுழைவாயில் என்பதால், அந்நாளில் பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் இந்த வழியையே தேர்வு செய்து பயணிப்பார்கள்.

அப்படி இந்த ஊர் வழியாகச் செல்பவர்கள் முதலில் துவார பாலகர்களுக்கு சூடம் ஏற்றி வணங்கி, தங்கள் பயணம் எந்தவித இடையூறும் இன்றி அசம்பாவிதம் ஏதுமின்றி நல்ல முறையில் நடைபெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, அவர்களிடம் அனுமதி பெற்று பிறகு உள்ளே செல்வார்கள்.

காரணம் அந்தக் காலத்தில் கேரள மண்ணில் மாந்திரீக ரீதியாக அல்லது அவர்களின் ஆகம ரீதியாக பல பிரதிஷ்டைகளை செய்திருந்தார்கள். அப்படித்தான் கோட்டைவாசல் கருப்பசாமி பிரதிஷ்டையும். இன்றும் கோட்டைவாசல் மேலிருந்து பார்த்தால் கீழே ஊரும் நிலப்பரப்பும் அருமையாகத் தெரியும்.

கோட்டைவாசல் கோயிலுடன் கூடிய பகுதி 1956ல் தமிழகத்துடன் கேரளப் பகுதிகள் சில இணைக்கப்பட்ட போது, தமிழகத்துக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை சரிவர பராமரிக்க இயலவில்லை என்பதால், கோட்டைவாசல் கருப்பசாமி கோயில் வழிபாட்டை மட்டும் கேரளத்தின் கட்டுப்பாட்டில் கொடுத்து விட்டார்கள்! செங்கோட்டை நகரில் மாடன் பிரதிஷ்டைகளும் உண்டு. இவை ஊரில் ஒவ்வொரு முக்கியமான இடத்திலும் அந்நாளில் மாந்திரீக ரீதியாக பிரதிஷ்டை ஆனவை.

இத்தகைய பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த நுழைவுவாயில் வளைவு, அண்மைக் காலமாக தமிழகத்தில் இருந்து கனிம வளங்களைக் கொண்டு செல்லும் மிகப்பெரும் லாரிகள், கண்டெய்னர்களால் இடிக்கப்பட்டு உரசப்பட்டு சேதப்படுத்தப் பட்டது. எனவே இதனைப் பழுது பார்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும், துவாரபாலர் சிலைகளுடன் கூடிய வரவேற்பு வளைவை அப்புறப்படுத்த நிறைய எதிர்ப்புகளும் இருந்தது.

இந்நிலையில் மீண்டும் ஒரு வரவேற்பு வளைவு அமைத்து அதில் சங்கு முத்திரையுடன் துவார பாலகர்கள் சிலையும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அவ்வாறே செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது நகராட்சி நிர்வாகம். ஆனால் நிர்வாகத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் ஆளுங்கட்சி நபர்கள் இந்தச் சிலைகளை அப்புறப்படுத்துவதிலேயே ஒரே கண்ணாக இருந்தார்கள் என்பது அவர்களின் பேச்சிலும் நடவடிக்கையிலும் நன்றாகத் தெரிந்தது. எனவே தான் ஆன்மிகப் பெருமக்கள் இவற்றை அகற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதிகாரிகளிடம் கோரிக்கைகளை வைத்தார்கள். இதனால் இது அரசியல் ஆக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், செங்கோட்டை பகுதியை உள்ளடக்கிய அதிமுக.,வைச் சேர்ந்த கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி ஏற்பாட்டில் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு, மீண்டும் புதிதாக கட்டித்தரப்படும் என்றும், அவ்வாறே துவாரபாலகர்கள் அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் இன்று காலை பொதுமக்கள் முன்னிலையில் இடித்து அகற்றப்பட்டது.

எனவே வருங்காலத்தில் தாங்கள் வாக்களித்தபடி இல்லாமல் இந்தச் சிலைகளை வேறெங்காவது கொண்டு போய் வைத்து வரவேற்பு வளைவை அமைத்தால் இந்த ஊர் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள்.

