சென்னை: வருகின்ற 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும், அதில் குஷ்பு நிச்சயம் அமைச்சர் ஆவார் என்று பேசினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். சென்னை அரும்பாக்கத்தில் மத்திய–மாநில அரசுகளை கண்டித்து மத்திய சென்னை காங்கிரஸ் சார்பில் நடந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், நடிகை குஷ்பு ஆகியோர் பேசினர். அதில் பேசிய குஷ்பு, 2016 சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்று சொல்பவர்களுக்கு கொஞ்சம்கூட வெட்கம் இல்லை. ஏனெனில் மக்களின் முதல்வராக இருந்தவர் காமராஜர் ஒருவர் மட்டுமே. மிஸ்டு கால் மூலம் தினமும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதாகக் கூறும் பாஜக.,வினர், ஸ்ரீரங்கத்தில் வெறும் ஐந்தாயிரம் ஓட்டுகளே வாங்கினர் என்று பேசினார். இந்தக் கூட்டத்தில் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழகத்தில் வருகிற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு கட்டாயம் மந்திரி பதவி வழங்கப்படும். தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் பழக்கம் எங்களிடம் இல்லை. சாப்பாட்டுக்குக் கூடப் பணம் இல்லாமல் திண்டாடும் நாங்கள் ஓட்டுக்கு எப்படி பணம் கொடுக்க முடியும்? அதனால்தான் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நிற்கவில்லை. பட்ட மேற்படிப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்குவோம். மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியைக் காண மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கட்டெறும்பாகத் தேய்ந்து வருகிறது. ஆளுக்கு ஒரு கோஷ்டி என்று பிரிந்து சென்று கொண்டிருகின்றனர். வாசன், ஜெயந்தி நடராஜனைத் தொடர்ந்து, ப.சிதம்பரத்தையும் வெளியேற்ற வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். பிரம்மப் பிரயத்தனத்துடன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிக்கை, ஆதரவாளர் சஸ்பெண்ட் நடவடிக்கை என்று செயல்பட்டு வருகிறார். ஆனாலும் மனம் தளராமல் 2016ல் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி என்று பேசி வருகிறார். இப்போதைய ஹைலைட்… குஷ்புவுக்கு அமைச்சர் பதவி என்பது.
குஷ்பு லட்சியம்- 2016ல் காங்கிரஸ் ஆட்சி: ஈ.வி.கே.எஸ் லட்சியம் – குஷ்பு அமைச்சர்!
பாதிரியார் மீட்பு: மோடிக்கு பொன்.ராதாகிருஷ்ணன் நன்றி
சென்னை: ஆப்கனில் தலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து பாதிரியார் பிரேம்குமார் இருந்து மீட்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…. பாதிரியார் பிரேம்குமார் கடத்தப்பட்டதால், கடந்த 8 மாதங்களாக அவரது குடும்பத்தினர் பட்ட மிகப்பெரிய துயரத்தில் இருந்து மீண்டுள்ளனர். பாதிரியார் மீட்புக்கு, உணர்வு பூர்வமாக நடவடிக்கை எடுத்த பிரதமர் நரேந்திரமோடிக்கும், வெளிவிவகாரத்துறை மந்திரிக்கும் தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் பாதிக்கப்பட்டால், அவர்களை காப்பாற்றுகிற அக்கறையும், அரவணைப்பும், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் செயல்பாடும் பிரதமர் மோடியின் மத்திய அரசுக்கு உள்ளது என்பதற்கு பாதிரியார் பிரேம்குமார் விடுதலை ஒரு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. என்று கூறியுள்ளார்.
