Home Blog Page 5604

நீட் தேர்வு குறித்த அரசின் அறிவிப்பு ஓர் ஏமாற்று வேலை: மு.க.ஸ்டாலின்

Stalin DMK - 2026

சென்னை:

நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, உள் ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு அறிவித்துள்ள அரசாணை ஓர் ஏமாற்று வேலைதான் என்று திமுக., செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

வருமான வரிச் சோதனைகள், அமலாக்கப் பிரிவு விசாரணை மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு பெற சொந்த கட்சியினருக்கே லஞ்சம் கொடுத்த விவகாரம் என நான்கு திக்குகளிலும் நெருக்கடியை எதிர்கொண்டு, எத்தனை நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும் இந்த அரசு என்ற கேள்விகளுக்கு மத்தியில், ஓர் இடைக்கால அரசை நடத்திக் கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, பதவி நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாட்டின் நலன்களை மத்திய அரசிடம் அடகு வைத்துக் கொண்டிருக்கிறது.

‘ஒரே நாடு, ஒரே தேர்வு’, என்ற வல்லாதிக்கக் கோட்பாட்டின் அடிப்படையில் திணிக்கப்படும் நீட் தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானது, மாநில உரிமைகளுக்கு எதிரானது, கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இந்தத் தேர்வை ஏற்றுக்கொண்டால் பல்லாயிரக்கணக்கான ஏழை, கிராமப்புற மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்று தி.மு.க. சார்பில் தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறோம்.

எங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டுள்ள அரசு, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை தமிழக சட்ட மன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியது. தான் அனுப்பிய தீர்மானத்தை சட்டமாக்குவதற்கு மத்திய அரசிடம் வாதாடி, உரிமையை நிலை நாட்டத் தவறிவிட்ட எடப்பாடி பழனிசாமி அரசு, தனது துரோகத்தை மறைப்பதற்காக, குறுக்குவழியைக் கையாண்டு திசைதிருப்பும் முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறது.

நீட் மதிப்பெண்களின் அடிப்படையில், 85 சதவீத எம்.பி.பி.எஸ்., இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், எஞ்சிய 15 சதவீத இடங்கள் ஏனைய பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அரசாணை மாணவர்கள் நலனை எந்த வகையிலும் பாதுகாக்கப் போவது இல்லை. நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் வழங்கப் போவது இல்லை.

ஏனென்றால், பிளஸ் டூ பொதுத்தேர்வில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முன்னணி இடங்களைப் பெற்ற மாணவர்கள் பலரும், நீட் தேர்வில் மிகக் குறைவான மதிப்பெண்களை எடுத்துள்ளனர். அவர்கள் படிக்காத பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதும், கேள்வித்தாள்களில் இருந்த முரண்பாடுகளும் இந்தக் குழப்பங்களுக்குக் காரணங்கள்.

தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு இருக்காது என்று கடந்த ஆண்டு முதலே, தவறான வாக்குறுதியை திரும்பத் திரும்ப தெரிவித்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள்தான், தமிழக மாணவர்கள் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் நெருக்கடிகளுக்குத் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

இந்த நிலையில், பிளஸ் டூ மதிப்பெண்களை முற்றாக ஒதுக்கிவிட்டு, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குச் செய்யப்படும் மிகப்பெரிய அநீதியாகும். நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று சட்டமன்றத்தில் சட்டம் இயற்றிவிட்டு, அதே நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களைச் சேர்க்கிறோம், மாநில நலனைப் பாதுகாக்கப் போகிறோம் என்று தமிழக அரசு தரும் விளக்கம் கேலிக்கூத்தானது, முரண்பாடானது.

பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு போட்டி போட்டுக்கொண்டு ஆதரவு தரும், அ.தி.மு.க.வின் மூன்று கோஷ்டிகளும், நீட் சட்டத்தை ஏற்றுக் கொண்டால் தான் ஆதரவு என நிபந்தனை விதித்திருக்க வேண்டும். அதை செய்வதற்கான அரசியல் துணிவு, அ.தி.மு.க.வின் எந்த கோஷ்டிக்கும் இல்லை. தமிழ்நாட்டின் உரிமையை டெல்லி ஆட்சியாளர்களின் கால்களில் அடகு வைத்து விட்டு, டெல்லிக்கு தாளம் போடுவதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

ஆகவே, இதுகுறித்த என்னுடைய 3 கேள்விகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் கூற வேண்டும்.

  1. நீட் மசோதாவுக்கு இசைவு தந்தால்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு என்று அ.தி.மு.க. சார்பில் நிபந்தனை விதிக்காதது ஏன்? நீட் மசோதாவை குடியரசுத் தலைவரின் இசைவுக்காக இதுவரை அனுப்பி வைக்காத மத்திய அரசைக் கண்டிக்காமல் வாய்மூடி மெளனியாக இருப்பது ஏன்?

  2. தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுதியவர்களில், 10 சதவீதத்துக்குக் குறைவான அளவிலான மாணவர்களே சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவை சேர்ந்தவர்கள். இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிரிவினருக்கு 15 சதவீத இடங்கள் எந்த அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன?

  3. பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்று, சாதனைப் படைத்த மாணவர்கள் கூட, நீட் தேர்வில் சொற்பமான மதிப் பெண்களைப் பெற்றுள்ள நிலையில், அந்த மாணவர்களுக்குக் கிடைக்கப் போகும் பரிகாரம் என்ன? மாநிலப் பாடத்திட்டத்தில் மிக அதிக மதிப்பெண் எடுத்தவர்களை வஞ்சித்து விட்டு, தமிழக மாணவர்களின் நலனை இந்த அரசாணை எவ்வாறு பாதுகாக்கப் போகிறது? தமிழக அரசின் இந்த அரசு ஆணையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அனுமதிக்கும் என்பதற்கான உத்தரவாதம் என்ன?

ஆகவே, தமிழக அரசின் இந்தப் புதிய அறிவிப்பு கடைசி நேரத்தில் செய்யப்படும் அலங்கோலமான, அரை குறையான ஏற்பாடு. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைந்து பெறுவதற்கு, போர்க்கால நடவடிக்கையை எடுப்பதும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையை நடத்துவதும்தான் ஒரே தீர்வு.

இதைத் தவிர்த்துவிட்டு, திசைதிருப்பும் செயல்களில் ஈடுபடுவது, தமிழக மாணவர்களுக்கும், ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மக்களுக்கும் இழைக்கிற அநீதி. அ.தி.மு.க. அரசின் தோல்வியை மறைக்க செய்யப்படும் இந்த அரசியல் மோசடி, மேலும் பல குழப்பங்களுக்கு வழி வகுக்குமே தவிர, நிரந்தரமான தீர்வைத் தராது. பரிதவித்துக் கொண்டு இருக்கின்ற மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் தவறான செயல்களில் தொடர்ந்து ஈடுபட வேண்டாம் என இந்த அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

போரூர் மேம்பாலத்தை அதிகாரபூர்வமாக திறந்துவைத்த முதல்வர்!

porur flyover - 2026
இன்று திறக்கப்பட்ட போரூர் மேம்பாலத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்பட்டது

சென்னை:
போரூர் ரவுண்டனா பகுதியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரபூர்வமாக திறந்துவைத்தார். ரூ. 54 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்துக்கு எம்ஜிஆர் பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி, மவுண்ட் ரோடு, குன்றத்தூர் சாலை, ஆற்காடு சாலை ஆகியவற்றை இணைக்கும் முக்கிய சாலை சந்திப்பு போரூர் ரவுண்டனா. இங்கே எப்போதும் வாகனப் போக்குவரத்து நெரிசல் மிகுந்திருக்கும். சாலை குறுகியது என்பதாலும், நான்கு புறம் இருந்தும் வரும் வாகனங்கள் அணிவகுப்பதாலும் பெரும் நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் இங்கே மேம்பாலம் கட்ட அறிவிக்கப்பட்டது. பின் இந்த மேம்பாலப் பணி, அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசலைத் தாங்க முடியாத பொதுமக்கள் மற்றும் வணிகர்கள், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைத்தனர். இதன்படி, 2015ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் மீண்டும் மேம்பாலப் பணிகள் தொடங்கின. தொடர்ந்து நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட போரூர் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் ஒருவழியாக நிறைவடைந்தன. இருப்பினும், இந்தப் பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படாமல் மூடியே வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் சென்னை சுற்றுவட்டாரத்தில் பெய்த மழையின் போது போரூர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் எரிச்சல் அடைந்த வாகன ஓட்டிகள் தாங்களாகவே மேம்பாலத்தை திறந்து பயன்படுத்தினர். பின்னர் மீண்டும் போலீசார் போக்குவரத்தை தடுத்து நிறுத்தி, தடுப்புகள் அமைத்து மேம்பாலப் பாதையை மீண்டும் மூடினர்.

இதனிடையே போரூர் ரவுண்டானா மேம்பாலத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பச்சைக் கொடி அசைத்து போக்குவரத்தை முறைப்படி தொடங்கி வைத்தார் முதல்வர். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தப் பாலத்துக்கு எம்ஜிஆர் பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது.

பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முயலவேண்டும்: வைகோ

vaiko in kl airport - 2026

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதிமுக., பொதுச் செயலர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். 

இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

பூவிருந்தவல்லி தடா சிறப்பு நீதிமன்றம் 1998 ஜனவரி 28 இல், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு காரணமாக மே 11, 1999 இல் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மட்டும் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டு, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

1999 அக்டோபர் 8 இல் நளினி உள்ளிட்ட நான்கு பேர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

உச்சநீதிமன்றம் மீண்டும் தூக்கு தண்டனையை உறுதி செய்ததால் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய நால்வரும் தமிழக ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இதன் மீது முடிவெடுத்த அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தலைமையிலான அமைச்சரவை ஏப்ரல் 19, 2000 இல் “நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும். மற்ற மூவரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும்” என்று தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. இதனையடுத்து ஏப்ரல் 25, 2000 இல் நளினியின் மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக குறைத்த தமிழக ஆளுநர் பாத்திமா பீவி, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை நிராகரித்தார்.

இவர்கள் மூவரும் ஏப்ரல் 26, 2000 இல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரின் கருணை மனுக்கள் 11 ஆண்டுகள், 4 மாத கால தாமதத்துக்குப் பின்னர் நிராகரிக்கப்பட் டு, செப்டம்பர் 9, 2011 இல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகம் கொந்தளித்த நேரத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 2011 ஆகஸ்டு 29 ஆம் தேதி சட்டமன்றத்தில், “தமிழக முதல்வராக இருக்கும் தனக்குக் கருணை வழங்கும் அதிகாரம் இல்லை. அதற்குக் காரணம் குடியரசுத் தலைவரால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு கருணை அளிக்கும் அதிகாரம் மாநில ஆளுநருக்கு இல்லை” என்று 1991 மார்ச் 5 இல் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு எழுதியுள்ள கடிதத்தை மேற்கோள் காட்டினார்.

அந்தச் சூழலில் எனது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், தலைசிறந்த வழக்குரைஞருமான ராம்ஜெத்மலானி அவர்கள் சென்னைக்கு வருகை தந்து, 2011, ஆகஸ்டு 30 இல் உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார். ராம்ஜெத்மலானி அவர்களின் சட்ட நிபுணத்துவம் வாய்ந்த வாதம்தான் நீதியரசர்கள் நாகப்பன், சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு மூவரின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கக் காரணம் ஆயிற்று. அதே நாளான 2011 ஆகஸ்டு 30 இல் தமிழக முதல்வர் ஜெயலலிதா, “மூவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்” என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் 2014, பிப்ரவரி 18 இல் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, மரணக் கொட்டடியில் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் 15 ஆண்டுகள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு சித்ரவதையை அனுபவித்தனர். கடந்த 26 ஆண்டுகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், இரவிச்சந்திரன் , ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் சிறைத் தண்டனையை அனுபவித்து உள்ளனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் பிப்ரவரி 19, 2014 இல் சட்டமன்றத்தில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் வழங்கியதை ஏற்று 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில்தான், உடல் நலன் சீர்கெட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு பேரறிவாளன் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். பேரறிவாளன், சாந்தன், முருகன், நள்ளிட்ட உள்ளிட்ட 7 பேருக்கும் மனிதாபிமானத்துடன் தமிழக அரசு உடனடியாக பரோல் ஆணை வழங்குவதோடு, 7 பேரையும் விடுதலை செய்வதற்குத் தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

வாஜ்பாய் எழுதிய கவிதையுடன் எமர்ஜென்சியை நினைவு கூர்ந்த மோடியின் மனதின் குரல்!

Modi mann ki baat - 2026

சென்னை:

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், எமர்ஜென்ஸி காலத்தில் சிறையில் இருந்தபோது எழுதிய கவிதையுடன், நெருக்கடி கால நிலையை நினைவு கூர்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் வானொலி நேயர்களுடன் பங்கு பெறும் மனதின் குரல் நிகழ்ச்சியில், இதனைத் தெரிவித்தார்.
அவரது வானொலி உரை:

எனதருமை நாட்டு மக்களே, வணக்கம்.

பருவநிலை மாறி வருகிறது. இந்த முறை வெப்பம் அதிகமாகவே இருந்தது. ஆனால் நல்லகாலம், மழைக்காலம் தக்க தருணத்திலேயே வந்திருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையின் வருகை, பருவநிலையை இனிமையானதாக ஆக்கியிருக்கிறது. மழைக்குப் பிறகு குளிர்ந்த காற்று, கடந்த நாட்களில் கோடை வெப்பத்திலிருந்து சற்று ஆசுவாசம் அளித்திருக்கிறது. வாழ்க்கையில் எத்தனைதான் இடர்கள் எதிர்ப்பட்டாலும், எத்தனைதான் நெருக்கடி இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில், பொதுவாழ்வில், மழையின் வருகை, நம் அனைவரின் மனோநிலையில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவதை நம்மால் உணர முடிகிறது.

இன்று பகவான் ஜகன்நாதரின் ரதயாத்திரையை நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் மிகுந்த முனைப்போடும், மகிழ்வோடும் கொண்டாடி வருகிறார்கள். உலகின் பல பாகங்களிலும் கூட, பகவான் ஜகன்நாதரின் ரதயாத்திரை கோலாகலமாக நடைபெறுகிறது. பகவான் ஜகன்நாதருடன் நாட்டின் ஏழை ஆன்மபூர்வமாக இணைந்திருக்கிறான். டா. பாபா சாஹேப் அம்பேட்கர் பகவான் ஜகன்நாதரின் கோயில் மற்றும் அதன் பாரம்பரியத்தை மிக உயர்வாகப் போற்றுவதுண்டு என்பதை பாபா சாஹேப் அம்பேட்கர் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும்; ஏனென்றால், இதில் சமூகநீதி, சமூக சமத்துவம் ஆகியன பொதிந்திருக்கின்றன. பகவான் ஜகன்நாதர் ஏழைகளின் தெய்வம். ஆங்கிலத்தில் juggernaut என்ற ஒரு சொல் இருக்கிறது, யாராலும் தடுக்க முடியாத ஒரு சிறப்பான ரதம் என்பது தான் அதன் பொருள்.

அகராதியில் பார்க்கும் போது தான், இந்த juggernaut என்ற சொல், ஜகன்நாதரின் ரதயாத்திரையை ஒட்டியே உருவாகியிருக்கிறது என்பது தெரிய வந்தது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது, உலகத்தோர் எப்படி எல்லாம் தங்களுக்கே உரிய வழிகளில் இந்த மஹாத்மியத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. பகவான் ஜகன்நாதரின் யாத்திரை வேளையில் நான் அனைத்து நாட்டுமக்களுக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், பகவான் ஜகன்நாதரின் திருவடிகளில் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

பாரத தேசத்தின் பன்முகத்தன்மை தான் இதன் சிறப்பு, பாரதத்தின் பன்முகத்தன்மை தான் இதன் சக்தி. புனிதமான ரமலான் மாதத்தில் அனைவரும் தூய பிரார்த்தனைகள் செய்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடினார்கள்.

இப்போது ஈத் பண்டிகை வந்திருக்கிறது. ஈத்-உல்-ஃபிதர் வேளையில் நான் அனைவருக்கும் ஈத் பெரு நாளுக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரமலான் மாதம் புனிதமான ஈகை அளிக்கப்பட வேண்டிய மாதம், சந்தோஷங்களை பகிர்ந்துவக்கும் மாதம், எத்தனை சந்தோஷங்களை நாம் பகிர்ந்தளிக்கிறோமோ, அந்த அளவு சந்தோஷங்கள் நிறையும். வாருங்கள், நாம் அனைவரும் இணைந்து இந்த புனிதமான பண்டிகளிலிருந்து உத்வேகம் பெற்று சந்தோஷங்களின் கஜானாவை பகிர்ந்தளித்துச் செல்வோம், நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வோம்.

ரமலானின் இந்தப் புனித மாதத்தில் உத்திரப் பிரதேச பிஜ்நோரின் முபாரக்பூர் கிராமத்தைச் சார்ந்த ஒரு மிகக் கருத்தூக்கம் அளிக்கும் நிகழ்வு நம் கவனத்திற்கு வந்திருக்கிறது. அங்கே சுமார் 3500 இஸ்லாமிய சகோதர சகோதரிகள் தங்கள் குடும்பத்தோடு இந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் வசித்து வருகிறார்கள். ஒரு வகையில் அதிக எண்ணிக்கையில் இஸ்லாமியக் குடும்பங்களின் சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். இந்த ரமலான் மாதம், கிராமவாசிகள் அனைவருமாக இணைந்து கழிப்பறை கட்டுவது என்ற தீர்மானித்தார்கள். இந்த தனிப்பட்ட கழிப்பறைகளைக் கட்ட, அரசு தரப்பிலிருந்து உதவிகள் கிடைக்கின்றன, இதன் வாயிலாக சுமார் 17 இலட்சம் ரூபாய் அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

நான் இனி கூறவிருக்கும் இந்தச் செய்தி உங்களுக்கு சுகமான ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், ஆனந்தம் அளிக்கலாம். ரமலானின் இந்தப் புனிதமான மாதத்தில், நமது அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட 17 இலட்சம் தொகையை அரசுக்கே திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இது மட்டுமல்ல, நாங்கள் எங்கள் கழிப்பறைகளை, எங்கள் உழைப்பில், எங்கள் பணத்தில் அமைத்துக் கொள்வோம் என்றும் கூறியிருக்கிறார்கள். ஆகையால் தாங்கள் இந்த 17 இலட்சம் ரூபாயை கிராமத்தின் வேறு வசதிகளுக்காக செலவு செய்து கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

நான் முபாரக்பூரைச் சேர்ந்த அனைத்து கிராமவாசிகளுக்கும் ரமலானின் இந்தப் புனித வேளையை, சமுதாய நலனுக்காக மாற்றியமைத்ததற்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஒவ்வொரு விஷயமும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது. இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், அவர்கள் முபாரக்பூரை திறந்தவெளிக் கழிப்பறை இல்லாத கிராமமாக மாற்றியிருக்கிறார்கள் என்பது தான்.

