Home Blog Page 99

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

ponmudi - 2026
#image_title

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. 

தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகித்து வந்த துறைகள் பிற அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக அளிக்கப் பட்டுள்ளன. அமைச்சர்கள் சிவசங்கர், ராஜகண்ணப்பன், முத்துசாமிக்கு  கூடுதல் இலாகா ஒதுககீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டமன்றத்தில் ஆளுநரை ஆபாசமாகவும் அசிங்கமாகவும் சைகை காட்டி போயா என்று சொன்ன பொன்முடி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஒரு கூட்டத்தில், பெண்கள் குறித்தும், சைவம், வைணவம் பற்றியும் அருவருப்பான முறையில் பேசினார். இதன்மூலம், பொதுமக்களின் கடுமையான அதிருப்திக்கு ஆளானார். அவருடைய பேச்சை திமுக.,வின் மகளிர் நிர்வாகிகளும் கூட்டணிக் கட்சியினருமே கண்டித்தனர். எதிர்க்கட்சிகள் பெரும் அரசியலை முன்னெடுத்தன. 

அவர் மீதான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, கடுமையான கண்டனம் தெரிவித்தார். பொன்முடி மீது தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கவும் தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் தான் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு அமைச்சரான செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் கடுமையான கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு அமைச்சர் பதவி முக்கியமா, ஜாமின் முக்கியமா என்று கடந்த விசாரணையின் போது நீதிபதி கேள்வி எழுப்பினார். இது குறித்து முடிவு செய்து ஏப்.28ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி உச்ச நீதிமன்றம் கெடு விதித்தது. 

இத்தகைய சூழ்நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.  

செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் விலகலை அடுத்து, அமைச்சர்கள் சிவசங்கர், ராஜகண்ணப்பன், முத்துசாமிக்கு  கூடுதல் இலாகா ஒதுககீடு செய்யப்பட்டுள்ளது.  போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பொன்முடி வகித்து வந்த வனம் மற்றும் காதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

railway news - 2026
#image_title

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போவதாயிருந்தால், இந்தத் தகவல் உங்களுக்காகத்தான். செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி செங்கோட்டையில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்படும் செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 16848) திங்கட் கிழமை நாளை (ஏப்.28) விருதுநகர் ரயில் நிலையத்தில் இருந்து மாற்றுப் பாதையில் இயங்கும். வழக்கமாகச் செல்லும் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வழியாக இந்த ரயில் செல்லாது.

அதற்கு பதிலாக, விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக மாற்றுப்பாதையில் திருச்சிக்கு வந்து பின்னர் வழக்கம்போல் மயிலாடுதுறைக்குச் செல்லும். இதனை, திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

crimes scene - 2026

விருதுநகரில் வளர்ப்பு நாய்களை இரு தரப்பினர் வாக்கிங் கூட்டிச் சென்ற போது, ஏற்பட்ட தகராறில் இருவருக்கு அடி உதை விழுந்தது. 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விருதுநகர் குப்பையா சந்தைச் சேர்ந்தவர் அசோக்குமார்(42). இவரது வீட்டில் வேலை செய்து வருபவர் சேகர். இருவரும் வளர்ப்பு நாயை வாக்கிங் கூட்டிச் சென்றுள்ளனர். சிவன்கோவில் தெற்கு புறம் உள்ள பெட்டிக் கடை அருகே சென்ற போது, அதே பகுதியைச் சேர்ந்த சிவசங்கர், பாலகிருஷ்ணன், அழகேந்திரன், கண்ணன் ஆகியோர் மற்றொரு நாயை வாக்கிங் அழைத்து வந்துள்ளனர். அப்போது, அசோக்குமாரின் நாய், அந்த நாயைப் பார்த்து குரைத்து கடிக்க வந்ததாம்.

எனவே, அசோக்குமார் அந்த நாயை விரட்டுவதற்காக கல்லை எடுத்தாராம். அதைப் பார்த்த சிவசங்கர் உள்ளிட்டோர், அசோக்குமாரை திட்டியுள்ளனர். இதையடுத்து இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

இந்நிலையில், 4 பேரும் சேர்ந்து அசோக்குமார் மற்றும் சேகரை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

sivakasi fire works accident - 2026

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் ஜெயசங்கர் என்பவருக்கு சொந்தமான ஸ்டாண்டர்டு பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் உள்ளன.