மோடியின் புதிய இந்தியா : விவேகமான அயலுறவுக் கொள்கை!

india and qatar news - 2026
#image_title

— ராம் மாதவ் —
தமிழில்: திருநின்றவூர் ரவிக்குமார்

உலகெங்கிலும் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்திகள் குவிந்தன. உலகம் முழுவதும் அவருக்கு இருக்கும் மதிப்பு மரியாதையின் அடையாளம் இது.

உலக தலைவராக அவர் உயர்ந்துள்ளதன் அடையாளம் மட்டுமல்ல இது. இந்திய தேசத்தின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது என்பதையும் இது காட்டுகிறது. சுதந்திரம் அடைந்த பிறகு கொஞ்ச காலம் ஜவஹர்லால் நேருவுக்கு கூட இது போன்ற உலக அந்தஸ்து இருந்தது. நேரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவர். காந்தி மற்றும் சுதந்திரப் போராட்டத்தின் வாரிசாக அடையாளப் படுத்தப்பட்டார். அதனால் அவர் சுதந்திரத்திற்கு பிறகு உலக அரங்கில் உயர்த்தப்பட்டார். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்க வில்லை. உள்நாட்டிலும் உலக அரங்கிலும் இந்தியா திக்கித் திணறியது.

தனக்கு முன்பிருந்தவர்களை போலல்லாமல் மோடி எளிய பின்னணி கொண்டவர். அது மட்டுமன்றி தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கருத்தியலின் நிழலும் அவர் மீது கவிழ்ந்திருந்தது. 2014 பிரதமரானபோது எதிர்க்கட்சிகள் பலவும் அவர் அயலுறவு கொள்கையில் தோற்றுப் போவார் என்று கணித்தன. ஆனால் யாரும் நினைத்துப் பார்க்க முடியாததை அவர் சாதித்தார்.

ஓரத்தில் நின்று கொண்டிருந்த இந்தியா அவர் தலைமையில் முக்கிய உலக ஆட்டக்காரராக மாறியது. கடினமான உலக சவால்களையும் ஆதிக்க வல்லரசுகளின் அழுத்தத்தையும் எதிர்கொண்டது மட்டுமன்றி இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை விவேகத்துடன் கூடிய சுதந்திரமான ( Strategic Autonomy) அயலுறவு கொள்கையால் சிறப்பாக வழி நடத்தினார்.

பல ஆதிக்க மையங்களை கொண்ட உலகில் தற்சார்பு கொண்ட நிலையை மேற்கொள்வது சுலபமான விஷயமல்ல. 1960 களில் பிரான்ஸ் நாட்டில் பத்தாண்டுகளுக்கும் மேலாக சார்லஸ் டி கோல் அதிபராக இருந்தபோது இது போன்றதொரு கொள்கையை பின்பற்றினார். இரு துருவங்கள் இடையே பனிப்போர் நிகழ்ந்த காலம் அது. ஐரோப்பிய நாடுகள் எல்லாம் பொதுவாக அமெரிக்க சார்பு நிலையை மேற்கொண்டிருந்தன. அப்போது டி கோல் தற்சார்பு கொண்ட அயலுறவு கொள்கையை தீவிரமாக முன்னெடுத்தார்.

அவரது அயலுறவு கொள்கை அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துப்போக மறுத்தது. சோவியத் யூனியனின் அதிபர் நிகிதா குருசேவ் மற்றும் சீனாவின் மா சேதுங் உடன் அவருக்கு இருந்த உறவை அமெரிக்கா பரிவுடன் பார்க்கவில்லை. ஜான் கென்னடி மற்றும் லின்டன் ஜான்சனின் ஆட்சியின்போது ராஜதந்திரரீதியாக தனிமைப் படுத்துவோம், பொருளாதார தடைகள் விதிப்போம், நேட்டோ ராணுவ பாதுகாப்பு வளையத்தை விலக்கிக் கொள்வோம் என்றெல்லாம் அவரை அச்சுறுத்தினார்கள்.

