Home Blog Page 5624

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்

kavikko abdul rahuman died - 2026

சென்னை:
கவிஞரும், தமிழ்ப் பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) சென்னை பனையூரில் உள்ள அவரது இல்லத்தில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் காலமானார்.

1937ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் பிறந்த அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பயின்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார். சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய நெல்லை மாவட்டம் தமிழூர் ச.வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

பால்வீதி, நேயர் விருப்பம் உள்ளிட்ட கவிதைகளையும், கரைகளே நதியாவதில்லை உள்ளிட்ட கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். 1999-ம் ஆண்டு ஆலாபனை கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றார். தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட 14 விருதுகள் பெற்றவர். ஹைக்கூ, கஜல் உள்ளிட்ட பிறமொழி வடிவ கவிதைகளை தமிழில் பெயர்த்தவர். தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர், சென்னை பல்கலை தமிழ்த் துறை தலைவர் என பல பொறுப்புகளை வகித்தவர் இவர்.

டி.டி.வி. தினகரன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை: வரவேற்க கட்சியினர் மும்முரம்!

ttv dinakaran - 2026

புதுதில்லி:

தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், டி.டி.வி.தினகரனை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய தில்லி தனி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அடுத்து அவர் இன்று வெளிவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை தில்லி குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரா, ஹவாலா ஏஜெண்டு நரேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் தில்லி தனி நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் இவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மூவரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதில் சுகேஷ் சந்திராவின் ஜாமீன் மனு மட்டும் நிராகரிக்கப்பட்டது. தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரின் மனுக்கள் மீதான விசாரணையின் போது, ஜாமீன் தரக்கூடாது என போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனி நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி நேற்று தினகரன், மல்லிகார்ஜூனா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை ஏற்று, தனது தீர்ப்பை வழங்கினார். இருவரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்ட நீதிபதி, தனது தீர்ப்பில் குறிப்பிட்டபோது,

தில்லி போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் மனுதாரர் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என் பார்வையில், இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் தடயங்களை வைத்துப் பார்க்கும் போது சதிச்செயல் நடைபெற்றது என்ற அனுமானத்தை அளிக்கிறது. ஆனால் அனுமானங்களில் அடிப்படையில் சதிச்செயல் தொடர்பான குற்றத்தை நிரூபிக்க முடியாது. வலுவானதும், ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான தடயங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த குற்றச்செயல் நிரூபிக்கப்பட வேண்டும்.

மேலும் மனுதாரரை இனி எந்த வகையான காவலிலும் வைத்து விசாரிக்க தேவை இல்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இடையேயான தொலைபேசி உரையாடல் பதிவுகள் அடங்கிய குறுந்தகடு ஏற்கனவே போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தினகரனின் செல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து இனி கைப்பற்ற வேண்டியது எதுவும் இல்லை.

குற்றம் சாட்டப்பட்டவர் அ.தி.மு.க. கட்சி துணைப் பொதுச்செயலாளர். சமூகத்தில் மிகவும் ஆழமான வேர்களை உடையவர். மேலும் இந்த வழக்கில் லஞ்சம் அளிப்பதாக ஆசை காட்டப்பட்ட அல்லது லஞ்சம் பெறுவதாகக் கூறப்படும் நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த வழக்கின் தகுதி குறித்து இப்போதைக்கு எந்தக் கருத்தையும் பதிவு செய்யாமல், சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு பரிசீலிக்கும் போது மனுதாரர் தினகரனுக்கு ஜாமீன் வழங்குவதில் எவ்வித தடையும் இல்லை. எனவே, அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்படுகிறார். குற்றம் சாட்டப்பட்ட தினகரன் சொந்த ஜாமீன் தொகையாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும். மேலும் இருவர் பிணைத் தொகையாக தலா ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும்.

இந்த வழக்கு தொடர்பான எந்த ஆதாரத்தையோ, சாட்சியங்களையோ அவர் கலைக்கக் கூடாது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி அவர் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது. அவர் தனது பாஸ்போர்ட்டை உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும், எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்… என்று நீதிபதி குறிப்பிட்டார்.

இதே நிபந்தனைகளுடன் மல்லிகார்ஜூனாவும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதை அடுத்து, தினகரன் திகார் சிறையில் இருந்து வெள்ளிக்கிழமை இன்று விடுதலையாகி வெளிவருவார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே தான் வெளியே வரும்போது, தனக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட வேண்டும் என்று தினகரன் விரும்பியதாகவும், அதனை செயல்படுத்த கட்சியினர் ஆயத்தமாகி வருவதாகவும் கட்சியினர் மத்தியில் பேசப்பட்டது.

தேனி அருகே இரு பிரிவினரிடையே மோதல்: போலீஸார் மீது கல்வீச்சு; ஆய்வாளர் படுகாயம்!

cumbum bus stand - 2026

தேனி :

தேனி மாவட்டம் கம்பம் காட்டுப்பள்ளிசாலையில் நேற்று இரவு இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்வீச்சு சம்பவம் நிகழ்ந்தது. மோதலை கட்டுப்படுத்த முயன்ற காவல் ஆய்வாளர் உலகநாதன் மீது கண்மூடித்தனமாக நிகழ்த்தப் பட்ட தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

சென்ற வருடம் நிகழ்ந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, அப்பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த பிரிவினருக்கும் இஸ்லாமியர்கள் தரப்புக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று தொழுகைக்குச் சென்ற பெண்களை வேற்று சமுதாயத்தினர் கேலி செய்ததாக இஸ்லாமியர்கள் தரப்பில் இருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்வதாக போலீஸார் கூறியுள்ளனர்.

இதை அடுத்து, ஜூன் 1 வியாழக்கிழமை நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் கம்பம் வடக்குப் பகுதியில் இஸ்லாமிய இளைஞர்கள் சிலர், தொழுகை முடித்துவிட்டு இரு சக்கர வாகனங்களில் கண்மூடித்தனமாகச் சென்றனராம். இதனை அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் தடுத்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டுள்ளனர்.

இந்து மக்கள் வாழும் அந்தப் பகுதியில் வீடுகள் சந்து பொந்துகள் கொண்டதாக, குறுகலான தெருக்கள் என்பதால், இரு சக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களின் தகவலின் பேரில் அவர்கள் தரப்பைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர்.

அவர்களைத் தடுக்க காவல்துறையினர் வந்தபோது அவர்களையும் அடித்து விரட்டியுள்ளனர், அவர்களில் பலர் காயம் அடைந்தனர். தடுக்க முயன்ற கம்பம் சரக ஆய்வாளர் உலகநாதன், இந்தத் தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்தார். அவர் கம்பம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த சரவணன், கம்பம் வடக்குபட்டியைச் சேர்ந்த மணி இருவரும் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்!