இதில் இன்று 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடி வித்தில் சம்பவ இடத்திலேயே மூன்று தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 7பேர் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட பட்டாசு தயாரிப்பு அறைகள் சேதமடைந்த நிலையில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறி வருகிறது.

சம்பவ இடத்தில் சார் ஆட்சியர் பிரியா ரவிசந்திரன் மற்றும் காவல்துறை வருவாய்த்துறை மற்றும் மத்திய வெள்ளி பொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நெடுங்குளத்தில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

சிவகாசி அருகே உள்ளது நெடுங்குளம். இங்கு, ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான ஸ்டாண்டர்டு பட்டாசு தொழிற்சாலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 60க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பேன்சி ரக பட்டாசுகளுக்கான வேதிப் பொருட்களை கலக்கும் அறையில் எதிர்பாராத விதமாக உராய்வு ஏற்பட்டது. இதில் கண் இமைக்கு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

3 பேர் பலி : இந்த விபத்தில் பட்டாசுகள் தயாரிக்கும் 16 அறைகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (35), சொக்கம்பட்டியைச் சேந்த மாரியம்மாள்(38), கூமாபட்டியைச் சேர்ந்த திருவாய்மொழி(40) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

7 பேர் காயம் : மேலும், எம். புதுப்பட்டியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி(50), ரெங்கபாளையத்தைச் சேர்ந்த லட்சுமி(38), கோபாலன்பட்டியைச் சேர்ந்த ராமசுப்பு(43), ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை சக தொழிலாளர்கள் உதவியுடன் மீட்ட காவல்துறையினர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும், இந்த விபத்தில் கோபாலன்பட்டியைச் சேர்ந்த முனியம்மாள்(48), கூமாப்பட்டியைச் சேர்ந்த பாத்திமுத்து(53), ராபீயாபீவி(48), கோமதி(35) ஆகிய 4 பேர் லேசான காயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை வேறு பகுதிக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்த வெடி விபத்து குறித்து எம். புதுப்பட்டி காவல் நிலையத்தினர் ஆலை உரிமையாளர் ஜெய்சங்கர், போர்மேன் சுப்புராஜ், மேலாளர் ராஜேஷ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிமம் ரத்து : இந்நிலையில், வெடி விபத்து நடைபெற்ற பட்டாசு ஆலையை ஆய்வு செய்த சிவகாசி சார் ஆட்சியர் பிரியா ரவிச்சந்திரன் ஆலையின் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல் 121ஆவது பகுதி
ஒலிபரப்பு நாள் : 27.04.2025
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  இன்று உங்களோடு மனதின் குரலில் நான் கலந்து கொள்ளும் வேளையிலே, மனதிலே ஆழமான துக்கம் உறைகிறது.  ஏப்ரல் மாதம் 22ஆம் தேதியன்று பஹல்காவிலே கட்டவிழ்த்து விடப்பட்ட தீவிரவாதத் தாக்குதல், தேசத்தின் அனைத்துக் குடிமக்களையும் துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.  பாதிக்கப்பட்ட குடும்பத்தாரோடு, அனைத்து இந்தியர்களுமே மனங்களில் ஆழமான துயரத்தை அனுபவிக்கிறார்கள்.  படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

இந்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய படங்களைப் பார்க்கும் போது தேசத்தவர் அனைவரின் ரத்தமும் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது.  பஹல்காவில் கட்டவிழ்த்து விடப்பட்ட இந்தத் தாக்குதல், தீவிரவாதத்தின் புரவலர்களின் கையறு நிலையைக் காட்டுகிறது, அவர்களின் கோழைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.  க

ஷ்மீரத்திலே அமைதி திரும்பிக் கொண்டிருந்த வேளையிலே, பள்ளிகள்-கல்லூரிகளில் ஓர் உயிர்ப்பு துளிர்த்த நேரத்திலே, கட்டமைப்புப் பணிகள் வரலாறுகாணா வேகம் எடுத்த போதினிலே, ஜனநாயகம் வேரூன்றத் தொடங்கிய காலத்திலே, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவரைகாணா அதிகரிப்பை காணும் வேளையிலே, மக்களின் வருவாய் பெருகிவந்த நேரத்திலே, இளைஞர்களுக்கு புதிய சந்தர்ப்பங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. 

