Home Blog Page 5986

அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படங்களுக்கு தடை: மறுபரிசீலனை கோரி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

புது தில்லி:

அரசு விளம்பரங்களில் தலைவர்கள் படங்களுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் முறையிடப்பட்டுள்ளது.

அரசு செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி படங்களைத் தவிர, வேறு அரசியல் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று கடந்த மே 13ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், சிபிஐஎல் என்ற அமைப்பு சார்பில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், ‘அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சில மாநில அரசுகள் மீறியுள்ளன. குறிப்பாக, தமிழகம் மற்றும் தில்லி மாநில அரசுகள் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதால், அந்த அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இம்மனு மீது மத்திய அரசு பதிலளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பினாகி சந்திர கோஸ் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி ஆஜரானார். அப்போது, ‘அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம் பெறக் கூடாது என்ற உத்தரவு தவறானது. இதில் எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது. எனவே, உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்துள்ள உத்தரவை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று முறையிட்டார்.

இதுதொடர்பான வழக்கை ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த காமன்காஸ் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், ‘அரசு விளம்பரம் தொடர் பான உச்ச நீதிமன்ற உத்தரவை சில மாநில அரசுகள் மதிக்கவில்லை. மத்திய அரசு 6 மாதங்கள் கழித்து, உத்தரவை மறுபரிசீலனை செய்யும்படி மனு தாக்கல் செய்கிறது. அரசு விளம்பரங்களை கண்காணிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை குழுவை அமைக்கவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் தாமதிப்பதும், அவகாசம் கோருவதும் இந்த உத்தரவின் நோக்கத்தையே சிதைத்துவிடும்’ என்று வாதிட்டார்.

இவ்வாறு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மத்திய அரசின் முறையீட்டை வரும் ஜனவரி 12ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தனர். இதை அடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிகார் பேரவைக்கான 3ஆம் கட்ட வாக்குப் பதிவு துவக்கம்

பாட்னா:
பிகார் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.

50 தொகுதிகளில் நடைபெறும் 3ஆம் கட்டத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் மகன்களான தேஜ், தேஜஸ்வி உள்ளிட்ட 808 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களில், 71 பேர் பெண்கள். தேர்தலில் சுமார் 1.45 கோடி பேர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யவுள்ளனர்.

இந்த வாக்குப் பதிவை ஒட்டி, 14,170 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 6,747 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 1,909 வாக்குச் சாவடிகள் இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைந்துள்ளன. வாக்குப் பதிவு நடைபெறவுள்ள அனைத்துச் சாவடிகளிலும், மாநில போலீஸாருடன் இணைந்து மத்திய துணை ராணுவப் படையினர் 1,107 படைப்பிரிவினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

பட்டாசுக்கு கட்டுப்பாடுகள் குறித்த வழக்கு: இன்று விசாரணை

புது தில்லி:

பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடுகள் குறித்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின்போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதால் தில்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி, ஜேயா ராவ் பசின் ஆகிய 3 சிறுவர்களின் சார்பில் அவர்களுடைய தந்தையர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 8ஆம் தேதி மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸுக்கு பதில் அளிக்கும் விதமாக, மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த மனுவில், பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கத் தேவையில்லை என்று தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பட்டாசு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ”தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிப்பது இந்துக்கள் மட்டுமல்ல. மற்ற மதத்தை சேர்ந்தவர்களும் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இருளை விரட்டி ஒளியை வழிபடும் இந்த பண்டிகையின்போது பட்டாசுகள் வெடிக்காமல் இருப்பது துக்கத்தை கடைப்பிடிப்பது போல ஆகிவிடும். சிவகாசியில் மட்டும் சுமார் 350 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் மொத்த முதலீடு ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும். இந்த தொழிற்சாலைகள் மூலம் 3 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளிகள் நேரடியாகவும், 10 லட்சத்துக்கும் அதிகமாக தொழிலாளிகள் மறைமுகமாகவும் பயனடைகின்றனர். தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிப்பது இந்த தொழிலையே நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்” என்று கூறப்பட்டு உள்ளது.