இதை அடுத்து, இந்த வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கம்பம் வடக்கு பகுதி மக்கள் இரவு 12 மணி வரை தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர் தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்து முன்னணி செயலாளர் லோகு, சிவத்தி உள்ளிட்ட ஆறு பேரை கூடலூர் காவல் நிலையத்துக்கு போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இந்தப் பகுதியில் பெரும் மதக் கலவரத்தைத் தூண்ட சமூக விரோதிகள் திட்டமிட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இது கேரள மாநிலத்தை ஒட்டிய பகுதி என்பதால், இங்கே சமூக விரோதிகள், நக்சல் இயக்கத்தினர் ஆயுதப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர், அவர்களை காவல் துறையினர் கண்டு கொள்ளவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 11)

varadharajaperumal - 2026
அயர்வறும் அமரர்கள் அதிபதியைக் கண்டு விட வேண்டும் என்கிற துடிப்பினோடு, பிரமன் வேள்வியை நடத்திக் கொண்டிருந்தான். வசிஷ்டர் மரீசி போன்ற அறிவிற் சிறந்த பெருமக்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த யாகத்தினை தரிசிக்க, பலரும் பெருமளவில் குழுமியிருந்தனர்.

இடர்ப்பாடுகள் தொடர்ச்சியாக ஏற்படுவதையும் அவற்றை எம்பெருமான் உடனுக்குடன் போக்கியருள்வதையும் நினைத்துப் பார்த்த பிரமன் தன்னையுமறியாது பரமனைப் போற்றிக் கொண்டிருந்தான்..

வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கான பகவான், விளக்கொளியாய் வந்ததென்ன; அவனே நரசிங்கமாய்த் தோன்றி விரோதிகளான அஸுரர்களை மாய்த்ததென்ன; இவற்றையே அங்கு அனைவரும் வாய்வெருவிக்கொண்டிருந்தனர்.

நல்ல காரியங்களுக்குத் தடைகள் பல ஏற்படுமாம். ஆம்! தடைகள் ஏற்பட்டால் மட்டுமே அது நல்ல காரியம் என்று கொள்க. நல்லது செய்வதென்றால் எத்தனையெத்தனை தடைகள்.. இதே ஒரு தவறைச் செய்ய முற்பட்டால் தடையின்றி நிறைவேறி விடுகின்றதே… இது என்ன விந்தை!

இவ்விஷயங்களைத் தன் மனதில் அசை போட்டபடியே மெய் மறந்திருந்த அயன், இனியும் தனக்கும் வேள்விக்கும் பிரச்சினைகள் வரும் என்று திடமாக நம்பினான். ஆனாலும் அவன் கலக்கமுறவில்லை..

பக்கத்திலே ஒருவர் அயனை விசாரித்தார் .. பிரமனே! இனியும் பிரச்சனைகள் வருமா என்ன ?

நிச்சயமாக வரும்! இது பிரமன்..

கேள்வி கேட்டவர், பிரமனின் இந்த விடையைச் சற்றும் எதிர்பார்த்திராததால், விழிகள் வெளியில் விழுந்திடத் திகைப்புடன் அவனை நோக்கினார்; நடுநடுங்கிய குரலில், அயனே அத்தடைகளைச் சமாளிக்க நீ தயாராக இருக்கிறாயா என்றார்!

நிச்சயமாக இல்லை! ஸரஸ்வதியை, அவள் கோபத்தினை, அவள் செயல்களை முறியடிக்கும் ஆற்றல் எனக்கிருப்பதாக நான் நினைக்கவில்லை..
இவ்வாறு பிரமன் பதில் சொல்லவும், வினவினவர் விக்கித்துப் போனார்!

சிரித்தான் அஜன் (பிரமன்)!

ஐயா! நான் தயாரில்லை, என்னால் சமாளிக்க முடியாது என்று தான் கூறினேனேயொழிய, எம்பெருமானால் ஆகாது என்று சொன்னேனா ?!

அவன் நம்மை மீண்டும் மீண்டும் ரக்ஷித்திருந்தும், நாம் சந்தேகிக்கலாமா ? என்னைக் கருவியாய்க் கொண்டு இக் காஞ்சீ மாநகர் முழுவதும் தான் நிறைந்திடவன்றோ அவன் திருவுள்ளம் பற்றியிருப்பது!

அசரீரியாய் அவன் ( பரமன் ) பேச, அயமேத வேள்வியை ஆரம்பித்தேன் அடியேன்..ஆம் ஆரம்பத்திலிருந்தே தடைகள் தான்..ஆனால் அவன் துணையால் தடைகள் தூளாகின்றன அன்றோ!

( நமக்கும் இந்த நம்பிக்கை வேண்டும்! எத்தனை பிரச்சினைகள் ஏற்பட்டாலும்; அவன் துணையிருக்கிறான் என்கிற தெளிவு ..அது முக்கியம்..அவன் நிச்சயமாகக் கைவிட மாட்டான்)

பிரமன் நிதானமாக வார்த்தைகளை உதிர்த்தான்.. இப்பொழுது என் எதிர்பார்ப்பெல்லாம் அவன் அடுத்து என்னவாகத் தோன்றப் போகிறான்! அவனை நான் எவ்விதம் துதிக்கப் போகிறேன் என்பது தான்!

விளக்கொளியாய்,ஸிம்ஹேந்திரனாய்த் தோன்றியவனுடைய அடுத்த எழிற்கோலமென்ன; இது தான் என்னுடைய விசாரம்!

பிரமன் இவ்விதம் பேசவும், அவனுடைய உறுதிப்பாட்டினைக் கொண்டாடியபடி வசிஷ்டர் அவனருகே விரைந்தார்!

அஜனே! இறைவன் பால் நீ கொண்டிருக்கும் விச்வாஸம் நிச்சயம் உனக்கு நன்மையே செய்யும்..உன்னால் எங்களுக்கும் மேன்மையே என்றார்!

மேலும், ஸரஸ்வதி.. என்று தொடங்கி மேலே பேச முயன்றவரைக் கை கூப்பித் தடுத்திட்டான்.

ஆத்திரமுடையவர்களுக்கு புத்தி குறைவு என்பார்கள்.. இங்கோ புத்தியே ( புத்தி -அறிவு ) ( = ஸரஸ்வதி ) கோபித்துக் கொண்டு சென்றுள்ளது! அவள் நிச்சயமாக சும்மா இருக்க மாட்டாள்!

ஆனால்..கவலை வேண்டாம்..ஸ்ரீ ஹரி பார்த்துக் கொள்வான் . பிரமனின் இவ்வுரையைக் கேட்டு அனைவரும் மயிர்க்கூச்செறிந்தவர்களாய் பரமனுக்குப் பல்லாண்டு பாடினர்!

