Home Blog Page 5987

லஞ்ச வீடியோ வெளியாகி நெருக்கடி: பிஹார் அமைச்சர் குஷ்வாஹா ராஜினாமா

பாட்னா:

பிஹாரில் மாநில அமைச்சர் அவதேஷ் குமார் குஷ்வாகாவும் லாலு கட்சியின் வேட்பாளர் முத்ரிகா யாதவும் லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோ வெளியானதையடுத்து, தனது அமைச்சர் பதவியை குஷ்வாகா ராஜினாமா செய்தார்.

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவரான குஷ்வாகா, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக உள்ளார். கிழக்கு சம்பரன் மாவட்டம், பிப்ரா தொகுதியில் போட்டியிடும் இவர், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.4 லட்சம் லஞ்சம் பெறும் ரகசிய வீடியோ நேற்று முன்தினம் வெளியானது.  தொடர்ந்து, ஜெகனாபாத் தொகுதியில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் முத்ரிகா யாதவ் லஞ்சம் வாங்குவது போன்ற மற்றொரு வீடியோவும் வெளியானது.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் வசிஷ்ட நாராயண் சிங் ஆகியோர், இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினர். இதன் முடிவில், குஷ்வாகாவை பதவி விலகுமாறு கேட்டுக் கொள்வதாகவும், பிப்ரா தொகுதியின் வேட்பாளரை மாற்றுவது என்றும் முடிவு எடுத்ததாகத் தெரிகிறது.

இந்தத் தகவல் வெளியானதும், குஷ்வாகா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஆளுநரின் ஒப்புதலுக்காக நிதிஷ் குமார் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் தன் மீதான லஞ்சக் குற்றச்சாட்டை குஷ்வாகா மறுத்துள்ளார். “என் மீது லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்ததால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். அரசியல் எதிரிகள் எனக்கு எதிராக சதித் திட்டம் தீட்டி உள்ளனர். எனினும், மக்களின் முன்பு இதுதொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவேன்” என்று அவர் கூறியுள்ளார்.

லஞ்ச வீடியோ விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆர்.லட்சுமணன், “அமைச்சரும், மற்றொரு வேட்பாளரும் லஞ்சம் வாங்கியது தொடர்பான வீடியோவுடன் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளோம். அறிக்கை கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பிஹார் பேரவைக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியான இந்த வீடியோவால், நிதிஷ் குமார் தலைமையிலான மெகா கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

தாத்ரி சம்பவத்தில் பிரதமர் மௌனம் ஏன்?: பிருந்தா காரத்

சென்னை:
தாத்ரி படுகொலைச் சம்பவத்தை பிரதமர் நரேந்திர மோடி கண்டிக்காமல் மௌனம் காப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொறுப்பாளருமான பிருந்தா காரத் கேள்வி எழுப்பினார்.
திங்கள்கிழமை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது…

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்குச் செல்லும்போது சொல்வதற்கு மாறாக, இங்கு உள்ளவர்கள் மதமாற்றத்தில் தொடங்கி, மாட்டுக்கறி வரை அரசியல் செய்து நாட்டைப் பிளவுபடுத்தும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை மோடி கண்டுகொள்வது இல்லை.
 
இந்துக்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும், மத ரீதியாக பகைமை பாராட்டுபவர்களை நிராகரிக்க வேண்டும் என்றும் பிகார் தேர்தல் பிரசாரத்தில் மோடி கூறினார். ஆனால், தாத்ரி படுகொலைச் சம்பவம் தொடர்பாக அவர எதுவும் கண்டித்துப் பேசவில்லை. அந்தச் சம்பவம் நடந்தபோது அமெரிக்காவில் இருந்த அவர், அங்கிருந்தே கண்டித்திருக்க முடியாதா? கண்டித்துவிட்டு, அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால், அது பொருத்தமாக இருந்திருக்கும் என்று கூறினார்.

பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி மறுத்த நீதிபதி

பீகாரின் கைமுர் பகுதியில் இன்று(அக்.,12) நடைபெறுவதாக இருந்த பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என மாவட்ட நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இரண்டு முறை பா.ஜ.,வினர் கோரிக்கை விடுத்தும், அதனை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார்.

பீகார் சட்டசபை தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று(அக்., 12) நடைபெற உள்ளது. இந்நிலையில் அடுத்தகட்ட தேர்தலுக்கான, பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்தை கைமூர் பகுதியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைமுர் பகுதி வெகு காலமாக ஜார்கண்ட் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லை பகுதியாக விளங்குகிறது. மாவோயிஸ்ட் பாதிப்புக்கு உள்ளான இப்பகுதியில் மோடியின் பிரசாரத்தை நடத்த பா.ஜ., அனுமதி கேட்டிருந்தது. இதற்கு அனுமதி அளிக்க மாவட்ட நீதிபதி துவேஷ் ஷெக்ரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஷெக்ரா, மாவட்ட தேர்தல் அதிகாரியாகவும் இருந்து வருகிறார். கைமூர் மாயிஸ்ட் பாதிப்பு நிறைந்த பகுதி என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமரின் கூட்டத்தை நடத்த அனுமதி வழங்க முடியாது என ஷெக்ரா திட்டவட்டமாக கூறி விட்டார். இதனால், 30,000 பேருக்கு மேல் கூட்டம் கூட்ட மாட்டோம். பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்து விட்டோம் என்பது உள்ளிட்ட பல விஷயங்களை கூறி பா.ஜ., மீண்டும் அனுமதி கேட்டது. தொடர்ந்து 2வது முறையாக கேட்டும், அனுமதி தர முடியாது என கூறிவிட்டார்.

பிரதமரின் கூட்டத்திற்கு அனுமதி அளிக்காததற்கு பீகார் அரசின் அழுத்தமே காரணம் என பா.ஜ., மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். போலீசார் அனுமதி அளித்த பிறகும் கூட மாவட்ட நீதிபதி அனுமதி அளிக்க மறுக்கிறார். இதனால் பிரதமரின் கூட்டத்திற்கு நீங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என பா.ஜ., சார்பில், பீகார் மூத்த தேர்தல் அதிகாரி அஜய் வி நாயக்கிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

டூவீலரில் சென்ற இருவர் சரமாரியாக வெட்டி கொலை

திருநெல்வேலியின் சாலியர் பகுதியில் டூவீலரில் சென்ற இருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டடுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. மாரியப்பன், சண்முகம், ராஜ்குமார் ஆகியோர் நெல்லையில் கட்டிட தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் சாலியர் பகுதியில் டூ வீலரில் சென்ற போது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தினர். இதில் மாரியப்பன், சண்முகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராஜ்குமார் படுகாயமடைந்துள்ளார். திருநெல்வேலி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

என்ஜினீயர் கொலை வழக்கில் சரண் அடைந்த யுவராஜுக்கு 5 நாள் சி.பி.சி.ஐ.டி காவல்

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் 5 பேர் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி தினமும் நாமக்கல்லில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசில் கையெழுத்து போட்டு வருகின்றனர்.

இந்த கொலை வழக்கில் தேடப்பட்ட தீரன் சின்னமலை இயக்க தலைவர் யுவராஜ் மாறு வேடத்தில் வந்து நேற்று காலை சரண் அடைந்தார். அவரது வழக்கறிஞர் பழ.ஆனந்த் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை ஆய்வாளர் பிருந்தாவிடம் அதற்கான கடிதத்தை கொடுத்தார். பின்னர் யுவராஜ் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் தரையில் அமர்ந்து இருந்தார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி நாகஜோதி, கூடுதல் சூப்பிரண்டு ஸ்டாலின் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை தொடர்பாக அவரிடம் நூற்றுக்கணக்கான கேள்விகளை போலீசார் கேட்டனர். அதற்கு யுவராஜ் பொறுமையாக பதில் அளித்தார். இரவு 7 மணி வரை அவரிடம் விசாரணை நடந்தது. ஆனால் அவர் தனக்கும், என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலைக்கும் தொடர்பு இல்லை என்று கூறினார்.