இதேபோல், இந்த வழக்கில் ஸ்ரீஅய்யப்ப சங்கம், சிவகாசி என்ற அமைப்பின் தலைமையில் சில இந்து அமைப்புகள் தாக்கல் செய்துள்ள மனுவில், ”பட்டாசு வெடிப்பது உலகம் முழுவதிலும் உள்ளவர்களின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகும். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதற்கு தடை செய்வது இந்துக்களின் அடிப்படை உரிமையை மறுக்கும் செயலாகும். உணர்வுபூர்வமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் முறையற்ற தடைகளால் பாதிப்பு அடையக்கூடாது. இந்து மதத்தவர்களின் நம்பிக்கைப்படி, இந்த உலகில் வாழும் மக்களின் மகிழ்ச்சியை கொண்டாடுவதன் அடையாளம் பட்டாசுகளின் சத்தமாகும். எனவே பட்டாசுகளுக்கு தடை விதிப்பது இந்து மதத்துக்கும், இந்து மத நம்பிக்கைக்கும் எதிரானதாகும்” என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன் அக். 28 இன்று நடைபெற உள்ளது.

பட்டாசு வெடிக்க தடை?: தேவையற்றது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

புது தில்லி:

பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கத் தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.

தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின்போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதால் தில்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி, ஜேயா ராவ் பசின் ஆகிய 3 சிறுவர்களின் சார்பில் அவர்களுடைய தந்தையர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 8ஆம் தேதி மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸுக்கு பதில் அளிக்கும் விதமாக, மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த மனுவில், பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கத் தேவையில்லை என்று தெரிவித்தது.

தீபாவளியின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் மட்டுமே காற்று மாசடைவது இல்லை. தொழிற்சாலைகள், வான ஊர்திகள், ரயில்கள், கப்பல்கள், கட்டிட பணிகள், குப்பை மற்றும் சருகுகளை எரித்தல், தில்லியில் அதிகரித்துள்ள வாகனங்களால் ஏற்படும் புகை ஆகியவற்றாலும் தில்லியில் காற்று மாசுபடுகிறது. காற்று மாசுபடுவதை பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசு துறைகளின் ஒத்துழைப்புடன் சீரிய நடவடிக்கைகளால் தீபாவளியின்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும். எனவே பட்டாசுகள் மீது தடை விதிக்க தேவையில்லை- என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

பட்டாசு வெடிக்க விதிக்கும் கட்டுப்பாடுகள் கண்டனத்திற்கு உரியவை: ராம.கோபாலன்

சென்னை:
தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்க விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் கண்டனத்துக்கு உரியவை என்றும், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. அதன் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்ட அறிக்கையில்,

உச்ச நீதிமன்றம் மத விஷயத்தில் தலையீட விரும்பவில்லை என ஒருபுறம் கூறிக்கொண்டு, கிறிஸ்தவ, முஸ்லீம் மத விஷயங்களில் தப்பிக்க நினைக்கிறது. அதே சமயம் இந்துக்களின் சமய விஷயங்களில் எல்லைமீறி புண்படுத்தும் விதமாகவும் கருத்துக்களை பதிவு செய்வது வேதனை அளிக்கிறது.

இந்நிலையில் சட்டத்தை மதிக்கவும், பின்பற்றவும் செய்யும் இந்துக்களை தொடர்ந்து இம்சித்து வருவது நீதியின் மீது மக்களுக்கு நம்பிக்கை இழக்க செய்துவிடும் என அஞ்சுகிறோம்.

சமீபத்தில் சிறு குழந்தைகள் இருவர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டு, விசாரித்த உச்சநீதி மன்றம் தீபாவளித் திருநாளில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடுகளை விதித்து எல்லா மாநில அரசுகளுக்கும் அறிக்கை அனுப்பி உள்ளது.

