Home Blog Page 56

ஆடி பெருக்கு நாளில் 2026 ஆங்கில காலண்டர் ஆல்பம் பணிகள் சுறுசுறுப்பு!

calender printing in sivakasi - 2026

‘ஆடி 18’ம் பெருக்கு நாளில், ‘2026’ ஆங்கில புத்தாண்டு காலண்டர் ஆல்பம் வெளியிடும் பணிகளில், சிவகாசி காலண்டர் நிறுவனங்கள் சுறுசுறுப்பு…..

வரும் ‘2026’ ஆங்கில புத்தாண்டிற்கான தினசரி காலண்டர்களுக்கான ஆல்பம் தயாரிக்கும் இறுதிகட்ட பணிகளில்,சிவகாசி காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் பணிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ரகங்களில் காலண்டர்கள் அச்சிடுவதால் சிவகாசியில் தயாராகும் காலண்டர்களுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான ஆர்டர்கள் வருகின்றன.

காலண்டர்களின் வகைகள்,ரகங்கள், புதிய டிசைன்கள், விலை விவரங்கள் உள்ளிட்டவைகளை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஒன்றினைத்து முதலில் ஆல்பங்களாக தயாரிப்பார்கள். தயாரிக்கப்பட்ட ஆல்பங்களை ஒவ்வொரு ஆண்டும் ‘ஆடி 18’ம் பெருக்கு நாளில் சிறப்பு பூஜைகள் செய்து வெளியிடுவது வழக்கம்.

காலண்டர் ஆல்பங்களை முகவர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். ஆடி பெருக்கு நாளில் இருந்து ஆங்கிலப் புத்தாண்டிற்கான தினசரி காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்படையத் தொடங்கும்.

இந்தாண்டிற்க்கான புதுவரவான பொற்காலம், புதுயுகம், வழிகாட்டி,VIP காலண்டர் என அறிமுகப்படுத்தப்பட்டது.மேலும் இது குறித்து காலண்டர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் ஜெயசங்கர் கூறும் போது, ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டிற்கான தினசரி காலண்டர் ஆல்பம் தயாரிக்கும் பணிகள் சித்திரை மாதம் பிறந்து, பஞ்சாங்கம் வெளியிடப்பட்டவுடன் தொடங்கப்படும்.

வழக்கமான காலண்டர்களுடன் புதிய ரகங்களும் அறிமுகம் செய்யப்படும். அனைத்தையும் வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள் தயாரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ‘ஆடி 18’ம் பெருக்கு நாளான இன்று சிறப்பு பூஜைகளுடன் காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்பட உள்ளன.

மூலப் பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர்களின் கூலி,மின் கட்டண உயர்வு உள்ளிட்ட வகைகளால், புத்தாண்டு தினசரி காலண்டர்களின் விலை கடந்தாண்டை விட இந்தாண்டு 7 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் உயரும் நிலை உள்ளது என்று கூறினார்.

எதிர்க்கட்சி ‘இலக்கணம்’ செத்துவிட்டது!

1854358 rahulgandhi1 - 2026

“இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது!” – ராகுல் காந்தி குதூகலம்

— ஆர். வி. ஆர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு உள்ள அதிகாரமும் முக்கியத்துவமும் அவரது வலிமையான நாடு அளித்தது. வாய்க் கொழுப்பு, அவரது அசட்டுத்தனம் கொடுத்தது – அவரது சமீபத்திய பேச்சு இதற்கு உதாரணம்.

டிரம்பிற்கு ரஷ்யா மீது ஒரு கோபம் உண்டு. காரணம், அவர் தலையிட்டுப் பார்த்தும் ரஷ்யா-உக்ரைன் போரில் அவர் விரும்பிய வழியில் ரஷ்யா போரை நிறுத்த முன்வரவில்லை. அதனால் அமைதிக்கான நோபல் பரிசு வாய்ப்பும் டிரம்பை விட்டு நழுவியது என்ற மனக்குறை அவருக்கு இருக்கிறது.

இந்தியா மீதும் அதிபர் டிரம்பிற்கு மனக்கசப்பு உண்டு. அதற்குக் காரணம்: மோடியின் தலைமையிலான இந்தியா, டிரம்பின் மானத்தை சர்வதேச அளவில் சந்தி சிரிக்க வைத்தது – அதுவும் டிரம்ப் தனக்குத் தானே வாங்கிக் கட்டிக் கொண்டது. எப்படி என்றால், பாகிஸ்தான் வளர்த்த பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, சென்ற மே மாதம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற தாக்குதல் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல தீவிரவாத முகாம்களையும் ராணுவக் கட்டமைப்புப் பகுதிகளையும் ஏவுகணைகள் வீசி துவம்சம் செய்தது. பாகிஸ்தானும் சோப்ளாங்கியாக நம் மீது எதிர்த் தாக்குதல் செய்தது.

நான்கு நாட்கள் நடந்த அதிவேகப் போரில் ‘முடியலை’ என்றாகிவிட்ட பாகிஸ்தான் இந்தியாவிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்தியா போரை நிறுத்தியது. இந்த நேரத்தில் விஷமக்கார டிரம்ப் ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார்.

“இந்தியாவும் பாகிஸ்தானும் போரை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுடனான உங்கள் வர்த்தகம் நின்றுபோகும்” என்று இரு நாடுகளையும் தனது அரசு எச்சரித்ததால் அவை போரை நிறுத்தின என்று டிரம்ப் கூசாமல் புளுகினார். “இரண்டு அணு ஆயுத நாடுகளிடையே போர் பெரிதாகாமல் நான் தடுத்தேன்” என்றும் சவடாலாகப் பேசினார். அவரது நோபல் பரிசுக் கனவு மங்கவில்லை.

