Home Blog Page 98

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே 8ல் மீனாட்சி திருக்கல்யாணம்!

madurai meenakshi kalyanam - 2026

மதுரை சித்திரை திருவிழா மே 6ல் தொடக்கம்! மே8ல் மீனாட்சி திருக்கல்யாணம்…

மதுரை சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு சித்தரை திருவிழாவில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 29 – சித்திரை திருவிழா கொடியேற்றம்
மே 06 – மீனாட்சி பட்டாபிஷேகம்
மே 08 – மீனாட்சி திருக்கல்யாணம்
மே 09 – மீனாட்சி திருத்தேரோட்டம்
மே 10 – கள்ளழகர் புறப்பாடு
மே 11 – கள்ளழகர் எதிர்சேவை
மே 12 – கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் மிக முக்கியமான நிகழ்ச்சி நடைபெறும்.

மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் சித்திரா பெளர்ணமி தினத்தில் நடைபெறும். இது இந்துக்களின் மிகவும் சிறப்புக்குரிய நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் உள்ள இந்து ஆலயங்களில் நடைபெறும் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று தமிழகத்தில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ஆகும்.

அக்னி நட்சத்திரம் வெயிலுக்கே சவால் விடும் வகையில் வெகு சிறப்பாக நடைபெறும் இவ்விழா சைவ-வைணவ ஒற்றுமையின் வெளிப்பாடாக கொண்டாடப்படும் உத்ஸவம் ஆகும்.

16 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இவ்விழாவில் மிக முக்கியமான நிகழ்வுகள் என்றால், அது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமே. தற்போது இதற்கு ஈடாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணமும் மிக முக்கியமான நிகழ்ச்சியாக கடந்த பல ஆண்டுகளாக பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது.

சித்திரை திருவிழா நடைபெறும் காலங்களில் மதுரை மட்டும் இல்லாது சுற்றி உள்ள ஊர்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். மதுரை மட்டுமின்றி அதன் சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்தும் தமிழகம் கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை பொறுத்தவரை அனைத்து மாதங்களும் திருவிழா மாதங்கள் என்றாலும் சித்திரை திருவிழா, வழக்கமான உற்சவங்கள், திருவிழாக்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.
இதில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த நாளில் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் நேரடியாக சென்று திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்வார்கள். மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் அதே சமயத்தில் திருமணமான பெண்கள் பலரும் புதிய தாலிக்கயிறு மாற்றிக் கொள்வார்கள். இப்படி மாற்றுவதால் அன்னை மீனாட்சியே போலவே தங்களுக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மதுரையில் இருப்பவர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்கள், உலகின் பல நாடுகளிலும் இருக்கும் பெண்கள் டிவி.,யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் திருக்கல்யாண காட்சியை தரிசித்து, தாலிச்சரடு மாற்றிக் கொள்ளும் வழக்கம் உள்ளது.

இந்தியாவின் மிக முக்கியமான கோவில்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய அம்மன் கோவிலாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் 29 – சித்திரை திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக துவங்கி திருவிழா க்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

முக்கிய நிகழ்வாக மே 06 – மீனாட்சி பட்டாபிஷேகம்
மே 08 – மீனாட்சி திருக்கல்யாணம்
மே 09 – மீனாட்சி திருத்தேரோட்டம்
மே 10 – கள்ளழகர் புறப்பாடு
மே 11 – கள்ளழகர் எதிர்சேவை
மே 12 – கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குதல் நடைபெறும்.

கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுப்பதற்காக மதுரைக்கு வருவது விழாவின் முக்கிய அம்சம். அதே போல் சித்திரைத் திருவிழாவின் போது பதினாகாவது மற்றும் இறுதி நாளில் தேவேந்திர பூஜை நடத்தப்படும். இது மண் செழிப்பதற்காக நடத்தப்படும் மிக அற்புதமான பூஜை. கள்ளழகர், அழகர்மலை சென்றடைவதுடன் மதுரை சித்திரை திருவிழா நிறைவு பெறும்.

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் – 27.04.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை vs லக்னோ

மும்பை இந்தியன்ஸ் அணி (215/7, ரியன் ரிக்கிள்டன் 58, சூர்யகுமார் யாதவ் 54, நமன் திர் 25, கோர்பின் போஷ் 20, ரோஹித் ஷர்மா 12, மயாங்க் யாதவ் 2/40, ஆவேஷ் கான் 2/42, பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரத்தி, ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கட்) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (161, ஆயுஷ் பதோனி 35, மிட்சல் மார்ஷ் 34, நிக்கோலஸ் பூரன் 27, டேவிட் மில்லர் 24, ரவி பிஷ்னோய் 13, பும்ரா 4/22, போல்ட் 3/20, வில் ஜேக்ஸ் 2/18, கோர்பின் போஷ் 1/26) 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.

அந்த அணியின் தொடக்க வீரர், கடந்த இரண்டு ஆட்டங்களாகச் சிறப்பாக ஆடிய, ரோஹித் ஷர்மா (5 பந்துகளில் 12 ரன, 2 சிக்சர்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரியன் ரிக்கிள்டன் (32 பந்துகளில் 58 ரன், 6 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினார்.

அவருடன் வில் ஜேக்ஸ் (21 பந்துகளில் 29 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), சூர்யகுமார் யாதவ் (28 பந்துகளில் 54 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் சிறப்பாக ஆடினர். திலக் வர்மா (6 ரன்) மாற்றும் ஹார்திக் பாண்ட்யா (5 ரன்) இருவரும் இன்று சோபிக்கவில்லை.

பின்னால் வந்த நமன் திர் (11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 25 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் கோர்பின் போஷ் (10 பந்துகளில் 20 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) வேகமாக ரன் சேர்த்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஏழு விக்கட்டு இழப்பிற்கு 215 ரன் எடுத்தது.

வெற்றிக்கு 216 ரன் என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய லக்னோ அணி மும்பை அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா, போல்ட் இருவரின் வேகப் பந்துவீச்சிலும் வில் ஜேக்ஸின் சுழலிலும் திணறியது.

வழக்கமாக அதிக ரன் எடுக்கும் வீரர்கள் அதிக பட்சமாக 35 ரன்னைத் தாண்டவில்லை. மிட்சல் மார்ஷ் (34 ரன்), நிக்கோலஸ் பூரன் (27 ரன்), ஆயுஷ் பதோனி (35 ரன்), டேவிட் மில்லர் (24 ரன்) ஆகியோர் வெற்றி இலக்கை அடையும் வகையில் வேகமாக ஆடமுடியவில்லை.

16ஆவது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா டேவிட் மில்லர், அப்துல் சமத் (2 ரன்), ஆவேஷ் கான் (பூஜ்யம் ரன்) ஆகிய மூவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். இதனால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 161 ரன் மட்டுமே அடிக்க முடிந்தது.

எனவே மும்பை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மும்பை அணியின் வில் ஜேக்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

டெல்லி vs பெங்களூரு

டெல்லி கேபிடல்ஸ் அணியை (162/8, கே.எல். ராகுல் 41, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 34, அபிஷேக் போரல் 28, டியு பிளேசிஸ் 22, அக்சர் படேல் 15, விப்ராஜ் நிகம் 12, புவனேஷ் குமார் 3/33, ஹேசல்வுட் 2/36, யஷ் தயாள் 1/42, க்ருணால் பாண்ட்யா 1/28) ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (18.3 ஓவர்களில் 165/4, க்ருணால் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 73, விராட் கொலி 51, அக்சர் படேல் 2/19, சமீரா 1/24) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவா தலையா வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது.

தொடக்க வீரர்கள் அபிஷேக் போரல் (11 பந்துகளில் 28 ரன்) மற்றும் டியு பிளேசிஸ் (26 பந்துகளில் 22 ரன்) சுமாரான தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த கருண் நாயர் (4 ரன்) இன்று சரியாக ஆடவில்லை.