நம் நாட்டில் சிக்கிம், ஹிமாச்சலப் பிரதேசம், கேரளம் ஆகிய மாநிலங்கள் முன்னமேயேகூட, திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டவைகளாக அறிவித்திருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இந்த வாரம் உத்தராக்கண்டும் ஹரியாணாவும் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத மாநிலங்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நான் இந்த 5 மாநிலங்களின் நிர்வாகத்திற்கும், ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் சிறப்பான நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

தனி வாழ்விலும் சரி, சமூக வாழ்விலும் சரி, ஏதோ சில நல்லவைகளையாவது செய்ய வேண்டும் என்றால் அதற்கு கடினமாக உழைக்க வேண்டும் என்பதை நாம் நன்கறிவோம். நமது கையெழுத்து மோசமாக இருக்கிறது என்றால், அதை சரி செய்ய வேண்டும் என்று நாம் நினைத்தால், நிறைய நேரம் மிக விழிப்போடு இருந்து அதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் இது உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஒரு பழக்கமாக மாறும். இதே போல வேறு சில மோசமான பழக்கங்கள் நமது இயல்பாகவே ஆகி இருக்கின்றன. இவற்றிலிருந்து விடுபட, இடைவிடாத முயற்சிகளை நாம் மேற்கொண்டாக வேண்டும். ஒவ்வொருவரின் கவனத்தையும் நாம் ஈர்த்தாக வேண்டும். உத்வேகம் அளிக்கக் கூடிய நிகழ்வுகளை நாம் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டாக வேண்டும்.

தூய்மை என்பது இன்று அரசு மட்டத்தோடு நின்று போகவில்லை என்பது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. இது மக்கள் சமுதாயத்தின் ஒரு இயக்கமாக பரிமளித்திருக்கிறது. ஆட்சிக் கட்டிலில் இருப்போரும், இப்படிப்பட்ட மக்கள் பங்களிப்புத் துணையோடு முன்னேகிச் செல்லும் போது, சிந்தித்துப் பாருங்கள், எத்தனை சக்தி வெளிப்படும், எத்தனை சக்தி அதிகப்படும்!!

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடந்த மிகச் சிறப்பான ஒரு சம்பவம் என் கவனத்தில் வந்தது, இதை நான் கண்டிப்பாக உங்களிடம் தெரிவித்தே ஆக வேண்டும். இது ஆந்திர மாநிலத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் நடந்த ஒன்று. அங்கே இருக்கும் நிர்வாகம் மக்களின் பங்களிப்போடு ஒரு மிகப்பெரிய செயலில் இறங்கினார்கள்.

மார்ச் மாதம் 10ஆம் தேதி காலை 6 மணி முதல் மார்ச் மாதம் 14ஆம் தேதி காலை 10 மணி வரை, 100 மணி நேர இடைவிடாத இயக்கம். இதன் இலக்கு என்ன? 100 மணி நேரத்தில் 71 கிராம பஞ்சாயத்துக்களில் 10000 வீடுகளில் கழிப்பறைகள் கட்டுவது தான். எனதருமை நாட்டு மக்களே, பொதுமக்களும் அரசும் இணைந்து, 100 மணி நேரத்தில் 10000 கழிப்பறைகள் கட்டும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற செய்தி உங்களுக்கு சந்தோஷத்தை அளிக்கும். 71 கிராமங்கள் திறந்த வெளியில் மலஜலம் கழிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட்டிருக்கிறன. நான் ஆட்சியாளர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், விஜயநகர மாவட்டத்தின் அனைத்து கிராமவாசிகளுக்கும் ஏராளமான பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் உழைப்பால், மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும் எடுத்துக்காட்டை முன்வைத்திருக்கிறீர்கள்.


இப்போதெல்லாம் மனதின் குரலுக்கு பொதுமக்களிடமிருந்து ஆலோசனைகள் வந்தவண்ணம் இருக்கின்றன. NarendraModiAppஇல் வருகின்றன, MyGov.inஇல் வருகின்றன, கடிதங்கள் வாயிலாகவும், ஆகாசவாணி மூலமாகவும் வருகின்றன.

ப்ரகாஷ் த்ரிபாடீ அவர்கள், அவசரநிலையை நினைவுகூர்ந்து, ஜூன் மாதம் 25ஆம் தேதி மக்களாட்சியின் வரலாற்றிலேயே மிகப்பெரியதொரு கறை என்று குறிப்பிட்டிருக்கிறார். ப்ரகாஷ் த்ரிபாடீ அவர்களுக்கு மக்களாட்சி மீது இருக்கும் விழிப்புணர்வு பாராட்டுக்குரியது. மக்களாட்சி முறை என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல, இது ஒரு கலாச்சாரம். Eternal Vigilance is the Price of Liberty. அதாவது நிரந்தரமாக விழிப்போடு இருப்பது தான், சுதந்திரத்துக்கு நாம் அளிக்கும் விலை என்பது இதன் பொருள். ஆகையால் மக்களாட்சி முறைக்குத் தீங்கு ஏற்படுத்தும் விஷயங்களையும் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருப்பது அவசியம்; அதே நேரத்தில் மக்களாட்சி முறையின் நல்ல விஷயங்களையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

1975ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி, அது ஒரு கருமையான இரவு, இதை யாராலும் எளிதில் மறக்க முடியாது. எந்த ஒரு இந்தியனும் இதை புறந்தள்ளிவிட முடியாது. ஒருவகையில் இது ஒட்டுமொத்த நாட்டையுமே சிறைச்சாலையாக மாற்றியமைத்தது. மாற்றுக் கருத்துக்கள் மண்ணோடு மண்ணாக நசுக்கப்பட்டன. ஜெய்பிரகாஷ் நாராண் உள்ளிட்ட, நாட்டின் மாபெரும் தலைவர்கள் எல்லாம் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். நீதியமைப்பும் கூட இந்த அவசரநிலையின் பயங்கரமான பாதிப்புக்கு உள்ளானது. செய்தித்தாள்கள் எல்லாம் முழுமையாக செயலிழந்து போயின. இன்றைய ஊடக உலகின் மாணவர்கள், மக்களாட்சி முறையில் பணியாற்றுவோர் எல்லாம், அந்த கறைபடிந்த காலகட்டத்தை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊட்டும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள், அப்படி ஈடுபட்டும் வர வேண்டும். அந்த காலகட்டத்தில் அடல் பிஹாரி வாஜ்பேயி அவர்களும் சிறைச்சாலையில் இருந்தார். நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், அடல் அவர்கள் கவிதை ஒன்றை எழுதினார், அந்தக் கவிதையில் அந்த காலகட்டத்தில் நாட்டில் நிலவிய சூழலை வர்ணித்து எழுதியிருந்தார்.

தகிக்கும் கோடைக்கால வெப்பம்
குளிர்கால நிலவின் சோகம்
தகிக்கும் கோடைக்கால வெப்பம்
குளிர்கால நிலவின் சோகம்
கேவல்கள்நிறை மாரிக்காலம்
சுமையை இறக்கியது எங்கும்
ஓராண்டு கடந்து சென்றது,
ஓராண்டு கடந்து சென்றது.

கோரப் பிடியில் உலகு தவிக்குது
உயிர் என்ற பறவை பரிதவிக்குது
கோரப் பிடியில் உலகு தவிக்குது
உயிர் என்ற பறவை பரிதவிக்குது
வானம் முதல் பூமி வரை,
வானம் முதல் பூமி வரை,
விடுதலைகீதம் எங்கும் ஒலிக்குது,
ஓராண்டு கடந்து சென்றது,
ஓராண்டு கடந்து சென்றது.

வழிமேல் எங்கும் விழி இருக்குது,
நாட்களை மனம் எண்ணி உருகுது,
வழிமேல் எங்கும் விழி இருக்குது,
நாட்களை மனம் எண்ணி உருகுது,
மறைந்து போனது, திரும்ப வருமோ,
மறைந்து போனது, திரும்ப வருமோ,
மனதின் நேசம் மீண்டும் வருமோ,
ஓராண்டு கடந்து சென்றது.

மக்களாட்சியை விரும்புவோர் பெரும்போராட்டத்தில் ஈடுபட்டார்கள், பாரதம் போன்ற பரந்துபட்ட தேசத்தில், மக்களின் நாடிநரம்புகளில் எல்லாம் எந்த அளவுக்கு மக்களாட்சி முறை என்பது பரவியிருக்கிறது என்பதை, வாய்ப்பு கிடைத்த போது, தேர்தல் வாயிலாக அந்தச் சக்தியை வெளிப்படுத்தினார்கள். மக்களின் உதிரத்தில் கலந்த மக்களாட்சி முறை என்ற உணர்வு தான் நமது நிரந்தரமான பாரம்பரியம். இந்தப் பாரம்பரியத்தை நாம் மேலும் உறுதிபடைத்ததாக ஆக்க வேண்டும்.