சக்தி மிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புளுகை அழுத்தமாக நேரடியாக மறுக்காமல், அதே சமயம் உலகம் நன்றாகப் புரிந்துகொள்ளூம் வகையில், இந்தியா ஒன்றைத் தெளிவு படுத்தியது. அதாவது, பாகிஸ்தான் நேரடியாக இந்தியாவை அணுகிக் கேட்டதாலும், ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் பெரிதும் நிறைவேறி விட்டதாலும், இந்தியா போரை நிறுத்தச் சம்மதித்தது. போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு அதுதான் காரணம், வேறு எந்த மூன்றாம் நாடும் அதற்குக் காரணம் அல்ல என்பதை உலகம் நம்புமாறு இந்தியா எடுத்துச் சொன்னது. இருந்தாலும் டிரம்ப் புளுகியபடி இருந்தார்.

சென்ற ஜூன் மாத நடுவில், டிரம்புடன் போனில் பேசிய மோடி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த நான்கு-நாள் போர், அந்த இரு நாடுகளுக்குமான ராணுவத் தொடர்பு வழிகள் மூலமாக, பாகிஸ்தான் கேட்டுக் கொண்டபடி, நிறுத்தப் பட்டது. இதில் மற்ற மத்தியஸ்தம் ஏதும் நடக்கவில்லை என்றும் டிரம்பிடமே தெரிவித்தார் – இதை இந்தியாவின் வெளி விவகாரத்துறை செயலரும் ஒரு அறிக்கை மூலம் அப்போது தெரியப் படுத்தினார்.

தன் மூக்குடைந்தாலும் டிரம்ப் தான் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொன்னார். இப்போது, ‘என் மானத்தை வாங்கிய இந்தியாவே, உன்னை விட்டேனா பார்!’ என்பதற்காகவும் சேர்த்து, இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 25% வரி விதித்திருக்கிறார். அது போக, நாம் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் நமது நாட்டுப் பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதியானால் அதற்கு ஒரு அபராதமும் போட்டிருக்கிறார்.

புதிய வரி மற்றும் அபராதம் விதித்ததுடன் டிரம்ப் நிற்கவில்லை. அவற்றைத் தொடர்ந்து, “ரஷ்யப் பொருளாதாரமும் இந்தியப் பொருளாதாரமும் ‘செத்த பொருளாதாரங்கள்’ (dead economies). அவை எப்படியும் போகட்டும்” என்று தத்துப் பித்தென்று சென்ற ஜூலை 31-ம் தேதி ஒரு அறிக்கை வெளியிட்டார்.

வாய்க் கொழுப்பில் டிரம்ப்பிற்குச் சளைக்காத அரசியல் தலைவர், அவரையும் மிஞ்சக் கூடிய தலைவர், உலகில் ஒரு மனிதர்தான் உண்டு. ராகுல் காந்திதான் அவர். இந்தியாவை எதிர்த்து, அதுவும் மோடியை எப்படியாவது சங்கடப் படுத்தும், பேச்சை யார் பேசினாலும் அதை ராகுல் காந்தி வரவேற்பார். அதன்படி, டிரம்பின் ‘செத்த பொருளாதார’ அறிக்கை வந்த அதே நாள் ராகுல் காந்தி அதைக் கொண்டாடிப் பேசினார்.

ராகுல் பேசிய வார்த்தைகள் இவை: “டிரம்ப் சொல்வது சரிதான். இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது என்பது, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் தவிர அனைவருக்கும் தெரியும். ஜனாதிபதி டிரம்ப் இந்த உண்மையைக் கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” அடுத்து, தனது X தளத்திலும் “இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது. அதைக் கொன்றவர் மோடி” என்று ராகுல் காந்தி பதிவிட்டார்.

இந்தியா ஒரு செத்த பொருளாதாரம் என்பதை ராகுல் காந்தி நிஜமாகவே நம்புகிறாரா? இல்லை, “டிரம்பை ஒரு பொய்யர் என்று மோடி அறிவிக்கத் தயாரா?” என்று தான் சமீபத்தில் வெட்டிக் கேள்வி கேட்டோமே, அது ராகுல் காந்தியே டிரம்பை இடிப்பது போல் தொனிக்கிறதே, அது டிரம்பிற்கு வருத்தம் தருமே என்று ராகுல் இப்போது யோசிக்கிறாரா? அதனால் ‘டிரம்பை ஒருவிதத்தில் சமாதானம் செய்வோம்’ என்று எண்ணி டிரம்பின் ‘செத்த பொருளாதாரக்’ கருத்தை வரவேற்று அது தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் வளைந்து பணிந்து பேசி இருக்கிறாரா ராகுல்? ராகுலின் பித்துக்குளிப் பேச்சுக்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கும்.

தான் வெறுக்கும் மோடி நிர்வகிக்கும் நாட்டை டிரம்போ வேறு யாரோ மட்டம் தட்டி இழித்துப் பேசினால், ராகுல் காந்தியின் அற்ப சந்தோஷத்திற்கு அளவு கிடையாது. இதுவும் ராகுல் பேச்சுக்கு ஒரு காரணம்.

என்ன பேசுகிறார் ராகுல் காந்தி? நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, மன்மோஹன் சிங் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் நம் பிரதமர்களாகப் பதவி வகித்த காலத்தில் இந்தியப் பொருளாதாரம் துடிப்புடன் ஜிகுஜிகுவென்று ஜொலித்ததா? பிறகு 2014-ம் வருடம் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான நாள் முதற்கொண்டு தான் நமது பொருளாதாரம் சோகை அடைந்து செத்துவிட்டதா?