கடைசியில் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் அவரது ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கர் தான் டி கோலின் சுதந்திரமான போக்கு அமெரிக்காவுக்கு எதிரானது அல்ல என்றும் அது தன் நாட்டின் (பிரான்சின்) சுதந்திரத்தையும் தற்சார்பையும் முன்னிறுத்தும் முயற்சி என்பதை புரிந்து கொண்டார்கள்.

பக்குவமாக மோடி மேற்கொண்ட தற்சார்பை மையமாகக் கொண்ட சுதந்திரமான வெளியுறவு கொள்கையால் உலக அரசியல் களத்தில் இந்தியா உயர்ந்தது. அமெரிக்க நிர்வாகத்தில் உள்ள சிலருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது இயல்பானதே. 1960 ல் டி கோலை மிரட்டியதை போலவே இப்போதுள்ள அமெரிக்க தலைமை மோடியை பல்வேறு வழிகளில் முறைக்கிறது. டி கோல் போலவே மோடியும் உள்நாட்டில் கடுமையாக விமர்சிக்கப்படுவார். வெளிநாட்டு சதிகள் அரங்கேறும். இருந்தாலும் மோடி விவேகத்துடன் கூடிய , தற்சார்பு கொண்ட, சுதந்திரமான புதிய அயலுறவு கொள்கையை உருவாக்கி விட்டார் என்பதுதான் உண்மை. இந்தியாவில் இனி எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த வழியில் இருந்து விலகிச் செல்ல விரும்பாது என்பதும் உண்மை.

அயலுறவு கொள்கையில் மோடி நிபுணத்துவம் பெற்றதற்கு பின்புலமாக இரண்டு தசாப்தங்கள் நீண்ட கதை இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. வெளியுலகத்தின் மீது அவர் நடத்திய படையெடுப்பு 1990 களில் ஆரம்பமானது. பாஜகவின் தேசிய நிர்வாகியாக அவர் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அந்நாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினர்களின் அமைப்புகளை திட்டமிட்ட ரீதியில் சந்தித்து அவர் கலந்துரையாடினார். அதன் தலைவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டார்.

குஜராத்தின் முதல்வரான பிறகு சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூர் , தாய்லாந்து, ஹாங்காங் உட்பட பல நாடுகளுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காக பயணம் செய்தார். 2002 இல் நடந்த கலவரம் சில தடைகளை, குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில், ஏற்படுத்தியது. ஆனால் அவற்றால் அவர் தளரவில்லை. நவீன குஜராத் பற்றிய அவரது கனவை நினைவாக்க மேற்கத்திய நாடுகளின் ஆதரவு தேவை என்பதை அறிந்திருந்தார். முக்கியமாக அந்த நாடுகளில் வாழும் இந்தியர்களின் ஆதரவு அவசியம் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது.

இங்கிலாந்து அரசின் அங்கீகாரம் இல்லாமல், இன்னும் சொல்லப்போனால் இங்கு வந்தால் கைது செய்து விடுவோம் என்ற அச்சுறுத்தலையும் மீறி, இந்திய வம்சாவளியினரின் வேண்டுகோளை ஏற்று 2003 இல் லண்டனுக்கு சென்றார்.

குஜராத் பொருளாதாரத்திலும் வணிகத்திலும் வெற்றிகரமான இடத்தை பிடித்ததால் மேற்கத்திய நாடுகள் அதை கவனத்துடன் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டில்லியில் இருந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தூதுவர்கள் தங்கள் நாட்டு மேலிடத்திற்கு மோடியுடன் உறவு வேண்டாம் என சொல்லியது எடுபடாமல் போனது. எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, 2005 இல் ஏற்றமிகு குஜராத் சம்மேளனத்திற்கு பிரிட்டனின் தொழிற் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பேரி கார்டினெர் கலந்து கொண்டார். தில்லியில் உள்ள பிரிட்டன் தூதுவரை உசுப்பேத்தும் விதமாக அவர் மோடியுடன் மேடையில் ஒன்றாக அமர்ந்திருந்தார். இது போன்ற சிறு துளிகள் விரைவில் ஓடையாக பெருக்கெடுத்தன.