அங்கு தன்னாற்றங்கரையில் ஸரஸ்வதி அஸுரர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தாள்!

சம்பராஸுரன், பற்பல அஸுரர்கள் சென்றும் வேள்வியைக் குலைக்க முடியவில்லை.. அடுத்து.. ? சட்டென நினைவிற்கு வந்தவளாய், கலையரசி, காளியின் பெயரை உச்சரித்தாள்.

காளியும் ஸரஸ்வதி முன்பு தோன்றினாள். ஆணையிட்டாள் ஆழ்கலையழகி! ஹே! காளி ..உடனடியாக நீ பலரையும் அழைத்துக் கொண்டு பிரமன் வேள்வி நடத்துமிடம் சென்று, அவ்வேள்வியைக் கெடுப்பாய் என்றாள்!

காளியும் உடனே புறப்பட்டாள்! பல அஸுரர்கள் புடை சூழ!

அட்டஹாஸச் சிரிப்புடன், வெளியில் தொங்கவிடப்பட்ட, கூர்மையான கோரைப் பற்கள் இரத்தக் கறையுடன் விளங்கிட, பற்பல ஆயுதங்களைத் தாங்கியபடி, தீ விழி விழித்தபடி, யாக பூமியில் காளி தோன்றிடவும், அதிர்ந்தனர் அனைவரும்..

ஆனால் பிரமன் மட்டும், அக்கணம் காளியின் எதிர்த்திசை நோக்கியபடி புன்னகை தவழக் கைகூப்பியபடி நின்றிருந்தான்!

இம்முறை, பிரச்சினை வந்த பின்பு அல்ல; காளி தோன்றுவதற்குச் சரியாக ஒரு கணம் முன்னதாகவே எம்பெருமான் தோன்றியிருந்தான்!
அவனைத் தான் பிரமன் கை கூப்பித் தொழுது கொண்டிருந்தான்!

“ஓவி நல்லார் எழுதிய தாமரையன்ன கண்ணும் ஏந்தெழிலாகமும் தோளும் வாயும் அழகியதாம்! ” ..இவர் யார் ?? என்று அனைவரும் வாய் பிளந்து நின்றிருந்தனர்!
யார் அவர் ??
***
பிரமனையும், அவனுடைய வேள்வியையும் ரக்ஷிக்க, எம்பெருமான், எட்டுத் திருக்கரங்களுடன் பல்வகை ஆயுதங்களைத் தாங்கினவனாய்த் தோன்றினான்!
மலர்ந்த முகத்துடன், காளியையும் அவளுடன் வந்த கொடிய அரக்கர்களையும் எதிர்கொண்டான் .. கணப்பொழுதில் வெற்றி இறைவன் வசமானது! காளி விரட்டியடிக்கப்பட்டாள். அரக்கர்கள் மாய்ந்தொழிந்தனர்!

பிரமனுக்காக விரைந்து வந்தவன், வந்த காரியத்தையும் விரைவாக முடித்திட்டான்! பிரமன் பகவானையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். எத்தனை அழகு! ரசிக்காமல் இருக்க முடியுமா ?!

“பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்” தன்னைக் கண்ட ஆடவரையும் பெண் தன்மை கொள்ளச் செய்யும் பேரழகன்றோ அது!

என் பால் எத்தனை அன்பு! எட்டுத் திருக்கரங்களைக் கொண்டு என்னை ரக்ஷிக்க ஒடோடி வந்துள்ளானே!

சித்திரத்திலே வரையப்பட்டது போன்ற அவயவங்களை ( உடல் உறுப்புகளை ) கொண்டிருக்கிறானே! மந்மதனுமன்றோ இவனிடம் தோற்றுப் போவான்! அழியா அழகனை, நித்ய யுவாவை எத்தனை ஏத்தினாலும் தகும்!

ஓவியம் வரைவதிலே தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு வரையப்பட்ட ஓவியத்தைப் போலே, தாமரையையொத்த கண்ணும், கோல மேனியும், ( எண் ) தோளும், வாயும் ..நிறை கொண்டதென் நெஞ்சினையே என்றான் அயன்!

திருவரங்கக் கலம்பகத்திலே, பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் ஸ்வாமியின் அனுபவம் இவ்விடத்திலே நினைக்கத் தகுந்தது!

திருவரங்கனிடத்திலே அசஞ்சலமான பக்தியுடையவர் அவர்! திருவரங்க நாதனை சித்திரமாக வரைய ஆசைப்பட்டார்! வரைந்தும் முடித்தார்!

ஓவியம் அழகாகத் தான் இருந்தது .. அச்சு அசல் அரங்கனை அந்த ஓவியம் காட்டியது . ஆனாலும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிக்கு த்ருப்தியில்லை..
ஓவென அழுதேவிட்டார்!

காரணம் கேட்டபொழுது அவர் சொன்னது இது தான்;

“வாழும் மவுலித்துழாய் மணமும் மகரக் குழை தோய் விழியருளும்
மலர்ந்த பவளத் திருநகையும் மார்விலணிந்த மணிச்சுடரும்
தாழுமுளரித் திருநாபித் தடத்துளடங்குமனைத்துயிரும்
சரண கமலத்துமை கேள்வன் சடையிற் புனலும் காணேனால்
ஆழமுடைய கருங்கடலின் அகடு கிழியச் சுழித்தோடி
அலைக்கும் குடக்காவிரி நாப்பண் ஐவாயரவில் துயிலமுதை
ஏழுபிறப்பிலடியவரை யெழுதாப் பெரிய பெருமானை
எழுதவரிய பெருமானென்றெண்ணாது எழுதியிருந்தேனே! ”

படம் வரைந்தாயிற்று! பார்க்கிறவர்களும் தத்ரூபமாக இருப்பதாகச் சொல்லுகின்றார்கள்!

பின்பு குறையென்ன; ஏன் ஐயங்கார் ஸ்வாமி அழுகிறார்; காரணம் இது தான் ..

படத்தில் இறைவனுக்குத் துழாய் மாலை சாற்றப் பட்டிருக்கிறது..ஆனால் வாசனை வரமாட்டேன் என்கிறதே! துழாய் முடியில் இருந்து நாற்றம் ( வாசனை ) வரவில்லையே என்று ஏங்குகிறார்..

படத்தில் பெருமானுடைய விழிகள் பேசுகின்றன! வாஸ்தவம் தான்..ஆனால் விழி(களின்) அருள் வெள்ளமிடவில்லையே! என் செய்கேன் நான்!

விம்மி வெளி விழுகின்ற சிரிப்பினை, அவ்வனுபவத்தினை இப்படம் தரவில்லையே!

படத்திலிருக்கும் நீலநாயகம் ஒளி வீசவில்லையே! ஞாலமேழுமுண்ட திருவயிரன்றோ! அது காணக் கிடைக்கவில்லையே!