தாய், மனைவி, சகோதரரைக் கொன்று விவசாயி தூக்கிட்டுத் தற்கொலை
நாமக்கல்: நாமக்கல் அருகே தாய், மனைவி, சகோதரர் என 3 பேரைக் கொன்ற விவசாயி, தனது நிலத்தை ஏழைகளுக்குக் கொடுத்து விடும்படி கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள ஓலப்பாளையம் மூலக்காடு பகுதியை சேர்ந்த நஞ்சப்ப கவுண்டர் என்பவரது மனைவி செட்டியம்மாள் (75). நஞ்சப்ப கவுண்டர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். செட்டியம்மாள் தனது மகன்கள் காளியண்ணன் (55), பழனிவேல் (48) ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். இவர்களுக்கு சொந்தமாக அப்பகுதியில் ஆறரை ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் விவசாயம் செய்தும், கறவை மாடுகளை வளர்த்தும் குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களில் மனநலம் பாதிக்கப்பட்ட காளியண்ணன் என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை. பழனிவேலுக்கு செல்வம் என்ற மனைவியும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வம், தனது மகனுடன் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்னர் கரூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (45) என்பவரை பழனிவேல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை மாட்டு தொழுவத்தில் காளியண்ணன் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் செட்டியம்மாளும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவலறிந்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் திரண்டு வந்து வீட்டினுள் சென்று பார்த்தபோது அங்கு கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் கிருஷ்ணவேணியும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அருகில் இருந்த தானியங்கள் சேமிக்கும் அறையின் ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு பழனிவேல் தூக்கில் பிணமாக தொங்கியதை அக்கம்பக்கத்தினர் கண்டனர். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் 4 பேரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையில் தேடியபோது, ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் சொத்துக்களை அனாதை இல்லங்களுக்கு கொடுக்கவும் என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடிதத்தில் உள்ள மற்ற விவரங்களைத் தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். இவரது தற்கொலைக்கான காரணமும் உடனடியாகத் தெரியவில்லை.
பனை மரங்களைக் காக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ்
சென்னை: பனை மரங்களைக் காக்க சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- கதர் மற்றும் கிராமத்தொழில் வாரியம் அண்மையில் மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் சுமார் 5 கோடி பனை மரங்கள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இது ஒட்டு மொத்த இந்தியாவிலும் காணப்படும் பனைகளில் பாதி அளவு ஆகும். 30 ஆண்டுகளுக்கு முன்பாகவே பனை மரங்களின் மூலம் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. பனை மரத்தின் அனைத்து உறுப்புகளும் மக்களுக்கு பயன் தரக்கூடியவை ஆகும். ஆனால், தமிழகத்தின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ள பனை மரங்கள் பல்வேறு காரணங்களால் இப்போது வேகமாக அழிந்து வருகின்றன. வறட்சி, கருவேல மரங்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சி உள்ளிட்ட இயற்கையான காரணங்களால் பனை மரங்கள் ஒருபுறம் அழிந்து வருகின்றன. இன்னொருபுறம் செங்கல் சூளைகளுக்கான முதன்மை எரிபொருளாக பனைமரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இதனால் காய்த்துக்கொண்டிருக்கும் மரங்கள் கூட வெட்டி வீழ்த்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி, வேளாண் விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருவதும் பனைமரங்களுக்கு ஆபத்தாகியிருக்கிறது. பனைகளைப் பாதுகாப்பது கடினமான பணி இல்லை. பனையிலிருந்து போதிய அளவில் இப்போது வருவாய் கிடைக்காததால் தான் அதை பாதுகாப்பதில் பலரும் அக்கறை காட்டவில்லை.எனவே, பனையைக் காப்பதுடன், அதை நம்பியிருப்பவர்களுக்கு அதிக வருமானத்தையும், வேலை வாய்ப்பையும் உருவாக்கி தர வேண்டும். சந்தன மரம், தேக்கு மரம் இணையாக பனை மரத்தை அறிவிக்க வேண்டும். உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவின் அனுமதி பெற்றால்தான், அதை வெட்ட முடியும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். இதற்காக சட்டப்பேரவையில் புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பாதிரியார் மீட்பு- மோடி அரசின் ராஜதந்திர நடவடிக்கைக்குக் கிடைத்த வெற்றி: தமிழிசை
ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாதிரியார் மீட்கப்பட்டது, மோடி அரசின் ராஜதந்திர நடவடிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கூறினார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். சுமார் 8 மாதங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட தமிழக பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமார் நேற்று அங்கிருந்து இந்தியா திரும்பினார். இது குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை சௌந்தர்ராஜன், நரேந்திரமோடி அரசு, பிற நாடுகளுடன் நட்புடன், நல்ல உறவை மேம்படுத்தி வருகிறது. இதனால்தான், இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை காப்பாற்ற முடிந்தது. தற்போது, தாய் உள்ளத்துடன், பாதிரியார் பிரேம்குமார் கடத்தல் விஷயத்தில் நரேந்திரமோடி செயல்பட்டு, அவரை மீட்டுள்ளார். அவ்வாறு மீட்டது மட்டும் இல்லாமல், அவரது தந்தைக்கு போன் செய்து, நேரடியாக அந்த தகவலை கூறியுள்ளார். இதன்மூலம், நாட்டு மக்கள் மீது, நரேந்திரமோடி எந்த அளவு பாசமும், பற்றும் வைத்துள்ளார் என்பது தெரியவருகிறது. பிரதமர் நரேந்திரமோடி, ராஜதந்திரத்துடன் அண்டை நாடுகளுடன் நல்ல உறவை வைத்துள்ளார். அவர் இலங்கை செல்வதையும், அந்நாட்டில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவிப்பதையும், சிலர் விமர்சனம் செய்கின்றனர். ஆனால் நரேந்திரமோடியின் தொலைநோக்கு பார்வை என்ன? என்பது தற்போது, பிரேம்குமார் மீட்கப்பட்டதன் மூலம், விமர்சனம் செய்பவர்களுக்கு நன்கு புரிந்து இருக்கும். பிரேம்குமார் மீட்கப்பட்டதற்காக தமிழக மக்கள் சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும், பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். – என்று கூறினார்.
முதலமைச்சர் பதவிக்கு கூட்டணிக் கட்சிகள் போட்டி போடுவதா?: தமிழக பாஜக தலைவர் கண்டனம்
ராமநாதபுரம்: முதலமைச்சர் பதவிக்காக கூட்டணிக் கட்சிகள் போட்டி போடுவதா என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் பா.ஜ. க பிரமுகர் இல்ல திருமண விழாவுக்கு வந்திருந்தார் பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். கூட்டணிக் கட்சிகள் தேர்தலில் இணைந்து பணியாற்ற வேண்டும். தேர்தலுக்கு முன்னதாகவே நான், நீ முதலமைச்சர் என்று கூறுவது கூட்டணி தர்மத்துக்கு எதிரானது. அது கூட்டணியின் வெற்றியை பாதிக்கும். திராவிடக் கட்சிகளுக்கு மாற்று சக்தி உருவாக்கப்படும். பொதுத்தேர்தல் வரும்போது நல்ல கூட்டணி அமைந்து 2016-ல் தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைக்கும். தற்போது தமிழகத்தில் பல லட்சம் உறுப்பினர்கள் விரும்பி சேர்ந்துள்ளனர். ரஜினிகாந்த் பா.ஜ.க.வில் இணைவது குறித்து அவர்தான் தெரிவிக்க வேண்டும்.
- என்றார் அவர்.
கிணற்றில் மிதந்த 3 வயது சிறுமி சடலம்
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர், மாடசாமி (வயது 32). மெக்கானிக். அவருடைய மகள் மாலினி (3). நேற்று சனிக் கிழமை பகல் 11 மணி அளவில் மாலினி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். பின்னர் அவளை காணவில்லை. இந்தநிலையில் வீட்டின் அருகே கிணற்றில் சிறுமி மாலினி இறந்து கிடந்தார். கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.
பட்ஜெட் கூட்டத் தொடர்: சுமுகமாக நடக்க உதவுமாறு எதிர்க்கட்சிகளுக்கு மோடி வேண்டுகோள்
திங்கள் கிழமை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்திடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் மோடி கூறியது.. “நாடாளுமன்ற அவைகளின் பொன்னான நேரம் வீணாகக்கூடாது. இந்த நேரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மக்களின் நன்மையை கட்சிகளின் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்களை நிறைவேற்ற முடியும். எனவே எல்லா கட்சிகளின் தலைவர்களுக்குமான பொறுப்பு இது. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் முன் வைக்கும் பிரச்னைகளுக்கு போதிய முன்னுரிமை கொடுத்து விவாதம் மேற்கொள்ளப்படும்” என்றார் மோடி. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக இருக்கும். அவசரச் சட்டங்களுக்கு பதிலாக 6 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடும் என்று கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்து மோடி, வெங்கய்ய நாயுடு ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து அவையை சுமுகமாக நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். மார்ச் 20 வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியும், இரண்டாவது பகுதி ஏப்ரல் 20 – மே 8 வரையும் நடைபெறுகிறது. திங்கள்கிழமை பிப்.23-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். 26-ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும் 28-ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. மூன்று மாதங்கள் நடைபெறும் பட்ஜெட் தொடரில் நரேந்திர மோடி அரசு முதல்முறையாக தனது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் பாதியிலேயே அவசரச் சட்டங்கள் சார்ந்த 6 மசோதாக்களை அரசு நிறைவேற்ற வேண்டி உள்ளது. அதன்படி காப்பீடு, நிலக்கரி துறைகள் மீதான அவசரச் சட்டங்களை இயற்ற வேண்டிய நெருக்குதல் அரசுக்கு உள்ளது. மக்களவையில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால், மாநிலங்களவையில் போதிய பலம் இல்லை. இதனால் மசோதாக்களை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பாஜக கோரியுள்ளது.