உச்சநீதிமன்றம் எந்த விசாரணையின் அடிப்படையில் இத்தகை தீர்ப்பை வழங்கியது என்பது புரியவில்லை. மத்திய, மாநில அரசுகளின் கருத்துக்களை ஏன் கேட்கவில்லை என்பதும் புரியவில்லை!

தமிழ்நாட்டில் மிகவும் பின்தங்கிய மாவட்டம், வறட்சியில் பெரிதும் பாதிக்கப்பட்டதுமான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியைச் சேர்ந்தவர்கள் அரசின் எந்த உதவியையும் எதிர்பார்க்காமலும், தங்களது கடின உழைப்பால் பட்டாசு தொழிலை சட்டத்திற்குட்பட்டு செய்து அந்த மாவட்டத்தையே வளமாக்கி உள்ளனர். நாட்டிற்கும் அதனால் அதிக வருவாயை ஈட்டித்தந்துள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளாக திட்டமிட்ட ரீதியில் பட்டாசு விற்பனையை சீர்குலைக்க என்னவெல்லாமோ காரணங்களை சில தீய சக்திகள் சொல்லி வருகின்றன. குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்னை என்றும், பெரிய விபத்து நடக்கும் தொழில் என்றும் இதனால் பல குடும்பங்கள் அழிவதாகவும் கதைகட்டி மாணவர்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தி தீபாவளியில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்ற கருத்தைத் திணித்து பார்த்தார்கள். அது எடுபடவில்லை. தற்போது சுற்றுச்சூழல், ஒலி மாசு முதலியவற்றை காரணம் காட்டுகின்றனர்.

தீபாவளித் திருநாளில் ஒரு நாளையில் இந்த மாசு ஏற்படுவதாக கூறும் நீதிமன்றமும், சுற்றுச்சுழல் ஆர்வளர்களும் வருடந்தோறும் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை, வாகனப் போக்குவரத்தை, நீர் நிலைகளை மாசுபடுத்தும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் முதலானவற்றிக்குத் தடை விதிக்கவோ, தடுக்கவோ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவில்லையே ஏன்? இதற்கு யாராவது வழக்குத் தொடர்ந்தால் கூட அது மத்திய, மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது என நீதிமன்றம் தட்டிக்கழிக்கும் என்பதை நாம் அறிந்ததே.

சீனப் பட்டாசு இறக்குமதிக்கு மத்திய அரசு தடைவிதித்தும் சட்டவிரோதமாக கப்பல் மூலம் நாட்டிற்குள் வருகிறது. இத்தகைய போக்கை பார்க்கும்போது, பட்டாசு கட்டுப்பாடு மற்றும் சீன பட்டாசு வரத்து முதலியவை கம்யூனிஸ்ட்களும், கிறிஸ்தவ மிஷனரிகளும் கைகோர்த்துசெய்யும் சதி வேலையோ என சந்தேகம் எழுகிறது.

தீபாவளி திருநாளில் 5 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றம் கூறியிருப்பது மக்களிடையே அதிப்தி ஏற்படுத்திவிடும். சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு, பாதுகாப்பு முதலானவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளலாம். ஆனால், பண்டிகையான ஒரு நாளில் கூட நேரக் கட்டுப்பாடு பிறப்பிப்பது என்பது மிகையானது ஆகும்.

உச்சநீதிமன்றம் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை நீக்க உத்திரவிட்டது. இந்து கோயில்களில் வைக்கப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கியை காவல்துறை நீக்கியது, ஆனால் ஆண்டுகள் சில கடந்த பின்பு அவர்கள் மசூதிகள் பக்கம் ஏன் செல்லவில்லை?