ஒரு நாட்டின் பொருளாதாரமே மடிந்து போவது அந்த நாட்டிற்கான பெரும் கேடு, பெரும் துயரம். மோடி பிரதமரான முதல் ஐந்து ஆண்டுகள் சென்றபின் நடந்த 2019 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் லோக் சபா தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தல் பிரசாரங்களின் போது, இந்தியப் பொருளாதாரம் செத்துவிட்டது, அதற்குக் காரணம் மோடி தலைமையிலான மத்திய ஆட்சி என்று ராகுல் காந்தி மக்களிடம் சொன்னாரா? இல்லை. ஏனென்றால் ஒரு அமெரிக்க அதிபர் மதிகெட்டு அவ்வாறு முன்னதாக அறிவிக்கவில்லை. ராகுல் காந்திக்கும் அப்போது அந்த அளவு புத்தி கோளாறாக வேலை செய்யவில்லை.

இன்னொன்று. தொழிலதிபர் அதானியை எதிர்த்தும், பிரதமர் மோடி அந்தத் தொழிலதிபருக்குச் சாதகமாக முடிவுகள் எடுப்பதாகவும், ராகுல் காந்தி அடிக்கடி சொல்லி வருகிறார். செத்துப்போன ஒரு பொருளாதாரத்தில் ஒரு தொழிலதிபர் ராகுல் காந்தியின் கவனம் பெறும் அளவிற்கு வளர்ந்து தொழில் செய்ய முடியுமானால் அவர் பெரிய தொழில் மேதையாக இருக்கவேண்டுமே? இதை ராகுல் காந்தி ஒப்புக் கொள்கிறாரா? பாவம் ராகுல் காந்தி. தன் பிதற்றல் தன்னை எப்படியெல்லாம் அம்பலப் படுத்தும் என்பதை அவர் உணரவில்லை.

டிரம்பிற்கும் ராகுல் காந்திக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இந்தியா இழிக்கப் பட்டாலும், இந்தியா எக்கேடு கெட்டாலும் – அப்படிக் கெட்டதாக ஒரு அபத்தப் புரளியை யார் கிளப்பினாலும் – டிரம்பிற்குக் கவலை இல்லை. தன் சுயலாபம் மட்டுமே அவருக்குக் குறி. ராகுல் காந்தியும் அப்படித்தானே?

Author: R. Veera Raghavan (Advocate, Chennai)
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

கல்விச் செய்திகள்: காமராஜர் – கல்வி வளர்ச்சி நாள்!

kalvi valarchi naal kamarajar birthday - 2026

கல்வி வளர்ச்சி நாள்

மதுரை, உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில், காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில் 800-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில், கருமவீரர் பெருந்தலைவர் காமராஜர் -ன் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாளாக மாணவ மாணவிகளின் பேச்சுப் போட்டி கலை நிகழ்ச்சியுடன் அனுசரித்து வெகுவிமர்சையாக கொண்டாடினர்.

இவ்விழாவில், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன், ரோட்டரி சங்க மூத்த நிர்வாகி ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் மதன் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினர்.


vadipatti school students - 2026

வாடிப்பட்டி மாணவர்கள் சாதனை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் சார்பாக மாநில அளவில் நடத்திய சிலம்பப் போட்டி நடந்தது.

இந்த போட்டியில் வாடிப்பட்டி ஸ்ரீ கணேசா ஸ்போர்ட்ஸ் அகடமி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விளையாடனர். இதில் சுருள்வாள் பிரிவில் 7 முதலாம் பரிசும். ஒற்றை கம்பு 8 முதலாம் பரிசும், நான்கு 2 பரிசும் 2 மூன்றாம் பரிசும் பெற்றனர்.

பரிசுகளை உலக சிலம்பம் விளையாட்டுச் சங்க தலைவர் மற்றும் நிறுவனர் எஸ். சுதாகரன், , விருதுநகர் மேயர் சங்கீதா இன்பமும் வெற்றி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். இந்த சாதனை மாணவ மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த ஆசான் கே கணேசன் ஆகியோரை பெற்றோர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.


madurai mukkulathor sangam - 2026

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

அலங்காநல்லூரில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு முக்குலத்தோர் நல சங்கம் சார்பில் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் பத்தாம், 11ஆம், 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு முக்குலத்தோர் நல சங்க கௌரவத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர் சோணைமுத்து, செயலாளர் ஆதி முத்துக்குமார், ஆலோசகர் கார்த்திகேயன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முக்குலத்தோர் நல சங்கத்
தலைவர் சார்லஸ் ரெங்கசாமி வரவேற்றார். சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன், திரைப்பட இயக்குநர் சௌத்ரிதேவர், வல்லப்பா கல்வி
குழும நிறுவனர் வல்லப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. முடிவில், பொருளாளர் குமரேசன் நன்றி கூறினார்.

அலங்காநல்லூர் அருகே, முத்தாலம்மன் கோவில் மண்டலபிஷேக விழா!

alankanallur muthalamman temple mandalabhishekam - 2026

அலங்காநல்லூர் அருகே, முத்தாலம்மன் கோவில் மண்டலபிஷேக விழா:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே , குறவன் குளம் கிராமத்தில் ஸ்ரீ முத்தாலம்மன் பகவதி அம்மன் கழுவடியான் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்ததை ஒட்டி, 48 ஆம் நாள் மண்டல பூஜை விழா நடைபெற்றது. யாகசாலை பூஜையில், வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சுற்றுலா சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, குறவன்குளம் விழா கமிட்டியினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி சுவாதி சிறப்பு அபிஷேகம்!