2009 ல் பொதுத்தேர்தல் நெருங்கும் போது மோடி பாஜகவின் பிரதமராக முன்னிறுத்தப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. அது டெல்லியில் இருந்த தூதரகங்கள் பலவற்றில் கலக்கத்தை ஏற்படுத்தியது. 2008 இல் அமெரிக்காவின் துணை தூதர் என்னுடன் பேசும்போது சாதாரணமான குரலில் , மோடி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதா என்று கேட்டார். வாஷிங்டனில் (அமெரிக்காவில்) இது முக்கிய விஷயமாக இருக்கிறது என்பதை உணராத நான், ‘பிரதமர் வேட்பாளராக நிற்பாரா என்பதல்ல எப்போது என்பதுதான் சரியான கேள்வி’, என்று என் பதிலின் முக்கியத்துவத்தை உணராமலே சொன்னேன். 2011 விக்கி லீக்ஸ் ஆவணங்கள் மூலம் இது வெளிப்பட்டது. இந்திய அரசியலில் ஒரு புதிய நாயகன் உருவாகி வருவதை உலகம் அப்போதே அடையாளம் கண்டுவிட்டது.

2009 அக்டோபரில் ஆர்எஸ்எஸ் ஸின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மோகன் பாகவத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலுக்கு முயற்சித்தோம் . மிக முக்கிய நாட்டின் தூதுவர், ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற உத்தரவாதத்துடன், அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் ஸூடன் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது என்ற தடையுத்தரவு இருந்த போதிலும் 27 உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் ஒரே ஒருவரை தவிர மற்ற எல்லோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதை கேட்கப்பட்ட கேள்விகள் பலவும் மோடியை பற்றி தான் இருந்தன. குஜராத் கலவரத்துடன் மோடியை தொடர்பு படுத்தி மற்ற கட்சிகள் குற்றம் சாட்டுவதை மோகன் பாகவத் வண்மையாக மறுத்தார். நாட்டில் மிகவும் மதிக்கக் கூடிய தலைவராக மோடி இருக்கிறார் என்று உறுதிபட சொன்னார். அது ஐரோப்பிய ஒன்றிய நாட்டு தூதர்களுக்கு தெளிவான செய்தியை தெரிவித்தது.

2011 ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய நாட்டின் தூதர் தடையாணையை மீறி காந்தி நகருக்கு வந்து மோடியை சந்தித்தார். அந்த சந்திப்புக்கு பிறகு எல்லா விதமான தடைகளும் தகர்ந்தன. 2014 இல் மோடி பிரதமரானபோது உலக நாடுகளின் அயலுறவுத் துறை அதிகாரிகளின் வட்டத்தில் ஒரு மதிப்பும் மரியாதையும் உருவாகிவிட்டது என்பதை டில்லியில் உள்ள பல்வேறு நாட்டு தூதரக அதிகாரிகளுடன் தொடர்புடையவன் என்ற வகையில் நான் உறுதிப்பட கூறுவேன்.