அதன் பின் ஆட வந்த கே.எல். ராகுல் (39 பந்துகளில் 41 ரன், 3 ஃபோர்), அக்சர் படேல் (15 ரன்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (18 பந்துகளில் 34 ரன்) இருவருடனும் இணைந்து அனியின் ஸ்கோரை நிலைப்படுத்தினார்.

அதற்குப் பின்னால் வந்த வீரர்களுக்கு விளையாட அதிகம் பந்துகள் இருக்க வில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்தது. வெற்றிக்கு 163 ரன்கள் என்ற எளிய இலக்கோடு களமிறங்கிய பெங்களூரு அணியின் புதிய தொடக்க ஆட்டக்காரர் ஜேக்கப் பெதெல் (6 பந்துகளில் 12 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அதே ஓவரில் தேவதத் படிக்கல் (பூஜ்யம் ரன்) விக்கட்டைப் பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் ரஜத் படிதர் (6 ரன்) ரன் அவுட் ஆனார். எனவே விராட் கோலி (47 பந்துகளில் 51 ரன், 4 ஃபோர்) க்ருணால் பாண்ட்யா (47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) உடன் இணைந்து நிதானமாக ஆடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இறுதியில் டிம் டேவிட் (5 பந்துகளில் 19 ரன்) வெற்றிக்கு வழிவகுத்தார். டெல்லி அணியில் அக்சர் படேலைத் தவிர பிற பந்துவீச்சாளர்கள் சரியாகப் பந்துவீசவில்லை.

அக்சர் படேல் பந்துவீச்சாளர்களைப் பயன் படுத்திய விதமும் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை.

ஆட்ட நாயகனாக க்ருணால் பாண்ட்யா அறிவிக்கப்பட்டார். 14 புள்ளிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில் இன்று முதலிடத்தில் உள்ளது.

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

whatsapp ai - 2026
#image_title

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கும், போரில் காயமடைந்த அல்லது கொல்லப்பட்ட வீரர்களுக்கும் நன்கொடைகளைக் கோருவதாகவும், ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு நிதியை செலுத்துவதாகவும் இந்த வாட்ஸ் அப் தகவல் தவறாகக் கூறுகிறது.

இந்தத் திட்டத்தை மத்திய அமைச்சரவை கூடி முடிவு எடுத்ததாக தவறாகக் கூறுகிறது, மேலும் நடிகர் அக்ஷய் குமாரை இந்த முயற்சியின் முக்கிய ஆதரவாளராகக் குறிப்பிடுகிறது.

“இந்தச் செய்தியில் உள்ள கணக்கு விவரங்கள் தவறானவை, இதனால் ஆன்லைன் நன்கொடைகள் மறுதலிக்கப்படுகின்றன. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் இதுபோன்ற மோசடித் தகவல்களுக்கு பொதுமக்கள் இரையாகக்கூடாது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போர் நடவடிக்கைகளின் போது கொல்லப்பட்ட அல்லது ஊனமுற்ற வீரர்களுக்காக அரசாங்கம் பல நலத்திட்டங்களைத் தொடங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டில், அரசாங்கம் ‘ஆயுதப் படைகள் போர் விபத்து நல நிதியை (AFBCWF)’ நிறுவியது, இது செயலில் உள்ள இராணுவ நடவடிக்கைகளில் தங்கள் உயிரைக் கொடுத்த அல்லது படுகாயமடைந்த வீரர்கள், மாலுமிகள் மற்றும் விமானப்படை வீரர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிதி உதவி வழங்கப் பயன்படுகிறது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

railway news - 2026
#image_title

திருநெல்வேலி – செங்கோட்டை – திருநெல்வேலி பயணிகள் ரயில் ஒரு வழியா பெட்டிகள் எண்ணிக்கை கூட்டியாச்சு. இந்த செங்கோட்டை மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போது விடிவுகாலம் வருமோ? என பயணிகள் ஏக்கத்தில் உள்ளனர். வெறும் பத்து பெட்டிகளுடன் மட்டும் இயங்கும் செங்கோட்டை – மயிலாடுதுறை – செங்கோட்டை ரயில் குறைந்தபட்சம் 18 பெட்டிகளாக்கி இரண்டு ரிசர்வேஷன் கோச்சுக்களும் என ஏற்படுத்தித் தர பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருநெல்வேலியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவுள்ள செங்கோட்டைக்கு 12 பெட்டிகளுடன் இயங்கும் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகளை சேர்த்து 16 பெட்டிகளுடன் இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் விட்ட நாள் முதல் பயணிகள் நெரிசலாக உள்ள செங்கோட்டை மயிலாடுதுறை செங்கோட்டை விரைவு ரயிலில் எப்போது பெட்டிகள் எண்ணிக்கை அதிகரித்து இயக்கப்படும் என தென்காசி கொல்லம் திருவனந்தபுரம் விருதுநகர் மதுரை மாவட்ட பயணிகள் பெரும் ஏக்கத்துடன் உள்ளனர்.

செங்கோட்டையிலிருந்து மதுரை சென்ற பயணிகள் ரயில், திண்டுக்கல் மயிலாடுதுறை பயணிகள் ரயிலை இணைத்து 450 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கும் செங்கோட்டை மயிலாடுதுறை செங்கோட்டை ரயிலில், 10 பெட்டிகள் மட்டும் உள்ள நிலையில் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு பயணிக்கின்றனர்.

மதுரை- – செங்கோட்டை வழித்தடத்தில் தினமும் 3 நேரம், 16 முதல் 18 பெட்டிகளுடன் பயணிகள் ரயில் இயங்கி வந்தது. இதில் தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்ட மக்கள் பயணித்து வந்தனர். மதுரையில் இருந்து மயிலாடுதுறை/ஈரோடுக்கு தினமும் ஒரு ரயில் இயங்கியது. திண்டுக்கல்லில் இந்த ரயில் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பாதி ஈரோடுக்கும், மற்றொரு பாதி மயிலாடுதுறைக்கும் செல்லும்.

இந்நிலையில் மயிலாடுதுறை– திண்டுக்கல், மதுரை- – செங்கோட்டை இரு ரயில்களையும் இணைத்து செங்கோட்டை– மயிலாடுதுறை ரயிலாக தற்போது இயங்கி வருகிறது.

16 பெட்டிகளுடன் இயங்கிய மதுரை – செங்கோட்டை ரயில் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்ட பிறகு 10 பெட்டிகளாக குறைக்கப்பட்டது. இந்த ரயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. மக்கள் உயிரைப் பணயம் வைத்து படியில் தொங்கிக்கொண்டு பயணித்து வருகின்றனர்.

