சென்னை: நான் அறிந்த 7 மொழிகளில் இந்தி மொழியே சிறந்தது’ என்றார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி. சென்னையில் நடந்த தாய் மொழி நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறினார். சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் தாய்மொழி நாள் விழா நேற்று நடந்தது. விழாவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி குத்துவிளக்கு ஏற்றி, “இணையவழி செம்மொழி தமிழ், அகம்- புறம்’’ என்ற புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார். விழாவில் தென்னிந்திய மொழிகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பாடலை கல்லூரி மாணவிகள் பாடினார்கள். தொடர்ந்து சிறந்த தமிழ் அறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை-வேந்தர் அவ்வை நடராஜன் கௌரவிக்கப்பட்டார். சென்னையில் உள்ள தமிழ் செம்மொழி மத்திய நிறுவனம், மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம், தில்லியில் உள்ள ராஷ்டிரிய சமஸ்கிருத சன்ஸ்தான் அமைப்பு சார்பில் புத்தகங்கள் வெளியிடப்பட்டது. குறிப்பாக 22 மொழிகளில் உள்ள, குழந்தைகளுக்கான 1,008 சிறுகதைகள் மொழிபெயர்ப்பு புத்தகம், ‘பொன்னியின் செல்வன்’ சமஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்பு ஆகியவற்றை மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி வெளியிட்டு, பாரதியார் பாடலின் ஒரு சில வரிகளையும் பாடினார்.
வேலை நிறுத்தத்தைக் கைவிடுக: வங்கி ஊழியர்களுக்கு ஜேட்லி வலியுறுத்தல்
புது தில்லி: வங்கி ஊழியர்கள் தங்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வலியுறுத்தியுள்ளார். வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், வேலைநிறுத்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று, ஊழியர் சங்கங்களை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், இருதரப்பிலும் சுமுகமான சூழலில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதே பிரச்னையில் தீர்வை ஏற்படுத்த உதவும். பொதுத் துறை வங்கி ஊழியர் சங்கங்கள் போராட்ட வழியைத் தேர்வு செய்வதைத் தவிர்த்து, வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும். வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது தேசிய நலனுக்கு உகந்ததல்ல என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி பொதுத் துறை வங்கி ஊழியர்கள் வரும் 25 முதல் 28ம் தேதி வரை வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர். திங்கள் நாளை அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
தென்னாப்பிரிக்காவுடன் மோதல்: இந்தியா நிதான ஆட்டம்
உலக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்றைய லீக் சுற்றின் 13 வது போட்டியில், இந்திய தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் துவக்க வீரர் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். தவானும் கோலியும் ஜோடி சேர்ந்து 11 ஓவரில் 37 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடி வருகிறது. லைவ் ஸ்கோருக்கு…. https://www.dhinasari.com/wcc2015/
சிதம்பரம், கார்த்திக்கு நான் பதில் சொல்ல வேண்டிய நிலை இல்லை: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கோ, கார்த்திக்கோ நான் பதில் சொல்லும் அளவுக்கு அவர்கள் பெரிய நபர்கள் இல்லை, அதற்காக காங்கிரஸ் மேலிடத்திடம் பேச வேண்ண்டியதும் இல்லை என்று கூறினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். இளங்கோவன் நேற்று தில்லியில் இருந்து சென்னை திரும்பிய போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது… கோவை காங்கிரஸ் பிரமுகர்களும் சிதம்பரம் ஆதரவாளர்களுமான 6 பேர் கட்சியில் இருந்து நீக்கப் பட்ட விவகாரத்தில், சிதம்பரம் கண்டனம் தெரிவித்து வெளியிட்ட கடிதம் குறித்து கேட்டனர். அதற்கு அவர், ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நான் பதில் சொல்லப் போவது இல்லை. அவர்கள் ஒன்றும் பெரிய நபர்கள் கிடையாது. இதுபற்றி காங்கிரஸ் தலைமையிடம் பேச வேண்டியதும் இல்லை. நான் இப்போது, சோனியா காந்தி, கட்சி பொருளாளர் மோதிலால் வோரா ஆகியோரை சந்தித்து பேசினேன். அப்போது காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினோம். அதுபற்றி உங்களிடம் சொல்வதற்கு இல்லை. கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றார். மேலும், மத்திய அரசின் அலுவலகங்களில் இருந்து பல ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாகவும், திருடப்பட்டு உள்ளதாகவும், அதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தகவல்கள் வருகின்றன. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இதுபோல மத்திய அரசு ஆவணங்கள் மாயமாகிவிட்டன. அப்போது ஆவணங்கள் திருட்டு போனதால் பிரதமர் பதவி விலக வேண்டும் என பாஜகவினர் கோரினர். தற்போது மத்திய அரசு ஆவணங்கள் திருட்டு போய் இருப்பதால் முன்மாதிரியாக பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும். பிரதமர் மோடி, விலகுவாரா? என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
பிரபாகரன் மகன் பாலசந்திரன் கொலை: எதுவும் தெரியாது என்கிறார் பொன்சேகா
கொழும்பு: உலக அளவில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்திய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் மகன் பாலசந்திரன் கொலை செய்யப்பட்டது குறித்து, தமக்கு எதுவும் தெரியாது என்கிறார் இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா. சரத் பொன்சேகா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ராணுவத் தளபதி என்ற முறையில் எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு எந்த அறிக்கையும் அப்போது கிடைக்கப்பெறவில்லை. ஆனால், பிரபாகரன் மற்றும் அவரது மூத்த மகன் சார்லஸ் ஆண்டனிக்கு என்ன நடந்தது என்பது குறித்து எனக்குத் தெரியும். அதை உறுதிபடுத்தி, ஊடகங்களின் வழியாகத் தெரியப்படுத்தினோம். இருந்தாலும், பிரபாகரனின் மனைவி மற்றும் பெண், இளைய மகன் குறித்து எனக்கு எவ்விதத் தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை.