தேசத்தின் எதிரிகளுக்கு, ஜம்மு-கஷ்மீரின் எதிரிகளுக்கு, இது முற்றிலும் பிடிக்கவில்லை.  மாறாக, தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளின் காரணகர்த்தர்கள் கஷ்மீரத்தை அழிக்கத் துடித்தார்கள், ஆகையால் தான் இத்தனை பெரிய சூழ்ச்சிவலையைப் பின்னினார்கள்.  தீவிரவாதத்திற்கு எதிரான இந்த யுத்தத்தில், தேசத்தின் ஒற்றுமை, 140 கோடி பாரத நாட்டவரின் ஒருமைப்பாடு ஆகியன தான் நம்முடைய மிகப்பெரிய பலமாக விளங்குகிறது.  இந்த ஒற்றுமை, தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய தீர்மானமான போரின் ஆதாரம்.  தேசத்தின் முன்பாக எழுந்திருக்கும் இந்த சவாலை எதிர்கொள்ள, நமது உறுதிப்பாட்டை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.  ஒரு தேசம் என்ற முறையில் நாம் நமது உளவுறுதியை வெளிப்படுத்த வேண்டும்.  இந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு எவ்வாறு தேசம் முழுவதும் ஒரே குரலெடுத்துப் பேசுகிறது என்பதை உலகனைத்தும் கவனித்துக் கொண்டிருக்கிறது. 

          நண்பர்களே, பாரத நாட்டவரான நம்மிடம் காணப்படும் இந்த ஆக்ரோஷம் தான் உலகம் நெடுகவும் இருக்கிறது.  இந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தொடர்ந்து உலகெங்கிலுமிருந்து அனுதாபங்கள் குவிந்து வருகின்றன.  உலகத் தலைவர்கள் என்னை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டார்கள், கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள், செய்திகள் அனுப்பியிருக்கிறார்கள். 

படுபயங்கரமாக புரியப்பட்ட இந்தக் கொடூரச் செயலை அனைவரும் கடுமையான சொற்களில் சாடியிருக்கிறார்கள்.  அவர்கள் இறந்துபட்டவர்களின் குடும்பத்தாருக்கும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்திருக்கிறார்கள்.  உலகம் முழுவதும், தீவிரவாதத்திற்கு எதிரான நம்முடைய போரிலே, 140 கோடி பாரத நாட்டவரோடு நிற்கிறார்கள்.  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும், கண்டிப்பாக கிடைத்தே தீரும் என்று நான் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நம்பிக்கை அளிக்கிறேன்.  இந்தத் தாக்குதலைச் செய்தவர்களுக்கும், இந்த வஞ்சகச் செயலைத் திட்டமிட்டுக் கொடுத்தவர்களுக்கும் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்.

          நண்பர்களே, இரண்டு நாட்கள் முன்பாக மகத்தான அறிவியலாரான டாக்டர். கே. கஸ்தூரிரங்கன் அவர்களை நாம் இழந்துவிட்டோம்.  கஸ்தூரிரங்கன் அவர்களை சந்தித்த போதெல்லாம், நாங்கள் பாரத நாட்டு இளைஞர்களின் திறன்கள், நவீன கல்வி, விண்வெளி விஞ்ஞானம் போன்ற விஷயங்கள் குறித்து நிறைய பேசுவோம்.  விஞ்ஞானம், கல்வி மற்றும் பாரதத்தின் விண்வெளித் திட்டத்தின் புதிய உயரங்களை அளிப்பதில் அவருடைய பங்களிப்பு எப்போதுமே நினைவில் கொள்ளப்படும்.  அவருடைய தலைமையின் கீழ்தான் இஸ்ரோ அமைப்புக்கு புதிய அடையாளம் கிடைத்தது.  அவருடைய வழிகாட்டுதலில் விண்வெளித் திட்டம் அடைந்த முன்னேற்றத்துக்கு உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்தது. 

