புதுடில்லி: இணைய தள செயலியான வாட்அப் பயன்பாட்டிற்கு புதிய குறியீட்டு கொள்கையை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இதன்படி, 90 நாட்களுக்கு தகவல்களை அழிக்கக்கூடாது என மத்திய அரசு வரைவு கொள்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்கள் தங்கள் தகவல்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இணைய தள பயன்பாட்டில் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸ்அப் செயலி (WHATS APP) ஆகும். மற்ற செயலிகளை விட வாட்ஸ் அப் மூலம் மொபைல் வாயிலாக இ-மெயில் தகவல்கள், பேட்டோ, வீடியோ ஆகியவை நொடிப்பொழுதில் அனுப்பி வைகப்பட்டு அவை வைரலாக பரவிவிடுகிறது. இது போன்ற டேட்டாக்கள் பல்வேறு குற்றச்செயல்களை கண்டுபிடிப்பதற்கு முக்கிய ஆதாரமாகவும் பயன்படுகிறது.இவற்றினை ஒழுங்குப்படுத்திட தகவல் தொழில்நுடப் சட்டத்தின் கீழ் இதற்காக வழி வகை செய்ய மத்திய அரசு புதிய வரைவு கொள்கையை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.இதன்படி வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் மற்றும் போட்டோ , வீடியோ உள்ளிட்ட டேட்டாக்களை பாதுகாப்பு கருதி 90 நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும் எனவும், அவ்வாறு சேமிக்காமல் டேட்டாக்களை அழித்துவிட்டால் அது சட்டவிரோதம் என அறிவிக்க வகை செய்யும் புதிய தேசிய வரைவு கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மந்தைவெளியில் இளைஞர் சுடப்பட்டதால் பரபரப்பு
போலீஸ் எஸ்.ஐ. சங்கரபாண்டியனின் மகள் அபிநயா. ஐ.டி துறையில் வேலை பார்க்கும் ராஜசேகர் என்பவரை அபிநயா, எஸ்.ஐ. சங்கர பாண்டியனின் சம்மதமில்லாமல் திருமணம் செய்து கொண்டார். இதில் ஆத்திரமடைந்த சங்கர பாண்டியன், ராஜசேகரை தன்னிடம் இருந்த 9 எம்.எம் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சம்பவம் மந்தைவெளி பள்ளிவாசல் தெருவில் நடைபெற்றுள்ளது. மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வழக்கறிஞர் ராஜகோபாலின் பாதுகாப்பு அதிகாரியாக சங்கர பாண்டியன் பணியாற்றி வருகிறார் .
வாட்ஸ்அப், ஹேங்க்அவுட் தகவல்களை 90 நாட்களுக்குள் அழித்தால் குற்றம்: மத்திய அரசின் புதிய சட்டம்
புது தில்லி:
வாட்ஸ் ஆப், கூகுள் ஹேங் அவுட்ஸ், ஆப்பிள் ஐமெசேஜ் உள்ளிட்டவற்றில் பரிமாறப்படும் தகவல்களை 3 மாதங்கள் வரை அழிக்கக்கூடாது. இந்தக் கட்டுப்பாட்டை மீறினால் தண்டனை அளிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
சமூக தகவல் தளங்களான இந்த வழிகளில் வரும் தகவல்கள் குறியீட்டுச் சொற்களாக மாற்றப்பட்டு வருவதே இதற்கு முக்கியக் காரணம். வாட்ஸ் ஆப் உள்ளிட்டவற்றில் நாம் அனுப்பும் செய்திகள் தானாகவே குறியீட்டுச் சொற்களாக மாற்றப்பட்டு அனுப்பப்படுகின்றன. அவற்றைப் பெறுபவர்களின் ஸ்மார்ட் போனில் மட்டுமே நாம் அனுப்பும் தகவலை படிக்க முடியும்.
இப்போது தேசிய குறியீட்டுச் சொற்கள் வரைவுச் சட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது அமல்படுத்தப்பட்டால், அனைவரும் தங்கள் வாட்ஸ் ஆப், ஹேங் அவுட்ஸ், ஐமெசேஜ் உள்ளிட்டவற்றை 3 மாதங்கள் வரை கண்டிப்பாக அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் படும்..