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவுள்ள செங்கோட்டைக்கு 12 பெட்டிகளுடன் இயங்கிய பயணிகள் ரயிலில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் ஏப். 24ல் மதுரையில் நடந்த எம்.பிக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மறுநாளே கூடுதலாக 4 பெட்டிகளை சேர்த்து இயக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

ஆனால், செங்கோட்டையில் இருந்து 450 கிலோமீட்டர் தூரம் உள்ள மயிலாடுதுறைக்கு இயங்கும் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பதற்கு பதிலாக, இருந்ததையும் குறைத்து இந்த ரயில் இயங்குவதால் மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்ட மக்கள் சாதாரண நாட்களில் கூட உட்கார இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இது குறித்து ரயில் பயணிகள் சங்கங்கள், மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

எனவே, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை தொகுதி எம்.பி.க்களும் ரயில்வே உயர் அதிகாரிகளை அழைத்து வந்து மக்களுடன் ரயிலில் பயணித்து அவர்களின் சிரமங்களை உணரச் செய்து, கூடுதலாக 6 பெட்டிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

crime scene - 2026

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில் விபத்துக்கள் ஏற்பட்ட இடங்கள் மற்றும் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் மீண்டும் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் மஞ்சள் நிற மினுங்கும் விளக்குகள், வேகத்தை குறைக்க பேரிகேடுகள் (Barricade), ரிப்லெக்டிங் ஸ்டிக்கர்கள் (Reflecting Sticker), விபத்து பகுதி (Accident Zone) என்ற எச்சரிக்கை பலகைகள் அமைப்பது போன்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று 26.04.2025 சிவகிரி சேனைத்தலைவர் மண்டபம் அருகே பெண் ஒருவர் அவரது 09 வயது மகளுடன் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்த நபர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த 09 வயது சிறுமியின் மீது மோதி விபத்தை ஏற்படுத்துள்ளார். இதில் சிறுமிக்கு தலையில் சிறிது காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் திரு. வரதராஜன் அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனத்தில் விபத்தை ஏற்படுத்தியது சிவகிரியை சேர்ந்த 15 வயது சிறுமி என தெரிய வந்தது.

இது தொடர்பாக மேற்படி 15 வயது சிறுமிக்கு இரு சக்கர வாகனத்தை ஓட்ட அனுமதித்த சிறுமியின் தந்தையான சிவகிரி வடக்கு தெருவை சேர்ந்த ஜோதி ராமலிங்கம் என்பவரின் மகனான குருசாமி என்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.மேலும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில் சாலை விதிகளை பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், பெற்றோர்கள் சாலை விதிகளில் அலட்சியம் காட்டினால் அது உங்கள் குழந்தைக்கு பெரும் ஆபத்தில் முடியலாம் இது போன்ற விஷயங்களில் அலட்சியம் காட்டக்கூடாது மீறும் பட்சத்தில் 18 வயது நிரம்பாத சிறுவர் சிறுமிகளுக்கு இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்..

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

ponmudi - 2026
#image_title

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. 

தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகித்து வந்த துறைகள் பிற அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப் பட்டுள்ளன. அமைச்சர்கள் சிவசங்கர், ராஜகண்ணப்பன், முத்துசாமிக்கு  கூடுதல் இலாகா ஒதுககீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டமன்றத்தில் ஆளுநரை ஆபாசமாகவும் அசிங்கமாகவும் சைகை காட்டி போயா என்று சொன்ன பொன்முடி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஒரு கூட்டத்தில், பெண்கள் குறித்தும், சைவம், வைணவம் பற்றியும் அருவருப்பான முறையில் பேசினார். இதன்மூலம், பொதுமக்களின் கடுமையான அதிருப்திக்கு ஆளானார். அவருடைய பேச்சை திமுக.,வின் மகளிர் நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சியினருமே கண்டித்தனர். எதிர்க்கட்சிகள் பெரும் அரசியலை முன்னெடுத்தன. 

அவர் மீதான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, கடுமையான கண்டனம் தெரிவித்தார். பொன்முடி மீது தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் தான் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு அமைச்சரான செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி முக்கியமா, ஜாமின் முக்கியமா என்று கடந்த விசாரணையின் போது நீதிபதி கேள்வி எழுப்பினார். இது குறித்து முடிவு செய்து ஏப்.28ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. 

இத்தகைய சூழ்நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.  

செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விலகலை அடுத்து, அமைச்சர்கள் சிவசங்கர், ராஜகண்ணப்பன், முத்துசாமிக்கு  கூடுதல் இலாகா ஒதுககீடு செய்யப்பட்டுள்ளது.  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடி வகித்து வந்த வனம் மற்றும் காதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

railway news - 2026
#image_title

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போவதாயிருந்தால், இந்தத் தகவல் உங்களுக்காகத்தான். செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16848) திங்கட் கிழமை நாளை (ஏப்.28) விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து மாற்றுப் பாதையில் இயங்கும். வழக்கமாகச் செல்லும் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக இந்த ரயில் செல்லாது.

அதற்கு பதிலாக, விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக மாற்றுப்பாதையில் திருச்சிக்கு வந்து பின்னர் வழக்கம்போல் மயிலாடுதுறைக்குச் செல்லும். இதனை, திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

crimes scene - 2026

விருதுநகரில் வளர்ப்பு நாய்களை இரு தரப்பினர் வாக்கிங் கூட்டிச் சென்ற போது, ஏற்பட்ட தகராறில் இருவருக்கு அடி உதை விழுந்தது. 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர் குப்பையா சந்தைச் சேர்ந்தவர் அசோக்குமார்(42). இவரது வீட்டில் வேலை செய்து வருபவர் சேகர். இருவரும் வளர்ப்பு நாயை வாக்கிங் கூட்டிச் சென்றுள்ளனர். சிவன்கோவில் தெற்கு புறம் உள்ள பெட்டிக் கடை அருகே சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கர், பாலகிருஷ்ணன், அழகேந்திரன், கண்ணன் ஆகியோர் மற்றொரு நாயை வாக்கிங் அழைத்து வந்துள்ளனர். அப்போது, அசோக்குமாரின் நாய், அந்த நாயைப் பார்த்து குரைத்து கடிக்க வந்ததாம்.

எனவே, அசோக்குமார் அந்த நாயை விரட்டுவதற்காக கல்லை எடுத்தாராம். அதைப் பார்த்த சிவசங்கர் உள்ளிட்டோர், அசோக்குமாரை திட்டியுள்ளனர். இதையடுத்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

இந்நிலையில், 4 பேரும் சேர்ந்து அசோக்குமார் மற்றும் சேகரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

sivakasi fire works accident - 2026

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் ஜெயசங்கர் என்பவருக்கு சொந்தமான ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் உள்ளன.

இதில் இன்று 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடி வித்தில் சம்பவ இடத்திலேயே மூன்று தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 7பேர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் சேதமடைந்த நிலையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறி வருகிறது.

சம்பவ இடத்தில் சார் ஆட்சியர் பிரியா ரவிசந்திரன் மற்றும் காவல்துறை வருவாய்த்துறை மற்றும் மத்திய வெள்ளி பொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நெடுங்குளத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

சிவகாசி அருகே உள்ளது நெடுங்குளம். இங்கு, ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான ஸ்டாண்டர்டு பட்டாசு தொழிற்சாலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 60க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பேன்சி ரக பட்டாசுகளுக்கான வேதிப் பொருட்களை கலக்கும் அறையில் எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டது. இதில் கண் இமைக்கு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

3 பேர் பலி : இந்த விபத்தில் பட்டாசுகள் தயாரிக்கும் 16 அறைகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (35), சொக்கம்பட்டியைச் சேந்த மாரியம்மாள்(38), கூமாபட்டியைச் சேர்ந்த திருவாய்மொழி(40) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

7 பேர் காயம் : மேலும், எம். புதுப்பட்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி(50), ரெங்கபாளையத்தைச் சேர்ந்த லட்சுமி(38), கோபாலன்பட்டியைச் சேர்ந்த ராமசுப்பு(43), ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை சக தொழிலாளர்கள் உதவியுடன் மீட்ட காவல்துறையினர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும், இந்த விபத்தில் கோபாலன்பட்டியைச் சேர்ந்த முனியம்மாள்(48), கூமாப்பட்டியைச் சேர்ந்த பாத்திமுத்து(53), ராபீயாபீவி(48), கோமதி(35) ஆகிய 4 பேர் லேசான காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை வேறு பகுதிக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்த வெடி விபத்து குறித்து எம். புதுப்பட்டி காவல் நிலையத்தினர் ஆலை உரிமையாளர் ஜெய்சங்கர், போர்மேன் சுப்புராஜ், மேலாளர் ராஜேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிமம் ரத்து : இந்நிலையில், வெடி விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையை ஆய்வு செய்த சிவகாசி சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் ஆலையின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல் 121ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள் : 27.04.2025
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  இன்று உங்களோடு மனதின் குரலில் நான் கலந்து கொள்ளும் வேளையிலே, மனதிலே ஆழமான துக்கம் உறைகிறது.  ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியன்று பஹல்காவிலே கட்டவிழ்த்து விடப்பட்ட தீவிரவாதத் தாக்குதல், தேசத்தின் அனைத்துக் குடிமக்களையும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.  பாதிக்கப்பட்ட குடும்பத்தாரோடு, அனைத்து இந்தியர்களுமே மனங்களில் ஆழமான துயரத்தை அனுபவிக்கிறார்கள்.  படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

