Home Blog Page 5848

ஹைதராபாத் மாணவர் தற்கொலை விவகாரத்தில் பண்டாரு தத்தாரேயா மீது வழக்கு பதிவு

 

ஹைதராபாத்:

ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்திலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட தலித் மாணவர் ரோகித் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஹைதராபாத் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அவர்கள் மீது மாணவரை தற்கொலைக்குத் தூண்டியதாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரோஹித் வெமுலாவின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் குண்டூர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ரோஹித், பல்கலைக்கழக மானியக் குழுவின் இளநிலை ஆய்வு அறிஞர்களுக்கான (JRF) உதவித்தொகையை பெற்றுவந்தார். இந்தப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் வட்டத்தில் ரோகித் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் சக மாணவர்களுடன் சேர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யாகூப் மேமன் தூக்கிலிடப்படுவதற்கு எதிராக போராடினார்.

இந்தப் போராட்டத்தின் போது, பா.ஜ.க., சார்பிலான மாணவர் அமைப்பு ஏபிவிபி.,யுடன் மாணவர்களுக்கு இடையிலான மோதல் வெடித்தது.  மேலும் மாணவர்கள் தாக்கியதாக ஏபிவிபி.,யைச் சேர்ந்த ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் அந்த மாணவர்கள் மீது முதற்கட்ட விசாரணையை தொடங்க அனுமதியளித்தது.

மத்திய அமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகு, போராட்டத்தில் ஈடுபட்ட ரோகித் உள்ளிட்ட 5 மாணவர்களை கடந்த டிசம்பர் 21ம் தேதி விடுதி, உணவகம், நூலகம் என்று மாணவர்கள் பயன்படுத்தும் பொதுவெளிகள் எதையும் அவர்கள் பயன்படுத்தக் கூடாது என்று பல்கலைக் கழகம் உத்தரவிட்டது.

நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள் கடந்த ஒரு வாரகாலமாக பல்கலைகழக வளாகத்திற்கு வெளியே கூடாரம் அமைத்து போராடி வந்தனர்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் சமூக புறக்கணிப்பாலும், தொடர் நெருக்கடிகளாலும் மனமுடைந்த ரோகித், தலித் பேராசிரியர்கள்கூட தங்களுக்கு ஆதரவாக இல்லையே என்று தன் நண்பர்களிடம் தனது ஆதங்கத்தை கூறியுள்ளார். தொடர்ந்து சில மணி நேரத்தில் விடுதி அறைக்குள் நுழைந்த அவர் தூக்கு மாட்டிக் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் ரோகித்தின் உடலை வைத்துக் கொண்டு, மாணவர்கள் நேற்றிரவு முழுவதும் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் பல்கலைக்கழகத்திற்குள் அதிரடியாக நுழைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 8 மாணவர்களைக் கைது செய்து ரோகித்தின் உடலைக் கைப்பற்றினர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், பலியான வெர்முலா ரோகித்தை தற்கொலைக்கு தூண்டியதாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்செயல்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மீது ஹைதராபாத் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ரோஹித் தற்கொலையைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.அவர் எழுதிய 5 பக்க தற்கொலைக் குறிப்பு இப்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதிமுகவின் ஊழல் அரசுக்கு கடைசி வாய்ப்பு கிடைத்திருக்கிறது : மருத்துவர் ராமதாஸ்

 
அதிமுகவின் ஊழல் அரசுக்கு நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் லோக் ஆயுக்தா சட்டம், மதுவிலக்கு அறிவிப்புகளை வெளியிடகடைசி வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
மருத்துவர் ராமதாஸ் 12-01-2016 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது :-.
தமிழ்நாட்டின் 14-ஆவது சட்டப்பேரவையின் கடைசிக் கூட்டத்தொடர் நாளை மறுநாள் ஆளுனர் ரோசய்யா உரையுடன் தொடங்குகிறது.ஆட்சியாளர்கள் நினைத்தால் கடந்த 5 ஆண்டுகளாக செய்த பாவங்களுக்கு பரிகாரமாக சில நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு, சில சிறந்த சட்டங்களை இயற்ற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
 