விஷ்ணு பிரியா தற்கொலை குறித்தும் அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. பின்னர் இரவு 7 மணிக்குப் பிறகு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் யுவராஜை மருத்துவ பரிசோதனை செய்து அவர் நல்ல உடல் நிலையில் இருப்பதாக சான்றிதழ் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்மதி வீட்டில் யுவராஜை ஆஜர்படுத்தினார்கள். அவரை இன்று காலை 11 மணிக்குப்பிறகு மீண்டும் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், அதுவரை தற்காலிகமாக சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து யுவராஜ் நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்று பகல் 11.25 மணிக்கு அவர் நீதிமன்றத்தி ல் ஆஜர்படுத்தப்பட்டார். இதையொட்டி 300–க்கும் மேற்பட்ட போலீசார் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர். வேனில் இருந்து தலையில் துண்டை போர்த்தியபடி யுவராஜ் கோர்ட்டுக்குள் அழைத்து வரப்பட்டார்.

அவரை 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு யுவராஜ் வழக்கறிஞர் கிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். யுவராஜீக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை. எனவே அவரை போலீஸ் காவலில் விசாரணைக்கு அனுப்பக்கூடாது என்று வழக்கறிஞர் கூறினார். வழக்கு விசாரணையை பிற்பகல் 1 மணிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி மலர்மதி கூறினார்.

இன்று பிற்பகல் விசாரணைக்கு பிறகு யுவராஜுக்கு 5 நாள் சி.பி.சி.ஐ.டி. காவல் வழங்கப்பட்டது.

இந்த கொலை வழக்கில் தேடப்படும் யுவராஜின் கூட்டாளி அருண் இன்னும் 2 நாட்களில் தென் மாவட்டத்தில் ஒரு கோர்ட்டில் சரண் அடைய உள்ளதாக யுவராஜின் நண்பரும், வழக்கறிஞருமான அருள்அரசு கூறிஇருந்தார். அவரை விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அருண் பதுங்கி இருக்கும் இடம் குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

 

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு விசாரணைகளை முடிக்க சிபிஐ.க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

2ஜி ஊழலையடுத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு ஊழல் விவகாரம் நிலக்கரி சுரங்க முறைகேடு.நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு என்பது, ‘‘மத்தியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நிலக்கரி வளங்களை பொது ஏல முறையில் உயர்ந்த ஏலதாரருக்கு வழங்காமல், முறையற்ற மற்றும் விதிகளின்றி 142 நிலக்கரி நிலத்தொகுதிகளை தனியார் மற்றும் பங்கு சந்தையிலுள்ள பொது நிறுவனங்களுக்கு சுரங்கம் அமைக்க உரிமம் வழங்கியதால் அரசுக்கு சுமார் 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக” தலைமை கணக்காயர் அலுவலகம் தெரிவித்த குற்றம்சாட்டே ஆகும்.

இந்த முறைகேடு தொடர்பான பல்வேறு வழக்குகளை உச்சநீதிமன்றம் கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமராக இருந்த காலத்தில் சுரங்கத் துறையையும் சேர்த்து கவனித்து வந்ததால் வழக்கில் அவரையும் சேர்க்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்தது. ஆனால், சிபிஐ இந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது.

தற்போது, வழக்கு தொடர்பான விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் டிசம்பர் 31-ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சிபிஐ.க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வோக்ஸ்வேகன் டீசல் கார்கள் விற்பனைக்கு தடை

 

ஜெர்மனியை சேர்ந்த பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ‘வோக்ஸ்வேகன்’, அதன் டீசல் கார்களில் செய்த மாசு கட்டுப்பாட்டு முறைகேடுகளைப் பற்றிய தகவல் கடந்த மாதம் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையான இ.பி.ஏ. மூலம் வெளிவந்தது.