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி சுவாதி நரசிம்மர், கருடாழ்வார், வராஹி அம்மன், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது.
இக் கோயிலில் உள்ள நரசிம்மர், கருடாழ்வாருக்கு, ஆடி சுவாதியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகமும், பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு, வளையல் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதே போல, மதுரை வைகை காலனி, கிழக்கு பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளை, கோயில் பட்டர் கோபால கிருஷ்ணன் செய்தார்.

அரசு திட்டங்களில் கருணாநிதி படத்தை பயன்படுத்தக் கூடாது!

chennai highcourt - 2026

அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் குறித்த விளம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும், முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரி அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் தரப்பில் மனு தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கில், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்,

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதல்வர் புகைப்படத்தையோ பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது எனத் தெரிவித்துள்ளது.

அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அதேபோல, ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது எனவும் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைப்படத்தையோ பயன்படுத்த கூடாது எனவும், அரசு நலத்திட்டம் தொடங்குவது, செயல்படுத்துவதற்கு எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப் படவில்லை என தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தி உள்ளது.

ஆயுத பூஜை விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? இன்றே ரயில் முன்பதிவுக்கு திட்டமிடுங்க!

railway news - 2026
#image_title

ஆயுத பூஜை, அடுத்து வரும் தீபாவளிக்கு வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு ரயிலில் போக முன்பதிவு செய்து செல்லலாம்.

அக்டோபர் 1 மற்றும் 2, 2025 (புதன் & வியாழன்) அன்று ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜை விடுமுறைக்கு ரயிலில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர் இன்று முதல் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்திலும், முன்பதிவு மையங்களிலும், ‘டிக்கெட்’ முன்பதிவு செய்யலாம்.

பொதுமக்களின் வசதிக்காக 60 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்குகிறது. அதன்படி, கீழ்காணும் தேதிகளில் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகும். ..

ஆகஸ்ட் 1 – பயண தேதி: செப்டம்பர் 30, 2025 (செவ்வாய்)
ஆகஸ்ட் 2 – பயண தேதி: அக்டோபர் 1, 2025 (புதன்) – ஆயுத பூஜை
ஆகஸ்ட் 3 – பயண தேதி: அக்டோபர் 2, 2025 (வியாழன்) – விஜயதசமி
ஆகஸ்ட் 4 – பயண தேதி: அக்டோபர் 3, 2025 (வெள்ளி)
ஆகஸ்ட் 5 – பயண தேதி: அக்டோபர் 4, 2025 (சனி)
ஆகஸ்ட் 6 – பயண தேதி: அக்டோபர் 5, 2025 (ஞாயிறு)
ஆகஸ்ட் 7 – பயண தேதி: அக்டோபர் 6, 2025 (திங்கள்)

வட இந்திய ரயில்களுக்கு முன்பதிவு தேதியில் 1 அல்லது 2 நாட்கள் வித்தியாசம் இருக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

முன்பதிவு காலை 8 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்குமான டிக்கெட்களுக்கும் துவங்கும்.

இதுபோல் அடுத்து வரும் ஐப்பசி தீபாவளிக்கு வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு ரயிலில் போக 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்ய வேண்டும்.

ஆடிப்பூர நிறைவு; ஆண்டாள் சந்நிதியில் புஷ்ப யாகம்!

andal pushpayagam - 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவின் நிறைவையொட்டி புஷ்ப யாகம் வியாழக்கிழமை இரவு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த ஆண்டாள், ரெங்க மன்னாரை பக்தர்கள் கண்குளிர தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவை முன்னிட்டு புஷ்பயாகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

108 வைணவ திவ்யதேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோயிலில் மூலவர் வடபத்ரசாயி பிரதான சந்நிதியில் அருள் பாலிக்கிறார். இந்தத் தலம், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள், மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து ரங்கமன்னாரை மணந்து கொண்டார்.

பெரியாழ்வாரின் அவதார விழாவான ஆனி சுவாதி திருவிழா மற்றும் ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூரம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஜூலை 26 இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள், ரங்க மன்னார் சயனத் திருக்கோலமும், ஜூலை 28 காலை 9:10 மணிக்கு தேரோட்டமும் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்ற விழா இன்று நிறைவு பெற்றது.

விழா நிறைவை முன்னிட்டு புஷ்ப யாகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரங்க மன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புஷ்பயாகம் பொதுவாக, ஆண்டாள் தேரோட்ட திருவிழா நிறைவு நிகழ்வாகும். மற்றும் திருக்கல்யாண திருவிழாவின் நிறைவு நாளில் இந்த புஷ்பயாகம் நடைபெறும்.

ஆடிப் பூரத் திருவிழாவின் நிறைவு நாளில் புஷ்பயாகம் நடைபெற்றது, மேலும் ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

புஷ்பயாகம் என்பது கோயிலில் உள்ள உத்ஸவர்களுக்கு பல வண்ண மலர்களால் செய்யப்படும் ஒரு சிறப்பு அபிஷேகம் ஆகும். இது ஆண்டாள் கோவிலில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

மதுரை கோட்ட ரயில் சேவைகளில் மாற்றம்! கட்டாயம் தெரிஞ்சுக்குங்க!

railway news - 2026
#image_title

ஆகஸ்ட் மாதத்தில் ரயிலில் போறீங்களா..அதுவும் செங்கோட்டை – ஈரோடு, மயிலாடுதுறை – செங்கோட்டை ரயிலில் போறீங்களா? சில நாட்களில் தடம் மாறி போகிறது.