2011-ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற ஜெயலலிதா மக்கள் நன்மைக்காக செயல்படுத்திய திட்டம் என்று பெருமிதத்துடன் சொல்லிக்கொள்ள ஒன்று கூட இல்லாதது மிகப்பெரிய சோகம் தான்.ஆனால், மக்களை பாதிக்கும் வகையிலான செயல்பாடுகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். குறிப்பாக ஊழலும், மதுவும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக மக்களை பாடாய்படுத்தி உருக்குலைத்து விட்டன.
 
சத்துணவுக்கு முட்டை வாங்குவதில் தொடங்கி நியாயவிலைக் கடைகளுக்கு துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்புகளை கொள்முதல் செய்வது, தனியாரிடம் மின்சாரம் வாங்குவது, கிரானைட், ஆற்று மணல் மற்றும் தாதுமணல் குவாரிகளை அனுமதிப்பது வரை அனைத்திலும் ஊழல் தலைவிரித்து ஆடியது.
அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் குறித்து ஆளுனரிடம் ஆதாரங்களுடன் புகார் கொடுத்து அடுத்த மாதத்துடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், இதுவரை அதன் மீது விசாரணை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், ஊழல்கள் மட்டும் தடையின்றி தொடர்கின்றன.மற்றொரு பக்கம் மது மக்களை அழித்துக் கொண்டிருக்கிறது. அதை ஒழிக்க வேண்டிய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்து மது விற்பனை செய்வதன் மூலம் மக்களிடமிருந்து பணத்தை பறித்துக் கொண்டே இருக்கிறது.
 
5 ஆண்டுகளில் அரசு மதுக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்ட மது வகைகளின் மதிப்பு சுமார் ரூ.1.90 லட்சம் கோடி ஆகும். இதில் அரசுக்கு வரி வருவாயாக கிடைத்த ரூ.1.20 லட்சம் கோடி தவிர மீதமுள்ள ரூ.70 ஆயிரம் கோடி அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரும் நடத்தும் மது ஆலைகளுக்குத் தான் வருமானமாக கிடைத்திருக்கிறது. அரசின் மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு மது விற்பனை மூலம் தான் கிடைக்கிறது என்பது மிகப்பெரிய அவமானமாகும்.
ஆனால், அதைப் பற்றியெல்லாம் ஜெயலலிதா அரசு கவலைப்படவில்லை. அனைத்து விதிமுறைகளையும் மீறி தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறப்பது, 4 வயது குழந்தைக்கு கூட மது புகட்டப்படுவதற்கு காரணமாக இருப்பது என அனைத்து சீரழிவுகளுக்கும் தமிழக அரசு உற்ற துணையாக இருக்கிறது.தமிழகத்தின் மிக மோசமான இந்த இரு தீமைகளையும் ஒழிக்க வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி, தொடங்கப்பட்ட நாளில் இருந்தே போராடி வருகிறது. இரு தீமைகளையும் ஒழிப்பதற்கான செயல்திட்டங்களையும் பா.ம.க. வகுத்துத் தந்திருக்கிறது.ஆனால், இந்த தீமைகளை ஒழிப்பதை விட வளர்ப்பதில் தான் தமிழகத்தை ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன.
 
ஊழலை ஒழிப்பதற்காக 20 மாநிலங்களில் லோக்ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் லோக்ஆயுக்தா ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் அத்தகைய லோக்ஆயுக்தா ஏற்படுத்தப்படவில்லை. அதேபோல், கேரளத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதலும், பிகாரில் வரும் ஏப்ரல் முதலும் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அதற்கான அறிகுறியே தென்படவில்லை.
 
தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப் படுத்தப்படும் என்று ஆளுனர் உரையில் அறிவிக்க வேண்டும்; இதே கூட்டத்தொடரில் லோக்அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்ட முன்வடிவை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் பதவியிலிருந்து விலகும் போது பாவத்தின் சுமையில் ஓரளவையாவது இறக்கி வைத்துவிட்டு செல்லலாம். இல்லாவிட்டால் மக்களின் கோபத்திற்கு ஆளாகி விரட்டியடிக்கப்படுவது உறுதியாகிவிடும்.
 
ஒருவேளை இந்த ஆட்சியில் மது விலக்கு அறிவிப்பும், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதும் சாத்தியமாகவில்லை என்றால், இவற்றை பா.ம.க. சாத்தியமாக்கும். ஏற்கனவே உறுதியளித்தவாறு பா.ம.க. ஆட்சியில் முதல் கையெழுத்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்காகவும், முதல் சட்டம் ஊழல் ஒழிப்புக்கான லோக்அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்காகவும் தான் இருக்கும் என்பது உறுதி என்று மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

அதிமுகவின் ஆதரவால் அரசு வழக்கறிஞரான எம்.எல்.ஜெகன் திமுகவில் இணைகிறாரா ?

 
கடந்த சிலமாதங்களுக்கு முன் விகடனில் வெளியான கட்டுரையை அறிக்கையாக வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.விசாரணைக்காக கருணாநிதி, காலை 10.30 மணியளவில் நீதிமன்றத்தில் ஆஜரானர். கருணாநிதியுடன் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.
 
அப்போது வடசென்னை தெற்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளரும் உயர்நீதிமன்ற குற்றபிரிவு அரசு வழக்கறிஞருமான எம்.எல் ஜெகன் இன்று உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதியை வாழ்த்தி வணங்கி வரவேற்றார். பதிலுக்கு கலைஞர் குலம்விசாரித்து மனம் நேகிழ்ந்தார்.திமுக மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு மூலம் வழக்கறிஞர் எம்.எல் ஜெகன் திமுக பொருளாளர் மு.க ஸ்டாலினிடம் நன்கு அறிமுகமானவர்.
 
இந்த நிலையில் எம்.எல் ஜெகன் திமுகவில் இணைய இருப்பதாகவும் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அவருக்கு திமுகவின் சார்பில் வேட்பாளராக போட்டியிட பி.கே.சேகர்பாபு மூலம் டிக்கட் ரெடியாகிவிட்டதாக எனும் கேள்வியுடன் தகவல் வாட்ஸ்ஆப்பில் வைரலாக
பரவிவருகிறது.
 
அத்துடன் வழக்கறிஞர் எம்.எல் ஜெகன் எப்போதோ ஜெயலலிதாவின் காலில் விழுந்து வணங்கிய புகைப்படமும், அவர் இன்று நீதிமன்றத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதியை வாழ்த்தி வணங்கி வரவேற்ற புகைப்படமும், பரவிவருகிறது. அதிமுகவின் ஆதரவால் அவருக்கு எம்.எல் ஜெகனுக்கு அரசு வழக்கறிஞர் பதவி கிடைத்ததாக சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது .
 
முதலமைச்சர் ஜெயலலிதா திமுக தலைவர் கருணாநிதி மீது வழக்கு தொடர்ந்த அவதூறு வழக்கை மார்ச் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் உத்தரவிட்டார்.

