Home Blog Page 5625

பசுவை தேசிய விலங்காக அறிவியுங்கள்: ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி

judge mahesh chandra sharma - 2026

ஜெய்ப்பூர்:

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அரசுக்கு, அந்த மாநில உயர்நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

ராஜஸ்தானில் பசுக்களை பராமரிப்பதற்கு மாநில அரசு நடத்தி வரும் பாதுகாப்பு மையம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கை நீதிபதி மகேஷ் சந்த் சர்மா விசாரித்தார். அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக புதன்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதில், பசுவை தேசிய விலங்காக அறிவிப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; பசுவை கொல்லும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

இந்தத் தீர்ப்பில் அவர் குறிப்பிட்டது…

நேபாளம் ஒரு இந்து நாடு ஆகும். அங்கு பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, விலங்கு வளர்ப்பை அடிப்படையாகக் கொண்ட விவசாய நாடு. எனவே அரசியல் சாசனம் பிரிவு 48 மற்றும் 51 ஏ (ஜி)யின்படி, இந்த நாட்டில் பசுவுக்கு சட்டப்பூர்வ உரிமையை பெற்றுத்தர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. பசுவதை செய்வோருக்கான தண்டனையை தற்போதைய அளவான 3 ஆண்டு என்பதை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கு ராஜஸ்தான் விலங்குகள் சட்டம், 1995–ல் திருத்தம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்… என்று கூறியிருந்தார்.

அவரது தீர்ப்பு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் நீதிபதி மகேஷ் சந்த் சர்மா டி.வி. சானல்களுக்கு அளித்த பேட்டியின்போது, ‘‘பசுவைக் கொல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது என் ஆன்மாவின் குரல். உங்கள் ஆன்மாவின் குரல். நாட்டில் உள்ள எல்லோருடைய ஆன்மாவின் குரலும்தான். தர்மத்தில் இருந்துதான் சட்டமே தவிர, சட்டத்தில் இருந்து தர்மம் அல்ல. பசுவதை என்பது மிகக்கொடிய குற்றம். இதைவிடக் கொடிய குற்றம் ஒன்று இருக்க முடியாது. பசு, தாயைப் போல! பல்வேறு நோய்களில் இருந்து மக்களைக் காக்கிறது’’ என்றார். தாம் ஓய்வு பெறும் நாளில் இத்தகைய பரிந்துரை அளிக்க வாய்ப்பு அமைந்ததற்கு மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, கால்நடைச் சந்தைகளில் இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து, அது நாட்டின் சில பகுதிகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பசுவைக் கொல்கிறவர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்க வேண்டும் என்று ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை செய்திருப்பது, மத்திய அரசின் நடவடிக்கைக்கு மேலும் வலு சேர்த்ததாக அமைந்துள்ளது.

சென்னை சில்க்ஸ் தீ விபத்து: கட்டடம் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

chennai silks building collapsed - 2026

சென்னை:

புதன் கிழமை நேற்று சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் மின்சுற்று பாதிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் 7 முதல் 3வது மாடி வரை எரிந்து விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 28 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்க போராடி வருகின்றனர். சுமார் 400 வீரர்கள், சுழற்சி முறையில் இரவு பகலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பல தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

கட்டடத்தின் நான்கு புறமும் தீயணைப்பு வாகனம் மூலம் நீரை பீய்ச்சி அடிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சில நிமிடங்களில் 7 வது தளத்தில் மீண்டும் தீ பரவியது . 7 வது தளத்தில் ஊழியர்களுக்கு சமையல் செய்வதற்காக கேஸ் சிலிண்டர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதற்கிடையே கிரேன் மூலம் தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அந்த தளத்தில் இருந்து அதிக அளவு புகை வெளியேறி வருகிறது.

ஸ்கை லிப்ட் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே விமான நிலையத்தில் இருந்து ராட்சத நுரைக்கலவை எந்திரம் வரவழைக்கப்பட்டு, கட்டடம் மீது நுரைக்கலவை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. நேற்று காலை 5 மணிக்குத் தொடங்கிய தீயணைக்கும் பணி இரவு முழுவதும் நடந்தது. ஷிப்ட் முறையில் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். தொடர்ந்து தீ எரிந்து வருவதால் தி.நகரே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. துணிகள் எரிந்ததால் கரும் புகை வெளியில் வந்து கொண்டே இருக்கிறது. அதிகளவில் புகை வெளியேறியதால் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து 500 மீட்டர் தொலைவுக்கு கர்ப்பிணிகள், குழந்தைகள் செல்ல வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார்..

தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில், கட்டடத்தின் 3வது தளத்தில் இருந்து 7வது தளம் வரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால், தீயணைக்கும் வண்டிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உடனடியாக அவை அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டன. கட்டடத்தின் முன் பகுதி முழுவதும் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன. கட்டடத்தின் பீம்கள், அடித்தளம் ஆகியவை அதிக வெப்பத்தின் காரணமாக வலுவிழந்து, மேலும் உடைந்து விடக் கூடும் என்று கருதப் படுவதால், அந்தப் பகுதியில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

மகிந்திரா சிட்டியில் பொறியாளர் மர்ம மரணம்?: அடித்துக் கொலையா?

Chennai Infosys employee Ilayaraja Arunachalam was found dead in his office located in Mahindra World City - 2026

சென்னை:

செங்கல்பட்டு அடுத்த மகிந்திரா சிட்டியில், மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பொறியாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டிவனத்தை அடுத்த மயிலம் சாலையைச் சேர்ந்த அருணாச்சலத்தின் மகன் இளையராஜா (35), செங்கல்பட்டு அடுத்த மகிந்திரா சிட்டியில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். இவர் நிறுவனத்துக்குச் சொந்தமான அறையில் தங்கியிருந்தார். இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

கடந்த 26ஆம் தேதி சொந்த ஊருக்குச் சென்று வந்த இளையராஜா, திங்கள் கிழமை பணிக்கு வந்தார். வேலை முடிந்த பின்னர், மாலை நிறுவனத்தில் உள்ள ஓய்வறைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார். ஆனால் அதன் பின் அவர் வரவில்லை. மறுநாள் வேலைக்கும் வராததால், சக ஊழியர்கள், அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் பதிலில்லை. இந்நிலையில், செவ்வாய் அன்று அதிகாலை நிறுவனத்தில் உள்ள ஓர் அறையில் மூக்கு, வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இளையராஜா இறந்து கிடந்தார். இதைக் கண்டதும் இரவுப் பணியில் இருந்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கூறினர். அதன் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் சக்திவேல், எஸ்ஐ தாமோதரன் உள்ளிட்ட போலீசார் அங்கு விசாரணைக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் நிர்வாகத்தினர், இளையராஜா உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