1945 இல் அரசியல் ரீதியான அணுகுமுறைக்கு (ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு) பதிலாக அணுகுண்டை பயன்படுத்தியது ஏன் என்று கேட்டதற்கு, ‘அறிவியலை விட அது மிகவும் சிக்கலானது என்பதால்’ என்று ஐன்ஸ்டீன் கூறியது புகழ்பெற்ற வாக்கியமாயிற்று. புதிய இந்தியா ராஜதந்திர நடவடிக்கைகளையும் இராணுவ நடவடிக்கைகளையும் சமமாக கையாளும் திறன் படைத்தது என்பதை மோடி வெளிப்படுத்தியுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்

நவராத்திரியில்… உள்ளம் கவர்ந்த கொலு பொம்மைகள்!

golu1 - 2026
ஆதி – அந்திப் பிரபு / நாக கன்னி / பாரத மாதா

ஜெயஸ்ரீ எம். சாரி

நவராத்திரி என்னும் சுபராத்திரியின் மையமாய் இருப்பது கொலு பொம்மைகள் தான். பல வருடங்களாக, பரம்பரையாக கொலு தர்பார் வீற்றிருப்பதே நம் தமிழக இல்லங்களில் அழகு.

golu2 - 2026
கடோத்கஜன் / பாண்டி ஆடும் பெண்கள்

சரியாக 25 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் இந்த வருடம் பலரது இல்லங்களில் வீற்றிருந்த கொலு தர்பாரை தரிசிக்கும், ரசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

golu3 - 2026
தாயக்கட்டை ஆடும் பெண்கள் / பல்லாங்குழி ஆடும் சிறுமிகள்

பலரும் இருக்கும் இந்த அவசர யுகத்திலும் கொலு தர்பாரை அலங்கரிப்பதில் அவர்களின் ஆர்வம் புலப்பட்டது. பழைய காலத்து பொம்மைகளின் அழகும், திருத்தமான வடிவமைப்பும், புது பொம்மைகளின் வண்ண வனப்பும் கண்களுக்கு விருந்தாய் அமைந்திருந்தன.

நான் கண்டு மகிழ்ந்த சில சுவாரஸ்யமான கொலு பொம்மைகளை இந்தக் கட்டுரையில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

golu4 - 2026
குயவர் / விவசாயி

‘ஆதி-அந்த பிரபு’வாய் ஒரே பொம்மையில் ஒரு பாதியில் கணபதியும், மறு பாதியில் அனுமனுமாய் காட்சியளித்தனர். பாரத மாதாவும் கம்பீரமாய் வீற்றிருந்தாள்.

golu5 - 2026
பச்சைக்கிளி / பொய்க்கால் குதிரையில் ஆண் – பெண்

பாம்பு டான்ஸ் ஆடும் நாக கன்னி, கடோத்கஜன் தனக்கு பிரியமான உணவு வகைகளுடனும், பாண்டி விளையாடும் இளைஞிகள், தாயக்கட்டை ஆடும் சிறுமியர்கள், பல்லாங்குழி விளையாடும் பெண்கள், குயவர், காய்கறி விற்கும் விவசாயி, விவசாயப் பெண்மணி, வயலிலிருந்து அறுவடை செய்ததை தலையில் சுமந்து வரும் பெண்…

golu6 - 2026
தேசத்தலைவர்கள் / பூக்குடுவையில் அழகி

தத்ரூபமான பச்சைக் கிளி, பொய்க்கால் குதிரையில் ஆணும், பெண்ணும், தேசத்தலைவர்கள், மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர், பூக்குடுவையில் மாடர்ன் அழகி, காகிதத்தினால் செய்யப்பட்ட மிருதங்கம், நாகஸ்வரம், மாக்கல்லினால் ஆன கல்லுரல், அம்மி, இயந்திரம், குழிப் பணியார பாத்திரம்….

golu7 - 2026
காகிதத்தால் செய்யப்பட்ட மிருதங்கம் / மாக்கல்லால் ஆன பொருட்கள்

கோனார் மற்றும் தாய்ப்பசுவிடம் பால் அருந்தும் கன்றுக்குட்டி, தாகத்திற்காக தண்ணீர் பானையில் காத்திருக்கும் காக்கை, மாட்டு வண்டிக்காரர், இசைக் கலைஞர்கள், வீட்டின் உள்ளே தன் பெண்ணிற்கு தலை பின்னிவிடும் தாய்…