இந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய படங்களைப் பார்க்கும் போது தேசத்தவர் அனைவரின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது.  பஹல்காவில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தத் தாக்குதல், தீவிரவாதத்தின் புரவலர்களின் கையறு நிலையைக் காட்டுகிறது, அவர்களின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.  க

ஷ்மீரத்திலே அமைதி திரும்பிக் கொண்டிருந்த வேளையிலே, பள்ளிகள்-கல்லூரிகளில் ஓர் உயிர்ப்பு துளிர்த்த நேரத்திலே, கட்டமைப்புப் பணிகள் வரலாறுகாணா வேகம் எடுத்த போதினிலே, ஜனநாயகம் வேரூன்றத் தொடங்கிய காலத்திலே, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரைகாணா அதிகரிப்பை காணும் வேளையிலே, மக்களின் வருவாய் பெருகிவந்த நேரத்திலே, இளைஞர்களுக்கு புதிய சந்தர்ப்பங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. 

தேசத்தின் எதிரிகளுக்கு, ஜம்மு-கஷ்மீரின் எதிரிகளுக்கு, இது முற்றிலும் பிடிக்கவில்லை.  மாறாக, தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் காரணகர்த்தர்கள் கஷ்மீரத்தை அழிக்கத் துடித்தார்கள், ஆகையால் தான் இத்தனை பெரிய சூழ்ச்சிவலையைப் பின்னினார்கள்.  தீவிரவாதத்திற்கு எதிரான இந்த யுத்தத்தில், தேசத்தின் ஒற்றுமை, 140 கோடி பாரத நாட்டவரின் ஒருமைப்பாடு ஆகியன தான் நம்முடைய மிகப்பெரிய பலமாக விளங்குகிறது.  இந்த ஒற்றுமை, தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய தீர்மானமான போரின் ஆதாரம்.  தேசத்தின் முன்பாக எழுந்திருக்கும் இந்த சவாலை எதிர்கொள்ள, நமது உறுதிப்பாட்டை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.  ஒரு தேசம் என்ற முறையில் நாம் நமது உளவுறுதியை வெளிப்படுத்த வேண்டும்.  இந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எவ்வாறு தேசம் முழுவதும் ஒரே குரலெடுத்துப் பேசுகிறது என்பதை உலகனைத்தும் கவனித்துக் கொண்டிருக்கிறது. 

          நண்பர்களே, பாரத நாட்டவரான நம்மிடம் காணப்படும் இந்த ஆக்ரோஷம் தான் உலகம் நெடுகவும் இருக்கிறது.  இந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தொடர்ந்து உலகெங்கிலுமிருந்து அனுதாபங்கள் குவிந்து வருகின்றன.  உலகத் தலைவர்கள் என்னை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டார்கள், கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள், செய்திகள் அனுப்பியிருக்கிறார்கள். 

படுபயங்கரமாக புரியப்பட்ட இந்தக் கொடூரச் செயலை அனைவரும் கடுமையான சொற்களில் சாடியிருக்கிறார்கள்.  அவர்கள் இறந்துபட்டவர்களின் குடும்பத்தாருக்கும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.  உலகம் முழுவதும், தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய போரிலே, 140 கோடி பாரத நாட்டவரோடு நிற்கிறார்கள்.  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும், கண்டிப்பாக கிடைத்தே தீரும் என்று நான் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நம்பிக்கை அளிக்கிறேன்.  இந்தத் தாக்குதலைச் செய்தவர்களுக்கும், இந்த வஞ்சகச் செயலைத் திட்டமிட்டுக் கொடுத்தவர்களுக்கும் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.

          நண்பர்களே, இரண்டு நாட்கள் முன்பாக மகத்தான அறிவியலாரான டாக்டர். கே. கஸ்தூரிரங்கன் அவர்களை நாம் இழந்துவிட்டோம்.  கஸ்தூரிரங்கன் அவர்களை சந்தித்த போதெல்லாம், நாங்கள் பாரத நாட்டு இளைஞர்களின் திறன்கள், நவீன கல்வி, விண்வெளி விஞ்ஞானம் போன்ற விஷயங்கள் குறித்து நிறைய பேசுவோம்.  விஞ்ஞானம், கல்வி மற்றும் பாரதத்தின் விண்வெளித் திட்டத்தின் புதிய உயரங்களை அளிப்பதில் அவருடைய பங்களிப்பு எப்போதுமே நினைவில் கொள்ளப்படும்.  அவருடைய தலைமையின் கீழ்தான் இஸ்ரோ அமைப்புக்கு புதிய அடையாளம் கிடைத்தது.  அவருடைய வழிகாட்டுதலில் விண்வெளித் திட்டம் அடைந்த முன்னேற்றத்துக்கு உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்தது. 

இன்று பாரதம் எந்த செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறதோ, அவற்றில் பல, டாக்டர். கஸ்தூரிரங்கனின் கண்காணிப்பில் ஏவப்பட்டன.  அவருடைய ஆளுமை தொடர்பான மேலும் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால், இது இளைய தலைமுறையினருக்கு ஒரு படிப்பினையாக இருக்கும்.  அவர் எப்போதுமே புதுமைகள் படைத்தலுக்கு மகத்துவம் அளித்து வந்திருக்கிறார்.  புதியன கற்றல், தெரிதல், புதியன படைத்தல் பற்றிய அவருடைய தொலைநோக்கு மிகவும் உள்ளெழுச்சியூட்டவல்லது.  டாக்டர். கே. கஸ்தூரிரங்கன் அவர்கள் தேசத்தின் புதிய தேசியக் கல்விக்கொள்கையைத் தயாரித்து அளிப்பதிலும் கூட மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறார்.  டாக்டர். கஸ்தூரிரங்கன், 21ஆம் நூற்றாண்டின் நவீனத் தேவைகளுக்கு ஏற்ப, முன்னோக்குப் பார்வை கொண்ட கல்விச் சிந்தனையை முன்வைத்தார்.  தன்னலமற்ற தேச சேவை மற்றும் தேச நிர்மாணம் ஆகியவற்றில் அவருடைய பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும்.  டாக்டர். கே. கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு பணிவுணர்வோடு நான் என் சிரத்தாஞ்சலிகளை அளிக்கிறேன்.

          எனதருமை நாட்டுமக்களே, இந்த மாதம் ஏப்ரலோடு ஆர்யபட் செயற்கைக்கோள் ஏவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவெய்துகின்றது.  இன்று நாம் பின்னோக்கிப் பார்க்கையில், 50 ஆண்டுகளின் இந்தப் பயணத்தை அசைபோடும் போது, நாம் எத்தனை தொலைவு பயணித்திருக்கிறோம் என்பதை உணர முடிகிறது.  விண்வெளியில் பாரதத்தின் கனவுகள், ஊக்கம் என்ற சிறகுகளைக் கொண்டே மேலெழும்பின. 