தென்காசியை தனி மாவட்டமாக அமைத்திடவேண்டி ஆர்ப்பாட்டம்

 தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைத்திட வலியுறுத்தி பாவூர்சத்திரத்தில் தென்காசி தனி மாவட்ட இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
     தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைத்திட வேண்டும் என்று தென்காசி மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் இந்நிலையில் ஆவுடையானூர் ராமஉதயசூரியன் தென்காசி தனிமாவட்ட இயக்கம் துவக்கி அதன்முலம் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து தென்காசி தனி மாவட்ட இயக்கம் சார்பில் பாவூர்சத்திரம் காமராசர்சிலை அருகில் தென்காசி தனி மாவட்ட இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பாளர் ராமஉதயசூரியன் தலைமை வகித்தார், சென்னெல்தாபுதுக்குளம் ராமசாமி, மதிமுக மாவட்ட பிரதிநிதி ஆசிரியர்  சொக்கத்தங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கீழப்பாவூர் வட்டார தலைவர் முருகேசன், நகர செயலாளர் அய்யத்துரை, விடுதலைசிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் துரைஅரசு, செயற்குழு உறுப்பினா வர்க்கீஸ், நாம்தமிழர் கட்சி ஒன்றிய நிர்வாகி ராசு, திராவிடர் விடுதலைக்கழகம் அன்பரசு, மாசிலாமணி, ஆதிதமிழர் பேரவை மணிவேல், தமிழபுலிகள் குமரேசன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்
அருணாப்பேரிகலையரசன் வரவேற்று பேசினார் ஆர்ப்பாட்டத்தில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம அமைத்திட வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மதிமுக தென்காசி நகர செயலாளர் வெங்கடேஸ்வரன், கடையம் ஒன்றிய செயலாளர்மதியழகன், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர்கள் மருதப்பபாண்டியன், தண்ணீர் தண்ணீர் செல்வம், மானூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மன்னார் கோயில் பஞ் தலைவர் சண்முகவேல், ஆலங்குளம் நகர செயலாளர் அருணா,அம்பை ஒன்றிய செயலாளர் தவசிபாண்டியன், நகர செயலாளர் முத்துசாமி, ரெங்கசாமி, வேல்ராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்
 தட்சணமூர்த்தி நன்றி கூறினார்

ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு தொழிலதிபர் குடும்பத்தினரை துப்பாக்கி முனையில் கடத்திய 3 பேர் கைது

 
கோவையில் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு தொழிலதிபர் குடும்பத்தைக் துப்பாக்கி முனையில் கடத்திய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
 
கோவை சுண்டக்காமுத்தூர் எம்.எம்.கார்டன் பகுதியைச் சேர்ந்த அருள்குமரன் என்பவர் நகைக்கடைகளுக்கு தங்கம் விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் இருந்த அருள்குமரன், அவரது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரையும் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்தினர். பின்னர் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் அடைத்து வைத்து 1 கோடி ரூபாய் பணம் மற்றும் தங்கக் கட்டிகளைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
 
 
இந்நிலையில் இதுதொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த டி.தம்பிராஜ், அந்தோணி, பரமசிவம் ஆகியோரை பீளமேடு காவல் துறையினர் கைது செய்தனர். பாஸ்கர், ஜான்சன், மகாராஜன் ஆகியோரை தேடி வருகின்றனர். 2 துப்பாக்கி, 32 தோட்டாக்கள், கத்தி, கார், 60 பவுன், ரூ.10,740 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தல் கும்பலைச் சேர்ந்த மேலும் 3 பேரைப் பிடிக்க, மூன்று தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

அதிமுகவினரின் விளம்பரக் கலாச்சாரத்தோடு எந்தக் கட்சியும் கனவிலும் போட்டி போட முடியாது : திமுக

 
விளம்பரக் கலாச்சாரம் குறித்து திமுகவினருக்கு அக்கட்சியின் தலைமை “அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும்” என்ற தலைப்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
திமுகவினருக்கு அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது :-.
2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற அ.தி.மு.க. வினர் கடைப் பிடித்து வரும் விளம்பர முறைகள், போக்குவரத்து நெருக்கடியையும் பாதசாரிகளுக்கு இடைஞ்சலையும் ஏற்படுத்தி, அரசியல் விளம்பரமே ஆதிக்கச் சக்திகளின் ஆக்கிரமிப்பு தான், வெற்றுச் செல்வாக்குக்கான அத்துமீறல் மற்றும் மலிவான தந்திரம் தான் என்ற வெறுப்பையும், கோபத்தையும் மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றன.
 