இன்று பாரதம் எந்த செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறதோ, அவற்றில் பல, டாக்டர். கஸ்தூரிரங்கனின் கண்காணிப்பில் ஏவப்பட்டன.  அவருடைய ஆளுமை தொடர்பான மேலும் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால், இது இளைய தலைமுறையினருக்கு ஒரு படிப்பினையாக இருக்கும்.  அவர் எப்போதுமே புதுமைகள் படைத்தலுக்கு மகத்துவம் அளித்து வந்திருக்கிறார்.  புதியன கற்றல், தெரிதல், புதியன படைத்தல் பற்றிய அவருடைய தொலைநோக்கு மிகவும் உள்ளெழுச்சியூட்டவல்லது.  டாக்டர். கே. கஸ்தூரிரங்கன் அவர்கள் தேசத்தின் புதிய தேசியக் கல்விக்கொள்கையைத் தயாரித்து அளிப்பதிலும் கூட மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறார்.  டாக்டர். கஸ்தூரிரங்கன், 21ஆம் நூற்றாண்டின் நவீனத் தேவைகளுக்கு ஏற்ப, முன்னோக்குப் பார்வை கொண்ட கல்விச் சிந்தனையை முன்வைத்தார்.  தன்னலமற்ற தேச சேவை மற்றும் தேச நிர்மாணம் ஆகியவற்றில் அவருடைய பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும்.  டாக்டர். கே. கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு பணிவுணர்வோடு நான் என் சிரத்தாஞ்சலிகளை அளிக்கிறேன்.

          எனதருமை நாட்டுமக்களே, இந்த மாதம் ஏப்ரலோடு ஆர்யபட் செயற்கைக்கோள் ஏவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவெய்துகின்றது.  இன்று நாம் பின்னோக்கிப் பார்க்கையில், 50 ஆண்டுகளின் இந்தப் பயணத்தை அசைபோடும் போது, நாம் எத்தனை தொலைவு பயணித்திருக்கிறோம் என்பதை உணர முடிகிறது.  விண்வெளியில் பாரதத்தின் கனவுகள், ஊக்கம் என்ற சிறகுகளைக் கொண்டே மேலெழும்பின. 

தேசத்திற்காக எதையாவது சாதிக்கவேண்டும் என்ற தாகம் கொண்ட சில இளம் விஞ்ஞானிகள் – அவர்களிடம் இன்றிருப்பது போன்ற நவீன சாதனங்களேதும் இருக்கவில்லை, உலகின் தொழில்நுட்பத்தைப் பெறக்கூடிய அணுகல் இல்லை.  எதுவுமே இல்லாத போதும் கூட, அவர்களிடம் திறமைகள், ஈடுபாடு, உழைப்பு மற்றும் தேசத்திற்காக சாதித்துக் காட்டவேண்டும் என்ற பேரார்வம் மட்டுமே இருந்தன.  மாட்டு வண்டிகளிலும், சைக்கிள்களிலும் முக்கியமான கருவிகளைத் தாமே எடுத்துவந்த நமது விஞ்ஞானிகளின் படங்களை நீங்கள் கவனித்திருக்கலாம்.  அதே ஈடுபாடு மற்றும் தேச சேவையுணர்வின் விளைவாகவே இன்று இத்தனை பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. 

இன்று பாரதம் ஒரு உலக அளவிலான விண்வெளி சக்தி.  நாம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய சாதனையைப் படைத்திருக்கிறோம்.  நாம் நிலவின் தென் துருவத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பிய முதல் நாடாக இருக்கிறோம்.  செவ்வாயைச் சுற்றிவரும் பயணத்தை பாரதம் ஏவியிருக்கிறது, மேலும் நாம் ஆதித்யா-எல் 1 பயணம் வாயிலாக சூரியனுக்கு வெகு அருகில் சென்றிருக்கிறோம்.  இன்று உலகனைத்திற்கும் மிகவும் மலிவான விலையில், ஆனால் வெற்றிகரமான விண்வெளித் திட்டத்திற்கான தலைமையை பாரதம் ஏற்றிருக்கிறது.  உலகின் பல நாடுகள் தங்களுடைய செயற்கைக்கோள்களை ஏவவும், விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளவும் இஸ்ரோ அமைப்பின் உதவியை நாடுகின்றன.