தேசத்திற்காக எதையாவது சாதிக்கவேண்டும் என்ற தாகம் கொண்ட சில இளம் விஞ்ஞானிகள் – அவர்களிடம் இன்றிருப்பது போன்ற நவீன சாதனங்களேதும் இருக்கவில்லை, உலகின் தொழில்நுட்பத்தைப் பெறக்கூடிய அணுகல் இல்லை.  எதுவுமே இல்லாத போதும் கூட, அவர்களிடம் திறமைகள், ஈடுபாடு, உழைப்பு மற்றும் தேசத்திற்காக சாதித்துக் காட்டவேண்டும் என்ற பேரார்வம் மட்டுமே இருந்தன.  மாட்டு வண்டிகளிலும், சைக்கிள்களிலும் முக்கியமான கருவிகளைத் தாமே எடுத்துவந்த நமது விஞ்ஞானிகளின் படங்களை நீங்கள் கவனித்திருக்கலாம்.  அதே ஈடுபாடு மற்றும் தேச சேவையுணர்வின் விளைவாகவே இன்று இத்தனை பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. 

இன்று பாரதம் ஒரு உலக அளவிலான விண்வெளி சக்தி.  நாம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய சாதனையைப் படைத்திருக்கிறோம்.  நாம் நிலவின் தென் துருவத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பிய முதல் நாடாக இருக்கிறோம்.  செவ்வாயைச் சுற்றிவரும் பயணத்தை பாரதம் ஏவியிருக்கிறது, மேலும் நாம் ஆதித்யா-எல் 1 பயணம் வாயிலாக சூரியனுக்கு வெகு அருகில் சென்றிருக்கிறோம்.  இன்று உலகனைத்திற்கும் மிகவும் மலிவான விலையில், ஆனால் வெற்றிகரமான விண்வெளித் திட்டத்திற்கான தலைமையை பாரதம் ஏற்றிருக்கிறது.  உலகின் பல நாடுகள் தங்களுடைய செயற்கைக்கோள்களை ஏவவும், விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளவும் இஸ்ரோ அமைப்பின் உதவியை நாடுகின்றன.

          நண்பர்களே, இஸ்ரோ அமைப்பு ஒரு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதைக் காணும்போது, நமக்குப் பெருமிதம் பொங்குகிறது.  2014ஆம் ஆண்டு, பி எஸ் எல் வி – சி – 23 விண்ணில் செலுத்தப்பட்டதை  நான் காண நேர்ந்தபோது எனக்குள்ளும் இதே உணர்வுதான் நிரம்பியது.  2019ஆம் ஆண்டில் சந்திரயான் – 2 தரையிறங்கிய வேளையிலும் கூட, நான் பெங்களூரூவின் இஸ்ரோ மையத்தில் இருந்தேன்.  அந்த வேளையிலே, சந்திரயான் பயணத்தில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத போது, அது விஞ்ஞானிகளுக்கு மிகவும் கடினமான வேளையாக இருந்தது.  ஆனால் அந்த நேரத்தில்  விஞ்ஞானிகளின் மனோதிடம் மற்றும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பை நான் என் கண்களால் கண்டேன்.   சில ஆண்டுகள் கழித்து, இதே விஞ்ஞானிகள் சந்திரயான் – 3ஐ எப்படி வெற்றிகரமாகச் செலுத்திக் காட்டினார்கள் என்பதை உலகமே கண்ணுற்றது. 

          நண்பர்களே, இப்போது பாரதம் தனது விண்வெளித் துறையை தனியார் துறைக்கும் திறந்து விட்டிருக்கிறது.  இன்று பல இளைஞர்கள், விண்வெளி ஸ்டார்ட் அப்புகளில் புதிய கொடிகளை நாட்டி வருகிறார்கள்.  பத்தாண்டுகள் முன்னர் இந்தத் துறையில் ஒரே ஒரு நிறுவனமே இருந்தது, ஆனால் இன்று தேசத்திலே 325ற்கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப்புகள் செயலாற்றி வருகின்றன.  வரவிருக்கும் காலங்களில் விண்வெளித் துறையில் பல புதிய சாத்தியக்கூறுகள் உருவாக இருக்கின்றன.  பாரதம் புதிய உயரங்களை எட்டவிருக்கிறது.  தேசம் ககன்யான், ஸ்பேஸ்டெக் மற்றும் சந்திரயான் – 4 போன்ற பல முக்கியமான பயணங்களுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.  நாம் வீனஸ் ஆர்பிடர் மிஷன் மற்றும் மார்ஸ் லேண்டர் மிஷன் தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.  நமது விண்வெளி விஞ்ஞானிகள் தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளால் நாட்டுமக்களைப் புதிய பெருமையில் ஆழ்த்த இருக்கிறார்கள்.

          நண்பர்களே, கடந்த மாதம், மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றிய பயங்கரமான படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.  நிலநடுக்கத்தால் அங்கே மிகப்பெரிய அழிவு ஏற்பட்டிருக்கிறது, இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு ஒவ்வொரு சுவாஸமும், ஒவ்வொரு கணமும் விலைமதிப்பில்லாதவை.  ஆகையால் பாரதம், மியான்மாரில் நமது சகோதர சகோதரிகளுக்கு உதவ, உடனடியாக ஆப்பரேஷன் பிரம்மாவைத் தொடக்கியது.  விமானப்படையின் விமானங்கள் தொடங்கி, கடற்படையின் கப்பல்கள் வரை மியான்மாருக்கு உதவிகள் புரிவதற்கென்றே புறப்பட்டுச் சென்றன.  அங்கே பாரத நாட்டுக் குழு, ஒரு கள மருத்துவமனையை ஏற்படுத்தியது. 

பொறியாளர்களின் ஒரு குழு, முக்கியமான கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புக்களில் ஏற்பட்ட இழப்புகளைக் கணக்கெடுப்பதில் உதவி புரிந்தது.  பாரத நாட்டுக் குழு அங்கே கம்பளிகள், கூடாரங்கள், உறங்குவதற்கான பைகள், மருந்துகள், உணவுப் பொருட்கள், குடிநீர் போன்றவற்றோடு கூட, மேலும் பல பொருட்களை அளித்தது.  இவை பொருட்டு பாரத நாட்டுக் குழுவினருக்கு அந்த நாட்டு மக்களிடமிருந்து அதிக பாராட்டுக்களும் கிடைத்தன.

          நண்பர்களே, இந்தச் சங்கடமான வேளையில், தைரியம், உளவுறுதி மற்றும் புரிந்துணர்வு ஆகியவை தொடர்பான பல மனதைத் தொடும் எடுத்துக்காட்டுகள் காணப்பட்டன.  பாரதக் குழுவானது, 18 மணிநேரத்துக்கும் மேலாக கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த, 70 வயதுக்கும் மேற்பட்ட ஒரு முதிய பெண்மணியைக் காப்பாற்றியது.  தொலைக்காட்சியில் மனதின் குரலை இப்போது பார்த்துக் கொண்டிருப்பவர்களால், அந்த வயதான பெண்மணியின் முகத்தைப் பார்க்க முடியும். 

பாரதத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற குழுவானது அவருடைய பிராணவாயு அளவுகளை சீர் செய்வது தொடங்கி, எலும்பு முறிவுக்கான சிகிச்சை அளிப்பது வரை, சிகிச்சைகளுக்கான அனைத்து வசதிகளையும் அளித்தது.  இந்த முதிய பெண்மணி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட போது, அவர் நமது குழுவினருக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.  பாரத நாட்டு மீட்புக் குழுவினர் காரணமாகவே தமக்குப் புதிய வாழ்க்கை கிடைத்திருப்பதாக அந்தப் பெண்மணி தெரிவித்தார்.  நமது குழுவினர் காரணமாகவே தங்களுடைய நண்பர்களும், உறவினர்களும் கிடைத்ததாக பலர் தெரிவித்தார்கள்.