அரங்கன் திருவடிகளே தஞ்சம் என்கிற நினைவோடு, அவனுடைய ஸ்ரீ பாத தீர்த்தத்தைத் தலையில் தாங்கியிருக்கும் பெருமையுடைய சிவன், அவன் சிரஸில் பாய்ந்தோடும் ஹரி பாதோதகமென்னும் கங்கையைக் காணவில்லையே படத்தில்!

உபய காவேரி மத்யத்தில், ஐந்தலை அரவில் ( நாகத்தில் ) துயில் கொள்ளும் எம்பெருமான், அடியவர்களுக்கு முக்தி தருபவன்!
பெரிய பெருமாள் என்று போற்றப்படுமவன்!

ஓவியத்தெழுதவொண்ணா ( ஓவியத்தில் காட்டிட முடியாத பேரழகன் ) உருவமுடையவன், என்பதனை மறந்து அவனைச் சித்திரமாக வரைந்து விடலாம் என்று நினைத்திருந்தேனே! என்னே என் அறியாமை என்று தம்மையே நொந்து கொள்கிறார்!

அட்டபுயகரத்தெம்பெருமானைக் கண்ட பிரமன் நிலையும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் ஸ்வாமி நிலையை ஒத்திருந்தது!

திருமுகமண்டலத்தைக் காண்பேனா! திரு மூக்கு, மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ ?! அறியேன் ( கற்பக வ்ருக்ஷத்தின் கொடி, கொழுந்து போன்ற திருமூக்கு ) கோவைச் செவ்வாயைக் காண்பேனா ?!

எதனை இயம்புகேன்..எதனை விடுகேன் ?!

திண் கைம்மா துயர் தீர்த்தவன் ( கஜேந்த்ரன் என்கிற ஆனையைக் காத்தவன் ) எண் கையனாய் என் முன் நிற்பதே! என்று கதறினான் பிரமன் .
“ஸ பீட்யமாநோ பலிநா மகரேண கஜோத்தம : ப்ரபேதே சரணம் தேவம் தத்ரைவ அஷ்டபுஜம் ஹரிம் ” என்று, அன்று ஆனைக்கு ( இவன் ) அருளையீந்த சரித்திரத்தினை புராணமும் பேசுகின்றது!

ஸத்துக்களுக்கு ( நல்லவர்களுக்கு ) என்றுமே ஆப்தன் ( நம்பிக்கைக்குரியவன், வேண்டியவன் ) நீ தானே!

எல்லை காண முடியாத நற்பண்புகள் கொண்டவனன்றோ நீ!

“ஆதி கேசவன் ” என்கிற திருநாமத்தோடு நீர் இங்கு நித்திய வாஸம் செய்வது என் போல்வாரைக் காக்கத் தானே! என்று கடகடவெனத் துதிக்கலானான் பிரமன்!

புராணம் இத்தலத்தெம்பெருமானை ( அஷ்டபுஜப் பெருமாளை) கஜேந்த்ரனைக் காத்தவனாகவும் போற்றுகின்றது!

தொட்டபடையெட்டும் என்கிற பேயாழ்வார் பாசுரம் இத்தலத்து எம்பெருமானின் கஜேந்த்ர ரக்ஷண வ்ருத்தாந்தத்தையே பேசுகின்றது!

தீய ஸ்வப்னங்களால் உண்டாகும் பயம் நீங்க கஜேந்த்ர வரதனான ” அஷ்டபுஜப் பெருமாளே ” புகல் என்பதறிவீர்களா ??

அப்படியா என்று நீங்கள் புருவங்களை உயர்த்தியிருப்பின், அந்நிலையிலேயே அடுத்த பகுதிக்காகத் காத்திருங்கள்!!!

அடுத்த பகுதியில்… பீஜகிரி க்ஷேத்ர மஹிமை, திருப்பாற்கடல் க்ஷேத்ரப் பெருமை, முக்யமான திருவெஃகா மஹிமை..இவை வெளிவரும்!
அதன் பின்பு தான் அத்திகிரியப்பனின் அருட்பார்வை வெள்ளமிடும்!