‘‘எதற்காக இங்கிருந்து உடலை எடுத்துச் சென்றீர்கள்’’ என்று நிர்வாகத்திடம் போலீசார் கேட்டபோது, ‘‘வாய், மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. அவர் பிழைத்துக் கொள்வார் என்றுதான் சேர்த்தோம்’’ என்று நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். பின்னர் போலீசார் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

இளையராஜாவின் மரணம் குறித்து அவர் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மகிந்திரா சிட்டிக்கு விரைந்தனர். இளையராஜா மரணம் பற்றி விசாரித்தபோது, சரிவர பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நிர்வாகத்தினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின், இளையராஜா சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முன்பு செங்கல்பட்டு – மதுராந்தகம் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து செங்கல்பட்டு போலீஸார் அங்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘‘பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னர் இளையராஜா கொலை செய்யபட்டது தெரியவந்தால், கொலை வழக்காக மாற்றி விசாரிக்கபப்படும்’’ என்று உறுதியளித்தனர். இதையடுத்து,சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதனிடையே, செங்கல்பட்டு தாலுகா போலீசில் இளையராஜாவின் மனைவி ரேவதி அளித்த புகாரில், ‘கணவரின் சாவில் மர்மம் உள்ளது, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். இதனால், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மகிந்திரா சிட்டியில் உள்ள நிறுவனங்களில், நபர்கள் உள்ளேயோ வெளியேயோ வேற்று நபர்கள் செல்ல கடும் பாதுகாப்பு கெடுபிடிகள் உண்டு. அதையும் மீறி இந்த மர்ம மரணம் நிகழ்ந்திருப்பதால், இளையராஜாவை நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களே கொலை செய்தார்களா அல்லது அவருக்கு ஏதேனும் நெருக்கடி கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீஸார் விசாரித்து வருகின்றனர். அல்லது வெளி நபர்கள் உள்ளே நுழைந்து கொலைச் செயலில் ஈடுபட்டார்களா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காரணம், இதே வளாகத்தில் ஐ.டி. துறையில் பணி புரிந்த சுவாதி என்ற பெண், கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். சர்வதேச நிறுவனங்கள், நபர்களின் ரகசியங்கள் புதைந்த தகவல் தொடர்புப் பணிகள் என்பதால், மென்பொருள் நிறுவன பணியாளர்களின் தொடர் கொலைகளின் பின்னணியில் சர்வதேச கும்பலின் கைகள் இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

மாமல்லபுரம் அருகே காரில் 3 பேர் எரிந்துபோன விவகாரம்: விசாரணையில் அதிர்ச்சி

car fire three died - 2026

சென்னை:

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே மணமை கிராமத்தில் உள்ள தனியார் வீட்டு மனைப்பிரிவு ஒன்றில், கடந்த மாதம் 27ம் தேதி இரவு, கார் தீப்பிடித்து எரிந்து, அடனுள் இருந்த 3 பேர் உடல் கருகி இறந்தனர்.

இது குறித்து விசாரித்தபோது, காருக்குள் இருந்தவர்கள் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜெயதேவன் (52), அவரது மனைவி ரமாதேவி (46), மகள் திவ்யஸ்ரீ (24) என தெரியவந்தது. திவ்யஸ்ரீ இத் தம்பதிக்கு ஒரே மகள் என்பதும், அவருக்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்ததும் தெரியவந்தது. மேலும், அவரது கணவர் சரத் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் ராணுவ மையத்தில் அதிகாரியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இவர்கள் மூன்று பேரின் மரணத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்தனர். மேலும், நேற்று அளிக்கப்பட்ட தடயவியல் துறை சோதனை முடிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில், 3 பேரின் உடல் மீதும் தீ பிடிப்பதற்கு முன்பாக பெட்ரோல் ஊற்றப்பட்டுள்ளதும், கார் இன்ஜின் மற்றும் ஏ.சி இயந்திரத்தில் எந்தவிதக் கோளாறும் ஏற்படவில்லை என்பதும் தெரிய வந்தது.

முன்னதாக, மாமல்லபுரம் போலீசார் கிழக்குக் கடற்கரை சாலை, உத்தண்டி சுங்கச் சாவடியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். அதில் 27ஆம் தேதி இம்மூவரும் வந்த கார் எவ்வித பிரச்னையும் இல்லாமல் செல்வது தெரிய வந்தது. மேலும், சில நாட்கள் முன்பு திவ்யஸ்ரீயின் கணவர் சரத், தாம்பரம் போலீஸ் உதவி ஆணையருக்கு பதிவு தபால் மூலம் புகார் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் வரதட்சணை கேட்டு அடித்ததாக போலீசில் புகார் கொடுப்பேன் என மனைவி திவ்யஸ்ரீ தன்னை மிரட்டுவதாகக் கூறி இருந்தார். இதனை உதவி ஆணையர் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார். அதன்படி, 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் இருந்து ஜெயதேவன், ரமாதேவி, திவ்யஸ்ரீ ஆகியோருக்கு செல்போன் மூலம் அழைப்பு வந்திருப்பதும் தெரியவந்தது.

மேலும், 27ம் தேதி, புகார் கொடுத்த சரத் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்துக்கு வந்து வெகுநேரம் காத்திருந்தாராம். அப்போது, இம்மூவரும் ஏற்கெனவே தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டதும், பதான்கோட்டில் திவ்யஸ்ரீக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணையில் இது வெளியே வந்தால், தங்களுக்கு அவமானம் என்று கருதிய மூவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். மேலும், அவர்கள் 3 பாட்டில்களில் பெட்ரோல் வாங்கியிருப்பதும் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தாம்பரம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரையில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்துவருகின்றனர்.

“தொலைந்துபோன தங்க உத்தரணி!”

kanchi periyava - 2026

“தொலைந்துபோன தங்க உத்தரணி!”