இதில், வோக்ஸ்வேகன் நிறுவனம் உலக அளவில் விற்பனை செய்த ஒரு கோடியே பத்து லட்சம் டீசல் கார்களில், மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு செய்துள்ளது என, இ.பி.ஏ., குற்றஞ்சாட்டியது. இதனையடுத்து தவறை ஒப்புக்கொண்ட அந்நிறுவனம் டீசல் கார்களில் செய்த மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரு கோடியே பத்து லட்சம் கார்களைக் கண்டறிந்து அவற்றின் எஞ்ஜின்களை மாற்றித் தருவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவில் விற்பனை செய்யப்பட்ட 1950 வோக்ஸ்வேகன் டீசல் வண்டிகளை திரும்ப பெற்று, தவறுகள் சரி செய்யப்பட்டு திரும்ப அளிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 1946 ஸ்போர்ட் வகை கார்களாகும். சீனாவில் அதிகம் விற்பனையாகும் டீசல் கார்களில் வோக்ஸ்வேகன் தயாரிப்புகள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டிய முறைகேட்டை காரணமாக சொல்லி வோக்ஸ்வேகன் டீசல் கார்கள் விற்பனைக்கு சிங்கப்பூர் அரசு தடைவிதித்துள்ளது.

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டவர் பிரேத பரிசோதனைக்கு முன் உயிருடன் எழுந்தால் சிக்கலில் அரசு மருத்துவர்

ரமணா திரைப்படத்தில் இறந்து போன ஒருவரை உயிருடன் இருப்பதாக கூறி தனியார் மருத்துவமனை ஒன்று பணம் பறிப்பதாக இருக்கும் காட்சி தனியார் மருத்துவமனைகள் செயல்படும் அவலத்தை காட்டியது.

ஆனால் மேற்குரிய சம்பவத்திற்கு நேரெதிராக, மும்பையில் நடைபெற்றுள்ள சம்பவம் அரசு மருத்துவமனைகள் செயல்படும் லட்சணத்திற்கு மற்றொரு உதாரணமாக மாறியுள்ளது. நேற்று மதியம் மும்பையின் பேருந்து நிறுத்ததில் மயங்கிகிடந்த 45 வயது ஆண் ஒருவர் போலீஸ் உதவியுடன், அருகில் இருந்த சீயோன் மருத்துவமனை என்று அழைக்கப்படும் நகராட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அப்போது பணியில் இருந்த தலைமை மருத்துவ அதிகாரி ரோஹன் அந்த மனிதரின் நாடியை பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டார். மேலும் அவர் மருத்துவமனை ஆவணங்களிலும் அவர் இறந்துவிட்டதாக தன் கைப்பட எழுதியுள்ளார்.

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட அந்த மனிதரை மருத்துவமனையின் பிணவறைக்கு ஊழியர்கள் எடுத்துச்சென்றனர். அப்போது ஸ்ட்ரெச்சரில் படுத்திருந்தவர் மூச்சுவிடுவதை ஊழியர்கள் கவனித்துள்ளனர். உடனடியாக அவர்கள் மருத்துவரை அழைத்துள்ளனர்.

தான் இறந்துவிட்டதாக கூறியவர் உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த டாக்டர், அந்த நபரை உடனடியாக மற்றொரு பிரிவுக்கு மாற்றிவிட்டு அவர் இறந்துவிட்டதாக எழுதப்பட்டிருந்த ஆவணங்களை கிழித்து எரிந்து தடயங்களை மறைத்துள்ளார். ஆனால் தற்போது இந்த விஷயம் முழுவதும் வெளியானதால் தலைமை மருத்துவ அதிகாரி ரோஹகனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வீடு சொர்க்கமா ? நரகமா ?