          நண்பர்களே, இஸ்ரோ அமைப்பு ஒரு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதைக் காணும்போது, நமக்குப் பெருமிதம் பொங்குகிறது.  2014ஆம் ஆண்டு, பி எஸ் எல் வி – சி – 23 விண்ணில் செலுத்தப்பட்டதை  நான் காண நேர்ந்தபோது எனக்குள்ளும் இதே உணர்வுதான் நிரம்பியது.  2019ஆம் ஆண்டில் சந்திரயான் – 2 தரையிறங்கிய வேளையிலும் கூட, நான் பெங்களூரூவின் இஸ்ரோ மையத்தில் இருந்தேன்.  அந்த வேளையிலே, சந்திரயான் பயணத்தில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத போது, அது விஞ்ஞானிகளுக்கு மிகவும் கடினமான வேளையாக இருந்தது.  ஆனால் அந்த நேரத்தில்  விஞ்ஞானிகளின் மனோதிடம் மற்றும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பை நான் என் கண்களால் கண்டேன்.   சில ஆண்டுகள் கழித்து, இதே விஞ்ஞானிகள் சந்திரயான் – 3ஐ எப்படி வெற்றிகரமாகச் செலுத்திக் காட்டினார்கள் என்பதை உலகமே கண்ணுற்றது. 

          நண்பர்களே, இப்போது பாரதம் தனது விண்வெளித் துறையை தனியார் துறைக்கும் திறந்து விட்டிருக்கிறது.  இன்று பல இளைஞர்கள், விண்வெளி ஸ்டார்ட் அப்புகளில் புதிய கொடிகளை நாட்டி வருகிறார்கள்.  பத்தாண்டுகள் முன்னர் இந்தத் துறையில் ஒரே ஒரு நிறுவனமே இருந்தது, ஆனால் இன்று தேசத்திலே 325ற்கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப்புகள் செயலாற்றி வருகின்றன.  வரவிருக்கும் காலங்களில் விண்வெளித் துறையில் பல புதிய சாத்தியக்கூறுகள் உருவாக இருக்கின்றன.  பாரதம் புதிய உயரங்களை எட்டவிருக்கிறது.  தேசம் ககன்யான், ஸ்பேஸ்டெக் மற்றும் சந்திரயான் – 4 போன்ற பல முக்கியமான பயணங்களுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.  நாம் வீனஸ் ஆர்பிடர் மிஷன் மற்றும் மார்ஸ் லேண்டர் மிஷன் தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.  நமது விண்வெளி விஞ்ஞானிகள் தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளால் நாட்டுமக்களைப் புதிய பெருமையில் ஆழ்த்த இருக்கிறார்கள்.

          நண்பர்களே, கடந்த மாதம், மியான்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றிய பயங்கரமான படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.  நிலநடுக்கத்தால் அங்கே மிகப்பெரிய அழிவு ஏற்பட்டிருக்கிறது, இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு ஒவ்வொரு சுவாஸமும், ஒவ்வொரு கணமும் விலைமதிப்பில்லாதவை.  ஆகையால் பாரதம், மியான்மாரில் நமது சகோதர சகோதரிகளுக்கு உதவ, உடனடியாக ஆப்பரேஷன் பிரம்மாவைத் தொடக்கியது.  விமானப்படையின் விமானங்கள் தொடங்கி, கடற்படையின் கப்பல்கள் வரை மியான்மாருக்கு உதவிகள் புரிவதற்கென்றே புறப்பட்டுச் சென்றன.  அங்கே பாரத நாட்டுக் குழு, ஒரு கள மருத்துவமனையை ஏற்படுத்தியது. 

பொறியாளர்களின் ஒரு குழு, முக்கியமான கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புக்களில் ஏற்பட்ட இழப்புகளைக் கணக்கெடுப்பதில் உதவி புரிந்தது.  பாரத நாட்டுக் குழு அங்கே கம்பளிகள், கூடாரங்கள், உறங்குவதற்கான பைகள், மருந்துகள், உணவுப் பொருட்கள், குடிநீர் போன்றவற்றோடு கூட, மேலும் பல பொருட்களை அளித்தது.  இவை பொருட்டு பாரத நாட்டுக் குழுவினருக்கு அந்த நாட்டு மக்களிடமிருந்து அதிக பாராட்டுக்களும் கிடைத்தன.