( ”ஏண்டாப்பா… தொலஞ்சு போன பவுன் உத்தரணியை இண்டு இடுக்கெலெல்லாம் தேடிப்டதா
சொன்னேளே… இப்போ நா சொல்லப்போற எடத்ல தேடிப் பாத்தேளானு சொல்லுங்கோ,
பார்ப்போம்…”—-யாருக்காகவோ இதைச் சூசகமாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு, விருட்
டென்று எழுந்தார் ஸ்வாமிகள்)

கட்டுரையாளர்-ரமணி அண்ணா
நன்றி-சக்தி விகடன் 04-03-2014


திருவிடைமருதூர் மகாதான தெருவிலுள்ள ‘ஆர்.எம்.எம். சத்திரம்’ என்கிற பழைய
சத்திரத்தில் முகாமிட்டிருந்தார். சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த
பக்தர்கள் ஸ்வாமிகளைத் தரிசிக்க தினமும் வந்து சென்றனர்.

அடியேன் அப்போது பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். என் தகப்பனார் உள்ளூர்
காஞ்சி மடத்தின் பொறுப்பில் இருந்ததால், அடிக்கடி திருவிடைமருதூர் சென்று
ஆச்சார்யாளை தரிசித்து வருவார். பள்ளி விடுமுறை நாட்களில், என்னையும்
அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் ஸ்வாமிகளை பயபக்தியோடு தரிசித்துப்
பிரசாதம் பெறுவது ஒரு சுகானுபவம்!

ஒரு ஞாயிற்றுக்கிழமை, காலை 8 மணி இருக்கும். தகப்பனாரோடு ஆச்சார்யாளை
நமஸ்கரித்து எழுந்தேன். அவ்வளவாகக் கூட்டமில்லை. தகப்பனாரை அருகில் அழைத்த
ஸ்வாமிகள், ”சந்தானம், ஒங்க கிராமத்தச் சேர்ந்தவாள்ளாம் இங்க
வந்துண்டிருக்காளோன்னோ? எல்லாரையும் வரச் சொல்லு! ஒத்தரும் வெறுமனே திரும்பிப்
போகப்படாது. இங்கேயே சந்திர மௌலீஸ்வர பிரசாதமா ‘வைஸ்வதேவம்’ (போஜனம்)
பண்ணிட்டுப் போகணும். என்ன புரிஞ்சுதா?” எனச் சிரித்துக்கொண்டே, தாயின்
கருணையோடு உத்தரவிட்டார்.

என் தகப்பனார் மிகவும் பவ்யமாக, ”பெரியவா உத்தரவு!” என்று சொல்லிவிட்டு
நமஸ்கரித்தார். அடியேனும் நமஸ்கரித்தேன். பெரியவா விடவில்லை. என் தகப்பனாரைப்
பார்த்து, ”இன்னிக்கு நீ சந்திரமௌலீஸ்வர பூஜையை தரிசனம் செஞ்சுட்டு இங்கயே
‘வைஸ்வதேவம்’ பண்ணிட்டுப் போ!” என்று பணித்தார்.

நானும் தகப்பனாரும் மதிய போஜனத்தை முடித்துக்கொண்டு சத்திரத் திண்ணையில்
சற்றுச் சிரம பரிகாரம் பண்ணினோம். மதியம் 3 மணி இருக்கும். திடீரென்று
சத்திரத்தினுள் ஒரே ஆரவாரம். மடத்தைச் சேர்ந்தவர்கள் அங்குமிங்குமாக ஓடி,
எதையோ பரபரப்பாகத் தேடினர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. விசாரித்தோம்.

மடத்தைச் சேர்ந்த ஒருவர், ”வேற ஒண்ணுமில்லே… பெரியவா சந்திரமௌலீஸ்வர பூஜை
பண்றச்சே அர்க்ய பாத்யம் விடறத்துக்காக கும்மோணத்தைச் சேர்ந்த பெரிய மனுஷர்
ஒருத்தர் தங்கத்துலஉத்தரணி ஒண்ணு பண்ணிக் குடுத்துருந்தார். சுமார் மூணு பவுன்
இருக்கும்! நேத்தி வரைக்கும் பெரியவா பூஜைல அது இருந்துது. இன்னிக்கு அதக்
காணலே. இண்டு இடுக்கெல்லாம் தேடிண்டிருக்கோம். இன்னும் பெரியவாகிட்ட சொல்லலே.
அவாளுக்குத் தெரியாது!” என்று கூறிவிட்டுத் தேடுவதில் முனைந்தார்.

ஸ்ரீமடத்து காரியஸ்தர், ‘இது பெரியவா காதை எட்றதுக்குள்ள எப்டியும்
கண்டுபிடிச்சு வெச்சாகணும்!’ என்று கவலையோடு சொன்னார். சிப்பந்திகளை
ஒவ்வொருவராக அழைத்து விசாரணை பண்ணினார். அனைவருமே தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டனர்.

”எல்லாரையும் விசாரணை பண்ணியாச்சு. ஒருத்தன்தான் பாக்கி!” என்று சொன்ன
காரியஸ்தர், ”உக்கிராண கைங்கர்யம் பண்ற ராமநாதனைக் கூப்பிடு!” என்றார்.

சமையல்கட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்த ஒருவர், ”சமையல்கார ராமநாதன்
அங்கே இல்லே. அவன் அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லேனு பாத்துட்டு வரதுக்காக
தேப்பெருமாநல்லூர் வரைக்கும் போயிருக்கானாம். சாயங்காலம்தான் அவனை
எதிர்பார்க்கலாம்!” என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

மாலை மணி 5. மகா ஸ்வாமிகள் தமது ஏகாந்த அறையை விட்டு வெளியே வந்தார். தம்
பார்வையை நாலாபுறமும் சுழலவிட்டுச் சற்று நின்றார். பிறகு, தமது அறை வாயிலில்
சுவரோரம் போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்தார். சற்று நேரத்தில், கூடத்துப்
பக்கம் பூஜா கைங்கர்யம் பண்ணும் இளைஞன் ஒருவன் வந்தான். அவனை அருகில் அழைத்த
ஆச்சார்யாள், ”ஏண்டாப்பா… நானும் மத்யானத்லேர்ந்து பாக்கறேன்… சத்ரம்
அல்லோலகல்லோலப் பட்டுண்டிருக்கே, என்ன சமாசாரம்? ரொம்பப் பெரிய மனுஷா யாராவது
இன்னிக்கு வரப்போறாளோ?” என்று ஒன்றும் தெரியாதது மாதிரி, சிரித்தபடி கேட்டார்.

அந்த இளைஞன் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணிவிட்டு, ”அப்படியெல்லாம்
ஒண்ணுமில்லே, பெரியவா!” என மென்று விழுங்கினான்.