31-12-2015 அன்று சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. வின் பொதுக்குழுவையொட்டி, ஜெயலலிதா வசிக்கும் போயஸ் தோட்ட மாளிகை முதல், திருவான்மியூரில் நிகழ்ச்சி அரங்கம் வரை சுமார் 12 கிலோ மீட்டர் துhரத்திற்கு சாலைகளின் இரு மருங்கிலும், நடுவிலும் மூன்று வரிசைகளில் ஜெயலலிதாவுக்காக வைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான விளம்பர சாதனங்கள், அ.தி.மு.க. அறிமுகப்படுத்தியுள்ள விளம்பரக் கலாச்சாரத் தின் உச்சம்; எந்த அளவுக்கு இந்த விளம்பரங்கள் பொதுமக்களிடம் முகச் சுளிப்பையும் முணுமுணுப்பையும் ஏற்படுத்தின என்பதை நடுநிலை நாளேடுகள் படம் பிடித்துக் காட்டியிருந்தன.
 
சாலைகளை மறிக்கும் பேனர்களில் தொடங்கிய அதிமுக வின் விளம்பரக் கலாச்சாரம் ஜெயலலிதா ஸ்டிக்கர் வரை சென்று விட்ட கொடுமையைப் பார்த்துக் கண்டிக்காதவர்கள் இல்லை; தரம் தாழ்ந்த இந்த நிலை எண்ணிக் கைகொட்டிச் சிரிக்காதார் இல்லை. இனி எந்தக் கட்சியும் அ.தி.மு.க. வினரின் விளம்பரக் கலாச்சாரத்தோடு போட்டி போடக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு, அது மிகவும் கீழே தாழ்ந்து அரசியலில் தலைகுனிவை உண்டாக்கி விட்டது.
 
அ.தி.மு.க. விலாவது, இப்படிப்பட்ட கட் அவுட்களை, அவர்களுடைய தலைவிக்கு மட்டுமே வைப்பதோடு நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் நம்முடைய கழகத்திலே உள்ள சிலர், தங்கள் தங்கள் கட் அவுட்களை, பேனர்களை, ப்ளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு வைத்துக் கொள்வதில் நாட்டம் காட்டி வருவதால், அது பொதுமக்களிடம் பெருத்த வெறுப்பைத் தான் ஒட்டு மொத்தக் கழகத்திற்கும் உண்டாக்கி விடும்.
 
அதனால் தான் ஏற்கனவே ஒரு முறை கழகத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருடைய உருவப் படங்களைத் தவிர வேறு யாருடைய உருவப் படங்களையும் கழக நிகழ்ச்சிகளுக்காக விளம்பரச் சாதனங்களை வைக்கும் போது, விளம்பரப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டது.
ஆனால் அண்மைக் காலத்தில் இந்த நோக்கம் மறைந்து, நாமும் அது போல விளம்பரம் செய்து கொள்ளத் தொடங்குவதால், பொதுமக்களும், பொதுவாகச் சிந்திக்கக் கூடியவர்களும் நம்மையும் அ.தி.மு.க. வோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகி விடும் என்ற பழமொழியை யாரும் மறந்து விடக் கூடாது.
எனவே அத்தகைய போக்கினை கழகத்தினர் உடனடியாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டு என்று திமுகவினருக்கு அக்கட்சியின் தலைமைக் கழகத்தால் வெளியிடப் பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.ஏ. தேர்வில் சென்னை மாணவர் இந்திய அளவில் முதலிடம்

சென்னை:

கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.), பொது செயல்திறன் (சி.பி.டி.) தேர்வு முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டன. இதில், சென்னை மாணவர் அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார்.
பள்ளிப் படிப்பை முடித்து நேரடியாக சி.ஏ. படிப்போர் சி.பி.டி. தேர்வை எழுத வேண்டும். இதில், தேர்ச்சி பெறுவோர் இடைநிலைத் தேர்வுகளான (ஐ.பி.சி.) குரூப்-1, குரூப்-2 தேர்வுகளை முடித்து, சி.ஏ. இறுதித் தேர்வை எழுதலாம். பட்டப் படிப்பை முடித்தோர் இடைநிலைத் தேர்வுகளை எழுதிமுடித்து, சி.ஏ. இறுதித் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்.

2015-ஆம் ஆண்டு நவம்பரில் நடத்தப்பட்ட சி.ஏ. தேர்வு, டிசம்பரில் நடத்தப்பட்ட சி.பி.டி. தேர்வு முடிவுகளை ஐ.சி.ஏ.ஐ., ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. நாடு முழுவதும் இருந்து தேர்வு எழுதிய 42,469 பேரில் 2,440 பேர் தேர்ச்சி பெற்றனர்.  இதில், குரூப்-1 தேர்வை எழுதிய 77,442 பேரில் 9,764 பேரும், குரூப்-2 தேர்வை எழுதிய 75,774 பேரில் 9,084 பேரும் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் சி.பி.டி. தேர்வு எழுதிய 99,077 பேரில் 34,129 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சி.ஏ. இறுதித் தேர்வில் சென்னையைச் சேர்ந்த மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ 800-க்கு 595 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளார். இதையடுத்து, திருப்பதியைச் சேர்ந்த நகோலு மோகன் குமார் 572 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், கொல்கத்தாவைச் சேர்ந்த அவினாஷ் சஞ்செட்டி 566 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளார்.

மீண்டும் மீண்டும் ‘மை வீச்சு’ நாடகம்: பாஜக., சதி காரணமாம்!

 

புது தில்லி,

தில்லியில் மீண்டும் மை வீச்சு நாடகம் அரங்கேறியது. இதற்கு பாஜக சதியே காரணம் என வழக்கம்போல் குற்றம் சாட்டினார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். கார்கள் ஓட்ட கட்டுப்பாடு விதித்த திட்டத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது பெண ஒருவர் மை வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தில்லியில், வாகனங்களின் பெருக்கத்தால் காற்று மாசுபாடு அதிகரித்து விட்டது. எனவே, மாசுபாட்டை குறைக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை தில்லி மாநில அரசு அறிமுகப்படுத்தியது. ஒற்றைப்படை பதிவு எண்ணில் முடியும் வாகனங்களும், இரட்டைப்படை பதிவு எண்ணில் முடியும் வாகனங்களும் வேறு வேறு நாட்களில் இயக்கப்படுவதுதான் அந்த திட்டம். அத்திட்டத்தை பரீட்சார்த்தமாக 15 நாட்கள் அமல்படுத்த திட்டமிடப்பட்டது. கடந்த 1–ந் தேதி தொடங்கி, 15–ந் தேதி வரை திட்டம் அமலில் இருந்தது. இதனால் காற்று மாசுபாடும் குறைந்தது என்று கூறப்படுகிறது.

அந்த திட்டத்தின் வெற்றிக்காக தில்லி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி நேற்று நடத்தியது. சாத்ரசால் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தில்லி போக்குவரத்து அமைச்சர் கோபால் ராய், தில்லி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இருப்பினும், அந்தக் கூட்டத்தில், அரவிந்த் கேஜ்ரிவால் பேசத் தொடங்கியபோது, பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், போலீஸ் தடுப்புகளை மீறி திடீரென எழுந்து சென்று அரவிந்த் கேஜ்ரிவாலை நெருங்கி, அவர் மீது மை வீசினார். சில காகிதங்களையும் விசிறி அடித்தார்.