சட்டம் ஒரே மாதிரி இல்லை, அதனை நிலைநாட்ட வேண்டிய நீதிபதிகள் நிலையும் கேள்விக்குறியாகி இருப்பதையே இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இன்னும் பத்து நாட்கள் இருக்கின்ற நிலையில், வருடந்தோறும் உழைப்பையும், முதலீட்டையும் போட்டுத் தயாரித்துள்ள பட்டாசுகள் விற்பனைக்குக் கட்டுப்பாடு என்ற பெயரில் இடையூறு விளைவிப்பது கண்டனத்திற்கு உரியது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மத்திய, மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நீதிமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் கருத்து தெரிவித்து முறைபடுத்திட அனுமதி வாங்குவது அவர்கள் கடமை. எனவே வருகின்ற தீபாவளித் திருநாளில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியோடு கொண்டாட மாநில அரசு தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது – என்று கூறியுள்ளார்.

கவிக்கோ கருவூலம் புத்தகத்தை அப்துல்ரகுமான் பவள விழாவில் வெளியிட்ட கருணாநிதி

கவிக்கோ அப்துல் ரகுமானின் பவள விழாவும், ‘கவிக்கோ கருவூலம்’ புத்தகம் வெளியீட்டு விழாவும், கடந்த 2 நாட்களாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில், கவிக்கோ விருது, கவிக்கோ ஆவணப்படம் வெளியீடு, கவிக்கோவின் இசைப்பாடல்கள் குறுந்தகடு வெளியீடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

நிறைவு விழா நிகழ்ச்சியில், கவிக்கோ கருவூலம் புத்தகம் வெளியிடப்பட்டது. இதை, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டதுடன், கவிக்கோ கவிதை அறக்கட்டளைக்கு பொற்கிழி வழங்கி நிறைவுரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

கவிக்கோ அப்துல்ரகுமானை நீண்ட காலமாக நான் அறிவேன். வாணியம்பாடியில் நடைபெற்ற ஒரு கவியரங்கத்துக்கு நான் அழைக்கப்பட்டு இருந்தேன். அவரும் அங்கு வந்திருந்தார். அன்று முதல் இன்று வரை, இனியும் நான் இருக்கும் வரை, அவரை நான் ரசித்துக்கொண்டே இருப்பேன். அப்படிப்பட்ட கவிஞர் அப்துல்ரகுமான். அவரைப்பற்றி, நான் உங்களிடம் அதிகம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நல்ல மனிதராக, பாசமுள்ள மனிதராக என்னிடம் பழகி வருகிறார்.

கவியரங்கத்தில் அவர் உதிர்த்த வார்த்தைகளை நான் என்றும் மறக்கமாட்டேன். தமிழ் கவிஞர்களை வரிசைப்படுத்தினால், அதில் முதல் வரிசையில் அப்துல்ரகுமான் இடம்பெற்று இருப்பார். அப்படிப்பட்ட தமிழ் உணர்வாளர் அவர். நன்றி மறவாத நண்பராக இன்றும் விளங்கி வருகிறார் என கருணாநிதி பேசினார்.

தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக, கவிக்கோ அப்துல் ரகுமான் ஏற்புரை வழங்கினார். முன்னதாக கவிக்கோ அப்துல் ரகுமானின் ‘மகரந்த மழை’ என்ற குறுந்தகட்டை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெளியிட, மற்றொரு இசையமைப்பாளரான ஜிப்ரான் பெற்றுக்கொண்டார்.

விழாவில்,ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் கீதா சந்திப்பு

இந்தியாவில் இருந்து தவறுதலாக பாகிஸ்தான் சென்ற வாய் காது கேளாத பேசமுடியாத, பெண் கீதா 15 வருடங்களுக்கு பிறகு இந்தியா திரும்பியுள்ளார்.

நேற்று முன்தினம் இந்தியா திரும்பிய கீதாவை வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் வரவேற்றார். பிரதமர் மோடி கீதாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், இத்தனை ஆண்டுகள் அவரை பாகிஸ்தானில் கவனித்து வந்த தொண்டு நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்து, ரூ.1 கோடி நன்கொடை வழங்குவதாக அறிவித்தார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கீதாவை ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்து சந்தித்தார்.

