Home Blog Page 5989

தமிழ்மாநில காங்கிரஸ் தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளில் குதித்தது – ஜி.கே.வாசன்

த.மா.கா. தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது என்றும், தமிழகம் முழுவதும் தான் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுதொடர்பாக எங்கள் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கமும் நடத்தி வருகிறோம். விரைவில் கவர்னரை சந்தித்து ஒரு கோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்துகளை சமர்ப்பிப்போம். மக்களின் எண்ணங்களுக்கேற்ப தமிழக அரசு முடிவுகளை எடுக்க வேண்டும்.

இலங்கைக்கு ஆதரவான நீர்த்து போன தீர்மானத்தையும் இந்தியா ஆதரித்ததை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். அந்த வகையில் அந்த கட்சிகள் போராடி வருகின்றனர்.

கடந்த ஜூலை மாதம் முதல் நான் மக்களை சந்தித்து வருகிறேன். அவர்களின் குறைகளை கேட்டு வருகிறேன். அந்தவகையில் நாங்கள் முதலிலேயே பிரசாரத்தை தொடங்கி விட்டோம். 2-வது கட்ட பிரசாரத்தை வருகிற டிசம்பர் 1-ந்தேதி தொடங்கி பிப்ரவரியில் நிறைவு செய்வோம்.

பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மக்கள் விரும்பும் கூட்டணியில் இருப்போம். மக்கள் பரபரப்பான அரசியலை விரும்புகிறார்களா? இயல்பான அரசியலை விரும்புகிறார்களா? என்பது அவர்களின் முடிவுக்கு பிறகு தான் தெரியும்.நெல் குவிண்டாலுக்கு ரூ.2,175 வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

 

 

தமிழகத்தில் மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்டால் 5 ஆண்டுகள் சிறை .?

 மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்டால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை குஜராத், மராட்டிய மாநிலங்களை பின்பற்றி, தமிழகத்திலும் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்கவிடுவதால் உயிர் இழப்பு ஏற்படுகிறது. சென்னையில் காற்றாடியால் 2 சக்கர வாகனங்களில் செல்வோர், மாஞ்சா நூலால் கழுத்து அறுபட்டு மாண்டுபோகிறார்கள். சமீபத்தில் சென்னை பெரம்பூர் மேம்பாலத்தில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 5 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிர் இழந்தான். இதுபோன்ற காற்றாடியால் உயிர் இழப்பு சம்பவங்கள் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அடிக்கடி நடக்கிறது.

சென்னையில் அண்ணா மேம்பாலத்தில் ஸ்கூட்டரில் சென்ற என்ஜினீயர் ஒருவர் காற்றாடி மாஞ்சா நூலால் கழுத்து அறுபட்டு மாண்டார். எழும்பூரில் பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 வயது சிறுமி உயிர் இழந்தாள். சைதாப்பேட்டையில் காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் மேடை பாடகி ஒருவர் பேசும் சக்தியை இழந்தார். இப்படி மாஞ்சா நூலால் ஏற்பட்ட பாதிப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். வடசென்னையில் அதிக உயிர் இழப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தற்போது போலீசுக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் தமிழகத்தில் இல்லை. மத்திய அரசு 1986-ம் ஆண்டு கொண்டுவந்துள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் காற்றாடி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு அதிகாரம் கொடுப்பதாக உள்ளது. இந்த சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தவில்லை.

மராட்டியம், குஜராத் போன்ற மாநிலங்களில் இந்த சட்டம் அமலில் உள்ளது. அங்கு காற்றாடி விடுவதால் கழுத்து அறுபட்டு பறவைகள் மாண்டுபோகின்றன. இதை தடுக்க இந்த சட்டத்தை பயன்படுத்தி போலீசார் அந்த மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்திலோ குறிப்பாக சென்னையிலோ காற்றாடியால் மனிதர்கள் மாண்டுபோகிறார்கள். எனவே மத்திய அரசின் இந்த சட்டத்தை தமிழக அரசு தமிழகத்தில் கொண்டுவந்து காற்றாடி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இந்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தலாமா? என்பது குறித்து அண்மையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. எனவே காற்றாடியால் ஏற்படும் விலை மதிக்க முடியாத மனித உயிர் இழப்புகளை தடுக்க தாமதிக்காமல் தமிழக அரசு இந்த சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.