ஸ்வாமிகள் விடவில்லை. ”ஒண்ணுமில்லேனு சொல்லிப்டா எப்டிடாப்பா! சத்ரமே
அமக்களப்பட்டுண்டிருக்கே! வேறென்னதான் விஷயம்?” என்று சிரித்தபடி வினவினார்
ஆச்சார்யாள்.

அந்த இளைஞன் மிகவும் தயங்கியபடி, ”நீங்க சந்த்ரமௌலீஸ்வர பூஜை பண்றச்சே அர்க்ய
பாத்யம் விடறத்துக்காக வெச்சுண்டிருப் பேளோன்னோ… பவுன் உத்தரணி, அதக் காணலே
பெரியவா! அதத்தான் சத்ரம் முழுக்க இண்டு இடுக்கெல்லாம் தேடிண்டிருக்கா”
என்றான் வருத்தத்துடன்.

அடுத்து பெரியவா ஒரு கொக்கி போட்டார்…

”ஏண்டாப்பா! நம்ம மனுஷ்யா யார் பேர்லயா வது சந்தேகம் இருக்கோ… அப்டி ஏதாவது
பேசிக்கறாளோ?”

அந்த இளைஞன், ”தெரியலியே பெரியவா! காரியஸ்தர் மாமாதான் என்னென்னமோ
சொல்லிண்டிருக்கார். அவரைக் கேட்டா தெரியும்!” என்று சொன்னான்.

”சரி… நீ போய் கார்யஸ்த மாமாவை இங்க வரச் சொல்!” என்று அவனுக்கு உத்தரவிட்டார்
பெரியவா.

அங்கே ஒரு மூலையில் கை கட்டியபடி நின்று, தகப்பனாரும் நானும் நடப்பதைக்
கவனித்துக்கொண்டு இருந்தோம்.

கூடத்துக்கு வந்த காரியஸ்தர், பெரியவாளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார்.
பெரியவா சிரித்துக் கொண்டே, ”ஏண்டாப்பா! பூஜைலேர்ந்த பவுன் உத்தரணிகாணலியாமே?”
என்று கேட்டார்.

”ஆமாம், பெரியவா!”

”என்னிலேர்ந்து காணம்னு ஏதாவது தெரியுமோ?”

காரியஸ்தர் தயங்கியபடியே, ”ரண்டு நாளா சந்திரமௌலீஸ்வர பூஜையின்
உபயோகத்துக்கு உத்தரணியை எடுக்கலே, பெரியவா! இன்னிக்கு பாக்கறச்சே அதக்
காணம்!” என்று மென்று விழுங்கினார்.

”சரி… நீ என்ன நெனைக்கறே?”

”எனக்கு என்ன படறதுன்னா, யாரோ அத எடுத்திருக்கணும்!”

”சரி, யார்னு ஒன்னால அனுமானிக்க முடியறதா?”

”அப்படி தீர்க்கமா சொல்ல முடியலே, பெரியவா. இருந்தாலும், ஒரு பேர்வழி மேல
சந்தேகம் இருக்கு!”

”யார் அந்தப் பேர்வழி?”

காரியஸ்தர் தயங்கித் தயங்கி, ”பெரியவாளுக்குத் தெரியாம ஒண்ணுமே இருக்க
முடியாது. இருந்தாலும், என் மனசுல பட்டதைச் சொல்லிடறேன்!” என்று இழுத்தார்.

”சொல்லு… நானும் தெரிஞ்சுக்கறேன்.”

”நம்ம சமையல் வேலை ராமநாதன்தான்கறது என் தீர்மானம்!” என்று காரியஸ்தர்
பூர்த்தி செய்வதற்குள்… ”அதெப்படி சொல்றே நீ?” என்று மடக்கினார் ஸ்வாமிகள்.

அதற்கு காரியஸ்தர், ”கடந்த பத்துநாளா அந்த ராமநாதன், ‘எங்கம்மாவுக்கு ஒடம்பு
சரியில்லே. கும்மோணம் முனிசிபல் ஆஸ்பத்ரில சேத்து வைத்தியம் பாக்கணும்.
முந்நூறு ரூவா அட்வான்ஸ் வேணும்’னு நச்சரிச்சுண்டே இருந்தான். அது மட்டுமில்லே
பெரியவா, சம்பளத்துல ‘இன்க்ரிமென்ட்’ வேற போட்டுக் கொடுங்கோனு நித்தம்
தொளச்சுண்டிருந்தான். அதனால…”

இடைமறித்த ஆச்சார்யாள், ”அவனுக்குப் பணமுடை இருக்கற காரணத்தால, அவன்தான் இந்த
கார்யத்தப் பண்ணி இருக்கணும்னு முடிவு கட்டிட்டியாக்கும்!” என்று சொல்லிச்
சிரித்தார்.

தொடர்ந்து ஸ்வாமிகள், ”சரி சரி… இப்போ அந்த ராமநாதன் எங்கே இருக்கான்? நான்
கூப்டேன்னு அவன இங்க அழச்சுண்டு வா!” என்றார்.

உடனே காரியஸ்தர், ”அம்மாவுக்கு ரொம்ப ஒடம்பு சரியில்லேனு பாத்துட்டு வரதுக்காக
தேப்பெருமாநல்லூர் வரைக்கும் போயிருக்கான் பெரியவா!” என்று பணிவுடன் சொன்னார்.

”போகட்டும்… அட்வான்ஸும், இன்க்ரிமென்ட்டும் கேட்டான்னியே, அதைப் போட்டுக்
குடுத்துட்டியோ?”

”இல்லே பெரியவா…”

”பின்ன என்ன பண்ணினே?”

”அவன் கேட்ட அந்த ரெண்டு விஷயத்துக்குமே மடத்துல இப்போ சௌகர்யப்படாதுனு
சொல்லிப்டேன், பெரியவா!”

இதைக் கேட்டு ஸ்வாமிகள் சிறிது நேரம் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்துவிட்டார்.

சற்றுப் பொறுத்து காரியஸ்தரைப் பார்த்து, ”சரி, நீ ஒரு கார்யம் பண்ணு! அந்த
ராமநாதன் தேப்பெருமா நல்லூர்லேர்ந்து வந்த ஒடனே, அவனையும் அழச்சிண்டு எங்கிட்ட
வா! புரியறதா?” என்று உத்தரவளித்துவிட்டு, தனது ஏகாந்த அறைக்குப் போனார்.
நாங்கள் அனைவரும் மெய்ம்மறந்து அப்படியே கை கட்டி நின்றிருந்தோம். நேரம்
ஓடிக்கொண்டிருந்தது.