அவர் கீதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தனது முகாம் அலுவலகத்தில் கீதாவை சந்தித்தார். மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் கெஜ்ரிவால் கீதாவிடம் சிறிது நேரம் பேசினார். கீதா இந்தியா திரும்பிய அதேவேளையில், 15 வயதான பாகிஸ்தான் சிறுவன் ரம்ஜான் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட சம்பவமும் நடந்துள்ளது. எதிர்பாராதவிதமாக இந்த இரு சம்பவங்களும் ஒரே நேரத்தில் நடந்துள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் அன்றாடம் குண்டு மழை பெய்துவரும் வேளையில் இந்த மனிதாபிமான செயல்களும் அரங்கேறியுள்ளன. கீதா பாகிஸ்தானில் இருந்தபோது இந்திய தூதரகம் அனுப்பிய போட்டாக்களை பார்த்து, பீகாரை சேர்ந்த ஜனார்தன் மஹாதோ தான் தனது தந்தை என்றும், வளர்ப்பு தாய் மற்றும் சகோதரர்களையும் அடையாளம் காட்டியிருந்தார். ஆனால் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்க வந்த அவர்களை கீதா அடையாளம் காட்டவும், ஏற்கவும் மறுத்துவிட்டார். இதனால் கீதா மற்றும் அவரது தந்தை என கூறப்படும் ஜனார்தன் மஹாதோவுக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடைபெறுகிறது.

டி.என்.ஏ. சோதனை மூலம் கீதா சரியான பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று மத்திய அரசு கூறியுள்ளது. கீதாவை உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியும் தங்கள் மகள் என்று உரிமை கோரியுள்ளது. பிரதாப்கார் மாவட்டம் ராம்பூர் கிராமத்தை சேர்ந்த ராம்ராஜ்-அனரா தேவி தம்பதியினர் கீதா எங்கள் மகள் என்று கூறியுள்ளனர்.

இதற்கான போட்டோக்கள், வேறு சில ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. நாங்கள் டி.என்.ஏ. சோதனைக்கும் தயாராக இருக்கிறோம் என்று அனரா தேவி கூறினார். எங்கள் மகள் சவீதா தான் கீதா. 12 வருடங்களுக்கு முன்னர் அவர் பீகார் நானக் ஷா மடத்தில் இருந்து காணாமல்போனார் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக அலகாபாத்தில் உயர் அதிகாரிகளையும் அந்த தம்பதியினர் சந்தித்து விளக்கினார்கள். கீதாவை சந்திப்பதற்காக அவர்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

 

சர்க்கரை வியாதிக்கு சித்தமருத்துவத்தில் தீர்வு

முன்பெல்லாம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம் சொத்து மதிப்பினை கேட்டு அறிவதைப்போல இன்று பெரும்பாலோர் சர்கரையின் அளவை கேட்டு அறிந்து கொண்டிருக்கின்றோம். சித்தமருத்துவத்தின் சக்தி தெரியாமல் தான் நாம் ஆங்கில மருந்துகளைத்தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்.

 

சர்க்கரை நோயின் அபரிதமான வளர்ச்சியினால் சர்க்கரை நோயாளிகளை மையமாக வைத்து ஒரு பெரிய வியாபார வலையை பின்னிக் கொண்டிருக்கின்றனர் ஆங்கில மருத்துவத்தினர். அத்துடன் அவர்கள் ஊடகங்கள் வாயிலாக  பதினைந்து மற்றும் இருபத்தைந்து நாட்களில் ஆங்கில மருத்துவத்தால் நோயாளிகளை பூரண குணம் அடைய வைக்க  முடியும் என விளம்பரங்கள் மூலம் செய்து வருவதை அனைவரும் அறிந்ததே. அதிக பணவிரயம் இன்றி சர்க்கரை நோய்க்கு முழுமையான  சித்தமருத்துவ சிகிச்சை மூலம் நீரிழிவு வியாதியைக் கட்டுக்குள் வைக்க மட்டுமே முடியும் என கூறுகிறார் சித்த மருத்துவர் மணிகண்டன். சர்க்கரை நோய் குறித்து மேலும் அவர் கூறுவதாவது:-