தென்னக ரயில்வே மற்றும் மதுரை கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகளை எளிதாக்குவதற்காக ரயில் சேவைகளின் முறையில் ஆகஸ்ட் மாதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆகஸ்ட் 03, 06, 10, 13, 17 மற்றும் 20 ஆகிய தேதிகளில் (அதாவது, ஞாயிறு, புதன் கிழமைகளில்) மதியம் 12.10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் ரயில் எண். 16847 மயிலாடுதுறை – செங்கோட்டை விரைவு வண்டி, திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, மானமதுரை, பக்கம் வழியாக இயக்கப்படும். வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் கல்லிக்குடி வழியாக இயங்காது. பயணிகளின் நலன் கருதி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை சாலை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தம் ஏற்படுத்தப்படும்.

ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு செங்கோட்டை புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16845) பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் திண்டுக்கல்- செங்கோட்டை இடையே ஆகஸ்ட் 27 முதல் 30 வரை பகுதியளவு ரத்து செய்யப்படும் எனவும் இந்த ரயில் திண்டுக்கல் வரை மட்டுமே செல்லும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

செங்கோட்டையில் இருந்து காலை 5.10-க்கு ஈரோடு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16846) பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் செங்கோட்டை – திண்டுக்கல் இடையே ஆகஸ்ட் 28 முதல் 31 வரை பகுதியளவு ரத்து செய்யப்படும் எனவும் இந்த ரயில் காலை 11.25 மணியளவில் திண்டுக்கல்லில் இருந்து புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 23, 2025 வரை காலை 08.00 மணிக்கு கோயம்புத்தூரில் இருந்து புறப்படும் ரயில் எண் 16322 கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (ஆகஸ்ட் 15, 2025 தவிர) திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். ரயில் திண்டுக்கல்லில் சிறிது நேரம் நிறுத்தப்படும்.

ஆகஸ்ட் 27, 28, 29 மற்றும் 30, 2025 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்படும் ரயில் எண் 16845 ஈரோடு – செங்கோட்டை எக்ஸ்பிரஸ் திண்டுக்கல் மற்றும் செங்கோட்டை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். ரயில் திண்டுக்கல்லில் சிறிது நேரம் நிறுத்தப்படும்.

ஆகஸ்ட் 28, 29, 30 மற்றும் 31, 2025 ஆகிய தேதிகளில் காலை 05.10 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்படும் ரயில் எண் 16846 செங்கோட்டை – ஈரோடு எக்ஸ்பிரஸ் செங்கோட்டை மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். ரயில் எண் 11.25 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்படும்.

ஆகஸ்ட் 11, 12, 13, 14, 18, 19, 20 ஆகிய தேதிகளில் காலை 07.05 மணிக்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்படும் ரயில் எண் 16849 திருச்சிராப்பள்ளி – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் 11, 12, 13, 14, 18, 19, 20 ஆகிய தேதிகளில் காலை 07.05 மணிக்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்படும்.

ஆகஸ்ட் 21, 25, 26, 28, 2025 (வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் ஆகஸ்ட் 27, 2025 தவிர) மானாமதுரை மற்றும் ராமேஸ்வரம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் மானாமதுரையில் நிறுத்தப்படும்.

ராமேஸ்வரத்திலிருந்து மதியம் 3 மணிக்குப் புறப்படும் ராமேஸ்வரம் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண். 16850) ஆகஸ்ட் 11, 12, 13, 14, 18, 19, 20 மற்றும் ஆகஸ்ட் 21, 25, 26, 28, 2025 (வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் ஆகஸ்ட் 27, 2025 தவிர) ராமேஸ்வரம் – மானாமதுரை இடையே பகுதியளவு ரத்து செய்யப்படும். இந்த ரயில் மானாமதுரையில் இருந்து 16.55 மணிக்கு புறப்படும்.

ரயில் சேவைகளை திசை திருப்புதல்

ரயில் எண். 16788 ஸ்ரீ வைஷ்ணோ தேவி கத்ரா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் 2025 ஜூலை 31, 07 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 22.30 மணிக்கு ஸ்ரீ வைஷ்ணோ தேவி கட்டாவில் இருந்து புறப்பட்டு திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, மானாமதுரை, (மதுரை ஸ்கிப்பிங், திண்டுக்கல் சாலை) விருதுநகர் வழியாக இயக்கப்படும். பயணிகளின் நலன் கருதி புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்கள் ஏற்படுத்தப்படும்.

ரயில் எண். 16848 செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயில் 10, 14 ஆகஸ்ட் 2025 (ஞாயிறு மற்றும் வியாழன் தவிர) செங்கோட்டையில் இருந்து காலை 06.55 மணிக்குப் புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக இயக்கப்படும். (ஸ்கிப்பிங் – கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், வடமதுரா, வையம்பட்டி மற்றும் மணப்பாறை) அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை சாலை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.

ரயில் எண். 12666 கன்னியாகுமரி – ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், 2025 ஆகஸ்ட் 02, 09, 16 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி வழியாக மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி சாலையில் நிறுத்தப்படும். அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.

07229 கன்னியாகுமரி – ஹைதராபாத் சிறப்பு ரயில் கன்னியாகுமரியில் இருந்து ஆகஸ்ட் 01, 08, 29, 2025 ஆகிய தேதிகளில் மாலை 05.15 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி வழியாக மதுரை, கொடைக்கானல் ரோடு மற்றும் கொடைக்கானலில் நிறுத்தப்படும். அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.