இந்தப் புதிய சட்டத்தின்படி பொதுமக்களுக்கு இணையம் மூலம் தகவல்களைப் பரிமாறுவதிலும் தகவல்களை கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றில் பதிவு செய்து வைப்பதிலும் குறியீட்டுச் சொற்கள் வசதியை பயன்படுத்த உரிமை உண்டு. அதே நேரத்தில் அதற்கான செயல்முறையை முக்கியமாக அல்காரிதம் வடிவமைப்பு, “கீ சைஸ்” உள்ளிட்டவற்றை அரசின் அப்போதைய அறிவிப்பின்படி செயல்படுத்த வேண்டும். இதன்படி கூகுள், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்தியாவில் மத்திய அரசு கூறும் குறியீட்டு சொல் வடிவமைப்பு முறையையே பயன்படுத்த வேண்டும். மேலும் இந்த வசதியைப் பயன்படுத்தும் அனைவரும் தங்கள் ஸ்மார்ட்போனில் பெறும் தகவல்கள், அனுப்பும் தகவல்களை கண்டிப்பாக 3 மாதங்கள் வரை அழிக்காமல் வைத்திருக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டிருக்கும்.
இந்தப் புதிய சட்டத்தை இணையத்தில் வெளியிட்டுள்ள மத்திய அரசு இது தொடர்பாக தங்களது கருத்துகளைத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
நமக்கு நாமே! பயணத்தில் ஆட்டோவில் சென்று மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்
நாகர்கோவில்:
தமிழகத்தில் பல இடங்களில் நமக்கு நாமே என்ற திட்டத்தை வைத்து பயணத்தை மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், நாகர்கோவிலில் ஆட்டோவில் நின்றபடி பயணித்து மக்களிடம் பிரசாரம் செய்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் ஆலோசனைப்படி, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய ‘‘நமக்கு நாமே’’ விடியல் மீட்பு முதல் கட்ட பயணம் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்தில் இருந்து தொடங்கியது. அதைத் தொடர்ந்து ‘‘நமக்கு நாமே’’ விடியல் மீட்பு பயணத்தை தொடங்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நேற்று நடந்தது. இதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று காலை 8.30க்கு கன்னியாகுமரியில் உள்ள கடற்கரைப் பகுதிக்கு வந்தார். அங்கு வந்திருந்த மகளிர் சுய உதவிக் குழு பெண்களுடன் கலந்துரையாடி நடைப் பயணத்தை தொடங்கினார். வரும் வழியில் கன்னியாகுமரியில் உள்ள கடை வியாபாரிகள் சிலரை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து காந்தி மண்டபத்துக்கு சென்று, காந்தியின் அஸ்தி கட்டத்துக்கு (நினைவிடம்) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு காமராஜர் நினைவு மணிமண்டபத்துக்கு வந்து காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கன்னியாகுமரி சந்திப்பு பகுதிக்கு மக்களோடு நடந்து வந்தார். அண்ணா சிலை அமைந்துள்ள இடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்துக்கும், அருகில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தி, ‘‘நமக்கு நாமே’’ விடியல் மீட்பு பயணத்துக்காக வரவழைக்கப்பட்டு இருந்த வேனில் ஏறி நாகர்கோவிலுக்கு புறப்பட்டார்.
பின்னர் நாகர்கோவிலுக்கு வந்த அவர் கோட்டார் சந்தைப் பகுதியில் வியாபாரிகளை சந்தித்துப் பேசினார். ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆட்டோ ஓட்டுநர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், அங்கிருந்த ஒரு ஆட்டோவில் ஏறி நின்று ஆட்சியர் அலுவலக பிரதான வாயில் அருகில் மக்களைப் பார்த்து கை அசைத்தவாறு பயணித்தார்.
குமரி மாவட்டத்தில் சில பகுதிகளில் நடைபெற்ற கூட்டங்களில் பேசிய அவர், குமரி மாவட்டம் அய்யா வைகுண்டர், மார்ஷல் நேசமணி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, ஜீவா போன்ற பல சான்றோர்களை உருவாக்கிய மாவட்டம். அப்படி பெருமைக்குரியவர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் இருந்து இந்த பயணம் தொடங்கப்படுகிறது.
கருணாநிதி முதல்–அமைச்சராக இருந்தபோது வணிகர்களுக்கு பல நன்மைகளும், சாதனை திட்டங்களும் கிடைத்து வந்தன. ஆனால் இன்று எந்த புதிய திட்டமும் கிடையாது. நீங்கள் சுதந்திரமாக தொழில் செய்யும் நிலை வரும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே உடனடியாக ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். அதற்கு நல்ல வாய்ப்பு வருகிற 2016–ம் ஆண்டு. இன்னும் 237 நாட்கள்தான் உள்ளன. மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இலங்கை போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு நீதி விசாரணைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும்: ஆர்ப்பாட்டத்தில் வைகோ
நெல்லை:
இலங்கை போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு நீதி விசாரணை நடத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்- என்று நெல்லையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேசினார்.
இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க பிற நாடுகளை வலியுறுத்த வேண்டும்; இலங்கை அரசு நடத்திய போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு நீதி விசாரணைக்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா முன்வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை புறநகர், மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கிப் பேசினார். அப்போது,
இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலை குறித்து பன்னாட்டு விசாரணை அவசியம் வேண்டும். சுதந்திர தமிழ் ஈழம் அமைய வேண்டும். அதற்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் உலகம் எங்கும் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும், தமிழ்நாட்டில் அகதிகளாக உள்ள 65 ஆயிரம் ஈழத் தமிழர்களிடமும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்கக்கூடாது.
ஈழத்தமிழர் விடுதலைக்காக முத்துக்குமார் தீக்குளித்து உயிர்நீத்தபோது நடந்த கூட்டத்தில், மத்திய அரசை விமர்ச்சித்தும், பிரபாகரனை பற்றியும் பேசக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார். தனது மகன் மத்திய அமைச்சரவையில் இருந்ததால் அவர் அப்படி கூறினார். மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தி.மு.க.வும் இது பற்றி பேசவில்லை.
இலங்கையில் நடந்த போர்குற்றங்கள் குறித்த மனித உரிமை கமிஷனின் 268 பக்க அறிக்கையை படித்து பார்த்தேன். அப்போதைய ராணுவ மந்திரி மைத்ரிய ஸ்ரீபாலசேனா, ராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ஆகியவர்களும், தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள்தான். அவர்கள் கண்முன்பே ஈழத்தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால், அவர்களுக்காக போராடும் இயக்கம் ம.தி.மு.க. மட்டுமே. ம.தி.மு.க.வில் இருந்து சிலரை தி.மு.க.வுக்கு கருணாநிதியும், ஸ்டாலினும் இழுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு சென்ற பின்புதான், ம.தி.மு.க. மீண்டும் எழுச்சி பெற்று உள்ளது. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இது ஏழரை கோடி தமிழர்களின் உணர்வை பிரதிபலிக்கும் தீர்மானம். அந்த தீர்மானத்தை மத்திய அரசு மதிக்க வேண்டும். அதுபற்றி ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு எடுத்துச் சென்று, பன்னாட்டு நீதி விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும்.
ஈழ தமிழர்களின் பிரச்சினைக்கு உலக நாடுகள் தீர்வு தராது. நாம் உலக நாடுகளிடம் நீதி கேட்கவேண்டாம். நாமே நீதியை பெறவேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள 10 லட்சம் இளைஞர்கள் கட்சியை மறந்து தமிழர் என்ற உணர்வுடன் களத்தில் இறங்கி போராடினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். உடனே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்வு காணப்படும். ஈழ தமிழர்களின் உரிமைக்காக நான் தொடர்ந்து போராடுவேன்.
– என்று வைகோ கூறினார்.
காவிரி விவகாரத்தில் இரு மாநில முதல்வர்களும் பேசி முடிவெடுக்கவே பிரதமர் விரும்புகிறார்: முரளிதர் ராவ்
சென்னை:
பாஜக., வின் கூட்டம் நேற்று சென்னையில் கமலாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ்,
காவிரி நதிநீர் பிரச்னை நாட்டின் ஒற்றுமை சார்ந்த விஷயம். இதனை குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு இரு மாநில முதல்வர்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என்றார்.
மேலும், இலங்கை பிரச்னையில் தமிழர் நலனுக்காக ராஜதந்திரத்துடனும், நாட்டின் பாதுகாப்பு சார்ந்தும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்னையில் தமிழர்களுக்கு பாதிப்பு இல்லாமலும், இலங்கைத் தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு நல்ல முறையில் முடிவு எடுப்போம் என்று கூறினார்.
கட்சியை பலப்படுத்த குழு; தேர்தல் பணிக்கு ஒரு லட்சம் பேருக்கு பயிற்சி: முரளிதர் ராவ்
சென்னை:
தமிழகத்தில் பா.ஜ.க.,வை பலப்படுத்த ஒரு குழு அமைக்கப்படும், ஒரு லட்சம் தொண்டர்களுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவ் கூறினார்.