 

சர்க்கரை வியாதி என்பது ஒரு நோயே அல்ல. அது மனித உடலில் ஏற்படும் ஒரு விதமான சக்திகுறைபாடே ஆகும். அந்த குறைபாடு எதனால் வருகிறது என்ற அடிப்படை காரணத்தைக்

கண்டுபிடித்து  அதனை சரிபடுத்தி  நோய்களை முற்றிலுமாக தீர்க்க முடியும். பொதுவாக ஒருவரின் உடலில் ஏற்படும்  சக்திகுறைபாட்டை அவர்களே ஆராய்ந்தால் அடிப்படை காரணங்கள் என்ன வென்று கூர்ந்து கவனித்தால் உணரமுடியும்.சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் சவாலாக உள்ள நாவறட்சி,மலக்கட்டு,உடல் சோர்வு மட்டுமே. அது உடலில் உள்ள ராஜ உறுப்புக்களான கணையம், கல்லீரல்,சிறுநீரகம் முதலிய உறுப்புகளின் செயல்பாடு குறைவதால் ஏற்ப்படுகிறது.

 

அந்த உறுப்புக்களின்  செயல்பாடு குறைகளை  சித்தமருத்துவ முறையில்  சர்க்கரை வில்வம், ஆவாரம் பூ, நாவல் கொட்டை,ஓமம் மற்றும் சிறியா நங்கை போன்ற பல மூலிகைகள் சேர்த்து காயச்சி  தயாரான 100% பக்க விளைவு இல்லாத அகஸ்திய சஞ்சீவி சூரணம் மூலம் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தி சீராக்கி  நீரிழிவு வியாதியை இரண்டே வாரங்களில் கட்டுப்படுத்த முடியும் என அவர் கூறுகிறார்.

 

அகஸ்திய சஞ்சீவி சூரணம்  பற்றிய சிறப்பம்சங்கள் :-

 

*இந்த மருந்தை உட்கொண்ட முதல் வாரத்திலேயே உடல்சோர்வு, மலக்கட்டு மற்றும் நாவறட்சியைத் தீர்க்கும்.ஒரே மாதத்தில் சர்க்கரையின் அளவு 420 லிருந்து 210 க்கு குறையும்.

 

*அலோபதி மருந்துகள் எடுப்பவர்களும் இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம்.

 

*முதல் இரண்டு வாரங்கள் மூன்று வேளையும் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட வேண்டும்.

 

*பின்பு சர்கரையின் அளவை கண்டறிந்து அளவைக் கூட்டியோ, குறைத்தோ எடுத்துக்கொள்ளலாம்..

 

*சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் உள்ள கெட்ட கொழுப்பையும் குறைக்க வல்லது .

 

*சூரணத்தில் உள்ள ஆவாரம்பூ மற்றும் சீந்தில் கொடி போன்ற மூலிகைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டாகும் கை கால் குடைச்சல் மற்றும் பாத எரிச்சலை சரி செய்யும் தன்மை கொண்டது. ஆவாரம்பூ சமூலத்துடன் சிறிது நீர் சேர்த்து அரைத்து பூசினால் பாத எரிச்சலை சரியாக்கும் சக்தி   கொண்டது.

 

 

இயக்கம் கொடுக்காத உடலுக்கு தங்க பாசாணதைக் கொடுத்தாலும் ஈடேறாது என முன்னோர்கள்  அடிக்கடி கூறுவது வழக்கம். நாம்  முறையான உணவு பழக்க வழக்கத்தையும், உடல் இயக்கத்தையும் கடைபிடித்தால் எந்தவிதமான நோய்களும் வராது என்பதே நிதர்சனமான உண்மையும் கூட. நமது உடலை  பாதுகாப்பது நமது கடைமையாகும்.