2025 ஆகஸ்ட் 27, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் குருவாயூரில் இருந்து 23.15 மணிக்கு புறப்படும் ரயில் எண். 16128 குருவாயூர் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சிராப்பள்ளி வழி. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படும்.

மிகத் துல்லிய ஏவுதலில் நிலை நிறுத்தப்பட்ட நிஸார் (NISAR) – நாடே பெருமை கொள்கிறது!

nisar sattelite launched by gslv - 2026

NISAR இன் தரவுகள் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சுதந்திரமாக அணுகக்கூடியதாக மாற்றப்படும் என்று, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

ஜூலை 30 அன்று நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார் (NISAR) செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியதன் மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் விண்வெளி ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டின. அமெரிக்காவின் நாஸா (NASA)  மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) இணைந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கிய NISAR, இரட்டை அதிர்வெண் ரேடாரை (NASAவால் L-band மற்றும் ISROவால் S-band ஆகியவை) ஒரே தளத்தில் சுமந்து செல்லும் உலகின் முதல் புவி கண்காணிப்பு பணியாக அமைந்தது, 

இது பூமியின் சுற்றுப்பாதையில் அனுப்பப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த ரேடார் அமைப்பு. இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் உள்நாட்டு GSLV-F16 ராக்கெட் மூலம் துல்லியமாக சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது, இது இன்றுவரையிலான மிகவும் துல்லியமான செயற்கைக்கோள் ஏவுதல்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  

NISARன் திட்ட விஞ்ஞானி டாக்டர் பால் ரோசன், இந்த திட்டத்தின் தனித்துவத்தைப் பற்றிக் குறிப்பிட்ட போது,  “NISAR மிஷன் என்பது இரண்டு சக்திவாய்ந்த ரேடார் அமைப்புகளைக் கொண்ட ஒரு அற்புதமான பணி. பூமியின் இயக்கம், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் கிரையோஸ்பியரில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த விவரங்களை நமக்குத் தருகிறது.”

பூமியில் உள்ள நகர்வுகளை செ.மீ., துல்லியமாக படம் பிடிக்கும்.  பேரிடர் காலங்களிலான முன்னெச்சரிக்கைத் தரவுகள், விவசாயம் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட தரவுகள் மிகவும் உபயோக கரமானவை.  நிகழ்நேர, உயர் தெளிவுத்திறன் இமேஜிங் பூகம்பங்கள், வெள்ளம், எரிமலை வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகளைக் கண்காணிக்க உதவும்; மேகங்களை ஊடுருவிச் செல்லும் ரேடாரின் திறன் கடுமையான வானிலையின் போது நம்பகமான தகவலை அளிக்கும்.  

நிலையான மற்றும் மேக-ஊடுருவக்கூடிய தரவு பயிர் நிலைமைகளைக் கண்காணிப்பதை மேம்படுத்தும், உணவுப் பாதுகாப்புத் திட்டமிடலை அதிகரிக்கும் மற்றும் பல்வேறு காலநிலைகளில் துல்லியமாக அளிக்கும்.

இரட்டை ரேடார், இயற்கை வளங்களை நிர்வகிப்பதற்கும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், முக்கியமாக காடழிப்பு, காடுகளின் மறுவளர்ச்சி மற்றும் நிரந்தர உறைபனி இழப்பு ஆகியவற்றைக் கண்காணிக்கவும் உதவுகிறது. அணைகள், பாலங்கள் மற்றும் சாலைகள், அத்துடன் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவற்றைக் கண்காணித்தல் இதன் மூலம் மேம்படும். இது அறிவியல் மற்றும் கொள்கை உருவாக்கும் தேவைகளை நிறைவேற்றும்! – என்றார்.

“உலகளாவிய சமூகத்தில் உள்ள எவருக்கும் அறிவியல் தரவு இலவசமாக வழங்கப்படும், மேலும் அவர்களின் குறிப்பிட்ட தேவைகள் அல்லது நோக்கங்களுக்காக தரவைப் பயன்படுத்துவது அவர்களின் பொறுப்பாகும்…” என்று குறிப்பிட்டார் NISAR-க்கான நாசாவின் திட்ட நிர்வாகி டாக்டர் சங்கமித்ரா தத்தா.

NISAR செயற்கைக்கோளின் வெற்றிகரமான ஏவுதல் உலகின் மிகத் துல்லியமான ஏவுதல்களில் ஒன்றாகும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் கூறியுள்ளார்,

இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட GSLV மார்க் வாகனத்தைப் பயன்படுத்தி அதை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்பதைக் கண்டு நாசா உற்சாகமாக உள்ளது. வியாழக்கிழமை இரவு இங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  “இந்தியர்கள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட GSLV ராக்கெட்டைப் பயன்படுத்தி வெற்றிகரமாக ஏவ முடியும் என்பதைப் புரிந்துகொண்டு மிகவும் உற்சாகமாக இருந்தனர் – செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்கான எங்கள் சொந்த ராக்கெட்டால், அவர்கள் உற்சாகமாகவும் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்,” என்றார். 

நாராயணனின் கூற்றுப்படி, இது உலகின் மிகத் துல்லியமான ஏவுதல்களில் ஒன்றாகும், ஐந்து நிலைகளைக் கொண்ட ராக்கெட் ஒவ்வொரு கட்டத்திலும் குறைபாடற்ற முறையில் இயங்கி, இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் வித்தியாசத்தில் செயற்கைக்கோளை அதன் துல்லியமான சுற்றுப்பாதையில் செலுத்தியது. “இது அவர்களுக்குக் கூட கற்பனை செய்ய முடியாத சாதனை” என்றார் இஸ்ரோ தலைவர்.