          நண்பர்களே, நிலநடுக்கத்திற்குப் பிறகு மியான்மாரின் மாண்டலேவில் இருக்கும் ஒரு பௌத்த மடாலயத்திலும் கூட பலர் சிக்கியிருப்பதாக சந்தேகம் எழுந்தது.  நமது நண்பர்கள், இங்கேயும் கூட மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அவர்களுக்கு பௌத்த துறவிகளின் ஏராளமான நல்லாசிகள் கிடைத்தன.  இந்த ஆப்பரேஷன் பிரம்மாவில் பங்கெடுத்த அனைவர் பற்றியும் மிகவும் பெருமையாக இருக்கிறது.  வசுதைவ குடும்பகம், உலகனைத்தும் ஓர் குடும்பம் என்ற உணர்வு தான் நமது பாரம்பரியம், நமது கலாச்சாரம்.  சங்கடத்தின் போது உலகின் நண்பனாக பாரதத்தின் உடனடிச் செயல்பாடு மற்றும் மனிதத்திற்காக பாரதத்தின் அர்ப்பணிப்புதான் நமது அடையாளமாக ஆகி வருகிறது.

          நண்பர்களே, ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டிற்குப் புலம் பெயர்ந்த இந்தியர்களின் புதிய முயற்சி பற்றித் தெரிய வந்தது.  எத்தியோப்பியாவில் வசிக்கும் பாரத நாட்டவர், பிறந்தது முதல் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு பாரதம் அனுப்பி வருகிறார்கள்.  இப்படிப்பட்ட பாதிப்பால் அவதிப்படும் பல குழந்தைகளுக்கு பாரத நாட்டவரின் குடும்பங்கள் வாயிலாக பொருளாதார உதவிகளும் கிடைத்து வருகின்றன.  

பணத் தட்டுப்பாடு காரணமாக சிகிச்சை பெற பாரதம் வரமுடியாத குழந்தைகளின் குடும்பங்களுக்கு, சிகிச்சைக்கான ஏற்பாடுகளை நமது பாரத நாட்டு சகோதர சகோதரிகள் கவனித்துக் கொள்கிறார்கள்.  ஆபத்தான நோய்களால் அவதிப்படும் எத்தியோப்பியாவின் ஏழைக்குழந்தைகளுக்குச் சிறப்பான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.  அயல்நாடுவாழ் பாரத நாட்டவரின் இத்தகைய சிறப்பான செயல்களுக்கு, எத்தியோப்பியாவில் முழுமையான பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.  பாரதத்தில் மருத்துவ வசதிகள் தொடர்ந்து சிறப்படைந்து வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.  இதனால் ஆதாயங்களை பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடைந்து வருகிறார்கள்.

          நண்பர்களே, சில நாட்கள் முன்பாக, ஆஃப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை நாம் அனுப்பியிருந்தோம்.  இந்தத் தடுப்பூசிகள், வெறிநாய்க்கடி, டெட்டனஸ் என்ற இசிவுநோய், குளிர் ஜுரம், ஹெபாடிடிஸ் பி என்ற ஈரல் அழற்சி போன்ற அபாயகரமான நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவிகரமாக இருக்கும்.  இதே வாரத்தில் தான் நேபாளத்தின் வேண்டுகோளை ஏற்று அங்கே மருந்துகளும் தடுப்பூசிகளும் அடங்கிய ஒரு பெரிய பொதியை நாம் அனுப்பினோம்.  இவற்றால் தலசீமியா மற்றும் சிக்கில் செல் நோய் எனும் அரிவாள் உரு சிகப்பணு சோகையால்  பீடிக்கப்பட்ட  நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும்.  மானுட சேவை என்று வரும் போது, பாரதம் எப்போதுமே முன்வந்திருக்கிறது, எதிர்காலத்திலும் இப்படிப்பட்ட அனைத்துத் தேவைகளுக்கும் முன்வந்து உதவும்.

          நண்பர்களே, இப்போது நாம் பேரிடர் மேலாண்மை பற்றிப் பேசி வந்தோம்.  எந்த ஒரு இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ளவும் மிகவும் முக்கியமானது எது என்றால் அது உங்களுடைய எச்சரிக்கையுணர்வு, விழிப்போடு இருத்தல்.  இந்த எச்சரிக்கையுணர்வுக்கு உதவிகரமாக, உங்களுடைய செல்பேசியில் ஒரு விசேஷமான செயலி உங்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கும்.  இந்தச் செயலியானது நீங்கள் எந்தவொரு இயற்கைப் பேரிடரிலும் சிக்காதவாறு காபாற்றுகிறது, இதன் பெயரும் கூட சசேத்.  சசேத் செயலியை, பாரதத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியிருக்கிறது. 

வெள்ளம், சூறாவளி, நிலச்சரிவு, ஆழிப்பேரலை, காட்டுத்தீ, பனிச்சரிவு, புயல், புழுதிக்காற்று அல்லது மின்னல் தாக்குதல் போன்ற பேரிடர்கள் ஏற்படும் வேளையில், இந்த சசேத் செயலி உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அளித்து, பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.  இந்தச் செயலியால் நீங்கள் வானிலை ஆய்வுத் துறைசார் அண்மைத் தகவல்களைப் பெறலாம்.  குறிப்பாக, இந்த சசேத் செயலி, மாநில மொழிகளிலும் கூட பல தகவல்களை அளிக்கிறது.  இந்தச் செயலியால் நீங்களும் பயனடையுங்கள், உங்கள் அனுபவங்களைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

          என் மனம் நிறை நாட்டுமக்களே, இன்று நாம் உலகெங்கிலும் பாரதத்தின் திறமைகள் புகழப்படுவதைக் காண்கிறோம்.  பாரதத்தைப் பற்றி உலகத்தோரின் பார்வையை பாரத இளைஞர்கள் மாற்றிவிட்டார்கள்.  எந்த ஒரு நாட்டின் இளைஞர்களின் நாட்டம் எப்படி இருக்கிறது, எங்கே இருக்கிறது என்பதறிந்தால், அந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு விட முடியும். 

இன்று இந்தியாவின் இளைஞர்கள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் படைத்தலை நோக்கி முன்னேறி வருகிறார்கள்.  எந்தத் துறைகளில் எல்லாம் நம் பின் தங்கிய நிலை மற்றும் பிற காரணங்களால் நாம் அடையாளப்படுத்தப்பட்டோமோ, அந்தத் துறைகளில் எல்லாம் நமது இளைஞர்கள், நமக்கு புதிய நம்பிக்கை அளிக்கவல்ல உதாரணங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  சத்திஸ்கட்டின் தந்தேவாடாவில் உள்ள அறிவியல் மையம் இப்போதெல்லாம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.  சில நாட்கள் முன்புவரை தந்தேவாடா என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வன்முறை மற்றும் அமைதியின்மை என்ற காட்சியே மனதில் தோன்றும் ஆனால் இன்றோ அங்கே ஒரு அறிவியல் மையம், குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் நம்பிக்கையின் புதிய கிரணங்களை அளித்து வருகிறது. 

இந்த அறிவியல் மையத்திற்குச் செல்வதை குழந்தைகள் மிகவும் விரும்புகிறார்கள்.  அவர்கள் இப்போது புதிய புதிய இயந்திரங்களை உருவாக்குவது முதல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய பொருட்களை உருவாக்கவும் கற்றுக் கொண்டு வருகிறார்கள்.  3டி பிரிண்டர்கள் மற்றும் ரோபாட்டிக் கார்களைத் தவிர, மேலும் பல புதுமையான பொருட்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள அவர்களுக்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.  சில நாட்கள் முன்பாக நான் குஜராத்தின் அறிவியல் நகரிலும் கூட அறிவியல் காட்சிக்கூடங்களைத் திறந்து வைத்தேன். 