 

 

 

உலகிலேயே முதல்முறையாக ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்; இந்தியாவில் அறிமுகமாகிறது

உலகிலேயே முதல்முறையாக ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்; இந்தியாவில் அறிமுகமாகிறது

உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போன் வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.999-க்கு விற்பனை செய்யப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போனை அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், கனடாவின் பிரபல மொபைல் மற்றும் டேப்லட் நிறுவனமான டேட்டா வைண்ட் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட உள்ளது.

லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் ஆப்பர்களுடன் மட்டும் வெளிவருகிறது. மற்ற சாதாரண என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன்களை போலவே இதிலும், பேஸ்புக், வாட்ஸ்ஆப், இமெயில் வசதிகள் இருக்கும். முதல் ஒரு ஆண்டுக்கு பேஸ்புக், வாட்ஸ்ஆப் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. எனினும், 2ஜி நெட்வொர்க் மட்டுமே இந்த போனில் சப்போர்ட் ஆகும். பிராசசர்களின் விலை சரிந்து வரும் நிலையில், இவ்வளவு குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை வழங்குவது சாத்தியம்தான் என டேட்டா வைண்ட் தெரிவித்துள்ளது. இதற்காக சீனா மற்றும் தைவானில் உள்ள முன்னணி பிராசசர் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

வரும் டிசம்பர் 28-ந்தேதி ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்த நாள் அன்று இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனம் எந்த தகவலையும் கூறவில்லை. டேட்டா வைண்ட் நிறுவனம் மட்டுமே இந்த ஸ்மார்ட்போனை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது.

பேரவை நடவடிக்கைகளின் நேரடி ஒளிபரப்பு விவகாரம்: விஜயகாந்த் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

புதுதில்லி:

தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்புவது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தேமுதிக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இது குறித்து விஜயகாந்த் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான் மற்றும் ஜி.எஸ்.மணி ஆகியோர், ‘சட்ட மன்றத்தில் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் விவாதங்கள் மற்றும் நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்வது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. ஆனால் அவையில் நடக்கும் விவாதங்கள் தணிக்கை செய்யப்பட்டு, அரசுக்கு அனுகூலமானவை மட்டும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படுகிறது. இது சட்ட விரோதமானதும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானதும் ஆகும் ’ என்று கூறினர்.

அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், ‘நீங்கள் ஏன் இதனை தனியாக பொதுநல வழக்காக தாக்கல் செய்யக்கூடாது’ என்று கேள்வி எழுப்பினர். இதை அடுத்து, விஜயகாந்த் தரப்பில் நீதிமன்றம் அனுமதித்தால் இந்த மேல்முறையீட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி பொதுநல மனுவாக தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுதாரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறையில் பொதுநல மனு தாக்கல் செய்யும் பட்சத்தில், உயர் நீதிமன்றம் அதை விசாரிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தனர். பின்னர் விஜயகாந்தின் மேல்முறையீட்டு மனுவை அவர்கள் தள்ளுபடி செய்தனர்.

முன்னதாக, தமிழக சட்டப் பேரவை நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி டி.ஜெகதீஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012ல் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். ஆனால் நேரடி ஒளிபரப்பு  செய்ய நிதிப் பற்றாக்குறை இருப்பதாக தமிழக அரசு பதில் அளித்தது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, விஜயகாந்த் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப அரசின் நிதிநிலை சரியில்லை என்றால், தனக்கு சொந்தமான தொலைக்காட்சி சேனலில் இலவசமாக ஒளிபரப்ப தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். மேலும் இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

ஆனால், இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஆதாயத்துக்காக இந்த மனு தாக்கல் செய்திருப்பதாகக் கூறி, விஜயகாந்தின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை அடுத்து, விஜயகாந்த் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், மனுதாரர் (விஜயகாந்த்), தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பதிவுபெற்ற ஒரு கட்சியின் தலைவர் என்பதை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது. மேலும், சட்டமன்ற நிகழ்வுகளை மக்களிடம் எடுத்துச் செல்வது அரசின் கடமை. எனவே, சென்னை நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்து, மனுதாரரையும் அந்த வழக்கில் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும் – என்று கூறப்பட்டிருந்தது.