ஒரு நடுத்தர அளவிலான வீடு ம் இரு பக்கமும் மணிபிளான்ட் செடிகள் வளர்த்து ,பசும்புல் தரை நடுவில் நவீன ஊஞ்சல் கட்டி , காம்பவுண்ட் சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்த்து , வீட்டு நுழைவுவாயில் இருபுறமும் ஆட்கள் அமர சிமெண்டு மேடை அமைத்து ,கண்கவரும் அழகான வடிவமைப்பில் ,மனதைப் பரவசப்படுத்தும் அந்த வீட்டிற்குள் நுழைந்தேன் . வரவேற்பறை பூ ஜாடியில் கண்சிமிட்டிய வண்ணப் பூக்கள் தந்த மகிழ்வில் ஹாலுக்குள் நுழைந்தேன் . நாசியை சுகமாக வருடியது பூஜையறை நறுமணமும் ,சமையலறை பில்டர் காபியின் மணமும் ஆஹா ..! மூச்சை இழுத்தேன் . தட்டென்று முதுகில் ஒரு செல்லத்தட்டு ..திடுக்கிட்டு விழித்தேன் . கணவர்தான் … அட , கனவா இது ?

கற்பனையிலேயே இவ்வளவு மகிழ்ச்சி என்றால் உண்மையில் பணக்காரர் வீட்டு பங்களாக்கள் எவ்வளவு நிம்மதியை தரும் . இதைப் பற்றி ஆராய்ந்தே ஆகவேண்டும் என்று என் ஆறாவது அறிவு அறிவுறுத்தியதன் விளைவு , பணத்தை தண்ணீராக செலவழித்துக் கட்டிய எனக்குத் தெரிந்த பெண்மணியின் வீட்டுக்கு படையெடுத்தேன் . கண்ட இடமெல்லாம் பணத்தின் பெருமை தெரிய , வெகு அழகாக கலைநயத்துடன் கட்டப்பட்டிருந்த அந்த பங்களாவில் வசிக்கும் அந்தப்பெண் எவ்வளவு சந்தோசமாக இருக்கவேண்டும் ?அவரிடமே கேட்டுவிட்டேன்.

” என்னம்மா வீடு இது ? பணத்தை கொட்டி கட்டினப்ப ,குடும்பத்தோட சந்தோசமா இருக்கலாம்னுதான் நினைச்சேன் . ஏதோ என் கணவர் இருந்த வரைக்கும் எனக்கு தனிமை பயம் தெரியலை . இப்ப பசங்க படிச்சுட்டு வேலைக்காக வெளிநாடு போயிட்டாங்க . ஏன்தான் இப்படி பெரிய வீட்டிலிருந்து கஷ்டப் படுறோம்னு தெனம் நெனைச்சு வேதனையா இருக்கு . என்னதான் சொந்தக்காரங்களும் , வேலைக்காரங்களும் வந்துபோனாலும் எம்புள்ளைங்க இருப்பது போலாகுமா ? இது அவங்களுக்குப் புரியாம பணத்த தேடி ஓடிட்டு இருக்காங்க . என் கணவர் ஆசையா கட்டுன வீட்ட விட்டு என்னால போகவும் முடியல , தனியா இருக்கவும் முடியாம இரண்டுங் கெட்டான் நிலையில இங்க இருக்கேன் “

மனதில் இருந்த வேதனையைக் கொட்டினார் அவர் . சற்றுமுன் என் கண்களுக்கு ஆடம்பரமாய்த் தெரிந்த அந்த அழகுபங்களா இப்போது அந்த பெண்ணின் ஏக்கப்பெருமூச்சுகளை தாங்கி நின்ற சோகசின்னமாகத் தெரிந்தது .