இரவு மணி 8. தேப்பெருமாநல்லூரிலிருந்து ராமநாதன் வந்து சேர்ந்தார். அவரை
அழைத்துக்கொண்டு கூடத்துக்கு வந்தார் காரியஸ்தர். சொல்லி வைத்தாற்போல்
பெரியவாளும் கதவைத் திறந்துகொண்டு வந்து அமர்ந்தார். ஸ்வாமிகளை சாஷ்டாங்கமாக
விழுந்து நமஸ்கரித்தார் ராமநாதன்.

உடனே பெரியவா வாத்சல்யத்துடன், ”ராமநாதா! உன் தாயாருக்கு ஒடம்பு சரியில்லேனு
கேள்விப்பட்டேனே, இப்போ எப்டி இருக்கா?” என்று விசாரித்தார்.

ராமநாதன் கண்கலங்கியபடி, ”வயத்துல ஏதோ கட்டி வந்திருக்காம், பெரியவா!
கும்மோணம் பெரியாஸ்பத்ரில சேத்துதான் ஆபரேஷன் பண்ணணுமாம்…” என்று
முடிப்பதற்குள் ஸ்வாமிகள், ”அதுக்குத்தான் காரியஸ்தர்ட்ட அட்வான்ஸ் கேட்டயா?”
என்று வினவினார்.

”ஆமாம், பெரியவா!”

”இன்க்ரிமென்ட்டும் வேணும்னியாமே..?”

இதற்கு ராமநாதன் பதில் பேசவில்லை.

”ஏன் பதில் சொல்லமாட்டேங்கறே? இப்ப மாசம் என்ன சம்பளம் வாங்கறே?”

”அறுபது ரூவா, பெரியவா…”

”என்ன இன்க்ரிமென்ட் எதிர்பார்க்கறே?”

பதிலில்லை. பெரியவாளும் விடவில்லை.

ராமநாதன் தயங்கியபடியே சன்னமான குரலில், ”மாசம் ஒரு பத்து ரூவா பெரியவா…”
என்று குழைந்தார்.

”மாசா மாசம் எழுபது ரூவா சம்பளம் வேணுங்கறே நீ. அப்டித்தானே?” – இது ஸ்வாமிகள்.

இதற்கும் பதிலில்லை. உடனே காரியஸ்த ரைப் பார்த்த ஸ்வாமிகள், ”இவன் 10 ரூவா
இன்க்ரிமென்ட் கேக்கறான். நீ என்ன பண்றே, இந்த மாசத்துலேர்ந்து இவனுக்கு 15
ரூவா இன்க்ரிமென்ட் போட்டு, எழுவத்தஞ்சு ரூவாயா சம்பளத்தக் குடு. அதுக்கு
முன்னே, இப்பவே இவன் கேட்ட அட்வான்ஸ் ரூவாயக் குடுத்துடு. என்ன, புரியறதா?”
என்று உத்தரவு போட்டார்.

”அப்டியே பண்றேன் பெரியவா!” என்றார் காரியஸ்தர்.

”என்ன ராமநாதா, இப்ப ஒனக்கு சந்தோஷம் தானே?” என்று கேட்டார் ஸ்வாமிகள்.

வாய் பொத்தி, தலையாட்டினார் அவர்.

திடீரென்று பெரியவா, கூடத்திலிருந்த அனைவரையும் பார்த்து, ”ஏண்டாப்பா… தொலஞ்சு
போன பவுன் உத்தரணியை இண்டு இடுக்கெலெல்லாம் தேடிப்டதா சொன்னேளே… இப்போ நா
சொல்லப்போற எடத்ல தேடிப் பாத்தேளானு சொல்லுங்கோ, பார்ப்போம்…” என்று
சஸ்பென்ஸோடு நிறுத்தினார்.

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ‘புரியலியே, பெரியவா?’
என்பதுபோல் ஆவலுடன் ஸ்வாமிகளையே பார்த்தனர்.

ஸ்வாமிகள் சிரித்தபடி தொடர்ந்தார்… ”ஒரு முக்கியமான எடத்ல நீங்க தேடாம
விட்டுட்டேள். இப்ப சொல்றேன், கேளுங்கோ… நித்யம் சந்திரமௌலீஸ்வர பூஜைல
உபயோகப்படுத்தற நிர்மால்ய புஷ்பங்களைக் கொல்லைல கால் படாத எடத்ல கொண்டு போய்
கொட்றேளோன்னோ… அதுல போய்த் தேட வேண்டாமோ பவுன் உத்தரணியை! அதுக்காக இப்பவே
ராத்ரில தேடப்போயிடாதீங்கோ… பூச்சி பொட்டு இருக்கும். கார்த்தால போய்ப்
பாருங்கோ. சந்திரமௌலீஸ்வரர் கிருபையால அது அங்க கெடச்சுடும்.”

யாருக்காகவோ இதைச் சூசகமாகச் சொல்வதுபோல் சொல்லிவிட்டு, விருட் டென்று
எழுந்தார் ஸ்வாமிகள். அனைவரும் விழுந்து நமஸ்கரித்து விடைபெற்றோம்.

அடுத்த நாள் காலை. ஆவலுடன் மகாதானத் தெரு சத்திரத்துள் தகப்பனாருடன்
நுழைந்தேன். தங்க உத்தரணி குறித்து மடத்து காரியஸ்தரிடம் என் தகப்பனார்
விசாரித்தார்.

அவர் சிரித்தபடியே சொன்னார்… ”பெரியவா சொன்னபடியே கார்த்தால கொல்லைல போய்
நிர்மால்ய புஷ்பங்களைக் கிளறிப் பார்த்தோம். பளபளனு அதுல
கிடந்தது தங்க உத்தரணி. ஆனா, அது எப்டி அங்க வந்ததுங்கறது,
சந்திரமௌலீஸ்வரருக்கும் பெரியவாளுக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம்…”

அதைக் கேட்டு, இந்த அடியவன் வியந்து நின்றேன்!

சென்னை ஐஐடியில் நடந்தது என்ன?: உண்மை வெளிவர மூக்குடையும் ஊடகங்கள்!