எனதருமை நாட்டுமக்களே, இன்று ஒவ்வொரு இந்தியனும் தலை நிமிர்த்தி பெரும் கௌரவத்தை உணர்கிறான். 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி, ஒட்டுமொத்த உலகும் யோகமயமானது. நீர் முதல் மலை வரை உள்ள மக்கள் அனைவரும், அதிகாலை சூரியக் கதிர்களை, யோகக்கலை வாயிலாக வரவேற்றார்கள். எந்த இந்தியனுக்குத் தான் இது பெருமை அளிக்காத விஷயமாக இருக்க முடியும் சொல்லுங்கள்!! யோகம் என்பது முன்பு இருந்ததில்லை என்பதல்ல, ஆனால் இன்று யோகக்கலை என்ற இழையில் அனைவரும் இணைந்தார்கள், யோகம் உலகை இணைக்கும் ஒரு பாலமாக ஆனது. உலகின் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் இந்த யோகக்கலை அளிக்கும் வாய்ப்பை தங்களுக்கான வாய்ப்பாக மாற்றிக் கொண்டார்கள்.

சீனப்பெருஞ்சுவற்றின் மீதும், பெரு நாட்டின் உலக பாரம்பரியச் சின்னமான மாச்சூ பிச்சூவில், கடல்மட்டத்திலிருந்து 2400 மீட்டர் உயரத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் அபுதாபியில் 4000த்திற்கும் மேற்பட்டவர்களும் யோகப்பயிற்ச்சியில் ஈடுபட்டார்கள். ஆஃப்கனிஸ்தானின் ஹேராத்தில் இந்தியா ஆஃப்கன் நட்பணையான, சல்மா அணையில் யோகத்தில் ஈடுபட்டு, நட்புக்கு ஒரு புதிய இலக்கணம் வகுத்தார்கள். சிங்கப்பூர் போன்ற சிறிய இடத்திலும் கூட 70 இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, ஒருவாரக்காலம் முழுக்க அவர்கள் இந்த இயக்கத்தை மேற்கொண்டார்கள். ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச யோக தினத்தை ஒட்டி, 10 தபால்தலைகளை வெளியிட்டார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் yoga session with yoga masters, யோக வல்லுனர்களுடன் யோகம் பயில்வோம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஐக்கிய நாடுகள் சபையில் பணி புரிவோர், ஐ.நாவின் அனைத்து நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகளும் இதில் பங்கெடுத்துக் கொண்டார்கள்.

இந்த முறை மீண்டும் யோகம் உலக சாதனை படைத்திருக்கிறது. குஜராத்தின் அஹ்மதாபாத்தில் சுமார் 55 ஆயிரம் பேர்கள் இணைந்து யோகம் செய்து, ஒரு புதிய உலக சாதனையைப் படைத்திருக்கிறார்கள். எனக்கும் லக்னவில் யோகக்கலை பயிலும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதன்முறையாக கொட்டும் மழையில் யோகம் பயிலும் ஒரு நல்வாய்ப்பாக இது அமைந்தது. மைனஸ் 20, 25, 40 டிகிரிகள் வெப்பநிலை உள்ள சியாச்செனிலும் கூட நமது படையினர் யோகக் கலையில் ஈடுபட்டார்கள். நமது இராணுவம், எல்லையோரப் பாதுகாப்புப் படையினர், இந்திய திபேத்திய எல்லையோரக் காவல் படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படையினர் என அனைவரும் தங்கள் கடமைகளை ஆற்றுவதோடு, யோகப் பயிற்சியிலும் ஈடுபட்டார்கள். இது 3வது சர்வதேச யோக தினமாக இருப்பதால் 3 தலைமுறைகளைச் சேர்ந்த குடும்பத்தார் யோகம் பயில்வதைப் படம் பிடித்து என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

சில தொலைக்காட்சி சேனல்களும் இந்த விஷயத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். எனக்கு நிறைய பேர்கள் புகைப்படங்களை அனுப்பி இருந்தார்கள், அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில NarendraModiAppஇல் தொகுத்து அளிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் யோகக்கலை பற்றிய விவாதங்கள் நடைபெற்றுவரும் வேளையில், ஆரோக்கியம் பற்றிய விழிப்புடைய சமுதாயமாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், நாம் உடலுறுதி என்ற நிலையிலிருந்து, உடல்நலம் என்ற திசையை நோக்கிப் பயணிக்கிறோம் என்று மாறி வருவது தெளிவாகத் தெரிகிறது. இதற்கு யோகக்கலை பேருதவியாக இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

மதிப்பிற்குரிய பிரதம மந்திரி அவர்களே, நான் குஜராத்தின் அஹ்மதாபாத்திலிருந்து டா. அநில் சோனாரா பேசுகிறேன். ஐயா, பல்வேறு இடங்களில் நாம் பூங்கொத்து கொடுப்பதற்கு பதிலாக, நினைவுப் பொருளாக நல்ல புத்தகங்களைக் கொடுக்கலாமே என்று அண்மையில் நீங்கள் கேரளத்தில் கூறியதை நினைவு கூர்கிறேன். இந்த விஷயத்தை நீங்கள் குஜராத்தில் முதல்வராக இருந்த பொழுதே தொடக்கியிருந்தீர்கள், ஆனால் அண்மைக்காலங்களில் இதுபோன்று நடப்பதில்லை. இதை மாற்ற ஏதாவது செய்யலாமே? இந்தக் கருத்தை நாடுமுழுமைக்கும் அமல் செய்யும் வகையில் நம்மால் ஏதாவது செய்ய முடியாதா ஐயா.

கடந்த நாட்களில் எனக்கு மிகப் பிடித்தமான ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும் ஒரு வாய்ப்பு கிட்டியது. கேரளத்தில் PN. PANICKER FOUNDATION வாயிலாக சில ஆண்டுகளாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது; அதாவது, மக்களிடம் படிக்கும் பழக்கம் ஏற்பட வேண்டும், படிக்கும் பழக்கம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக படிக்கும் நாள், படிக்கும் மாதம் என்ற வகையிலான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதைத் தொடக்கி வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இங்கே பூங்கொத்துக்கள் அளிக்கப்படுவதில்லை, புத்தகங்களே அளிக்கப்படுகின்றன என்றும் என்னித்தில் கூறப்பட்டது. இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

என் நினைவிலிருந்து தப்பிய ஒரு விஷயம் மீண்டும் எனக்கு நினைவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஏனென்றால் நான் குஜராத்தில் இருந்த வேளையில், நாம் இனி பூங்கொத்துக்களை அளிக்கக் கூடாது, புத்தகங்களே அளிக்க வேண்டும் அல்லது வரவேற்க வேண்டுமென்றால் கைக்குட்டை அளித்து வரவேற்பளிப்போம் என்ற வழிமுறையை உருவாக்கி இருந்தோம். அதுவும் கதராடைக் கைக்குட்டையையே அளிப்போம், ஏனென்றால் இதன்மூலம் கதராடைகளுக்கு ஊக்கம் அளிக்க முடியும். நான் குஜராத்தில் இருந்த வேளையில் இது பழக்கமாகவே மாறியிருந்தது, ஆனால் அங்கிருந்து நான் வந்த பிறகு, இந்தப் பழக்கம் விடுபட்டுப் போயிருக்கிறது. ஆனால் கேரளம் சென்ற போது, மீண்டும் எனக்கு ஒரு விழிப்புணர்வு உண்டானது. நான் இப்பொழுது அரசில் பணிபுரிவோரிடம், இந்தப் பழக்கத்தைத் தொடங்குங்கள் என்று கூறியிருக்கிறேன். நாமும் மெல்ல மெல்ல இதை ஒரு இயல்பாகவே ஆக்கப் பழகலாம். பூங்கொத்து நீண்டநேரம் நீடிப்பதில்லை. ஒருமுறை கையில் பெற்றுக் கொண்ட பின், அதை நாம் தள்ளி வைத்து விடுகிறோம்.

ஆனால் நாம் புத்தகங்களை அளிக்கும் போது, ஒரு வகையில் அது வீட்டின் ஒரு அங்கமாகவே ஆகி விடுகிறது, குடும்பத்தின் உறுப்பினராக மாறி விடுகிறது. கதர்க்கைக்குட்டைகளை அளித்தும் கூட நாம் வரவேற்பளிக்கலாம், இதனால் எத்தனை ஏழைகளுக்கு உதவிகரமாக இருக்கிறது தெரியுமா? செலவும் குறைவு, சரியான முறையில் பயன்படவும் செய்கிறது. இந்த விஷயங்களுக்கு வரலாற்று ரீதியிலான மகத்துவம் அதிகம் இருக்கிறது. நான் கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றிருந்த போது, லண்டன் மாநகரில் இங்கிலாந்து இராணி எலிஸபெத் அம்மையார் என்னை விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அங்கே தாய்மை நிறைந்த சூழல் நிலவியது. மிகவும் அன்போடு எனக்கு உணவளித்தார், பிறகு அவர் மிகவும் மரியாதையோடு, ஒரு சிறிய கதர்க் கைக்குட்டையைக் காட்டினார். அவர் கண்களில் ஒரு ஒளி பளிச்சிட்டது, எனக்குத் திருமணமான போது, காந்தியடிகள் எனக்கு வாழ்த்துத் தெரிவித்து, இந்தக் கைக்குட்டையை பரிசளித்தார் என்று உணர்ச்சி பொங்கும் குரலில் அவர் தெரிவித்தார்.