golu8 - 2026
கோனார் மற்றும் பசு – கன்றுக்குட்டி / தாகமான காக்கை

கிணறு, குகனுடன் படகில் ராமர், இலக்குவன், சீதை, ஆரத்தழுவிய ராமன்- குகன், நட்பை விளக்கும் கண்ணன் – குசேலர், கிணற்றில் தண்ணீர் எடுக்கும் பெண்களும் அங்கேயே குளிக்கும் ஒரு பெண், பித்தளையில் சிறிய பாத்திரங்கள்…

golu9 - 2026
மாட்டு வண்டி / எம்.ஜி.ஆர்

கைலாச மலை, ஆற்று மணலில் பார்க், அயோத்தி ராம்லல்லா, நவராத்திரி பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தாங்கிய ‘பேனர்’ எனப் பலவிதமான வித்தியாசமான பொம்மைகளை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பெரும்பாலான இல்லங்களில் பண்டர்பூரின் ‘விட்டல் -ருக்மணி’ கொலுவில் எழுந்தருளியிருந்தனர்.

golu10 - 2026
இசைக் கலைஞர்கள் / வீட்டிற்குள் தலை சீவும் தாய்

‘பல இல்லங்களில் இன்னும் நிறைய பொம்மைகள் உள்ளன. பரணில் இருந்து எடுக்கத்தான் முடியவில்லை’ என்பதே பலரின் வார்த்தைகளாய் இருந்தன.

golu11 - 2026
காகிதத்தால் ஆன நாகஸ்வரம். / படகில் ராமனுடன் குகன்

இன்னும் ஒன்று சொல்ல மறந்தேனே! இப்பொழுது எல்லாம் கொலு தர்பாரை தரிசிக்க, ரசிக்க வரும் பெண்களுடன் விஜயம் செய்யும் ஆண்களுக்கும் நவராத்திரி பரிசுப் பொருட்களும் தருகிறார்கள்.

golu12 - 2026
கிணற்றங்கரை / பித்தளையால் ஆன சொப்புகள்

நவராத்திரியில் குழந்தைகள், பெண்கள், சில ஆண்களும் முப்பெருந்தேவிகளை ஆராதித்து பாடுகின்றனர். ‘தாண்டியா’ ஆட்டமும் பலரையும் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. இல்லம் வருவோரை கண்கவர் வண்ணக் கோலங்களும், ‘ரங்கோலியும்’ அருமையாய் வரவேற்கின்றன.

golu13 - 2026
ராமர் – குகன் மற்றும் கண்ணன் – குசேலர். / ஆற்று மணலால் செய்த பார்க். / கைலாச மலை

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பும் கொண்டாட்டமாக நவராத்திரி இருக்கிறது என்பதே ஒரு மகிழ்ச்சியாய், திருப்தியாய் இருப்பதை சொல்லவும் வேண்டுமோ!

சிலம்பு எக்ஸ்பிரஸ் தினசரி ரயிலாகுமா? எதிர்பார்ப்பில் மக்கள்!

railway news - 2026
#image_title

படிப்படியாக முன்னேறி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரயில் சிலம்பு அதிவிரைவு ரயில்.12 ஆண்டுகளாக பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பில் இயங்கும் சிலம்பு அதிவிரைவு ரயில் முதலில் சென்னை மானாமதுரை இடையே வாரம் இருமுறை இயங்கி பின்னர் செங்கோட்டை க்கு நீடிக்கப்பட்டு தற்போது வாரத்தில் 3 நாட்கள் இயங்கி வரும் சிலம்பு அதி விரைவு ரயில் தினசரி இயங்குமா என தென்காசி விருதுநகர் சிவகங்கை மாவட்டத்தில் எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.இந்த ரயில் தற்போது தாம்பரம் வரை இயங்குவதை பழையபடி சென்னை எழும்பூர் வரை இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

20681/82 செங்கோட்டை – தாம்பரம் இடையே புதுக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக வாரத்தில் 3 நாட்கள் சிலம்பு அதிவிரைவு ரயில் இயங்கிவருகிறது.