***

திருவட்டபுயகரம் – காஞ்சியில் வைகுந்த வாசலுடன் விளங்கும் ஒரே க்ஷேத்ரம் ! எட்டுத் திருக்கரங்களுடன் பகவான் சேவை ஸாதிக்கும் தலம்.
வலப்புறம் உள்ள நான்கு கரங்களில் சக்கரம் , வாள் , மலர் , அம்பு ஆகியவற்றையும், இடப்புறம் உள்ள நான்கு கைகளில் சங்கு, வில், கேடயம் , தண்டு ஆகியவற்றை ஏந்தினபடி இங்கு இன்றும் நம்மைக் காத்து நிற்கிறான் !
ஆதி கேசவன் என்றும் கஜேந்த்ர வரதன் என்றும் அட்டபுயகரத்தான் என்றும் இறைவன் போற்றப்படுகின்றான்..
இந்தத் தலத்திற்கே ” அஷ்டபுஜம் ” என்று பெயர் ! இங்கு உறைகின்றமையால் பெருமான் அட்டபுயகரத்தான் என்றழைக்கப்படுகின்றான் !
“பரகாலன் பனுவல்” ( திருமங்கையாழ்வார் பாசுரம் ) கொண்டு இத்திருத்தலத்தினை நாம் அனுபவிக்கலாம்..
கலியனுக்கு , எம்பெருமான் திறத்தில் அளவற்ற காதல் ! அக்காதல் அவரை தாமான தன்மை ( ஆண் தன்மை ) இழக்கச் செய்து , ஆன்மாவின் உண்மை நிலையான பெண் தன்மையில் பேசச் செய்தது ! அப்பொழுது அவருக்கு ” பரகால நாயகி ” என்று பெயர் !
பெண் தன்மையில் பாடும் பொழுது , பெண்ணான தான் அவனைப் பிரிந்து படும் வேதனைகளை , தானே ( ஒரு பெண்ணாக ) சொல்லுவதாகவும் தன் தாய் சொல்லுவதாகவும், தன் தோழி சொல்லுவதாகவும் பாடுவர் !
திருவிடவெந்தை என்கிற திருத்தலத்தைப் பாடும் பொழுது , மகள் ( பரகால நாயகி ) படுகின்ற வேதனைகளைக் கண்ட அவள் தாயார் , இறைவனைக் குறித்து , என் பெண் உன்னைப் பிரிந்து இத்தனை அல்லல் படுகின்றாளே ! இடவெந்தை ஈசனே !! என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறாய் ?!! உன் மனத்தால் என் நினைந்திருந்தாய் ?! என்று கேட்பதாக அத் திருமொழி அமைந்துள்ளது !!
பெண் தன்மையை அடைந்த ஆழ்வார் படும் சிரமங்களைக் கண்ட பகவான் , அவரைத் தேற்ற ” எட்டுத் திருக்கைகளுடன் ” மிகவுமினியவனாய் காஞ்சியில் ஆழ்வாருக்கு முகம் காட்டினான் !!
பரகால நாயகி , அவனைப் பார்த்து , இத்தனை அழகாயிருக்கிறானே !! இவன் யாரோ என்று அறிந்து கொள்ள விரும்பி, அவனை நேரடியாக வினவாமல் , தள்ளி நிற்கிற ஒருவரிடம் ;
அதோ அங்கே எட்டுத் திருக்கரங்களுடன் பேரழகனாய் ஒருவன் நிற்கிறாரே ; யார் அவர் ?? என்று கேட்டார்.. உடனே இவ்வெம்பெருமான் தானாகவே முன் வந்து ” நான் தான் அட்டபுயகரத்தேன் ” என்று பதில் சொன்னானாம் !!
நான் அஷ்டபுஜன் என்று சொல்லியிருக்கலாம் ! அப்படிச் சொன்னால் நான் தான் எம்பெருமான் என்று சொன்னதாக ஆகும் !! பெருமானுக்கு அதில் விருப்பமில்லை போலும் ! தன்னை வேறொருவனாகப் பொய்யுரைக்கவும் அவன் விரும்பவில்லை !!
எனவே சாமர்த்தியமாக, “அஷ்டபுஜ க்ஷேத்ரத்திலே இருப்பவன் நான் ” என்றானாம் !!
எனவே தான் இப்பதிகத்தில் பாசுரந்தோறும் ” இவரார் கொல் என்ன அட்டபுயகரத்தேன் என்றாரே ” என்று வருகின்றது !
வேதாந்த தேசிகனும் தம்முடைய அஷ்டபுஜாஷ்டகத்தில் , இவ்வெம்பெருமானை அழைக்கும் பொழுது “அஷ்டபுஜாஸ்பதேச ” ( அஷ்டபுஜத்தை இருப்பிடமாக உடையவனே , ஈசனே ! ) என்றருளினார் !
ஆக இத்திருத்தலத்திற்கே அஷ்டபுஜம் என்கிற பெயர் உண்டு என்பதறிந்தோம் !
பிரமன் தொடங்கி பரகால நாயகி வரை அனைவரையும் தன் வசமாக்கிக் கொண்டவன் இவ்வெம்பெருமான் !
அடியவர்களைக் காப்பதைத் தன் பேறாகக் கருதும் இயல்வினன் !
பிரமன் அவன் பெருங்கருணையைத் துதிக்கலானான்..
பெருமானே ! ” உன்னைத் துதிக்கத் தோன்றின துதிக்கை முகனை “( யானை – கஜேந்த்ரன் ) ரக்ஷித்து , கஜேந்த்ர வரதன் என்று பெயர் பெற்றவனன்றோ நீ ! என்றான் !
அழகான சரித்திரம் ..
ஒரு அரசன் , கர்ம வசத்தால் யானை ஆயினன் ! அரசனாய் இருந்த பொழுது ஒரு நாளும் எம்பெருமானைத் துதிக்கத் தவறியதில்லை ! இறையருளால் யானையாய் உருமாறின பின்பும் தன்னிலை மறவாமல் நாடோறும் மலர்களைக் கொய்து வந்து , எம்பெருமானைப் பூசித்து வந்தான் ..
ஒரு நாள் நீர் நிலையில் தாமரை மலர்களை கொய்வதற்காக அந்த யானை முயல , அந்தச் சமயத்தில் அங்கிருந்த பெரிய முதலை ஆனையின் காலைக் கவ்வியது !
கலங்கிப்போனது களிறு ! தன்னை விடுவித்துக் கொள்ள எத்தனை முயன்றும் முடியவில்லை ! பிடிகளும் ( பெண் யானைகளும் ) அதனைக் காக்க முயன்றன ! ஆனால் தோல்வியே மிஞ்சியது !!
ஆயிரம் தேவ வருஷங்கள் பெரிய போராட்டம் தான்..இறுதியில் தன் முயற்சி தன்னைக் காக்காது என்றுணர்ந்த யானை ” நாராயணா ! ஓ மணிவண்ணா ! நாகணையாய் ! வாராய் என்னிஆரிடரை நீக்காய்” என்று அரற்றியது ..
“ஆதி மூலமே” ” ஆதி கேசவா ” என்று உரக்கப் பிளிறியது !
மற்ற தேவதைகள் ” நாஹம் நாஹம் ” ( (ஆதிமூலம் ) நானில்லை ; நானில்லை ) என்று பின் வாங்கினர் ..
இவ்வெம்பெருமான் தான் ஓடோடி வந்து முதலையை முடித்து , ஆனையைக் காத்தான் !
யானை இறைவனுக்கு நன்றி செலுத்தியது ! அஷ்டபுஜப் பெருமாள் தன்னுடைய உத்தரீயத்தினாலே ( மேலாடையினாலே ) தன் வாயில் வைத்து ஊதி யானையினுடைய காயங்களுக்கு ஒத்தடம் கொடுத்தானாம் !!
யானை ஆனந்தக் கண்ணீர் பெருகப் பேசியது ! ஹே ! ஆதி கேசவா ! உன்னைக் கொண்டாடுவேனா ?! உன் அன்பினைக் கொண்டாடுவேனா ?! என்னைக் காக்க நீ வந்த வேகத்தைக் கொண்டாடுவேனா ?!
பராசர பட்டர்
பகவதஸ்த்வராயை நம : என்று அடியவனான யானையைக் காக்க அவன் ஓடி வந்த வேகத்திற்குப் பல்லாண்டு பாடுகிறார் !!
இறைவா.. நீ ” அநாதி : ” ( விஷ்ணு ஸஹஸ்ரநாமம் – 941 ) என்று ஏன் அழைக்கப்படுகிறாய் தெரியுமா ?
மற்றைய தேவர்கள், உன்னைப் புகழ்ந்தாலும் , அவ்வப்பொழுது தாங்களே உயர்ந்தவர்கள் என்று தலைக்கனத்தாலே பிதற்றுகின்றார்கள் ..
“அருளையீ என்னம்மானே ! என்னும் முக்கணம்மானும் பிரமனம்மானும் தேவர் கோனும் தேவரும் ஏத்தும் அம்மான் ” அன்றோ நீர் !
அப்படியான தேவர்களுக்கு நீ அல்ப பலன்களையே வழங்குகிறாய் !
உன்னையே எல்லாமுமாகக் கொண்டிருக்கும் எங்களுக்கோ உன்னையே வழங்குகின்றாய் !
எனக்கே தன்னைத் தந்த கற்பகம் அன்றோ நீ !
எனவே தான் நீ அநாதி என்றழைக்கப் படுகிறாய் !
( ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் , சப்த ஸஹ : ( 912 ) என்கிற திருநாமம் தொடங்கி ருசிராங்கத : ( 945 ) என்கிற திருநாமம் வரை ” ஆனை காத்த கண்ணன் ” விஷயமே என்பது ஸ்ரீ பராசர பட்டர் திருவுள்ளம் !!
காலை கண் விழித்தவுடன் இந்த கஜேந்த்ர ரக்ஷண வ்ருத்தாந்தத்தையும், கஜேந்த்ர வரதனான அஷ்டபுஜப் பெருமானையும் நாம் சிந்தித்தால் , தீய கனவுகளினால் நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதாம் !!
” உத்தாரணோ துஷ்க்ருதிஹா புண்யோ துஸ்ஸ்வப்ந நாசன : ” என்கிறது ஸஹஸ்ரநாமமும் !!
முன்பே ஆதி கேசவன் , கஜேந்த்ர வரதன் என்று அழைக்கப்பட்டவன் இன்றும் அஷ்டபுஜப் பெருமானாய் நம்மைக் காக்கிறான் !!
பிரமன் வேள்வியைத் தொடர்ந்தான் ..
தோல்வியுற்ற காளி தன் தலையைத் தொங்கவிட்டபடி ஸரஸ்வதியிடம் சென்றாள் !
ஸரஸ்வதி அடுத்த பாய்ச்சலுக்குத் தயாரானாள் !! அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தாள் ..
நாமும் அடுத்த பகுதிக்குக் காத்திருப்போம் !!