இந்தக் காட்சிக்கூடங்களைக் காணும் போது, நவீன அறிவியலின் சக்தி என்ன, விஞ்ஞானம் எந்த அளவுக்கு நமக்கு உதவிகரமாக இருக்கக்கூடும் என்பதன் ஒரு காட்சி எனக்குக் கிடைத்தது.  இந்தக் காட்சிக்கூடங்களைப் பார்த்து, குழந்தைகளிடம் அதிக உற்சாகம் ஏற்படுகிறது என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.  அறிவியல் மற்றும் புதுமைகள் படைத்தல்பால் பெருகிவரும் இந்த ஈர்ப்பு, கண்டிப்பாக பாரதத்தைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்லும்.

          என் கனிவுநிறை நாட்டுமக்களே, நமது தேசத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் அது நமது 140 கோடி நாட்டுமக்கள், அவர்களின் வல்லமை, அவர்களின் மனவுறுதி தாம்.  கோடிக்கணக்கானோர் ஒன்றிணைந்து ஒரு இயக்கத்தோடு இணையும் போது, அதன் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும்.  இதற்கு ஒரு உதாரணம் என்று சொன்னால், தாயின் பெயரில் ஒரு மரம் இயக்கம் தான்.  

இந்த இயக்கம் நம்மை ஈன்றெடுத்த தாயின் பொருட்டு மட்டுமல்ல, நம்மனைவரையும் ஈன்று, சீராட்டி அரவணைத்துவரும் பூமித்தாய், அவள் பொருட்டும் தான். நண்பர்களே, ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று வரும் உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இந்த இயக்கம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைய இருக்கிறது.  இந்த ஓராண்டில் இந்த இயக்கத்தின்படி, நாடெங்கிலும் 140 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டிருக்கின்றன.  பாரதத்தின் இந்த முன்னெடுப்பைப் பார்த்து, தேசத்திற்கு வெளியேயும் கூட மக்கள் தங்களின் தாயின் பெயரால் ஒரு மரத்தை நட்டிருக்கின்றார்கள்.  நீங்களும் கூட இந்த இயக்கத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், ஓராண்டு நிறைவெய்தும் போது உங்களுடைய பங்களிப்பு உங்களைப் பெருமைப்பட வைக்கும்.

          நண்பர்களே, மரங்கள் நமக்குக் குளிர்ச்சியைத் தருகின்றன, இவற்றின் நிழலில் நமக்கு வெப்பத்திலிருந்து இளைப்பாறுதல் கிடைக்கிறது என்பதை நாமனைவரும் அறிவோம்.  ஆனால் கடந்த நாட்களில் நான் இது தொடர்பான ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன், அது என் கவனத்தை ஈர்த்தது.  குஜராத்தின் அஹமதாபாத் நகரில் கடந்த சில ஆண்டுகளில் 70 இலட்சம் மரங்களுக்கும் அதிகமாக நடப்பட்டிருக்கின்றன. 

இந்த மரங்கள் காரணமாக அஹமதாபாதின் பசுமைப்பகுதி கணிசமாக அதிகரித்திருக்கிறது.  இதோடு கூடவே, சாபர்மதி நதி ரிவர் ஃப்ரண்ட் எனும் நதிமுகப்பை ஏற்படுத்தியதிலும், காங்கரியா ஏரி போன்ற சில ஏரிகளின் மீள் அமைப்பாலும், இங்கே நீர் நிலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.  இப்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, கடந்த சில ஆண்டுகளில் உலக வெப்பமயமாதலுக்கு எதிரான போரில் பங்கெடுக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றாக அஹமதாபாத் ஆகியிருக்கிறது என்று தெரிய வருகிறது.  இந்த மாற்றத்தை, சுற்றுச்சூழலில் ஏற்பட்டிருக்கும் குளிர்மையை, அங்கிருக்கும் மக்களும் கூட உணர்ந்து வருகிறார்கள். 

அஹமதாபாதில் நடப்பட்டிருக்கும் மரங்கள் அங்கே புதிய உவகையை ஏற்படுத்தும் காரணிகளாக ஆகி வருகின்றன.  உங்களனைவரிடத்திலும் மீண்டும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், பூமியின் நலனைப் பேணிக்காக்க, சூழல் மாற்றம் உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள, நமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, கண்டிப்பாக தாயின் பெயரில் ஒரு மரத்தை நடுங்கள்.

          நண்பர்களே, ஒரு பழமொழி உண்டு, மனம் போல் வாழ்வு.  நம் மனதிலே ஒன்றைச் செய்யவேண்டும் என்று உறுதி பூண்டு விட்டால், கண்டிப்பாக இலக்கை எட்டி விட முடியும்.  நீங்கள் மலைகளில் விளைந்த ஆப்பிளைச் சுவைத்து உண்டிருப்பீர்கள்.  ஆனால் கர்நாடகத்தில் விளைந்த ஆப்பிளைச் சுவைத்திருக்கிறீர்களா என்று நான் கேட்டால்   ஆச்சரியப்படுவீர்கள் இல்லையா?  பொதுவாக ஆப்பிள் பழங்கள் மலைகளில் விளைகின்றன என்று தான் நாமறிவோம்.  ஆனால் கர்நாடகத்தின் பாகல்கோட்டிலே வசிக்கும் ஸ்ரீஷைல்தேலி அவர்கள், மைதானங்களில் ஆப்பிள்களை பயிர் செய்திருக்கிறார். 

அவர் வசிக்கும் குலாலி கிராமத்தில் 35 டிகிரிக்கும் அதிக வெப்பநிலையிலும் கூட ஆப்பிள் மரங்களை நட்டு விளைவித்திருக்கிறார்.  ஸ்ரீஷைல்தேலிக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்தது, இவர் ஆப்பிள் சாகுபடியையும் செய்து பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டார், இதில் வெற்றியும் கண்டார்.  இன்று இவரால் பயிர் செய்யப்பட்ட ஆப்பிள் மரங்களில் கணிசமாக ஆப்பிள்கள் விளைகின்றன, இவற்றை விற்று நல்ல வருவாயையும் ஈட்டி வருகிறார்.

          நண்பர்களே, ஆப்பிள்களைப் பற்றி நாம் பேசும் போது, நீங்கள் கின்னௌரி ஆப்பிள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம்.  ஆப்பிள்களுக்குப் பெயர் போன கின்னௌரிலே குங்குமப்பூ சாகுபடியும் தொடங்கியிருக்கிறது.  பொதுவாக ஹிமாச்சலத்தில் குங்குமப்பூவை பயிர் செய்வது குறைவாகவே இருக்கும் ஆனால், இப்போது கின்னௌரின் அழகான சாங்க்லா பள்ளத்தாக்கிலும் கூட குங்குமப்பூ பயிர் செய்யப்படத் தொடங்கியிருக்கிறது.  இதே போன்ற மேலும் ஒரு எடுத்துக்காட்டு கேரளத்தின் வயநாட்டிலும் உண்டு.  இங்கேயும் கூட குங்குமப்பூவை பயிர்விப்பதிலே வெற்றி கிடைத்திருக்கிறது.  மேலும் வயநாட்டின் இந்தக் குங்குமப்பூ ஏதோ வயலிலோ, மண்ணிலோ அல்ல, மாறாக ஏரோபோனிக்ஸ் அதாவது, பனிமூட்டம் நிறைந்த காற்றில் விளைவிக்கும் உத்தியைப் பயன்படுத்தி பயிர் செய்யப்படுகிறது. 