பல ஆண்டுகள் உருண்டோடி விட்டன, ஆனால் எலிஸபெத் இராணி, காந்தியடிகள் பரிசளித்த கைக்குட்டையை பாதுகாப்பாக வைத்திருந்தார். என்னைப் பார்த்தவுடன் அவர் ஆனந்தம் மேலிட, எனக்கு அதைக் காண்பித்தார். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், அதை நான் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அவர் விரும்பினார் என்றே எனக்குப் பட்டது. காந்தியடிகளின் ஒரு மிகச்சிறிய அன்பளிப்பு அவரது வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே ஆகியிருக்கிறது, அவரது சரித்திரத்தின் ஒரு பகுதியாக மாறி விட்டிருந்தது. இந்தப் பழக்கங்கள் இரவோடு இரவாக மாறி விடுவதில்லை; இப்படிப் பேசுவதால், விமர்சனங்களுக்கும் ஆளாக நேரிடுகிறது. அதே வேளையில், இது போன்ற உரையாடல்களில் ஈடுபட வேண்டும், முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக, நான் எங்காவது செல்லும் பொழுது, யாராவது பூங்கொத்து கொண்டு வந்தால், அதை வேண்டாம் என்று மறுக்க மாட்டேன், அப்படி என்னால் செய்ய முடியாது. விமர்சனங்கள் எழத்தான் செய்யும், நாம் மீண்டும் மீண்டும் கூறத் தான் வேண்டும், மெல்ல மெல்ல ஒரு மாற்றம் ஏற்படும்.

எனதருமை நாட்டு மக்களே, நாட்டின் பிரதமர் என்ற முறையில் பல அலுவல்கள் இருக்கின்றன. கோப்புகளில் மூழ்கி இருக்க வேண்டி இருந்தாலும், நான் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்; அதாவது எனக்கு வரும் கடிதங்களில் சிலவற்றையாவது படித்துப் பார்த்து, சாதாரண மக்களோடு என்னை இணைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பை அமைத்துக் கொண்டிருக்கிறேன். பலவகையான கடிதங்கள் வருகின்றன, பலதரப்பட்ட மக்கள் எனக்குக் கடிதங்கள் எழுதுகிறார்கள். சில நாட்கள் முன்பாக நான் படித்த ஒரு கடிதத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வது அவசியம் என்று நான் உணர்கிறேன். தென்னகத்தில் இருக்கும் தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த திருமதி. அருள்மொழி சரவணன் என்ற இல்லத்தரசி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். என் குழந்தைகளின் கல்விச் செலவினங்கள் போன்றவற்றை மனதில் இருத்தி, நான் வருமானம் அளிக்கும் ஏதாவது ஒரு செயல்பாட்டில் என்னை ஈடுபடுத்திக் கொள்ளலாம், இதனால் குடும்பத்தின் பொருளாதார நிலையில் சற்று மேம்பாடு ஏற்படும் என்று கருதினேன். ஆகையால் நான் முத்ரா திட்டத்தின்படி, வங்கியிலிருந்து பணம் பெற்று, சந்தையிலிருந்து சில பொருட்களை வாங்கி அளிக்கும் பணியை தொடக்கி இருக்கிறேன்.

இதற்கிடையில், பாரத அரசு government E-Marketplace, அரசு மின்னணுச்சந்தை என்ற அமைப்பின் மீது என் கவனம் சென்றது. இதைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் சிலரிடம் விசாரித்துப் பார்த்த பிறகு, நானும் அதில் என்னைப் பதிவு செய்து கொண்டேன். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால், நீங்களும் இணையத்தில் E-GEM, E – G E Mற்கு சென்று பாருங்கள் என்று நான் நாட்டுமக்களிடம் கேட்டுக் கொள்கிறேன். இது மிக புதிய வகையிலானதொரு அமைப்பு. யார் அரசுக்கு ஏதாவது அளிக்க விரும்புகிறார்களோ – மின்சார பல்புகள், குப்பைத் தொட்டிகள், துடைப்பங்கள், நாற்காலிகள், மேஜைகள், போன்ற எதை விற்க நினைத்தாலும், அவர்கள் இந்த தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அவரிடம் என்ன தரத்திலான பொருட்கள் இருக்கின்றன, என்ன விலைக்கு அவரால் விற்க முடியும் என்பதை அதில் குறித்து வைக்கலாம். மேலும் அரசுத் துறைகள் இந்த தளத்திற்குச் சென்று பார்க்க வேண்டும், யார் குறைந்த விலையில், தரமான பொருட்களை அளிக்கிறார்கள் என்பதைக் கருத்திக் கொண்டு பொருட்களை வாங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாத நிலை ஏற்படும். எல்லா வகையிலும் ஒளிவுமறைவற்ற தன்மை பளிச்சிடும். Interface, இடைமுகம் கிடையாது, தொழில்நுட்பம் மூலமாக அனைத்தும் நிகழ்கிறது. அந்த வகையில் E-GEMஇல் யார் பதிவு செய்து கொள்கிறார்கள் என்பதை அரசின் அனைத்துத் துறைகளும் கவனித்து வருகிறார்கள். இடைத்தரகர்கள் இல்லாத காரணத்தால் பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன.

இப்பொழுது தன்னால் என்னென்ன பொருட்களை அளிக்க முடியும் என்பதை அருள்மொழி அவர்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். அவர் எழுதிய கடிதம் மிகவும் சுவாரஸியமானது. எனக்கு முத்ரா திட்டத்தின் மூலமாகக் கடன் கிடைத்தது, நான் வியாபாரம் செய்யத் தொடங்கி விட்டேன் என்பது ஒன்று, E-GEM வாயிலாக என்னால் என்ன அளிக்க முடியும் என்பது பற்றிய அனைத்துத் தகவல்களையும் அளித்த பிறகு, எனக்கு பிரதமரின் அலுவலகத்திலிருந்து ஆர்டர் கிடைத்திருக்கிறது என்று எழுதியிருக்கிறார்.

உள்ளபடியே இது எனக்கு ஒரு புதிய செய்தி தான்; பிரதமர் அலுவலகத்தில் என்ன வாங்கியிருப்பார்கள் என்று நான் யோசித்த பொழுது, அவர் பிரதமர் அலுவலகத்தில் 2 தெர்மாஸ் ஃப்லாஸ்குகளை வாங்கியிருக்கிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இதற்கு எனக்கு 1600 ரூபாய் பணம் கிடைத்தது என்றும் கூறியிருக்கிறார். இது தான் empowerment, அதிகாரமளிப்பு. இது தான் தொழில்முனைவுக்கு ஊக்கமளிக்கும் வாய்ப்பு. ஒருவேளை அருள்மொழி அவர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருக்கவில்லை என்று சொன்னால், இது என் கவனத்தில் வந்திருக்காமல் போயிருக்கலாம். E-GEM வாயிலாக தொலைவான தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு இல்லத்தரசி ஒரு சிறிய வியாபாரம் செய்து வருகிறார், அவர் விற்கும் பொருட்கள் பிரதமர் அலுவலகம் வரை வாங்கிக் கொள்ளப்படுகிறது. இது தான் தேசத்தின் பலம். இதில் ஒளிவுமறைவற்ற தன்மையும் இருக்கிறது, இதில் அதிகாரமளிப்பும் இருக்கிறது, இதில் தொழில்முனைவும் இருக்கிறது. Government E-Marketplace – GEM. யாரெல்லாம் அரசுக்குத் தங்கள் பொருட்களை விற்பனை செய்ய விரும்புகிறார்களோ, அவர்கள் எல்லாம் அதிக அளவில் இந்த இணையதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது minimum government and maximum governance, குறைந்தபட்ச அரசாங்கம், அதிகபட்ச ஆளுகை என்பதற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இதன் நோக்கம் என்ன? குறைந்தபட்ச விலை, அதிகபட்ச எளிமை, திறன் மற்றும் ஒளிவுமறைவற்ற தன்மை.


எனதருமை நாட்டுமக்களே, நாம் யோகக்கலை பற்றி பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், விண்வெளி விஞ்ஞானத்தில் நாம் ஏற்படுத்தி வரும் சாதனைகளும் நம் நெஞ்சை விம்ம வைக்கின்றன. நமது காலடிகள் யோகத்தால் இணைக்கப்பட்ட பூமியில் பதிந்திருக்கும் அதே வேளையில், நாம் தொலைவில் இருக்கும் விண்ணையும் தொட்டுப் பார்க்கும் கனவை மெய்ப்பித்து வருகிறோம் என்பது தான் பாரதத்தின் மிகப்பெரிய சிறப்பு. கடந்த நாட்களில் விளையாட்டிலும் சரி, விஞ்ஞானத்திலும் சரி, பாரதம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. இன்று பாரதம் பூமியில் மட்டுமல்ல, விண்ணிலும் கூடத் தன் வெற்றிக்கொடியை நாட்டி வருகிறது.