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

“லீடர் சொல்கிறபடி நடக்கும் குரங்குகள்,யானை”

10482143 599228513527816 46027082804070919 n - 2026

“ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் குரு
சொல்கிறபடி நடப்பதில்லை! என்னைப் பார்த்து,
நீங்களெல்லாம் ஆச்சார்யாள்,பெரியவாள் என்றெல்லாம்
சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால்
செய்யமுடிகிறதில்லை!”–பெரியவா பக்தர்களிடம்.

(லீடர் சொல்கிறபடி நடக்கும் குரங்குகள்,யானை
மற்றும் கட்டெறும்பு,காக்கை-உதாரணம் காட்டி)

சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெரியவாள் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்துக்
கொண்டிருந்தார்கள்.

எதிரே, ஒரு பெரிய மரம்.தடிமனான குரங்கு ஒன்று
வந்து மரத்தில் ஏறியது.பின், இருபது – முப்பது
குரங்குகள் அந்த லீடர் குரங்கைத் தொடர்ந்து
மரத்தில் ஏறின.

பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில்
போடச் சொன்னார்கள்.

லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படிப் போட்டதோ
தெரியவில்லை! ஆனால், மற்றக் குரங்குகள்
ஒவ்வொன்றாக வந்து ஒரு பழத்தை எடுத்துக்கொண்டு
மேலே ஏறிச் சென்றன. லீடர் குரங்கு மட்டும் ஒரு
பழத்தைக் கூடத் தொடவில்லை.

பெரியவாள் சொன்னார்கள்;

“குரங்குகள் போன்ற மிருகங்களுக்குக் கூட ஒரு
discipline இருக்கு!லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன

“காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை
இருக்கும். அந்த லீடர் யானையை follow பண்ணித்தான்
மற்ற யானைகள் செல்லும்.

“ஒரு கட்டெறும்பு செத்துப்போனால், மற்ற
கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.

“ஒரு காக்கை இறந்துபோனால், மற்ற காக்கைகள்
மரத்தில் உட்கார்ந்துகொண்டு துக்கமாய் கதறும்.

“ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள்தான் குரு
சொல்கிறபடி நடப்பதில்லை! என்னைப் பார்த்து,
நீங்களெல்லாம் ஆச்சார்யாள்,பெரியவாள் என்றெல்லாம்
சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால்
செய்யமுடிகிறதில்லை!”

கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த பக்தர்கள் ஒரே குரலாக,
“பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம்”
என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.

“சரி,காலையில் இரண்டு நிமிஷமும், சாயங்காலம்
இரண்டு நிமிஷமும் எனக்காக ஒதுக்குங்கள்,இருபத்துநாலு
மணி நேரத்தில், நாலு நிமிஷம்தான் கேட்கிறேன்.

“காலையில்,இரண்டு நிமிஷம் ‘ ராம,ராம’ என்று
சொல்லுங்கோ;சாயங்காலம்,’சிவ,சிவ’ன்னு சொல்லுங்கோ”

“அப்படியே செய்கிறோம்” என்று சுமார் நூறு பேர்கள்
தெரிவித்துக் கொண்டார்கள்.

அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த
தொண்டர்களிடம், “பத்துப் பனிரெண்டு பேர்களாவது
சொன்ன சொல்லைக் காப்பாத்துவா” என்றார்கள்.

அந்த, யாரோ பத்துப் பனிரெண்டு புண்யாத்மாக்களை
உருவாக்குவதற்காகத்தான், ஆழமான கருத்துடன்,
அரைமணி லெக்சர்!

குரங்கு,காட்டு யானை,கட்டெறும்பு,காக்கை -நமக்கு
நல்ல வழிகாட்டிகள்;அவர்களை(அவைகளை)யாவது
follow பண்ணலாம்தானே?

ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல்: பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க ராமதாஸ் வலியுறுத்தல்

ramadoss - 2026

சென்னை:
ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஊழல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

வேலியே பயிரை மேய்வதைப் போல உழவர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே உழவர்களின் பணத்தை மோசடி செய்திருப்பதால் திருவண்ணாமலை மாவட்ட உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட உழவர்கள் பலமுறை முறையீடு செய்தும் அவர்கள் வழங்கிய விளைபொருட்களுக்கு விலையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்காதது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு நகரில் இயங்கிவரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 50 ஆண்டு கால பாரம்பரியம் கொண்டதாகும். தமிழகத்தில் அதிக அளவில் விளைபொருட்களை கொள்முதல் செய்யும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இது மாநில அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்கப்படும் பணத்திற்கு உடனடியாக பணம் கிடைத்து விடும் என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த உழவர்கள் தங்களின் விளைபொருட்களை அங்கு தான் விற்பனை செய்வார்கள்.