இந்தச் சம்பவத்தால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து சென்று, அந்தப் பெண்ணைப் பிடித்து அங்கிருந்து வெளியேற்றிக் கொண்டு வந்தனர்.  விசாரணையில், அந்தப் பெண், தான் ‘ஆம் ஆத்மி சேனா’வைச் சேர்ந்தவர் என்று தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்து வெளியேறி அதிருப்தியாளர்களால் துவக்கப்பட்ட அமைப்பு இது. அவர் ஒரு பஞ்சாபிப் பெண் என்றும் தெரிகிறது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு வழக்கம்போல், பாஜக.,வின் சதி காரணம் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

கட்-அவுட் கலாசாரம் மக்களிடம் வெறுப்பை வளர்க்கிறது; திமுக.,வினர் கட்டுப்பாடுடன் நடக்க தலைமை அறிவுரை

சென்னை:

கட் அவுட் கலாசாரம் மக்களிடம் பெரும் வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது. அவ்வாறு வெறுப்பை ஏற்படுத்தும் வகையில், திமுக.,வினர் கட்-அவுட்டுகளை வைக்கக் கூடாது என்று அந்தக் கட்சியின் தலைமை அறிவுரை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

 அதிமுகவின் பொதுக்குழுவையொட்டி, அந்தக் கட்சியினர் வைத்த கட்-அவுட்டுகள், விளம்பரங்கள் பொதுமக்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்தது. அந்தக் கட்சியிலாவது இதுபோன்ற கட்-அவுட்டுகளை அதிமுகவின் பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு வைப்பதுடன் நிறுத்திவிடுகின்றனர்.

 ஆனால், திமுகவில் உள்ள சிலர் தங்கள் கட்-அவுட்டுகளை, பேனர்களை வைத்துக் கொள்வதில் நாட்டம் காட்டி வருகின்றனர். இது பொதுமக்களிடம் பெருத்த வெறுப்பை திமுகவுக்கு உண்டாக்கும்.

 ஏற்கெனவே, தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் ஆகியோருடைய உருவப் படங்களைத் தவிர, வேறு யாருடைய உருவப் படங்களையும் கட்சி நிகழ்ச்சிகளுக்காக விளம்பரச் சாதனங்களை வைக்கும்போது, விளம்பரப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டது. அண்மைக் காலத்தில் இந்த நோக்கம் மறைந்து, விளம்பரம் செய்து கொள்ளத் தொடங்குவதால், பொதுமக்களும், பொதுவாகச் சிந்திக்கக் கூடியவர்களும் அதிமுகவுடன் திமுகவை ஒப்பிட்டுப் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். “அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகிவிடும்’ என்ற பழமொழியை யாரும் மறந்துவிடக் கூடாது. எனவே, இந்தப் போக்கை திமுகவினர் உடனடியாகத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ஜல்லிக்கட்டு தடையை நீக்க அடுத்த ஆண்டு பாரதீய ஜனதா முயற்சி மேற்கொள்ளும் : தமிழிசை சவுந்தரராஜன்

 
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே பாரிவாக்கத்தில் தைப் பொங்கல் தமிழர் கலாச்சார விழா தமிழக பாரதீய ஜனதா சார்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
 
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தால், நிரந்தர தடை வந்துவிடும் என சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக, தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
 
மேலும் அவர், ஜல்லிக்கட்டு தடையை நீக்க அடுத்த ஆண்டு பாரதீய ஜனதா முயற்சி மேற்கொள்ளும். ஜல்லிக்கட்டு நடத்த மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வர பரிசீலனை செய்ய வேண்டும் என கூறினார்.மேலும், ஈவிகேஎஸ் மத்திய அரசு மீது குறைகூறுவதை நிறுத்திவிட்டு தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி பூசலை சரி செய்ய முயற்சிக்க வேண்டும் என்றார்.
 
அடுத்த ஆண்டு முதல் முழு தடையையும் நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தமிழக பாரதீய ஜனதா தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.