2 நாட்கள் முன்பாக ISRO அமைப்பு Cartosat-2 series செயற்கைக்கோளுடன், 30 Nano செயற்கைக்கோள்களையும் விண்ணில் வெற்றிகரமாக ஏவியிருக்கிறது. இந்த செயற்கைக்கோள்களில் பாரதம் தவிர, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ப்ரிட்டன், அமெரிக்கா போன்று, சுமார் 14 நாடுகளும் இடம் பெற்றிருக்கின்றன. பாரதத்தின் இந்த nano செயற்கைக்கோள் இயக்கம் விவசாயத் துறை, இயற்கைச் சீற்றங்கள் தொடர்பான தகவல்கள் பெறுதல் ஆகியவற்றில் மிகப்பெரிய அளவு உதவிகரமாக இருக்கும்.

சில நாட்கள் முன்பாகத் தான், ISRO அமைப்பு GSAT-19 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நினைவிருக்கலாம். இதுவரை பாரதத்தின் அனைத்து செயற்கைக்கோள் ஏவுதல்களிலும், மிகப்பெரிய எடை கொண்ட செயற்கைக்கோள் இது தான். நம் நாட்டின் செய்தித்தாள்கள் அனைத்தும் இதை யானையின் எடையோடு ஒப்பிட்டுக் கூறியிருக்கிறார்கள் என்பதிலிருந்தே, விண்வெளித் துறையில் நமது விஞ்ஞானிகள் எத்தனை பெரிய சாதனை புரிந்திருக்கிறார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். ஜூன் மாதம் 19ஆம் தேதி செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பி 1000 நாட்கள் முடிந்திருக்கின்றன.

செவ்வாய் கிரஹத்துக்கு நாம் செயற்கைக்கோளை அனுப்ப வெற்றிகரமாக சுற்றுப்பாதை ஏற்படுத்தியது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதன் ஆயுட்காலம் வெறும் 6 மாதங்களுக்குத் தான் என்றாலும் கூட, நமது விஞ்ஞானிகளின் முயற்சிகளின் வல்லமை காரணமாக இது 6 மாதங்களையும் கடந்து செயல்பட்டு வருகிறது. இப்பொழுது 1000 நாட்கள் கடந்தும் இது செயலாற்றி வருகிறது, புகைப்படங்கள் அனுப்பி வருகிறது, தகவல்கள் அளிக்கிறது, அறிவியல் தரவுகளை அள்ளித் தருகிறது. காலத்தின் எல்லைகளைத் தாண்டி, தனது ஆயுட்காலத்தையெல்லாம் கடந்து, இது சிறப்பாகப் பணிபுரிந்து வருகிறது. 1000 நாட்கள் கடப்பது என்பது நமது அறிவியல் பயணத்தில், நமது விண்வெளிப் பயணத்தில் ஒரு மகத்துவம் நிறைந்த மைல்கல்.

இப்போதெல்லாம் விளையாட்டுத் துறையில் நமது இளைஞர்கள் அதிக முன்னேற்றம் அடைந்து வருவதை நம்மால் காண முடிகிறது. கல்வியைத் தவிர, அவர்கள் விளையாட்டுத் துறையிலும் தங்கள் எதிர்காலம் இருப்பதை அவர்கள் உணர்ந்து வருகிறார்கள். நமது விளையாட்டு வீரர்கள், அவர்கள் முயற்சிகள், அவர்களின் சாதனைகள் ஆகியவை காரணமாக, நாட்டுக்கு பெருமை ஏற்பட்டு வருகிறது. அண்மையில் தான் பாரதத்தின் பேட்மிண்டன் விளையாட்டு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அவர்கள் இந்தோனேசியா ஓப்பன் பந்தயத்தில் வெற்றி பெற்று நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார். இந்த சாதனை படைத்ததற்கு நான் அவருக்கும் அவரது பயிற்றுனருக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தடகள வீராங்கனை பி.டி. உஷா அவர்களின் Usha School of Athleticsஇன் synthetic track, செயற்கைத் தடகளத்தைத் திறந்து வைக்கும் விழாவில் பங்கு கொள்ளும் வாய்ப்பு சிலநாள் முன்பு எனக்குக் கிட்டியது.

விளையாட்டுக்கள், விளையாட்டு உணர்வை ஏற்படுத்துகின்றன; ஆகையால் தான் நாம் விளையாட்டுக்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். ஒட்டுமொத்த ஆளுமை மேம்பாட்டில், விளையாட்டுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. நாட்டில் திறமைகளுக்குப் பஞ்சமில்லை. நமது குடும்பத்திலும் பிள்ளைகள் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டு கொண்டிருந்தால், அவர்களுக்கு நாம் வாய்ப்பமைத்துக் கொடுக்க வேண்டும். அவர்களை மைதானத்திலிருந்து விலக்கி, அறைக்குள் பூட்டி வைத்து, படிக்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. அவன் படிக்கவும் செய்யட்டும், அதிலே அவன் முன்னேற்றமும் அடையட்டும்; ஆனால் அவனுக்கு விளையாட்டில் அதிகத் திறமையோ, ஆர்வமோ இருந்தால், பள்ளிக்கூடம், கல்லூரி, குடும்பம், அக்கம்பக்கத்திலிருப்போர் என அனைவரும் அவனுக்கு ஊக்கமளிக்க வேண்டும். அடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறும் கனவை அனைவரும் காண வேண்டும்.

மீண்டும் ஒருமுறை எனதருமை நாட்டு மக்களே, மழைக்காலம், தொடர் கொண்டாட்டங்களின் காலமாக, ஒரு வகையில் புதியவகை அனுபவங்களை உருவாக்கித் தரும் காலமாக அமைந்திருக்கிறது. மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், அடுத்த மனதின் குரலில் உங்களோடு இணைகிறேன். வணக்கம்.


ஜூன் 25ம் தேதி அன்று சென்னை ஆலிண்டியா ரேடியோவில் ஒலிபரப்பான மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியின் தமிழ் வடிவம்.
தமிழ் ஒலி வடிவம்: ராமஸ்வாமி சுதர்ஸன் (சென்னை வானொலி நிலையம்)

ஆளுநர் மாளிகை மான்கள் வசிப்பிடம் பாதுகாக்கப்பட வேண்டும்: ராமதாஸ்

guindy raj bhavan - 2026
ஆளுனர் மாளிகை வளாகத்தை விடுமுறை நாட்களில் பொதுமக்கள் பார்வையிடலாம் என்ற தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவின் அறிவிப்பு தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால், அதற்குள்ளாகவே மக்கள் வசதிக்காக என்ற பெயரில் ஆளுனர் மாளிகை தயாரித்துள்ள திட்டம்  கிண்டி தேசியப் பூங்காவில் வாழும் அரிய வகை மான்களுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இந்தியா விடுதலை அடைந்தபோது சென்னையில் ஆளுனர் மாளிகை பரந்து விரிந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. மத்தியக் கைலாஷ் முதல் சென்னை அண்ணா சாலை வரை நீண்டிருந்த ஆளுனர் மாளிகை வளாகம் அடர்ந்த மரங்களைக் கொண்டிருப்பதால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்திய விடுதலைக்குப் பிறகு சென்னை ஐ.ஐ.டி, கிண்டி சிறுவர் பூங்கா, ராஜாஜி நினைவிடம், காமராசர் நினைவிடம், கிண்டி தேசியப் பூங்கா ஆகியவற்றுக்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள்  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 156.14 ஏக்கரில் ஆளுனர் மாளிகை செயல்பட்டு வருகிறது.
இவ்வளவு பரப்பளவு கொண்ட ஆளுனர் மாளிகையில் 30 ஏக்கர் பரப்பளவில் போலோ விளையாட்டுத் திடல் அமைந்திருக்கிறது. ஆளுனர் மாளிகை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக போலோ திடலில் அடிக்கடி போலோ போட்டிகளை நடத்தி, அவற்றைக் பார்வையிட பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என்று ஆளுனர் மாளிகையிலிருந்து தமிழக அரசுக்கு அண்மையில் அனுப்பப்பட்டுள்ள பரிந்துரை தான் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆளுனர் மாளிகை வளாகத்தில் போலோ விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, அவற்றைப் பார்வையிட பொதுமக்களை அனுமதிக்கும் திட்டம் மேலோட்டமாகப் பார்ப்பதற்கு வரவேற்கத்தக்கதாகவே தோன்றும். ஆனால், இதுகுறித்த முழு உண்மைகளையும் அறிந்தால் தான் இது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது புரியும். 30 ஏக்கரில் போலோ விளையாட்டுத் திடல் அமைந்திருந்தாலும், அது பயன்படுத்தப்படாத  ஒன்றாகவே இருந்து வந்தது. அதுமட்டுமின்றி கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த போலோ விளையாட்டுத் திடல் தான் கிண்டி தேசியப் பூங்காவில் வாழும் மிகவும் அரிதான புல்வாய் (Black bucks) வகை மான்களின் உணவிடமாகவும், இனப்பெருக்கப் பகுதியாகவும் விளங்கி வருகிறது. இந்தத் திடலில் போலோ போட்டிகளை நடத்தத் தொடங்கினால் புல்வாய் வகை மான்களின் இனப்பெருக்கம் தடைப்படக்கூடும். இவை தவிர புள்ளி மான், வெள்ளை மான், கீரி, முள்ளம்பன்றி போன்ற விலங்குகளும்  பாதிக்கப்படும்.
ஆளுனர் மாளிகை மற்றும் கிண்டி தேசியப் பூங்காவில் விலங்குகள் நடமாடுவதற்கான பரப்பு  குறைந்து விட்டதால் பல நேரங்களில் மான்கள் அடையாறு வழியாக ஈக்காட்டுத் தாங்கல் வரை வந்து செல்கின்றன.  பாதுகாக்கப்படாத அந்த பகுதிகளில் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை உட்கொண்டும், விபத்தில் சிக்கியும் மான்கள் பாதிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. போலோ விளையாட்டுத் திடல் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து விடப்பட்டால் மான்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கிண்டி தேசியப் பூங்காவிலிருந்து வெளியேறி அழிவைச் சந்திக்கும் ஆபத்துக்கள் அதிகமாக உள்ளன. இதையெல்லாம் சிந்திக்காமல் இப்படி ஒரு பரிந்துரையை ஆளுனர் மாளிகை அனுப்பியிருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக ஆளுனரின் செயலர் ரமேஷ் சந்த் மீனா தான் இப்பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இது ஆளுனர் வித்யாசாகர் ராவின் ஒப்புதல் பெற்று செய்யப்பட்டதா என்பது தெரியவில்லை. இதற்கு முன் கடந்த 2013&ஆம் ஆண்டு தமிழக ஆளுனராக ரோசய்யா இருந்த போது, இதே போலோ விளையாட்டுத் திடலில் உலங்கு ஊர்தி இறங்கு தளம் (ஹெலிப்பேட்) அமைக்க ரமேஷ் சந்த் மீனா முயற்சி செய்தார். ஆனால், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து மிகக்கடுமையான எதிர்ப்பு எழுந்ததை அடுத்து உலங்கு ஊர்தி இறங்கு தளம் திட்டம் அப்போது கைவிடப்பட்டது. இப்போது வேறு பெயரில் ஆளுனர் மாளிகையின் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மற்ற மாநகரங்களை விட சென்னைக்கு அதிகமாக உள்ளது. சென்னையின் பசுமைப் போர்வை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. கடந்த     4 ஆண்டுகளில் மட்டும் சென்னையில் 10,000 ஏக்கர் பரப்பளவிலான தோட்டங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் ஒவ்வொரு தனிநபருக்கும் 0.05 மரங்கள் மட்டுமே உள்ளன. சென்னையின் பசுமைப் போர்வைக்கு ஆதாரமாக திகழ்பவை ஆளுனர் மாளிகையிலிருந்து தொடங்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி தான். பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியை அழித்தது போன்று பாதுகாக்கப்பட்ட வனத்தையும் அரசே அழித்து விடக்கூடாது. எனவே, போலோ திடலை திறந்து விடும் திட்டத்தை கைவிட்டு, அங்குள்ள வன வளத்தை பாதுகாக்கும் வகையில் ஏதேனும் திட்டத்தை ஆளுனர் மாளிகை செயல்படுத்த வேண்டும்.
– மருத்துவர் ராமதாஸ்
நிறுவுனர், பாட்டாளி மக்கள் கட்சி!

ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்குமாறு முதல்வருக்கு பால் முகவர் சங்க தலைவர் கடிதம்

rajendra balaji admk minister - 2026

சென்னை:

அமைச்சர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜியை நீக்குமாறு, பால்முகவர்கள் சங்க மாநிலத் தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர்  மீது “உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று  கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட கடித நகல்…

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்.

கடந்த மே மாதம் முதல் வாரம் தொடங்கி தொடர்ந்து “தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன” எனவும், “தனியார் பாலை குடிப்பதால் குழந்தைகளுக்கு புற்றுநோய் வருகிறது” எனவும் குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகளுக்கு அத்தியாவசிய உணவாக விளங்கும் பாலில் ஹைட்ரஜன் பெராக்சைடு, பார்மாலின் உள்ளிட்ட உயிருக்கு தீங்கிழைக்கும், புற்றுநோயை உருவாக்கும் வேதிப் பொருட்கள் கலப்படம் செய்யப்படுவதாகவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தினார்.

அதுமட்டுமன்றி “தனியார் பாலில் ரசாயனம் கலப்படம் இல்லை என்று நிருபித்தால் தான் அமைச்சர் பதவியில் இருந்து விலகவும், தூக்கில் தொங்கவும் தயார்” என ஊடகங்களில் அதிரடியாக பேசியதோடு, புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பகுப்பாய்வுக் கூடத்திற்கு தமிழகத்தில் இருந்து சோதனைக்காக அனுப்பப்பட்ட பால் மாதிரிகள் அந்த ஆய்வகத்தின் அதிகாரிகளால் வாங்க மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், தனியார் பால் நிறுவனங்களின் அதிகாரிகள் எங்களுக்கு முன்னால் சென்று பால் மாதிரிகளை சோதனை செய்யவிடாமல் தடுப்பதாகவும், அதற்கு மத்திய அரசு அதிகாரிகளும் துணை போவதாகவும் அரசு அதிகாரிகள் மீதே குற்றம் சுமத்தி மக்கள் மத்தியில் மேலும் ஒரு குழப்பமான சூழ்நிலையை உருவாக்கினார்.

மேலும் பால் கலப்படம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் என்பவர் தொடர்ந்த பொது நல வழக்கில் தனியார் பால் நிறுவனங்களின் தரம் குறித்தும், தனியார் பால் நிறுவனங்கள் மீது கலப்படம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜுன் -19ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.  அதனடிப்படையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் கடந்த 19.06.2017அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கடந்த 05.08.2011முதல் 31.05.2017வரை தமிழகம் முழுவதும் சுமார் 886பால் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்ததாகவும், அதில் 187பால் மாதிரிகள் மட்டும் தரம் குறைந்து காணப்பட்டதாகவும், “எந்த பால் மாதிரியும் பாதுகாப்பற்றது என நிருபணமாகவில்லை” எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் “தமிழக பால்வளத்துறை சார்பில் புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பகுப்பாய்வுக் கூடத்திற்கு மே-31ம் தேதி சோதனைக்காக அனுப்பப்பட்ட பால் மாதிரிகளில் உயிருக்கு தீங்கிழைக்கும் எந்த ஒரு ரசாயனப் பொருட்களும் கலப்படம் செய்யப்படவில்லை” எனவும், அதன் முடிவுகள் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று (“டைம்ஸ் ஆப் இந்தியா”) கடந்த 23.06.2017அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் அவர்கள் தாக்கல் செய்த பதில் மனுவிலும், புனேவில் உள்ள மத்திய அரசின் உணவு பகுப்பாய்வுக் கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகள் அடிப்படையில் அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின் படியும் தனியார் பால் நிறுவனங்கள் உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயன பொருட்களை கலப்படம் செய்யவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி தமிழக பால்வளத்துறை அமைச்சர் திரு. கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களின் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது ஏதோ உள்நோக்கம் கொண்டது என்பதும் தெள்ளத்தெளிவாக உறுதியாகியுள்ளது.

மக்கள் நலன் மீது அக்கறையோடு செயல்பட்டு, மக்களுக்கு தரமான பால் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக கூறி தேவையற்ற அச்சத்தையும், பீதியையும் மட்டுமே ஏற்படுத்தியுள்ளார்.  அதுமட்டுமன்றி பொதுமக்கள் பால் அருந்துவதையே தவிர்க்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, அனைத்து பால் நிறுவனங்களையும், பால் முகவர்களையும் பொதுமக்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையை உருவாக்கி, பொதுமக்கள், பால் முகவர்கள், சில்லறை வணிகர்கள் என அனைவரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலைக்கும் தள்ளி விட்டுள்ளார்.

எனவே பொறுப்பின்றி செயல்பட்ட திரு. கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து  உடனடியாக பதவி நீக்கம் செய்வதோடு மட்டுமின்றி, பொதுமக்கள் நலன் சார்ந்து கலப்படப் பாலினை தடுக்க அனைத்து பால் நிறுவனங்களையும் ரகசியமாக கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் “தனியார் பால் நிறுவனங்கள் ரசாயனம் கலப்படம் செய்கின்றன” என ஒட்டுமொத்தமாக பொதுவெளியிலும், ஊடகங்களிலும் பேசியதில் “ஏதோ உள்நோக்கம் கொண்டதாக தெரிவதால்” அவர் அவ்வாறு பேசியதற்கான காரணத்தை அறிய உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தாங்கள் உத்தரவிட வேண்டும் என “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பில் தங்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்
சு.ஆ.பொன்னுசாமி
(நிறுவனர் & மாநில தலைவர்)
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்

kanchi periyava - 2026

“பெரியவா அனுக்ரகத்தால் நாலாயிரம் ரூபாய் தட்சணையாக
வந்தது. நீங்கள் கோயிலுக்கு வந்ததால் ஏராளமான பக்தர்கள்
வந்து கூடினார்கள் இல்லையா? அதனால் வந்தது!”-அர்ச்சகர்

(ஏழை அர்ச்சகருக்குக் கருணை புரிய விரும்பிய பெரியவாளின்
தங்கமான மனது)

ஜூன்24-2017-தினமலர்-பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்-திருப்பூர் கிருஷ்ணன்.
தட்டச்சு-வரகூரான் நாரயணன்.

காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் சன்னதித் தெருவில்
ஜுரஹரேஸ்வரர் என்ற பெயரில் சிவன் கோயில் உண்டு.
யாருக்காவது ஜுரம் வந்தால் இங்குள்ள சிவனிடம்
பிரார்த்தனை செய்துவிட்டு சிவனே என்றிருப்பார்கள்.
ஜுரம் குணமானதும் சுவாமிக்கு மிளகு சாதம் நிவேதனம்
செய்வார்கள்.