இதைப் போன்றே ஆச்சரியம் அளிக்கும் விஷயம் லிச்சிப் பழம் அதாவது விளச்சிப்பழ சாகுபடியிலும் நடந்திருக்கிறது.  இந்த விளச்சிப்பழம் பிஹார், மேற்கு வங்கம் அல்லது ஜார்க்கண்டில் தான் விளையும் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஆனால் இப்போது விளச்சிப்பழ சாகுபடி தென் பாரதம் மற்றும் ராஜஸ்தானத்திலும் கூட ஆகி வருகிறது.  தமிழ்நாட்டின் திருவீர அரசு காபிப்பயிர் விவசாயம் செய்து வந்தார்.  கொடைக்கானலில் அவர் விளச்சி மரங்களை நட்டார், அவருடைய ஏழாண்டுக்கால உழைப்பிற்குப் பிறகு இப்போது இந்த மரங்கள் மகசூல் அளிக்கத் தொடங்கியிருக்கின்றன.  விளச்சிப் பழங்களைப் பயிர் செய்வதில் இவருக்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்து, அக்கம்பக்கத்தில் இருந்த மற்ற விவசாயிகளும் உள்ளெழுச்சி அடைந்தார்கள். ராஜஸ்தானத்தைச் சேர்ந்த ஜிதேந்திர சிங் ராணாவத்தும் விளச்சிப் பழங்களைப் பயிர் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். 

இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தும் உத்வேகம் அளிக்கவல்லவை.  நாம் புதியதாக ஒன்றைச் செய்யும் நோக்கத்தை மேற்கொண்டால், இடர்களைத் தாண்டியும் உறுதிப்பாட்டோடு நின்றால், அசாத்தியமானவைகளும் சாத்தியப்படும்.

          என் உளம்நிறை நாட்டுமக்களே, இன்று ஏப்ரல் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை.  சில நாட்களில் மே மாதம் தொடங்கிவிடும்.  நான் உங்களை சுமார் 108 ஆண்டுகள் முந்தைய காலத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.  1917ஆம் ஆண்டு, ஏப்ரல் மற்றும் மே என்ற இதே இரண்டு மாதங்கள் – தேசத்தின் விடுதலைக்காக ஒரு வித்தியாசமான போராட்டம் நடந்து வந்தது.  ஆங்கிலேயர்கள் உச்சகட்ட அடக்குமுறையில் ஈடுபட்டிருந்தார்கள். 

ஏழைகள், வஞ்சிக்கப்பட்டவர்கள், விவசாயிகள் மீது அடக்குமுறை காட்டுமிராண்டித்தனத்தையும் கடந்த நிலையில் இருந்தது.  பிஹாரின் விளைநிலங்களில் இண்டிகோ அதாவது அவுரிச் செடியை பயிர் செய்ய விவசாயிகளை ஆங்கிலேயர்கள் வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.  அவுரிச் செடி சாகுபடியால் விவசாயிகளின் விளைநிலங்கள் மலடாகிக் கொண்டிருந்தன ஆனால், ஆங்கிலேய காட்டாட்சி இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.  இந்த நிலையில் 1917ஆம் ஆண்டில், காந்தியடிகள் பிஹாரின் சம்பாரணுக்கு வந்தார். 

விவசாயிகள் காந்தியடிகளிடம் சென்று – எங்களுடைய நிலம் இறந்து கொண்டிருக்கிறது, உண்ண உணவு கிடைக்கவில்லை என்று முறையிட்டார்கள்.   இலட்சக்கணக்கான விவசாயிகளின் இந்தத் துயரத்தை உணர்ந்து காந்தியடிகள் தன் மனதில் ஒரு உறுதிப்பாட்டை மேற்கொண்டார்.   அங்கிருந்துதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பாரண் சத்தியாகிரகம் தொடங்கியது.  அண்ணலின் சத்தியாகிரகத்தால் ஒட்டுமொத்த ஆங்கிலேய ஆட்சியும் ஆட்டம் கண்டது.  வேறு வழியில்லாமல் இந்த அவுரிச் செடி பயிர் செய்ய விவசாயிகளை வற்புறுத்தும் சட்டத்தை ஆங்கிலேயர்கள் நிறுத்திவைக்க வேண்டியிருந்தது. 

சுதந்திரப் போராட்டத்தில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய ஒரு வெற்றி இது.  இந்த சத்தியாகிரகத்தில் பிஹாரைச் சேர்ந்த மேலும் ஒரு நல்மைந்தனுடைய மிகப்பெரிய பங்களிப்பும் இருந்தது, இவர் தான் நாடு விடுதலை அடைந்த பிறகு தேசத்தின் முதல் குடியரசுத் தலைவராக ஆனார்.  அவர் தான் மகத்தான ஆளுமையான டாக்டர். ராஜேந்திர பிரசாத்.  இவர் சம்பாரண் சத்தியாகிரகம் பற்றி ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் – Satyagraha in Champaran, சம்பாரணில் சத்தியாகிரகம் என்ற இந்தப் புத்தகத்தை அனைத்து இளைஞர்களும் படிக்க வேண்டும்.  சகோதர சகோதரிகளே, ஏப்ரலோடு தான் சுதந்திரப் போராட்டத்தின் பல, மறக்கமுடியாத அத்தியாயங்கள் இணைந்திருக்கின்றன. 

ஏப்ரல் மாதத்தின் 6ஆம் தேதியன்று தான் காந்தியடிகளின் தாண்டி யாத்திரை நிறைவடைந்தது.  மார்ச் மாதம் 12ஆம் தேதியன்று தொடங்கி, 24 நாட்கள் வரை நடந்த இந்த யாத்திரை, ஆங்கிலேயர்களை அசைத்துப் பார்த்தது.  ஏப்ரல் மாதத்தில் தான் ஜலியான்வாலாபாக் படுகொலை அரங்கேறியது.  பஞ்சாபின் மண்ணின் மீது, ரத்தத்தால் செம்மையான இந்த வரலாற்றின் அடையாளங்கள் இன்றும் கூட காணப்படுகின்றன.

          நண்பர்களே, சில நாட்களில் மே மாதம் 10ஆம் தேதியன்று, முதல் சுதந்திரப் போராட்டத்தின் ஆண்டு நிறைவு வரவிருக்கிறது.  சுதந்திரம் வேண்டி புரியப்பட்ட அந்த முதல் போரில் எழுந்த தீப்பொறி மேலும் வலுவடைந்து, இலட்சக்கணக்கான வீரர்களுக்கு பெருங்கனலாக உருமாறியது. 

ஏப்ரல் 26ஆம் தேதியன்று நாம் 1857ஆம் ஆண்டுப் புரட்சியின் மகத்தான நாயகனான பாபு வீர் குன்வர் சிங் அவர்களின் நினைவுநாளை அனுசரித்தோம்.  பிஹாரின் மாபெரும் போராளி காரணமாக தேசம் முழுமைக்கும் உத்வேகம் கிடைத்தது.  இப்படிப்பட்ட இலட்சோபலட்சம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் காலத்தால் அழியாத உத்வேகங்களை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும்.  நாம் அவற்றிலிருந்து சக்தி பெற வேண்டும், இவை அமுதக்காலத்தின் நமது உறுதிப்பாடுகளுக்குப் புதிய பலத்தை அளிக்கின்றன.

          நண்பர்களே, மனதின் குரலின் இந்த நீண்ட பயணத்தில் நீங்கள் இந்த நிகழ்ச்சியோடு ஒரு ஆத்மார்த்தமான உறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.  எந்தச் சாதனைகளை நாட்டுமக்கள் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்களோ, அவை மனதின் குரல் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன.  

அடுத்து வரவிருக்கும் மாதங்களில் நாம் மீண்டும் இணைவோம், தேசத்தின் பன்முகத்தன்மை, கௌரவமளிக்கும் பாரம்பரியங்கள், புதிய சாதனைகள் ஆகியவை குறித்துப் பரிமாறுவோம்.  தங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் சேவை உணர்வால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவருவோரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.  எப்போதும் போலவே நீங்கள் உங்களுடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அனுப்பி வாருங்கள்.  நன்றி, வணக்கம்.