          நண்பர்களே, இந்தச் சங்கடமான வேளையில், தைரியம், உளவுறுதி மற்றும் புரிந்துணர்வு ஆகியவை தொடர்பான பல மனதைத் தொடும் எடுத்துக்காட்டுகள் காணப்பட்டன.  பாரதக் குழுவானது, 18 மணிநேரத்துக்கும் மேலாக கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த, 70 வயதுக்கும் மேற்பட்ட ஒரு முதிய பெண்மணியைக் காப்பாற்றியது.  தொலைக்காட்சியில் மனதின் குரலை இப்போது பார்த்துக் கொண்டிருப்பவர்களால், அந்த வயதான பெண்மணியின் முகத்தைப் பார்க்க முடியும். 

பாரதத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற குழுவானது அவருடைய பிராணவாயு அளவுகளை சீர் செய்வது தொடங்கி, எலும்பு முறிவுக்கான சிகிச்சை அளிப்பது வரை, சிகிச்சைகளுக்கான அனைத்து வசதிகளையும் அளித்தது.  இந்த முதிய பெண்மணி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட போது, அவர் நமது குழுவினருக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.  பாரத நாட்டு மீட்புக் குழுவினர் காரணமாகவே தமக்குப் புதிய வாழ்க்கை கிடைத்திருப்பதாக அந்தப் பெண்மணி தெரிவித்தார்.  நமது குழுவினர் காரணமாகவே தங்களுடைய நண்பர்களும், உறவினர்களும் கிடைத்ததாக பலர் தெரிவித்தார்கள்.

          நண்பர்களே, நிலநடுக்கத்திற்குப் பிறகு மியான்மாரின் மாண்டலேவில் இருக்கும் ஒரு பௌத்த மடாலயத்திலும் கூட பலர் சிக்கியிருப்பதாக சந்தேகம் எழுந்தது.  நமது நண்பர்கள், இங்கேயும் கூட மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அவர்களுக்கு பௌத்த துறவிகளின் ஏராளமான நல்லாசிகள் கிடைத்தன.  இந்த ஆப்பரேஷன் பிரம்மாவில் பங்கெடுத்த அனைவர் பற்றியும் மிகவும் பெருமையாக இருக்கிறது.  வசுதைவ குடும்பகம், உலகனைத்தும் ஓர் குடும்பம் என்ற உணர்வு தான் நமது பாரம்பரியம், நமது கலாச்சாரம்.  சங்கடத்தின் போது உலகின் நண்பனாக பாரதத்தின் உடனடிச் செயல்பாடு மற்றும் மனிதத்திற்காக பாரதத்தின் அர்ப்பணிப்புதான் நமது அடையாளமாக ஆகி வருகிறது.

          நண்பர்களே, ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டிற்குப் புலம் பெயர்ந்த இந்தியர்களின் புதிய முயற்சி பற்றித் தெரிய வந்தது.  எத்தியோப்பியாவில் வசிக்கும் பாரத நாட்டவர், பிறந்தது முதல் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு பாரதம் அனுப்பி வருகிறார்கள்.  இப்படிப்பட்ட பாதிப்பால் அவதிப்படும் பல குழந்தைகளுக்கு பாரத நாட்டவரின் குடும்பங்கள் வாயிலாக பொருளாதார உதவிகளும் கிடைத்து வருகின்றன.  

பணத் தட்டுப்பாடு காரணமாக சிகிச்சை பெற பாரதம் வரமுடியாத குழந்தைகளின் குடும்பங்களுக்கு, சிகிச்சைக்கான ஏற்பாடுகளை நமது பாரத நாட்டு சகோதர சகோதரிகள் கவனித்துக் கொள்கிறார்கள்.  ஆபத்தான நோய்களால் அவதிப்படும் எத்தியோப்பியாவின் ஏழைக்குழந்தைகளுக்குச் சிறப்பான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.  அயல்நாடுவாழ் பாரத நாட்டவரின் இத்தகைய சிறப்பான செயல்களுக்கு, எத்தியோப்பியாவில் முழுமையான பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.  பாரதத்தில் மருத்துவ வசதிகள் தொடர்ந்து சிறப்படைந்து வருகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.  இதனால் ஆதாயங்களை பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் அடைந்து வருகிறார்கள்.