பட்டம் விடுபவர்களுக்கு அது விளையாட்டு. ஆனால் அதனால் விலை மதிக்க முடியாத உயிர் இழப்பு ஏற்படுகிறதே. இதற்கு யார் பொறுப்பு. யாரை தண்டிப்பது. மறைமுகமாக இது கொலைக்கு சமமானது என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், மாஞ்சா நூல் காற்றாடி பறக்க விடுபவர்களை கோர்ட்டில் நிறுத்தி 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து அனுபவிக்க வகை செய்கிறது. காற்றாடி பறக்கவிடுபவர்களை கைது செய்ய போலீசுக்கு அதிகாரம் கொடுக்கிறது.குஜராத், மராட்டிய மாநிலங்களை பின்பற்றி, தமிழகத்திலும் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 

பெண்கள் பாதுகாப்புக்காக செல்போனில் விசேஷ பட்டன் சேர்க்க மத்திய அரசு திட்டம்

 

பெண்கள் பாதுகாப்புக்காக, செல்போனில் எச்சரிக்கை ‘பட்டன்’ ஒன்றை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி நேற்று கூறினார். டெல்லியில், மாணவிகள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கும் ‘மாணவர் பாராளுமன்றம்’ என்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:-

ஆபத்து சமயங்களில் பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள என்னென்ன முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து நாங்கள் யோசனை கேட்டபோது, நிறைய யோசனைகள் வந்தன. குறுந்தகவல் அனுப்பும் வசதி கொண்ட நெக்லஸ், பிரேஸ்லெட், மோதிரம் ஆகியவற்றை பெண்கள் அணிந்து செல்லலாம் என்று ஒரு யோசனை சொல்லப்பட்டது.

இந்த நகைகளை எப்போதும் அணிந்திருக்க முடியுமா? கிராமப்புற பெண்களுக்கு இவை கிடைக்குமா? எனவே, அனைத்து செல்போன்களிலும் எச்சரிக்கை ‘பட்டன்’ பொருத்தும் யோசனை உதித்தது. அந்த ‘பட்டன்’, ஜி.பி.எஸ். சாதனம் பொருத்தப்பட்டதாக இருக்கும். அந்த பட்டனை அழுத்தினால், சம்பந்தப்பட்ட பெண் இருக்கும் இடம் பற்றிய தகவலுடன் சில குறிப்பிட்ட எண்களுக்கு குறுந்தகவல் போய்ச் சேரும்.

இதன்மூலம், அப்பெண் காப்பாற்றப்படுவார். இதுதொடர்பாக அனைத்து செல்போன் உற்பத்தி நிறுவனங்களுடனும் பேசி வருகிறோம். இந்த ‘பட்டன்’ இன்னும் சில மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று கருதுகிறோம் மத்திய அமைச்சர் மேனகா காந்தி பேசினார்.

 

 

முழுமையான மது ஒழிப்பே திமுக.,வின் லட்சியம்: மு.க.ஸ்டாலின் உறுதி

திருச்சி:

மது ஒழிப்பில் அதிமுகவுக்கு சிறிதும் அக்கறையில்லை; முற்றாக மதுவை ஒழிப்பதே திமுகவின் லட்சியம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தில் பேசினார்.