IIT Madras PhD scholar who participated in beef fest beaten - 2026

சென்னை:

இரண்டு நாள்களுக்கு முன்னால் ஐஐடியில் படிக்கும் கம்யூனிச, இஸ்லாமிய மாணவர்கள் மாட்டுக்கறி விழா நடத்தியிருக்கின்றனர். அதற்கு அடுத்தநாள் ஜெயின் மாணவர்கள் சாப்பிடும்போது அங்கே சென்ற சூரஜ் மாட்டுக்கறியை நீங்களும் சாப்பிட வேண்டும் என்று மிரட்டியுள்ளான். அவனோடு கூட சென்ற இன்னும் இரண்டுபேரும் ஜெயின் சமூக மாணவர்களை மிரட்டியுள்ளனர்.

ஜெயின் சமூதாயத்தவர்கள் அசைவ உணவை சாப்பிடமாட்டார்கள். இது தெரிந்தும் கலவரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜெயின் மாணவர்களிடம் தகராறு செய்தனர்.

அப்போது அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த மணிஷ்குமார் ஜெயின் என்ற மாணவருக்கும் இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அந்த தகராறில் சூரஜ் மற்றும் மணிஷ் குமார் ஜெயினுக்கும் அடிபட்டிருக்கிறது.

மணிஷ்குமாருக்குத்தான் பலத்த அடி. மூன்றுபேர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

இங்குதான் தமிழ்நாட்டின் சில மீடியாக்கள், அமைப்புகள் தங்கள் அயோக்கித்தனத்தை காட்டிவருகின்றன. மணிஷ்குமாருக்கு ஏற்பட்டிருக்கும் காயத்தையோ அல்லது அவர் தரப்பு வாதத்தையோ இதுவரை இந்த கள்ள மீடியாக்களும் கள்ள அமைப்புகளும் காட்டவில்லை. கள்ள மௌனம் சாதித்து வருகிறார்கள்.

சூரஜ் என்ற மாணவருக்கு மட்டுமே அடிபட்டிருக்கிறது என்கிற ரீதியில் மீடியாக்கள் செய்திகளை பரப்பிவருகின்றன. இதில் மணிஷ்குமார் எந்த அமைப்பிலும் இல்லை. ஆனாலும் அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ், ஏபிவிபி என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர் எந்த அமைப்பையோ, கட்சியையோ சார்ந்தவர் அல்ல.

அதைவிட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்னவென்றால் சூரஜ் தமிழ் மாணவனாம். இப்படி பதிவு செய்து தமிழர்கள் மத்தியில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்துவருகின்றனர். சூரஜ் மலையாளி என்று கேரள மாநில முதல்வரே அறிக்கை கொடுத்திருக்கிறார். இவர்களுடைய நோக்கமே ஆர்எஸ்எஸ், பாஜக, ஏபிவிபிக்கு எதிராக கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதே.

இந்நிலையில், சூரஜ் தமிழ் மாணவர் என்று ஒரு தரப்பு செய்திகளை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்ப, கேரள முதல்வரோ மலையாள மாணவர் தமிழகத்தில் அடி பட்டிருக்கிறார், இது குறித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிவிட்டரில் கோரிக்கை விடுக்கிறார்.

ஐஐடியில் கம்யூனிச, இஸ்லாமிய காட்டுமிராண்டித்தனத்தை சகமாணவர்கள் பார்த்துக்கொண்டுதான் வருகிறார்கள். ஒருநாள் எல்லோரும் இவர்களுக்கு எதிராக திரும்ப போகிறார்கள். அப்போது கம்யூனிச, இஸ்லாமிய ரௌடிகள் முழுவதுமான அங்கிருந்து துடைத்து எறியப்படுவார்கள் என்று சமூக நோக்கர்கள் எச்சரிக்கின்றனர்.

செய்தி: ம. வேங்கடேசன்

நம்பியாண்டார் நம்பி குருபூஜை விழா

nambiyandarnambi gurupujai - 2026

குமராட்சியை அடுத்த திருநாரையூரில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள்
குருபூஜை நடைபெற்றது.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் புனர்பூசம் நக்ஷத்திரத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை தொன்று தொட்ட பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று 29-05-2017  திங்கள்கிழமை காலை சிவபூஜையுடன் தொடங்கி ஸ்ரீ கணபதி ஹோமம்,ஆலயத்தில் உள்ள அனைத்து மூர்த்தங்களுக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் மதியம் அன்னதானமும் நடைபெற்றது

காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூர் ஸ்ரீபொல்லாப் பிள்ளையார்
கோயிலில் நம்பியாண்டார் நம்பி குருபூஜை விழா, திருமுறை ரத்தினம் விருது
வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருப்பனந்தாள் காசி மட கிருஷ்ணகிரி பெ.கு.வரதராஜன் அறக்கட்டளை,
ஸ்ரீபொல்லாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் இணைந்து நடத்திய இந்த விழாவில், அன்னதான டிரஸ்ட் நிறுவனச் செயலர் உ.வெங்கடேச தீட்சிதர் வரவேற்றார்.

ஸ்ரீகுருஞானசம்பந்தர் பணி மன்றத் தலைவர் கு.சேதுசுப்பிரமணியன் விளக்கவுரை ஆற்றினார்.

சிதம்பரம் ஸ்ரீமௌன மட ஸ்ரீமௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்னிலை
வகித்துப் பேசினார். விழாவில் சிறகிழந்தநல்லூர் ரா.செந்தில்குமார்
எழுதிய, தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் கையேட்டின் 2-ஆம் பதிப்பை
செங்கோல் ஆதீனம் ஸ்ரீசிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட, முதல் பிரதியை சென்னை என்.சிவக்குமார் பெற்றுக் கொண்டார்.

திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தின் அதிபர் ஸ்ரீமுத்துக்குமாரசாமி
தம்பிரான் தலைமை வகித்து, நம்பியாண்டார் நம்பி விருதாகிய திருமுறை
ரத்தினம் விருதை, திருச்சி திருமுறை மன்றப் பொருளாளர்
கே.சி.என்.மாணிக்கவாசகத்துக்கு வழங்கினார்.

விழாவில் திருவாவடுதுறை கட்டளைத் தம்பிரான் அம்பலவாண தேசிக சுவாமிகள், செங்கோல் ஆதீனம் ஸ்ரீசிவப்பிரகாச தேசிக சத்தியஞான பராமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் அதிபர் ஸ்ரீமுத்துக்குமாரசாமி தம்பிரான், மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் உள்ளிட்டோர் ஆசியுரை ஆற்றினர். தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மைய உதவிப் பொறியாளர் சி.கார்த்திகேயன் நன்றி கூறினார்.