“உலகில் இதுவரை நடந்த மிகத் துல்லியமான ஏவுதல்களில் இதுவும் ஒன்று… இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கிய மிகவும் தொழில்நுட்ப ரீதியாக தீவிரமான மற்றும் மிகவும் பயனுள்ள செயற்கைக்கோள், இந்திய ஏவுகணையைப் பயன்படுத்தி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதில் இன்று முழு நாடும் பெருமைப்படலாம்,” என்றார் அவர்.

நிஸார் – வெற்றிகர ஏவுதல்

இஸ்ரோ – நாசா இணைந்து, 12,750 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியுள்ள, நிசார் செயற்கைக்கோள், ஜூலை 30 அன்று மாலை 5:40 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோளில் இருந்து வெற்றிகரமாக பிரிந்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். இந்த செயற்கைக்கோள், பூமியை அங்குலம் அங்குலமாக துல்லியமாக படம்பிடித்து அனுப்பும்.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோ, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து, உலகின் மிக விலையுயர்ந்த நிசார் என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது. 12 நாட்கள் இந்த செயற்கைக்கோள், 12 நாளுக்கு ஒரு முறை மொத்த பூமியையும் அங்குலம் அங்குலமாக படம் பிடித்து அனுப்பும்.

பூமியில் நிகழும் இயற்கை மாற்றங்களை ஆராய்வதே இந்த திட்டத்தின் நோக்கம். குறிப்பாக இயற்கை பேரிடர் சூழல்களை கையாள்வதற்கான ஆய்வுகளில், நிசார் செயற்கைக்கோள் திட்டம் உதவிகரமாக இருக்கும். அதாவது சுற்றுச்சூழல் பாதிப்பு, பருவநிலை மாற்றம், பூகம்பங்கள், சுனாமி, எரிமலை வெடிப்புகள், நிலச்சரிவுகள், பனிப்பாறைகள் ஆகியவற்றை இந்த செயற்கைக்கோள் உன்னிப்பாக கண்காணிக்கும்.

இதற்காக, நிசார் செயற்கைக்கோளில் எஸ்.ஏ.ஆர்., எனப்படும் சிந்தெடிக் அப்ரேச்சர் ரேடார் என்கிற சிறப்பு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரேடாரின் உதவியுடன் நல்ல தெளிவுத்திறன் உடைய படங்களை எடுக்க முடியும்.

இந்த செயற்கைக்கோளில் நாசா சார்பில், எல் – பேண்ட் ரேடார், ஜி.பி.எஸ்., ரிசீவர், அறிவியல் தகவல்களுக்கான தொடர்பு அமைப்பு, அதிக திறன் கொண்ட, ஹார்ட் டிரைவ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. அதே போல் இஸ்ரோ சார்பில் எஸ்-பேண்ட் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது.

நிசார் செயற்கைக்கோளை கடந்த 2024ல் விண்ணில் ஏவ இரு நாடுகளும் திட்டமிட்டன. ஆனால், செயற்கைக்கோள் உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தப் பணி தள்ளிப் போனது. தற்போது அனைத்தும் தயார் ஆனதால் இன்று விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்தியாவின், ஜிஎஸ்எல்வி- எப்16 ராக்கெட் வாயிலாக, மாலை 5:40 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து ராக்கெட்டில் இருந்து செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். பூமியை தாழ்வாகச் சுற்றிவரும் வகையில் இந்த செயற்கைக்கோள் பூமியின் கீழ்வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

மொத்தம், 12,750 கோடி ரூபாய் செலவில், 2,392 கிலோ எடையில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவியதன் மூலம் இஸ்ரோ – நாசா புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளன.

நிசார் சிறப்பம்சங்கள்

* நிசார் உருவாக்க ரூ.12,750 கோடி செலவு. (1.5 பில்லியன் டாலர்)
* ‘மொத்த எடை 2,392 கிலோ
* பூமியை அங்குலம் அங்குலமாக படம்பிடித்து வரைபடம் தயாரிக்கும்
* 12 நாளுக்கு ஒருமுறை பூமியை 3டி முறையில் படம்பிடிக்கும்
* நாசா சார்பில், எல் – பேண்ட், இஸ்ரோ சார்பில், எஸ் – பேண்ட் தொழில்நுட்பம்
* உலகம் முழுதும் பருவநிலை மாற்றத்தை கண்காணிக்கும்
* இயற்கை பேரிடர் தொடர்பான தரவுகளை இந்தியா, அமெரிக்காவுக்கு அனுப்பும்
* செயற்கைக்கோளில் அதிநவீன ரேடார் பொருத்தப்பட்டது இதுவே முதல்முறை

நம்ம சாமி! நம்ம கோவில்! நாமே பாதுகாப்போம்!

hindumunnani
hindumunnani

நம்ம சாமி! நம்ம கோவில்! நாமே பாதுகாப்போம்!! – என்று இந்து முன்னணி அறைகூவல் விடுத்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவில் நிதியில் கட்டிடங்கள் கட்டுவது சம்பந்தமான பொதுநல வழக்கில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. அதில் தமிழகத்தில் 35 ஆயிரம் கோவில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறவில்லை என்றும் 19 ஆயிரம் கோவில்களில் மட்டுமே ஒருகால பூஜை திட்டம் நடைபெறுகிறது என்றும், ஆனால் கோவில்களுக்கு சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலமும், 23 ஆயிரம் கடைகளும், 75,500 கட்டிடங்கள் இருந்தும் வருஷ வருமானம் 345 கோடி என்றும் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

அப்படி என்றால் கோவில் நிலத்தில் ஏக்கருக்கு ஒரு ரூபாய் என்ற அளவிலும் கூட இல்லை என்பதும், கட்டிட வாடகை சதுர அடி வாடகை எவ்வளவு எவ்வாறு நிர்ணயிக்கபட்டுள்ளது என்றும் கேள்வி எழுகிறது. இதில் கல்யாண மண்டபம் வாடகை, கோவில் இடங்களில் அரசு அலுவலகங்கள் வாடகை எந்த கணக்கில் வருகிறது?