பிரபாகரன் இளைய மகன் பாலசந்திரன் கொலைச் சம்பவம் குறித்து வெளியிடப்பட்ட சேனல் 4 ஆவணப் படத்தை எனக்குப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்த போதிலும், சிறையிலிருந்த காலத்தில் பத்திரிகைச் செய்திகளின் வாயிலாக, அது குறித்து நான் அறிந்து கொண்டேன். அந்த வீடியோக் காட்சியில் இருப்பது உண்மையா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இறுதிக் கட்டப் போரின் இரண்டு நாள் போரின் போது பலர் கொல்லப்பட்டார்கள். ஆனால் ராணுவத் தளபதி என்ற முறையில் பிரபாகரனின் இளைய மகன் குறித்து எனக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. குறைந்த பட்சம் அவரின் சடலம் கிடைத்தது என்று கூட எனக்கு அறிக்கை கிடைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
லிங்கா பட விவகாரத்தில் சமரச முயற்சி: போராட்டம் ஒத்திவைப்பு
சென்னை: லிங்கா’ பட விநியோகஸ்தர்களிடம் நடிகர் சரத்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் அவர்கள் அறிவித்திருந்த தியேட்டர்கள் முன் பிச்சை எடுக்கும் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 10% நஷ்டஈடு தொகையை ஏற்க மறுத்து விநியோகஸ்தர்கள் தரப்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவர்கள் தரப்பு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வந்தனர். இதனிடையே, அந்தப் போராட்டம் நடைபெறும் அதே நாளில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ரஜினி ரசிகர்கள் போராட்டத்தை நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் ‘லிங்கா’ விநியோகஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் பங்கேற்று விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், முதலில் என்ன நடந்தது என்பதை விநியோகஸ்தர்கள் தரப்பில் எடுத்துரைத்தனர். தங்களுக்கு ரூ.33 கோடி நஷ்டம் என்று கூறப்பட்டது. அதற்கு சரத்குமார் ரூ.33 கோடியை எவ்வளவு தூரம் உங்களால் குறைத்து கொள்ள முடியும் என்று சரத்குமார் கேட்டார். அதற்கு ரூ.8 கோடி எங்களால் குறைத்துக் கொள்ள முடியும். கண்டிப்பாக ரூ.25 கோடி வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கூறினார்கள். என்னுடைய ‘சண்டமாருதம்’ வெளியாகிறது. திங்கள்கிழமை ரஜினியை சந்தித்து பேசிவிட்டு உங்களை அன்றைய தினமே நல்ல முடிவோடு சந்திக்கிறேன் என்று சரத்குமார் அவர்களிடம் கூறியுள்ளார். அதற்கு விநியோகஸ்தர்கள் சம்மதம் தெரிவித்தனராம். பேச்சுவார்த்தையின் முடிவில், எங்களால் இன்னும் ரூ.3 கோடியைக் கூட குறைத்துக் கொள்ள முடியும். ஆனால், ரூ.22 கோடியில் இருந்து குறைத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் இறுதியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இப்பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதால், விநியோகஸ்தர்களின் பிச்சை எடுக்கும் போராட்டம் தற்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
என்னை களங்கப்படுத்த சதி நடக்கிறது: ஆபாச வீடியோ விவகாரத்தில் லட்சுமி மேனன் ஆவேசம்
சென்னை: லட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோக்கள் இணைய தளங்களிலும் வாட்ஸ்-அப்களிலும் அண்மைக் காலத்தில் பரவியது. இதனைக் கேள்விப்பட்ட லட்சுமி மேனன், தன்னைக் களங்கப் படுத்த சதி நடப்பதாக ஆவேசத்துடன் கூறினார். லட்சுமி மேனன் குறித்து வெளியான இந்தப் படங்களால், திரை உலகில் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோவில் இருப்பது லட்சுமிமேனன்தானா அல்லது மார்பிங் செய்யப்பட்ட போலி படமா என்று விவாதங்கள் நடைபெற்றன. இந்நிலையில், இது குறித்து லட்சுமிமேனன் விளக்கம் அளித்தார்.. அப்போது, ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நானல்ல. யாரோ என்னை களப்படுத்துவதற்காக திட்டமிட்டு இந்த படத்தை வெளியிட்டு இருப்பது தெரிகிறது. கடந்த சில வருடங்களாக சினிமாக்களில் நான் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை என்னைப் பற்றி எந்தவொரு தவறான செய்தியும் வந்ததில்லை. ஆனால் இப்போது திட்டமிட்டு இந்த ஆபாசப் படத்தை வெளியிட்டுள்ளனர். அந்த ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்ணின் முகத்துக்கும் என் முகத்துக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. அந்த வீடியோ உண்மையானது இல்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும். நான் இப்போது பிளஸ்டூ தேர்வுக்காக படித்துக் கொண்டு இருக்கிறேன். என்னைப் படிக்கவிடாமல் செய்யவும், கவனத்தை திசை திருப்பவும் இந்த சதி நடந்திருக்கலாம் என நினைக்கிறேன். அதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் தேர்வு முடிந்ததும் இந்த சதிக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் இறங்குவேன். நடிகையாகி விட்டால் இது போன்ற சங்கடங்களை சந்தித்துதானே ஆக வேண்டும். – என்று கூறினார்.
முலாயம் இல்லத் திருமண விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: ஆதாயம் தேடுவதாக புகார்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் இல்லத் திருமண விழாவில் இன்று பிரதமர் மோடி கலந்து கொண்டார். முலாயம்சிங் யாதவின் இளைய பேரன் தேஜ் பிரதாப்சிங் யாதவுக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகள் ராஜ லட்சுமிக்கும் வரும் 26-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்தத் திருமண விழாவின் ஒரு பகுதியாக, மணப்பெண்ணுக்கு திலகம் இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவுக்காக சுமார் 80,000 சதுர அடி அளவில் ஜெர்மனிலிருந்து வரவழைக்கப் பட்டிருந்த பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. இந்தப் பந்தல், நீராலோ தீயாலோ பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பாக அமைந்த ஒன்று. இந்த விழாவுக்கு காலை 10.45 மணி அளவில் சிறப்பு விமானத்தில் வருகை தந்த மோடியை, லாலு பிரசாத்தும், முலாயம் சிங்கும் வரவேற்று அழைத்துச் சென்றனர். சுமார் 45 நிமிடங்களுக்கு மோடி அங்கே இருந்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த வாரம் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் மோடியின் முன்னரேயான வருகை, அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என அங்கே புகார் கிளம்பியது
“சோளியும் சோளமும் சோழனும் உறையும் உறையூரும்”
“சோளியும் சோளமும் சோழனும் உறையும் உறையூரும்” “பொருத்தம் காட்டும் பெரியவா”
உலகின் மிக உயரமான துபை டார்ச் கட்டடத்தில் தீ விபத்து
துபை நகரில், உலகின் உயரமான கட்டடங்களில் ஒன்றான ‘தி மரினா டார்ச்’ என்ற குடியிருப்புக் கட்டடத்தில் நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. 79 அடுக்கு மாடிகளைக் கொண்ட 336.1 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் கட்டடத்தில், நள்ளிரவு 2 மணி அளவில் கட்டிடத்தின் 50-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. அதனால், தீ அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவத் தொடங்கியது, இதை அடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் அவசரமாக அவசரமாக கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் சுமார் 10 தீயணைப்புக் குழுக்கள் ஈடுபட்டதாகவும், தீ விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ அவசர வாகனங்களும் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வரை கட்டடத்திற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை என்றும், தீ விபத்து ஏற்பட்ட பகுதி சாலைகளில் அவசரமாக போக்குவரத்து மாற்றங்களைச் செய்ததாகவும் பணியில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.இருப்பினும் தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்தோ, தீ விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்தோ தகவல் வெளியாவில்லை. இந்தத் தீ விபத்துச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