குருபூஜையை முன்னிட்டு பொல்லாப்பிள்ளையார் கோயிலில் திங்கள்கிழமை காலை சிவபூஜையுடன் தொடங்கி கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது.

News: U. Venkatesan

 

வருமானத்துக்கு மீறி சேர்த்த ஜெயலலிதா உள்ளிட்டோரின் 68 சொத்துகள் பறிமுதல் நடவடிக்கை!

jeyalalitha - 2026
சென்னை:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, மேலும் 3 பேர் தங்களது வருமானத்துக்கு அதிகமாக சேர்த்து வைத்த அசையும் மற்றும் அசையா சொத்துகள் 68ஐ பறிமுதல் செய்யும் நடவடிக்கையை நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு தொடங்கியுள்ளது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து 4 ஆண்டு சிறைத் தண்டனை, அபராதம் மற்றும் சொத்துகள் பறிமுதல் ஆகியவை உறுதி செய்யப்பட்டன. ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதன்பின்னர் தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி, ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேரின் சொத்துகளை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதன்படி, இவர்கள் நால்வரும் வருமானத்துக்கு அதிகமாக வாங்கியதாக வழக்கில் காட்டப்பட்டுள்ள சொத்துகள் அமைந்துள்ள, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர். அதில், அந்த சொத்துகளை ஆட்சியர்கள் தங்கள் அதிகாரத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்றும், அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கக அதிகாரி கூறியவை…

6 மாவட்டங்களிலும் இருக்கும் அந்த சொத்துகள் கோடிக்கணக்கில் மதிப்பு கொண்டவை.  அந்த சொத்துகளை அல்லது நிலங்களை அடையாளம் கண்டபிறகு வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இடங்களில் அறிவிப்பு பலகைகளை வைப்பார்கள். அதில், இந்த இடம் தமிழக அரசுக்கு சொந்தம் என்று எழுதப்பட்டு இருக்கும். மேலும், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக ஏற்கெனவே அரசால் முடக்கிவைக்கப்பட்டுள்ள சொத்துகள் தொடர்பான எந்த விதமான பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று பதிவுத்துறைக்கு கடிதம் எழுதுவோம். அந்த வழக்கு தொடர்பாக 128 சொத்துகளை முடக்குவதற்கு உத்தரவிடப்பட்டு இருந்தாலும், 68 சொத்துகளை மட்டுமே பறிமுதல் செய்ய பெங்களூரு தனிநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தச் சொத்துகளில் பெரும்பாலானவை சென்னை, காஞ்சீபுரம் மற்றும் சில மாவட்டங்களில் உள்ளன. இந்த சொத்துகளின் விற்பனை விலை, 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வழிகாட்டி மதிப்பு விலைக்கு இணையாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போதுள்ள சந்தை மதிப்பு பலமடங்கு அதிகரித்துவிட்டது. இந்த சொத்துகளுக்கு தமிழக அரசுதான் இனி உரிமையாளர். அவற்றை அதிகாரபூர்வமாக பயன்படுத்தவும் அல்லது பொது ஏலத்துக்கு விடவும் அரசால் முடியும்.

இந்த வழக்கின் தொடக்க காலகட்டத்தில், அதாவது 1991-ம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவிடம் ரூ.2.01 கோடி மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே இருந்தன. அதற்குப் பிறகு, அதாவது ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் சொத்துகள் வாங்கியதன் வளர்ச்சி திடீர் வேகமெடுத்தது. அரசு பொது ஊழியராக இருந்த ஜெயலலிதாவும், மற்றவர்களும் 1991 முதல் 1996 வரையிலான 5 ஆண்டுகளுக்குள் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி மதிப்புள்ள சொத்துகளை வாங்கிக் குவித்தனர் என்பது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாரின் குற்றச்சாட்டு. ஆனால் இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு தனி நீதிமன்றம் வருமானத்துக்கு அதிகமாக அவர்கள் ரூ.53.60 கோடி மதிப்புள்ள சொத்துகளைச் சேர்த்ததாக கணக்கிட்டு தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும் மற்ற 3 பேருக்கு தலா ரூ.10 கோடியும் தண்டனையாக விதிக்கப்பட்டது… என்றார் அவர்.

இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரது பெயரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் விவரம்:-

1. ஜெ. பார்ம் அவுஸ்

2. ஜெ.எஸ். அவுசிங் டெவலப்மெண்ட்

3. ஜெ ரியல் எஸ்டேட்

4. ஜெயா கான்ட்ராக்டர்ஸ் அண்டு பில்டர்ஸ்

5. ஜெ.எஸ். லீசிங் அண்டு மெயின்டனன்ஸ்

6. கிரீன் பார்ம் அவுஸ்

7. மெட்டல் கிங்

8. சூப்பர் டூப்பர் டி.வி. பிரைவெட் லிமிடட்

9. ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் பிரைவேட் லிமிடட்

10. ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடட்

11. சிக்னோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடட்

12. லெக்ஸ் பிராப்பர்டிஸ் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடட்.

13. ரிவர்வே அக்ரோ புரொடக்ட் பிரைவேட் லிமிடட்.

14. மிடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடட்

15. இந்தோ தோகா கெமிகல்ஸ் அண்டு பார்மசூட்டிகல்ஸ்

16. ஏ.பி. அட்வடைசிங் சர்வீசஸ்

17. விக்னேஸ்வரா பில்டர்ஸ்.

18. லட்சுமி கன்ஸ்ட்ரக்சன்.

19. கோபால் பிரமோட்டர்ஸ்.

20. சக்தி கன்ஸ்ட்ரக்சன்.

21. நமச்சிவாய அவுசிங் டெவலப்மென்ட்.

22. அய்யப்பா பிராபர்டிஸ் டெவலப்மென்ட்ஸ்

23. சீ என்கிளேவ்

24. நவசக்தி கான்ட்ராக்டர்ஸ் அண்டு பில்டர்ஸ்

25. ஓசானிக் கன்ஸ்ட்ரக்சன்.

26. கிரீன் கார்டன் அபார்ட்மென்ட்ஸ்

27. மார்பில் மார்வெல்ஸ்

28. வினோத் வீடியோ விஷன்

29. பேக்ஸ் யுனிவெர்சல்

30. பிரஸ் மஷ்ரூம்ஸ்

31. கோடநாடு டீ எஸ்டேட்

இந்த நிறுவனங்கள் பெயரில் வாங்கப்பட்ட நிலங்கள், சொகுசு பஸ், கைக்கடிகாரங்கள், தங்க-வைர நகைகள் கையகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.