கோவில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக டெபாசிட் செய்த வருமானம் எதில் சேர்க்கப்படுகிறது?

மதுரை, திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர் போன்ற பல கோவில்களில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை பல கோடி வருவது எங்கே போகிறது?

இந்து சமய அறநிலையத்துறையின் அனாவசியமான நிர்வாக செலவுகள், பெருகிவிட்ட ஊழல், முறைகேடுகளால் கோவில் நிதி சுரண்டப்படுகிறது என்பதால் கோவில் வருவாய் காணாமல் போகிறது.

ஒருகால பூஜை நிதி என்ற பெயரில் நிதியை ஒதுக்கி வழிபாடு இல்லாத கோவிலுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரப்படுவதாக தெரிகிறது. மாதம் ஆயிரம் என்றால் ஒரு நாளைக்கு ரூ.30/-. இந்த முப்பது ரூபாய் வைத்து கோவிலில் பூஜை செய்ய முடியுமா? இது பூசாரியின் சம்பளமா? அல்லது கோவில் வழிபாடு நடத்த எண்ணெய் தேங்காய் வாழைப்பழம் வாங்க முடியுமா? ஒருகால பூஜை திட்டம் என்ற பெயரில் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என்றே பக்தர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

எவ்வளவு வருமானம் வந்தாலும் அதில் பத்து முதல் பதினைந்து சதவீகிதத்தை அரசு இந்து சமய அறநிலையத்துறை செலவினங்களுக்கு எடுத்துக்கொள்கிறது. ஆனாலும் அதன் அலுவலகம் நடப்பது கோவிலில். அதற்கான மின்கட்டணம் முதல் டீ செலவு வரை கோவில் வருமானத்தில். இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் சொகுசு வாகனம் கூட கோவில் வருமானத்தில் வாங்கப்படுகிறது. அந்த காருக்கான பெட்ரோல் பராமரிப்பு செலவும் கோவில் உண்டியல் காசில் செய்யப்படுகிறது.

அப்படியிருக்க நிர்வாக செலவிற்காக எடுக்கும் நிதி எவ்வளவு? வருவாய் இல்லை என்று கூறும் இந்து சமய அறநிலையத்துறை, அந்த துறை அதிகாரிகளுக்கு ஆடம்பர வாகனம், அதற்கு எரிபொருள் பராமரிப்பு என ஏன் செலவு செய்கிறது??? அதற்கு மட்டும் வருவாய் வருகிறதா? ஒரு கால பூஜை செய்ய மட்டும் வருவாய் இல்லையா?

இத்தகைய அவல நிலையை போக்க வேண்டும் என்பது பக்தர்களின் ஆர்த்தெழும் கோரிக்கை ஆகும்.

இதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் “நம்ம சாமி, நம்ம கோவில், நாமே பாதுகாப்போம்” என்ற அறைகூவலை பக்தர்களிடம் கொண்டு சென்று சேர்க்க இருக்கிறது இந்து முன்னணி.

நம்முடைய சாமி, கோவில் என்ற உணர்வு வரும்போது, கோவிலை சீரழித்து அழிக்கும் தமிழக அரசின் சதியை மக்கள் புரிந்து கொள்ள முடியும்.

கோவிலை திட்டமிட்டு சிதைத்து, கோவில் சொத்துக்களை சுரண்டும் போக்கை தட்டிக்கேட்கும் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். ஒவ்வொரு ஊரிலும் கிராமத்திலும் உள்ள பக்தர்கள் தங்கள் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களை பாதுக்காக்க துடிப்புடன் களத்தில் இறங்குவார்கள்.

கோவில் நிர்வாகம் என்ற பெயரில் கோவிலில் அரசியல் செய்யும் அராஜகம் முடிவுக்கு வரும்.

கோவில் நிர்வாகம் நடத்த தெரியாத இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக கோவிலை விட்டு வெளியேற வேண்டும். கோவிலில் அரசியல் நடத்தி கோவில் நிதியை சுரண்டும் அவலம் முடிவுக்கு வர வேண்டும்.

இதுவே இந்த அதிகாரிகளின் சொத்தாக இருந்தால் சுரண்ட அனுமதிப்பார்களா? கோவில் காசில் சம்பளம் வாங்கி வாழும் அதிகாரிகள், இந்து தெய்வங்களுக்கு விசுவாசமாக இல்லாமல், அரசியல்வாதிகளுக்கு விசுவாசமாக ஊழலுக்கு துணைபோவது நன்றி கெட்ட செயல் தானே..

எனவே இந்துக்கள் நமது சாமி, நமது கோவில் என்ற உணர்வுடன் கோவிலை பாதுகாக்க முன்வர வேண்டும். வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்த செய்தியை உரக்க குரல் கொடுப்போம். தமிழகத்தின் அனைத்து கோவில்களையும் பாதுகாக்கும் அறப்பணிக்கு தோள் கொடுப்போம்.