ஒரு சிவராத்திரி…எப்போதும் சிவராத்திரியன்று
காஞ்சி மகாபெரியவர், நான்கு கால பூஜை செய்வது
வழக்கம்.அவரைத் தரிசிக்கவும், பூஜையைப் பார்க்கவும்
இரவில் கூட்டம் அலை மோதும்.அன்று நள்ளிரவு
11 மணி அளவில், பெரியவர் ஜுரஹரேஸ்வரர்
கோயிலுக்குப் புறப்பட்டார்.

அவரிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒருவர்
தவிப்போடு கூறினார்.

“இன்று முழுவதும் நீங்கள் உபவாசம்.(பட்டினி)
இரவெல்லாம் கண்விழித்து பூஜை செய்த களைப்பு
வேறு.மடத்திலேயே இத்தனை நேரம் சிவபூஜை தானே
செய்தீர்கள். உடல் தளர்ந்திருக்கும் நேரத்தில் நடந்து
போய் ஜுரஹரேஸ்வரரைத் தரிசிக்கத்தான் வேண்டுமா?
ஓய்வெடுங்களேன்!”

பக்தரைக் கனிவோடு பார்த்த பெரியவர்,பதில் கூறவில்லை.
நடந்தே கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
இதைக்கண்டு அங்கு ஏராளமானோர் குழுவினர்.
எல்லோருக்கும் ஆசி கூறிய பெரியவர் மடத்திற்கு
வந்து சேர்ந்தார்.

‘மறுநாள்’…..காலை பிரசாதத்துடன், பெரியவரைப் பார்க்க
வந்தார் வறுமையால் மெலிந்த தோற்றமுடைய
ஜுரஹரேஸ்வரர் கோயில் அர்ச்சகர்.

தன்னைக் கோயிலுக்குச் செல்ல வேண்டாமே என வேண்டிய
பக்தர் அருகே இருப்பதைக் கண்ட பெரியவர்,அர்ச்சகரிடம்,
“சிவராத்திரிக்கு என்ன வருமானம் வந்தது?” என்றார்.

“பெரியவா அனுக்ரகத்தால் நாலாயிரம் ரூபாய் தட்சணையாக
வந்தது. நீங்கள் கோயிலுக்கு வந்ததால் ஏராளமான பக்தர்கள்
வந்து கூடினார்கள் இல்லையா? அதனால் வந்தது!”-அர்ச்சகர்.

“இல்லாவிட்டால் சுமாராக எவ்வளவு வரும்?”-பெரியவா

“என்ன, ஒரு இருநூறு ரூபாய் தட்சணை கிடைத்தாலே பெரிது”.

அந்த ஏழை அர்ச்சகர் முகத்தில் நல்ல வருமானம் கிடைத்தது
பற்றிய மகிழ்ச்சி தென்பட்டது.

உடனே பெரியவர் அந்த பக்தரை அர்த்தத்தோடு ஒரு பார்வை
பார்த்தார்.அந்தப் பார்வை ஆயிரம் விஷயங்களப் பேசிற்று.

ஏழை அர்ச்சகருக்குக் கருணை புரிய விரும்பிய பெரியவாளின்
தங்கமான மனதை புரிந்து கொண்ட பக்தரின் விழிகளில்
கண்ணீர் திரையிட்டது.

மோடியை சந்தித்து பூங்கொத்து கொடுத்தார் பன்னீர்செல்வம்: வா.மைத்ரேயன்

புது தில்லி:

புது தில்லிக்கு வந்துள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ராம்நாத் கோவிந்தைப் பார்த்துப் பேசி, வாழ்த்து தெரிவித்துவிட்டு, பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் என்று கூறியுள்ளார் வா.மைத்ரேயன்.

முன்னதாக இன்று காலை வெளியான ஒரு நாளிதழின் பத்திரிகைச் செய்தியில், பன்னீர்செல்வம் கையில் பூங்கொத்துடன் நின்றதாகவும், ஆனால் பிரதமர் மோடி பூங்கொத்து வேண்டாம் என்று சொல்லிவிட்டு வணக்கம் மட்டுமே தெரிவித்துவிட்டு காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும், இதனால் பன்னீர்செல்வம் விரக்தி அடைந்ததாகவும் செய்தி வெளியானது. மேலும், பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்துப் பேச நேரம் கேட்டார் என்றும், ஆனால் பிரதமர் அலுவலகம் அனுமதி கொடுக்கவில்லை என்றும், அதன்பின் பன்னீர்செல்வம் நேரடியாக மைத்ரேயன் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள வா.மைத்ரேயன், நேற்று மாலை பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், மனுவை தாக்கல் செய்ததும் அவருக்கு வாழ்த்து தெரிவித்த பன்னீர்செல்வம், பின்னர் அளித்த பூங்கொத்தை மோடி பெற்றுக் கொண்டார் என்பதற்கான புகைப்பட ஆதாரம் உள்ளது என்று அதனை தம் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டார்.

மேலும் தினகரன் நாளிதழில் வந்த செய்தி உண்மைக்கு மாறானது என்பதற்கு நான் அனுப்பிய புகைப்படங்களே சான்று என்றும் மைத்ரேயன் குறிப்பிட்டுள்ளார்.

உலகிலேயே மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கிய கரூர் மாணவருக்கு ரூ.10 லட்சம் பரிசு: தமிழக முதல்வர் அறிவிப்பு!

IMG 20170624 141609 - 2026

உலகிலேயே மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கிய கரூர் மாணவர் ரீபாத்
சாரூக்குக்கு ரூ.10 லட்சம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதியுதவி
அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ரிஃபாத் ஷாரூக். இவருக்கு வயது 18.
பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் இவர் உலகில் மிகச்சிறிய கலாம்சாட் என்ற செயற்கை
கோளை வெறும் 64 கிராம் எடையுடன் வடிவமைத்திருக்கிறார்.

கைக்குள் அடங்கும் இந்த செயற்கை கோளை நாசா நடத்திய கியூப் இன் ஸ்பேஸ்(Cube In
Space) என்ற போட்டியில் கலந்துகொண்ட போது வடிவமைத்துள்ளார். இதில் சிறந்த
செயற்கை கோளாக ஷாரூக்கின் செயற்கை கோள் தேர்வுசெய்யப்பட்டு, கடந்த புதன்கிழமை
மதியம் 3 மணி அளவில் விண்ணில் ஏவப்பட்டது. முப்பரிமாண கார்பன் ஃபைபரின்
இயக்கத்தை விளக்கும் பதிவுகளைச் செய்யும் இந்த செயற்கை கோளை ரிஃபாத் ஷாரூக்
மற்றும் அவரது அணியை சேர்ந்த 6 நண்பர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில், கலாம் சாட் தயாரித்த மாணவர் ரிபாத் சாரூக் தலைமையிலான 6 பேர்
குழுவுக்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி பாராட்டு
தெரிவித்துள்ளார்.

மேலும் உலகிலேயே மிகச்சிறிய செயற்கைகோளை உருவாக்கிய கரூர் மாணவர் ரீபாத்
சாரூக்குக்கு ரூ.10 லட்சம் முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

நீட்: 85% மாநில கல்வித் திட்டத்தில் படித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

tamil nadu secretariat tamil nadu assembly - 2026n

சென்னை:

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 85% மாநில கல்வித் திட்டத்தில் படித்து வந்தவர்களுக்கு மாநில ஒதுக்கீடு வழங்கும் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், மாநில கல்வித் திட்டத்தில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை தகவல் அளித்திருந்தது.

மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 15 சதவீத இடம் வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் அளித்திருந்தனர்.

இந்நிலையில், 85 சதவீத மாநிலப் பாடத்திற்கும் ஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஜூலை 17 ஆம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் எனவும், வரும் 27 ஆம் தேதி முதல் மருத்துவ மாணவர் சேர்க்கைகான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படும். ஜூலை 7 ஆம் தேதி விண்ணப்பம் விநியோகம் நிறைவு பெறும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 8 ஆம் தேதி கடைசி நாள். ஜூலை 14 ஆம் தேதி தர வரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 17 ஆம் தேதி முதல் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ)  வெள்ளிக்கிழமை நேற்று வெளியிட்டது. இந்தத் தேர்வில், 6,11,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 8 திருநங்கையரில் 5 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரத்தின்படி, நாடு முழுவதும் 470 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் சுமார் 65,170 எம்.பி.பி.எஸ். இடங்களும், 308 பல் மருத்துவக் கல்லூரிகளில் 25,730 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்களுக்கான கலந்தாய்வை மத்திய அரசு நடத்தும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணை www.mcc.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இக்கல்லூரிகளில், மாநில ஒதுக்கீட்டு இடங்களை அந்தந்த மாநில மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவினர் கலந்தாய்வு மூலம் நிரப்புவர். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கும் மாநில அரசே கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.

முன்னதாக, தமிழகத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை எழுதினர். இதில், சுமார் 15 ஆயிரம் பேர் தமிழ் மொழியில் எழுதினர். சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் முதல் 25 இடங்களில் தமிழக மாணவர்கள் ஒருவர் கூட இல்லை. மேலும் மொத்த மதிப்பெண் 720-க்கு தமிழக மாணவர்கள் சராசரியாக 300 மதிப்பெண் வரையே பெற்றனர். எனவே, இந்தப் பிரச்னையை சரிக்கட்டும் வகையில், மாநில கல்வி ஒதுக்கீட்டில் 85% என மாநில அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.