பணக்கார வீட்டுக் கதையே இப்படி என்றால் மற்ற வீடுகள் … அதையும் பார்த்து விடலாம் என்று எண்ணி எனக்குத்தெரிந்த உறவுப்பெண்ணின் வீட்டுக்குச் சென்றேன் . அது மூச்சு விட்டால் கூட அடுத்த வீட்டுக்கு கேட்கும் படியான நெருக்கமான ஒண்டுக் குடித்தன வீடு .நான் சென்ற நேரம் தெருவோர குடிநீர் பைப்பில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது . என்னை வரவேற்றவள் ,” அக்கா ஒரு நிமிஷம் , ப்ளீஸ்..என் முறையில தண்ணீ பிடிக்கலைனா வம்பாயிரும் ..” என்றவள் சிட்டாய் பறந்து பறந்து தண்ணீரையெல்லாம் பிடித்து வைத்துவிட்டு , சிணுங்கிக்கொண்டு இருந்த குழந்தையைத் தூக்கி பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சிறிது நேரம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று ஒப்படைத்து விட்டு ,என்னிடம் வந்து ,”என்ன விசயம்கா ?” என்றாள் .

நான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு ” பாவம்டி நீ, கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த ஒன்டுக்குடித்தனத்துல இருந்து எவ்வளவு கஷ்டப் படறே ?” என்று கேட்டேன் . அவளோ வெகு சாதாரணமாக ” அப்படியெல்லாம் இங்கே எந்தக் கஷ்டமும் இல்லக்கா .., தண்ணீர் ,கரன்ட்டுன்னு பொதுவில சில பிரச்சினைகள் வந்தாலும் .., அக்கம்பக்கத்துல அனுசரணையா இருக்கவங்களா அமைந்திட்டா இந்த ஒன்டுக்குடித்தனம் கூட சொர்க்கமா மாறிடும் , இல்லையாக்கா ? என என்னையே திருப்பிக் கேட்க ,நான் மூக்குடைந்து “ஞே ” என்று விழித்தேன் .

மேலும் சில வீடுகளுக்குச் சென்று சர்வே எடுத்ததில் சில உண்மைகள் புரிந்தது . குடிசையிலும் , பிளாட்பாரங்களிலும் வாழும் சாமான்யர்களின் சொர்க்கம் அவர்களின் மனம்தான் என்றும் , நெருக்கமான வீடுகளில் வாழ்பவர்களுக்கு சகிப்புத்தன்மையும் ,அன்பான அனுசரணையும் தான் அவர்களின் வீடுகளில் கிடைக்கும் சொர்க்கம் என்றும் புரிந்தது . நவநாகரீகம் என்ற பெயரில் தன்னந்தனியே நிற்கும் ஆடம்பரப் பங்களாக்கள் தொலைவில் இருந்து பார்ப்பதற்கு சொர்க்கமாகத் தெரிந்தாலும் அதில் தனித்தீவாக வாழும் மனிதர்களின் நரகமாகத்தான் அந்த பங்களாக்களை உணர்ந்தேன் .

நமது கனவு இல்லம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் , ஆனால் அது சொர்க்கமாக மாற நம்முடைய மனம் எதையும் ஏற்கும் , எதையும் சகிக்கும் , எல்லோரையும் சமமாக பாவிக்கும் , சகமனிதரிடம் அன்பை பொழியும் அமைதிப் பூங்காவாக மாற வேண்டும் . அப்படி மாறும்;போது மட்டுமே நம் இல்லங்கள் சொர்க்கமாக இருக்கும் . அது குடிசையாக இருந்தாலும் , பங்களாவாக இருந்தாலும் ….

சிவசேனாவின் மிரட்டலுக்கிடையில் பாக். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரின் புத்தகம் வெளியிடப்பட்டது

சிவசேனா கட்சியின் எதிர்ப்புக்கு இடையே மும்பையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் கசூரி கலந்து கொண்டார்.

விழாவில் பேசிய அவர், எனக்கு அளித்த பாதுகாப்பு மகிழ்ச்சியளிக்கிறது. இரு நாட்டு மக்களும் அமைதி மற்றும் நம்பிக்கையை விரும்புகின்றனர். சிறப்பான பாதுகாப்பு அளித்த மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவீசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பேசினார்.