கடந்த 5 மாதங்களுக்கு முன் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 292 உழவர்களிடம் கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1.50 கோடியை தராமல் விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் இராஜசேகரனும், மொத்த வணிகர் கார்த்தி என்பவரும் மோசடி செய்து விட்டனர். அதாவது உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட விளைபொருட்களுக்கு பணம் கொடுக்காமலேயே கொடுத்ததாகக் கணக்குக் காட்டி, அந்தப் பொருட்களை வணிகர் கார்த்தி கொண்டு சென்று வேறு வணிகர்களிடம் விற்பனை செய்து விட்டார். இந்த மோசடிக்கு இராஜசேகரன் துணையாக இருந்திருக்கிறார். இதுதொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாலும் கூட, அவர்களிடமிருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டெடுக்க முடியவில்லை. தங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும் வரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை திறக்க அனுமதிக்க மாட்டோம் என உழவர்கள் கூறி விட்டதால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது.

இதனால் சேத்துப்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சேர்ந்த உழவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உழவர்கள் தங்களின் விளைப்பொருட்களை 30 கி.மீ தொலைவில் உள்ள வேறு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு செல்ல வேண்டியிருப்பதால் கூடுதல் செலவும், நேர இழப்பும் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசோ, ஆளுங்கட்சியினரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் நடத்திய குறைதீர்ப்புக் கூட்டத்தில் உழவர்கள் முன்வைத்த வேண்டுகோளை ஏற்று விற்பனைக் கூடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியரே ஆணையிட்ட பிறகும், அதை விற்பனைக்கூடத்தின் செயலாளர் மாரியப்பன் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. உழவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தை 30 நாட்களில் வழங்குவதாக உறுதியளித்தும், அதை நிறைவேற்றவில்லை. இதனால் உழவர்களின் துயரம் தொடருகிறது.

அதுமட்டுமின்றி ஒழுங்குமுறை விறபனைக் கூடத்தில் பணியாற்றும் எடைப் பணியாளர்கள், சுமைப் பணியாளர்கள் உள்ளிட்ட தற்காலிகப் பணியாளர்கள் கடந்த 5 மாதங்களாக வேலை வாய்ப்பின்றியும், ஊதியமின்றியும் வாடுகின்றனர். குடும்பச் செலவுகளுக்கும், குழந்தைகளின் படிப்புச் செலவுக்கும் பணம் இல்லாமல் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர். விற்பனை செய்த பொருட்களுக்கு பணம் கிடைக்காத மன உளைச்சலில் கோட்டுப்பாக்கம், வயலூர் கிராமத்தைச் சேர்ந்த இரு உழவர்கள் உயிரிழந்து விட்டனர். ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறக்கப்படாததால் அதன் பணியாளர்களின் துயரமும், பணம் வழங்கப் படாததால் 292 உழவர்கள் குடும்பங்களின் துயரமும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்குடன் எதிரொலி மணியன் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் குழு, தமிழக அரசின் வேளாண்மைத் துறை செயலாளர்ட் ககன்தீப்சிங் பேடி, வேளாண்மை சந்தைப்படுத்துதல் மற்றும் வணிக ஆணையர் சுன்னோங்கம் ஜடாக் சிரு, மாவட்ட ஆட்சியர் ஆகியோரை சந்தித்து பேசியது. அப்போது மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலாளர் மாரியப்பன் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் உழவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். ஆனால், அதன்பிறகும் அதற்கு ஏற்பாடு செய்ய மாரியப்பன் மறுத்து வருகிறார். இதனால் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.

சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆண்டுக்கு ரூ.150 கோடி அளவுக்கு வணிகம் செய்கிறது. தமிழக அரசும், விற்பனைக்கூட அதிகாரிகளும் நினைத்தால் ஒரே நாளில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு, உழவர்களுக்கு நிலுவைத் தொகையும், பணியாளர்களுக்கு வேலையும் கிடைக்க வகை செய்ய வேண்டும். மேலும் முடங்கிக் கிடக்கும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மீண்டும் திறந்து செயல்பட வைக்க வேண்டும்.

TGTE urges Tamil diaspora to extend their sincere support

0

srilanka tamils - 2026

NEW YORK:

The devastating floods and landslides in southern Sri Lanka have extracted a heavy toll of life and property causing immense suffering for thousands. According to latest figures 164 have died, 104 are still missing and more than 100,000 people have been dislocated.
The Transnational Government of Tamil Eelam (TGTE) calls upon the international community to contribute generously towards the rescue and rehabilitation of populations affected by the floods. The TGTE also appeals to the global Tamil diaspora to extend their sincere support to alleviate the suffering of victims and volunteer efforts to help deal with the unfolding calamity through all possible avenues.

In this moment of humanitarian crisis it is imperative for all concerned show solidarity with the victims of this unprecedented tragedy. In the long run the current crisis indicates the need for better preparedness and improvements in infrastructure at the local levels throughout the island of Sri Lanka to mitigate the impact of such natural disasters.

Visuvanathan Rudrakumaran (Prime Minister, Transnational Government of Tamil Eelam TGTE)

தென்னிலங்கை மக்களுக்கு உதவுக: நாடு கடந்த தமிழீழ அரசு வேண்டுகோள்

srilanka tamils - 2026

தென்னிலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஊக்குவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சாளரும், விசுவநாதன் ருத்ரகுமாரன் தலைமையிலான சர்வதேச நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) சர்வதேச சமூகத்தை வெள்ளம் பாதித்த மக்களுக்கு மீட்பு மற்றும் புனர்வாழ்வுகளுக்கு தாராளமாக பங்களிப்பு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தைத் தணிக்கவும், எல்லாவிதமான வழிகளிலும் வெளிப்படையான பேரழிவுகளைத் தீர்ப்பதற்கு உதவியாக தன்னார்வ முயற்சிகளை நீக்குவதற்கான அவர்களின் உண்மையான ஆதரவை நீடிப்பதற்காக TGTE உலகளாவிய புலம்பெயர் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மனிதாபிமான நெருக்கடியின் இந்த தருணத்தில் இது முன்னொருபோதும் இல்லாத துயரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியிலும் ஒற்றுமைக்கு அவசியமானது என்று ருத்ரகுமாரன் கூறினார்.

இலங்கையின் தீபகற்பம் முழுவதிலும் நீண்டகாலமாக நிகழும் இயற்கை பேரழிவுகளினால் பாதிப்படைந்த மக்களின் தற்போதைய நெருக்கடியைக் குறைப்பதற்காக உள்ளூராட்சி மட்டத்தில் உள்கட்டமைப்பில் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் தேவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார்குடி வட்டாட்சியர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராம.கோபாலன்

rama gopalan - 2026

சென்னை:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டாட்சியரின் சட்டவிரோத, மக்கள் விரோத செயலைக் கண்டிக்கிறோம். அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கோரியுள்ளார்.