நமக்கு எதற்கு வருமான வரி? :சுப்பிரமணியம் சுவாமி கேள்வி
புது தில்லி: நமக்கு எதற்கு வருமான வரி? அது தேவையா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியம் சுவாமி. சுவாமி தனது டிவிட்டர் பதிவில் இந்தக் கேள்வியை எழுப்பினார். நிலக்கரி ஏலத்தில் அரசுக்கு ரூ.80 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இதே போல் இருந்தால், 2ஜி ஏலத்திலும் கிடைக்கும். அப்படி இருக்கும் போது, நமக்கு வருமான வரி என்பது தேவைதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சுப்பிரமணியம் சுவாமி. சுவாமியின் இந்தக் கேள்வியில் ஓர் உள்ளர்த்தம் உள்ளது. முன்னர் 2ஜி விவகாரத்தில் நடந்ததைப் போல் நாட்டில் ஊழல் முறைகேடு ஏதும் நடக்காமல், சரியான வருவாய் கிடைத்தால், சாதாரண மக்கள் ஏன் வருமான வரி கட்ட வேண்டும்; அந்தத் தேவை எழாதே என்ற தொனியில் அவரது கேள்வி அமைந்திருந்தது. இதன் மூலம் அவர் முன்னர் நடந்த 2ஜி முறைகேட்டைச் சுட்டிக்காட்டி சாடியுள்ளார் என்றே எண்ணத் தோன்றுகிறது. .
Coal block auction gave govt Rs 80 000 crores. At this rate for partial auction and 2G we do we need Income Tax? — Subramanian Swamy (@Swamy39) February 20, 2015
Why do we need Income Tax is the correct sentence — Subramanian Swamy (@Swamy39) February 20, 2015
தென்னாப்பிரிக்காவை எளிதில் வென்றது இந்திய அணி
மெல்பேர்ன் உலகக் கோப்பை போட்டிகளின் லீக் சுற்று ஆட்டத்தில், இன்றைய 13 வது போட்டியில், இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எளிதில் வென்றது, முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, முதலாவதாக பேட் செய்யத் தீர்மானித்தது. அதன் படி களத்தில் இறங்கிய இந்திய அணியில், துவக்க வீரர் ரோஹித் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் பின்னர் வந்த தவானும், கோலியும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடினர். ஷிகர் தவான், 146 பந்துகளில் 137 ரன் எடுத்தார். அதில் 2 சிக்ஸர், 16 பவுண்டரி அடங்கும். கோலி 60 பந்துகளில் 46 ரன் எடுத்தார். ரஹானே தன் பங்குக்கு 79 ரன் விளாசினார். அதீல் 3 சிக்ஸ், 7 பவுண்டரிகள் அடங்கும். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன் குவித்தது. 308 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி, துவக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்து வந்தது. ஹசிம் ஆம்லா, 22 ரன் எடுத்தார். டி க்ளாக் 7 ரன்னில் ஆட்டம் இழந்தார். நடுவரிசையில் டுபிளெசிஸ், டி வில்லியர்ஸ் இணை இணைந்து விளையாடியது. டுப்ளெசிஸ் 55 ரன் அடித்தார். டிவில்லியர்ஸ் 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். மில்லர் 22, பானெல் 17 என ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். இறுதியாக, 40.2 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 177 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. இந்தியத் தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக 3 விக்கெட்டும், ஷமி, எம்.சர்மா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