‘நமக்கு நாமே விடியல் மீட்பு’ பயணத்தின் 13வது நாளான நேற்று திருச்சி மாவட்டம் மணப்பாறை, புங்கனூர், பெல், லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், முசிறி, திருவரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். திருவெறும்பூர் பெல் தொழிலாளர் முன்னேற்ற சங்க அலுவலகத்தில் வைத்து விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், போக்குவரத்து தொழிலாளர்கள், பெல் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது ஸ்டாலின் பேசியது:

நமக்கு நாமே விடியல் மீட்பு சுற்றுப்பயணம் மூலம் தமிழக மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறேன். இன்றுடன் முதல் கட்ட சுற்றுப் பயணத்தை முடிக்கிறேன். 2–ம் கட்ட பயணத்தை வருகிற 7–ந்தேதி நீலகிரியில் இருந்து தொடங்க உள்ளேன். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அது 2016 தேர்தலில் நிச்சயம் நடக்கும். தற்போது தமிழகத்தில் நடக்கும் அ.தி.மு.க. ஆட்சி வெறும் காணொலி காட்சிதான். செல்போன் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இங்கு செல்போன் இல்லாமல் இருப்பவர்கள் யார். பெரும்பாலும் இரண்டு செல்போன்கள் அல்லது இரண்டு சிம் கார்டு கொண்ட செல்போன்கள் தான் வைத்திருக்கிறார்கள். சிம் கார்டு வேண்டுமே. கட்டணம் கட்ட வேண்டுமே. அதையெல்லாம் விடுங்கள். செல்போன்ல ஜார்ஜ் ஏற்ற மின்சாரம் கரண்ட் வேண்டுமே.

கடந்த நான்கரை ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். திமுக ஆட்சியில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடைபெறுகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் தொகுதி மக்களைக்கூட சந்திப்பது கிடை யாது. மக்களை சந்தித்து ஆய்வு நடத்த வேண்டியவர்கள் ஓய்வில் உள்ளனர். ஆனால் ஓய்வில் உள்ள நாங்கள் மக்களை சந்தித்து வருகிறோம். தமிழக முதல்–அமைச்சர் அரை மணிநேரம் மட்டுமே பணியாற்றி வருகிறார். 110–வது விதி அவசர தேவைக்கு தீர்வு காண்பதற்காகத்தான். ஆனால் ஜெயலலிதாவின் 110–வது விதி தமிழக மக்களின் தலைவிதியாக உள்ளது.

காவிரி நீரை கடைமடைக்கு கொண்டு செல்லும் வாய்க்கால்கள் தூர் வாரப்படவில்லை. மின்சாரம் இல்லாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தும் சட்டத்தை திமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் எதிர்த்த நிலையில், அதிமுக ஆதரவு கொடுத்தது.

2012 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் தனிநபர் வருமானம் 3 மடங்காக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி ஊதியத்தை கேட்க வேண்டியுள்ளது. புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படாததால் இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள். நோக்கியா தொழிற்சாலை உள்பட பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மின்பற்றாக்குறை தான். உலக முதலீட்டாளர் மாநாடு மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்பட்ட மாநாடு.

தமிழகத்தில் மதுவை முற்றிலும் ஒழிப்பதே திமுகவின் இலக்கு. ஆட்சிக்கு வந்ததும் அது நிறைவேறும். ‘தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது’ என்று மதுவிலக்கு துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை மூடும் எண்ணம் அதிமுகவுக்கு சிறிதும் கிடையாது.

தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை 60 சதவீதம் நிறுத்தப்பட்டுள்ளது. பெல் தொழிற்சாலை அ.தி.மு.க.விற்கு எதிராக உள்ளதாக கருதி, அதன் வளர்ச்சிக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெல் நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு கொடுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. 37.6 சதவீதமாக இருந்த தனியார் பங்கு, அ.தி.மு.க. ஆட்சியில் 43.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ளவர்களை மட்டும் வேலைக்கு சேர்க்காமல் அகில இந்திய அளவில் வேலைக்கு சேர்க்கிறார்கள்.

– இவ்வாறு அவர் கூறினார்.