கடந்த 2013 ஆண்டு புதுக்கோட்டை வழியாக வாரம் இரு முறை ரயிலாக காரைக்குடி – சென்னை எழும்பூர் இடையேயும் பிறகு மானாமதுரை – சென்னை எழும்பூர் இடையேயும், கடந்த 2017 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக செங்கோட்டை வரை நீடிக்கப்பட்டு, பிறகு 2019 முதல் வாரத்தில் 3 நாட்கள் இந்த வண்டி இன்று வரை பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு வரவேற்பில் இயங்கிவருகிறது.

முதலில் 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த இந்த வண்டி பயணிகளின் அமோக வரவேற்பில் 24 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது. ஆனாலும் கூட இந்த வண்டி வாரத்தில் மூன்று நாட்கள் தான் இயக்கப்படுவதால் பெரும்பாலான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.

இந்த வண்டியை தினசரி இயக்க பல முறை பல ஆண்டுகளாக செங்கோட்டை முதல் புதுக்கோட்டை வரை இடைப்பட்ட பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தாலும் ரயில்வே கூறிய காரணங்கள்: “சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் எங்களிடம் மற்ற நாட்களில்(சிலம்பு இயங்கும் 3 நாட்கள் தவிர) பிளாட்பாரம் இல்லை” என்பது தான். ஆனால் கடந்த IRTTC 2024 ஆண்டு கூட்டத்தில் தென்னக ரயில்வே இந்த வண்டியை நிரந்தரமாக தாம்பரம் வரை மட்டுமே இயக்க முன்மொழிவு செய்து இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வண்டியை தினசரி இயக்க அத்தனை சாத்திய கூறுகளும் உள்ள போதும், வாரத்தில் 3 நாட்கள் தான் இயங்கினாலும் பயணிகளிடையே இந்த ரயிலுக்கு வரவேற்பு சற்றும் குறையாத போதும், தென்னக ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து 12 ஆண்டுகளாக வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயங்கும் இந்த சேவையை தினசரி சேவையாக மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்துவது ஏன் என தெரியவில்லை.

மேலும் புதுக்கோட்டை காரைக்குடி யில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல தினசரி வண்டிகள் எதுவும் கிடையாது. அதேபோல புதுக்கோட்டையில் இருந்து இரவில் புறப்பட்டு அதிகாலை 04:25 மணி அளவில் சென்னை(தாம்பரம்) சென்றடையும் தினசரி வண்டிகளும் எதுவும் இல்லை. இந்த இரண்டு தேவையையும் சிலம்பு தினசரியாக மாறினால் நிறைவேறும்.

எனவே பயணிகளின் பிரதான கோரிக்கையான சிலம்பு வண்டியை உடனடியாக தினசரி ரயில் ஆக்குவது குறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பயணிகளின் விருப்பமாக உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பணிவான கவனத்திற்கு 12 ஆண்டுகளாக பயணிகள் மத்தியில் அமோக_வரவேற்பில் வாரத்தில் 3 நாட்கள் இயங்கி வரும் சிலம்பு அதிவிரைவு ரயில் தினசரி ஆகுமா?என எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர்.இதை நிறைவுற்ற எம்.பி க்கள் போதிய முயற்சி எடுக்கவேண்டும்

சுயசார்பு இந்தியாவின் பலம்: பிரதமர் மோடியின் தெளிவான அழைப்பு!

modiji speech at gangaikonda chozhapuram - 2026

Aatmanirbharta is India’s strength!
PM Modi’s clarion call for a self-reliant maritime ecosystem!

தமிழில் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

நண்பர்களே, பாரதம் இன்று, உலகின் நண்பன் என்ற உணர்வோடு, முன்னேறிக் கொண்டிருக்கிறது.  உலகிலே நமக்கு எந்த ஒரு, பெரிய எதிரியும் கிடையாது.  இதன் உண்மையான பொருள், நமக்கு இருக்கும்பெரிய எதிரி என்று பார்த்தால், அது என்னவென்றால், மற்ற நாடுகளின் மீது, நாம் சார்ந்திருக்கக்கூடிய தன்மை.  இதுதான் நம்முடைய மிகப்பெரிய எதிரியாகும். 