தமிழக பா.ஜ.க., தேர்தல் மேலாண்மைக் குழுக் கூட்டம் நேற்று காலை கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், பண்டாரு தத்தாத்ரேயா, மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர்கள் முரளிதர் ராவ், எச்.ராஜா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டம் முடிந்த பின்னர், முரளிதரராவ் செய்தியாளர்களிடம் பேசியபோது,
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்த, தொகுதிக்கு ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு தேர்தல் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எங்களது பிரசாரக் குழுவினர் மக்களை நேரடியாக சந்தித்து மாநில, மண்டல, மாவட்ட அளவிலான பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுப்பார்கள்.
பிரதமரின் முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் சிறு வியாபாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட உள்ளது. சிறு வியாபாரிகளுக்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ‘சிசு’ திட்டத்தின் மூலமும், 50 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை ‘கிஷோர்’ திட்டத்தின் மூலமும், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் ‘தருண்’ திட்டத்தின் மூலமும் கடன் வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக வருகிற 25-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை மக்களிடம் இதனை பிரபலப்படுத்த உள்ளோம்.
தமிழகத்தைப் பொறுத்த வரையில், தேசிய ஜனநாயக கூட்டணி அப்படியே நீடிக்கிறது. பா.ம.க. முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளதே தவிர தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக அறிவிக்கவில்லை. தேர்தல் வரும்போது, இந்த நிலைப்பாடு மாறக்கூடும். விரைவில் எங்கள் கூட்டணியில் வேறு சில கட்சிகளும் இணைய உள்ளன. தமிழகத்தில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்று அணியாக அமையும். – என்று கூறினார்.
ஐபிஎல்.,லில் சென்னை அணிக்கான இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு
ஐபிஎல் போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில்,. சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை, ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு உத்தரவிட்டுள்ளது. இந்த 2 அணிகளுக்கும் ஐ.பி.எல். போட்டியில் கலந்து கொள்ள தடை விதித்துள்ளது அநீதி. போட்டியின் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் அளவில் சூதாட்டம் எதுவும் நடைபெறவில்லை.
தற்போது தலைமறைவாக உள்ள லலித்மோடி உள்ளிட்ட சிலரின் சதி காரணமாக இந்த 2 அணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் பிகார் கிரிக்கெட் சங்கமும் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்தச் சங்கம் நேர்மையான காரணத்துக்காக வழக்கு தொடரவில்லை. எனவே, ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு ஆர்.எம்.லோதா தலைமையிலான குழு விதித்த 2 ஆண்டுகள் இடைக்காலத் தடையை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி வாதிட்டார். விசாரணைக்குப் பிறகு, ஏற்கெனவே இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு வரும் 23-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அந்த வழக்கோடு சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என உத்தரவிடப்பட்டது.
இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி: பேச்சுவார்த்தையில் முடிவு
புதுதில்லி :
இந்தியா – இலங்கை இருநாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் இரு நாடுகளையும் சேர்ந்த உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் முதல் நாள் கூட்டத்தில், இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இலங்கை ராணுவத்தின் முப்படையினருக்கு தில்லி, டேராடூன், நீலகிரியிலுள்ள ராணுவக் கல்லுாரிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மேலும் இந்திய கடற்படையின் போர்க் கப்பல்களில் இலங்கை வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கவும், இந்திய ராணுவக் கல்லுாரிகளில் பயிலும் இலங்கை அதிகாரிகளுக்கு அப்பயிற்சியை விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
ராஜீவும் நேருவும் கோட்-சூட் அணிந்தவர்கள்தான்: ராகுலுக்கு வெங்கய்ய நாயுடு பதில்
புது தில்லி:
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், பிரதமர் அணியக்கூடிய உடையை விமர்சிக்கிறார். இது அவரின் குழந்தைத் தனமான போக்கையே காட்டுகிறது. ராகுலின் தந்தை ராஜீவ், தாத்தா ஜவகர்லால் நேரு இருவரும் ‘கோட் – சூட்’ அணிந்தவர்கள்தான் என்பதை ராகுல் மறந்து விடக்கூடாது. தன்னைப் பற்றி தினமும் ஊடங்கங்களில் செய்தி வர வேண்டும் என்பதற்காக பிரதமரை ராகுல் விமர்சிக்கிறார் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு.