அவரது அறிக்கை:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட மூவாநல்லூர் சாலை அருகில் அனைத்து இந்து சமுதாயத்திற்குமான சுடுகாடு, இடுகாடு அமைந்துள்ளது. காலகாலமாக இந்துக்கள் பயன்படுத்தி வரும் இந்த இடத்திற்கு அருகில் உள்ள சுமார் 18000 சதுரடி விவசாய நிலத்தை தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் முஸ்லீம்களுக்கான புதிய இடுகாடு அமைக்க விலைக்கு வாங்கி உள்ளனர். இதற்கு வட்டாட்சியிர் திருமதி. செல்வசுரபி, மக்கள் கருத்து கேட்காமல், மக்கள் பிரதிநிதிகளின் கருத்தை கேட்காமல், மன்னாகுடி நகராட்சியிடம் கருத்து கேட்காமல், சட்டவிரோதமாக, தன்னிச்சையாக அனுமதி வழங்கி உள்ளார்.
இதனை எதிர்த்து கடந்த 30.5.2017 அன்று மன்னார்குடியில் கண்டன பேரணி நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமான ஆண்களும் பெண்களும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று தங்களது ஆட்சேபணையை பதிவு செய்துள்ளனர். இந்த அறப்போராட்டத்தில் அனைத்து கட்சியினரும், அனைத்து இந்து சமுதாயத்தினரும் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களின் எதிர்ப்புக்கு மதிப்பளித்து, முறைகேடாக அனுமதி வழங்கிய உத்திரவை திரும்பப் பெற மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

முஸ்லீம் அமைப்பின் இந்த செயல்பாடு பொது அமைதியை கெடுப்பதாகவும்ம், வன்முறையை தூண்டுவதாகவும் இருக்கிறது என்பதை மாவட்ட காவல்துறை உணர்ந்து தகுந்த நடவடி்ககை எடுக்க வேண்டும்.

சட்டவிரோதமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கையை தமிழக அரசை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் அரசியல் கட்சிகளை கண்டிக்கிறோம்: இந்து முன்னணி

vp jeyakumar - 2026

சென்னை:

மாடுகளை காப்பதற்காக, உச்சநீதி மன்ற வழிகாட்டுதலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தை எதிர்க்கும், இந்து விரோதமாக செயல்படும் அரசியல் கட்சிகளை, அமைப்புகளை இந்து முன்னணி கண்டிக்கிறது என்று இந்து முன்னணி அமைப்பின் மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயகுமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

மாடுகள் பெருமளவில் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. நல்ல கறவை மாடுகள், கன்றுகள் முதலானவற்றை சந்தை மூலம் வாங்கி லாரி லாரியாக கேரளாவிற்குக் கொண்டு சென்று கொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் பெருமளவில் கால்நடை செல்வங்கள் குறைந்துவிட்டன. நாடு முழுவதும் இது பெரிய பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.

இதனை தடுக்க உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மிருகவதை தடுப்பு சட்டத் திருத்ததிற்கு காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள் முதலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிலும் இந்த சட்டம் முஸ்லீம்களுக்கும், விவசாயிகளுக்கும் எதிரானது என பேசுவது உண்மைக்குப் புறம்பானது.

தமிழகத்தில் தொடர்ந்து இந்து விரோதமாக செயல்பட்டு வரும் பிரிவினைவாத அமைப்புகள், தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், இடதுசாரி அமைப்புகள், முஸ்லீம் அமைப்புகள், கிறிஸ்தவ அமைப்புகள் ஆகியவற்றை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் 85% மாட்டிறைச்சி சாப்பிடாத இந்துக்கள் பெரும்பான்மையானவர்கள். அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் இவர்கள் கருத்து தெரிவிப்பது கண்டனத்திற்குரியது. தொடர்ந்து இந்துக்களின் உணர்வுகளை, நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் அரசியல்வாதிகளின் செயல்பாட்டை முடிவுக்குக் கொண்டு வர இந்து முன்னணி மக்களை கேட்டுக்கொள்கிறது.

இயற்கை விவசாயம் பெருக வேண்டுமானால், கால்நடைகள் அவசியம் தேவை. நமது பேராசை இயற்கையை அழிப்பதில் தான் முடிகிறது. கால்நடைகளையும், மரங்களையும் அழித்ததால் இன்று மழை வளம் குறைந்து, மண் வளம் குறைந்து விவசாயம் பொய்த்து போய் வருகிறது. இரசாயன உரங்களால், பூச்சி கொல்லி மருந்துகளால் தீராத வியாதி ஏற்படுகிறது.

விவசாயம் செழிக்கவும், இயற்கை பாதுகாக்கப்படவும் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தத்தை ராஜஸ்தான் உயர்நீதி மன்றம் வரவேற்றுள்ளது. பசுவை தேசிய விலங்காக அறிவிக்கவும், பசுவதை செய்வோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கவும் பரிந்துரைத்துள்ளது. கேரள உயர்நீதி மன்றத்தில் இடதுசாரிகள் தொடுத்த வழக்கில், மத்திய அரசின் திருத்தத்தை படித்து பார்த்தீர்களா? மதுரை உயர்நீதி மன்றம் புரிந்துகொண்டுதான் தடை விதித்ததா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கோ, மேலும், மாட்டு சந்தை மூலம் இறைச்சிக்கு மாடுகள் விற்கப்படுவதைத் தடுக்கிறதே தவிர, விவசாயிகள் மூலம் மாடுகள் வாங்குவதை இச்சட்டம் தடுக்கவில்லை. இறைச்சி கூடங்களுக்குத் தடை விதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. இளம் கன்றுகளை, பால் கொடுக்கும் பசுக்களை பாதுகாப்பதே இதன் நோக்கம்.

ஆடுகள் பெரும்பாலும் விவசாயிகள் மூலமே விற்கப்படுகிறது. அதுபோல மாடுகள் விவசாயிகள் மூலம் விற்றால் கால்நடை உற்பத்தி பெருகுவதுடன், விவாயிகளுக்கும் அதிக வருமானம் கிடைக்கவும் வழி ஏற்படுத்துகிறது இச்சட்டத்திருத்தம்.

ஜனவரி மாத்தில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் மாடுகளை காப்போம் என்பதுதான் முக்கியமான கோரிக்கையாக எழுந்தது. இந்த கோரிக்கையை இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாட்டிறைச்சி தடை என பேசி, கறிக்காக ஏங்கும் சீமான், திமுக செயல்தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், இடதுசாரி தலைவர்களுக்கு இந்து முன்னணி சார்பில் சீனாவின் சிறப்பு உணவான பாம்பு கறி, தவளை கறி, பன்றி கறி இலவசமாக இந்து முன்னணி அனுப்பி வைக்கும் போராட்டத்தை நடத்தும்.

இந்துக்கள் தெய்வமாக வழிபடும் பசுவை காப்பதற்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்ட திருத்தத்தை இந்து முன்னணி ஆதரிக்கிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கோபூஜை செய்து இந்து முன்னணி இதனை கொண்டாடும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.