ஜெயலலிதா பெயரில் 1992-ம் ஆண்டு மயிலாப்பூரில் வாங்கப்பட்ட 1,407 சதுர அடி நிலத்துடன் கூடிய கட்டிடம்,

சசிகலா பெயரில் மன்னார்குடியில் 25 ஆயிரத்து 35 சதுர அடி நிலத்துடன் கூடிய கட்டிடம்,

திருவள்ளூர் மாவட்டம், வேலகாபுரம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் நிலம்,

பையனூர் கிராமத்தில் சுமார் 25 ஏக்கர் நிலம்,

ஜெயலலிதா மற்றும் சசிகலா பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேசன் நிறுவனத்தின் பெயரில் சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் கட்டிடத்துடன் கூடிய 4,664 சதுர அடி நிலம்,

ஆலந்தூர், அடையார், சைதாப்பேட்டையில் 55 கிரவுண்ட் நிலம்,

மயிலாப்பூர் லஸ் சர்ச் ரோட்டில் 10 கிரவுண்ட் நிலம்,

சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துக்கு நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலையில் 11 கிரவுண்ட் நிலம், ஆலத்தூரில் 0.63 ஏக்கர் நிலம், கிழக்கு அபிராமபுரத்தில் 3,400 சதுர அடி நிலம் ஆகியவை வாங்கப்பட்டு உள்ளன.

இளவரசிக்கு நீலாங்கரையில் 4,802 சதுர அடி நிலம், சிறுதாவூரில் 22 ஏக்கர் நிலம், மயிலாப்பூர், லஸ் அவின்யூவில் ஒரு கிரவுண்ட் நிலம்,

இவரது மகன் விவேக்கிற்கு சிறுதாவூரில் 1½ ஏக்கர் நிலம், கருங்குழிபள்ளம் கிராமத்தில் 16 ஏக்கர் நிலம்,

வி.என்.சுதாகரனுக்கு சிறுதாவூரில் 29 ஏக்கர் நிலம், சோழிங்கநல்லூரில் 16 சென்ட் நிலம் ஆகியவை உள்ளன.

இதுதவிர சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது பெயரில் நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் தேயிலை தொழிற்சாலையுடன் கூடிய 900 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த 3 பேரும் பங்குதாரர்களாக உள்ள ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடட், சிக்னோரா பிசினஸ் எண்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடட், லெக்ஸ் பிராப்பர்டிஸ் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடட், ரிவர்வே அக்ரோ புரொடக் பிரைவேட் லிமிடட், மிடோ அக்ரோ பார்ம்ஸ் பிரைவேட் லிமிடட் உள்ளிட்ட நிறுவனங்களின் பெயரில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, நீலகிரி உள்பட 6 மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.

அதேபோல, போயஸ் கார்டனில் போலீசார் நடத்திய சோதனையில் சிக்கிய பல பெட்டிகள் கொண்ட நகைகள் தற்போது சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் உள்ளது. அதில், ஜெயலலிதாவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் வழங்கிய 191.47 கிராம் எடைகொண்ட தங்கப்படகு, ஒரு கட்சி தொண்டர் கொடுத்த 191.62 கிராம் எடை கொண்ட தங்கத்தால் ஆன செங்கோல் உள்பட பல ஆயிரம் கிராம்கள் தங்க நகைகள், வைர மோதிரம், வளையல், கம்மல், தங்க வாள், தங்க முலாம் பூசப்பட்ட கைக்கடிகாரங்கள் உள்ளன.

வைஷ்ணவி தேவி கோயிலுக்கு யாத்திரை சென்ற தமிழக பெண் பக்தர் மரணம்

vaishnavi devi temple kashmir - 2026
ஜம்மு:

வைஷ்ணவி தேவி கோயிலுக்கு புனித யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் மரணம் அடைந்தார்.

காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் காத்ரா என்ற இடத்தில் உள்ளது மாதா வைஷ்ணவி தேவியின் குகைக்கோவில். இங்கே வைஷ்ணவி தேவியை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த பெண் சந்திரா (61) என்பவர் தமது குடும்பத்தினருடன் சென்றிருந்தார்.  நேற்று அனைவரும் தரிசனத்தை முடித்து வெளியே வந்தபோது திடீரென சந்திரா மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவ பரிசோதனைகளுக்கு பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவாவில் பிளாஸ்டிக் பை தடை: மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம்

manohar parrikar - 2026

பனாஜி:

கோவாவில் பிளாஸ்டிக் பை பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.  இந்தத் தடையை மீறுவோருக்கு ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோவா சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாகத் திகழ்கிறது. உலகம் முழுவதும் இருந்து இங்கே பயணிகள் வருகின்றனர். எனவே, கோவாவை தூய்மையாக வைத்திருக்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என முதல்வர் மனோகர் பாரிக்கர் அறிவித்தார். கடைகளுக்கு செல்லும் மக்கள் துணிப் பைகளை பயன்படுத்தும் பழக்கத்தினை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வார்களெனில் மாநில அரசால் திறம்பட செயல்பட முடியாது. அரசு தூய்மையான நகரங்களை வழங்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்.  எனினும், சாலையில் குப்பைகளை நாம் தூக்கி எறிகிறோம். நெடுஞ்சாலைகளில் குப்பைகளை சேகரிப்பதற்கு பணிமனைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.  பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என நான் கேட்டு கொள்கிறேன்.
பொதுமக்கள், பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.  வரும் ஜூலை மாதத்தில் இருந்து யாரேனும் பிளாஸ்டிக் பைகள் விற்பது அல்லது வாங்குவது தெரிய வந்தால் அவர்கள் அபராதம் கட்ட வேண்டும். அது சிறிய தொகையாக இருக்காது.  பெருந்தொகையாக இருக்கும்.  அபராதத் தொகை ரூ.5 ஆயிரம் வரை இருக்கும். தொடக்கத்தில் அபராத தொகையில் தளர்வு இருந்தாலும், பின்னர் தடையை கடுமையாக அமல்படுத்த இருக்கிறோம்.
பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது.  இத்திட்டத்தினை தொடக்கத்தில் சிலர் கிண்டல் செய்தனர்.  ஆனால், பொதுமக்கள் தற்பொழுது இதுபற்றி பேசி வருவதுடன், இத்திட்டத்திற்காக பணியாற்றியும் முன் வருகிறார்கள் என அவர் கூறினார்.