நாமனைவரும் இணைந்து, பாரதத்தின் இந்த எதிரியை, சார்ந்திருக்கும் தன்மை, என்ற எதிரியை தோற்கடித்தே ஆக வேண்டும்.  நாம் இந்த விஷயத்தை, எப்போதும் கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.  எத்தனை அதிகம், அந்நிய நாடுகள் மீது சார்ந்திருக்கிறோமோ, அந்த அளவுக்கு அதிகம், தேசத்தின் தோல்வி.  உலகத்திலே, அமைதி, நிலைத்தன்மை, மற்றும் வளமைக்காக, உலகின் மிகப்பெரிய மக்கட்தொகை கொண்ட தேசம், தற்சார்பு உடையதாக, கட்டாயம் ஆக வேண்டும். 

நாம் மற்றவர்களை, சார்ந்திருந்தோம் என்றால், நம்முடைய சுயமரியாதையையும் கூட, இழக்க நேரிடும்.  140 கோடி நாட்டுமக்களின் எதிர்காலத்தை, நாம் மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது.  தேசத்தின் வளர்ச்சி உறுதிப்பாட்டை, மற்றவர்களைச் சார்ந்துவாழும் நிலைக்கு காவு கொடுத்துவிட முடியாது. 

நமது வருங்கால சந்ததிகளின் எதிர்காலத்தை, சடுதியில் விட்டுச் செல்ல முடியாது.  ஆகையினால் தான் சகோதர சகோதரிகளே, நாம் குஜராத்தியிலே சொல்லுவோம் இல்லையா?  ……………..

100 துக்கங்களுக்கு, ஒரே ஒரு மருந்து தான், அது என்னவென்றால், தற்சார்புடைய பாரதம்.  தற்சார்புடைய பாரதம். ஆனால் இதற்காக, நாம் சவால்களை எதிர்கொண்டே ஆக வேண்டும். 

நாம் பிற நாடுகளின் மீது, நாம் சார்ந்திருக்கும் நிலைமையை, தொடர்ந்து நாம் குறைத்துக் கொண்டே வர வேண்டும்.  மேலும், இப்போது பாரதம், தற்சார்புடையதாக ஆகி, உலகத்தின் முன்னால் முழுச்சக்தியோடு, கண்டிப்பாக நிமிர்ந்து நின்றே ஆக வேண்டும்.

செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல்!

thiruvasagam mutrothuthal sengottai - 2026

செங்கோட்டை அருள்மிகு ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் திருவிளக்கு பூஜை.

செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி திருவாசகம் முற்றோதுதல் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.

நிகழ்ச்சியில் காலை நித்யகல்யாணி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டது பின்னா் திருவாசக குழு தலைவி திருவாசகி சிவபகவதி, தேவி குழுவினரின் திருவாசகம் முற்றோதுதல் நடந்தது.

மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு சிறப்பு அன்னதான விருந்து நடந்தது. மாலை 6மணிக்கு நடந்த திருவிளக்கு பூஜையை முத்துலெட்சுமி முதல் விளக்கை ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார்.

தவணைசெல்வி, திருவிளக்கு பூஜையை நடத்தினார். பின்னா் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் இராம்நாத், தங்கையா, ஆடிட்டர்சங்கர், முருகேசன், சுப்பிரமணியன், நெடுஞ்செழியன், கணேசன், வீரபுத்திரன், கல்யாணி, மோகன், குருவாயூர்கண்ணன், பழனியம்மாள், பேச்சியம்மாள், பகவதி, கோவில் பூஜாரிகள் ஐயப்பன், மாரியப்பன், குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனா்.

விழாவில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனா்.