          நண்பர்களே, சில நாட்கள் முன்பாக, ஆஃப்கானிஸ்தான் நாட்டு மக்களுக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை நாம் அனுப்பியிருந்தோம்.  இந்தத் தடுப்பூசிகள், வெறிநாய்க்கடி, டெட்டனஸ் என்ற இசிவுநோய், குளிர் ஜுரம், ஹெபாடிடிஸ் பி என்ற ஈரல் அழற்சி போன்ற அபாயகரமான நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவிகரமாக இருக்கும்.  இதே வாரத்தில் தான் நேபாளத்தின் வேண்டுகோளை ஏற்று அங்கே மருந்துகளும் தடுப்பூசிகளும் அடங்கிய ஒரு பெரிய பொதியை நாம் அனுப்பினோம்.  இவற்றால் தலசீமியா மற்றும் சிக்கில் செல் நோய் எனும் அரிவாள் உரு சிகப்பணு சோகையால்  பீடிக்கப்பட்ட  நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும்.  மானுட சேவை என்று வரும் போது, பாரதம் எப்போதுமே முன்வந்திருக்கிறது, எதிர்காலத்திலும் இப்படிப்பட்ட அனைத்துத் தேவைகளுக்கும் முன்வந்து உதவும்.

          நண்பர்களே, இப்போது நாம் பேரிடர் மேலாண்மை பற்றிப் பேசி வந்தோம்.  எந்த ஒரு இயற்கைப் பேரிடரை எதிர்கொள்ளவும் மிகவும் முக்கியமானது எது என்றால் அது உங்களுடைய எச்சரிக்கையுணர்வு, விழிப்போடு இருத்தல்.  இந்த எச்சரிக்கையுணர்வுக்கு உதவிகரமாக, உங்களுடைய செல்பேசியில் ஒரு விசேஷமான செயலி உங்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கும்.  இந்தச் செயலியானது நீங்கள் எந்தவொரு இயற்கைப் பேரிடரிலும் சிக்காதவாறு காபாற்றுகிறது, இதன் பெயரும் கூட சசேத்.  சசேத் செயலியை, பாரதத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியிருக்கிறது. 

வெள்ளம், சூறாவளி, நிலச்சரிவு, ஆழிப்பேரலை, காட்டுத்தீ, பனிச்சரிவு, புயல், புழுதிக்காற்று அல்லது மின்னல் தாக்குதல் போன்ற பேரிடர்கள் ஏற்படும் வேளையில், இந்த சசேத் செயலி உங்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அளித்து, பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது.  இந்தச் செயலியால் நீங்கள் வானிலை ஆய்வுத் துறைசார் அண்மைத் தகவல்களைப் பெறலாம்.  குறிப்பாக, இந்த சசேத் செயலி, மாநில மொழிகளிலும் கூட பல தகவல்களை அளிக்கிறது.  இந்தச் செயலியால் நீங்களும் பயனடையுங்கள், உங்கள் அனுபவங்களைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

          என் மனம் நிறை நாட்டுமக்களே, இன்று நாம் உலகெங்கிலும் பாரதத்தின் திறமைகள் புகழப்படுவதைக் காண்கிறோம்.  பாரதத்தைப் பற்றி உலகத்தோரின் பார்வையை பாரத இளைஞர்கள் மாற்றிவிட்டார்கள்.  எந்த ஒரு நாட்டின் இளைஞர்களின் நாட்டம் எப்படி இருக்கிறது, எங்கே இருக்கிறது என்பதறிந்தால், அந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு விட முடியும். 

இன்று இந்தியாவின் இளைஞர்கள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் படைத்தலை நோக்கி முன்னேறி வருகிறார்கள்.  எந்தத் துறைகளில் எல்லாம் நம் பின் தங்கிய நிலை மற்றும் பிற காரணங்களால் நாம் அடையாளப்படுத்தப்பட்டோமோ, அந்தத் துறைகளில் எல்லாம் நமது இளைஞர்கள், நமக்கு புதிய நம்பிக்கை அளிக்கவல்ல உதாரணங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  சத்திஸ்கட்டின் தந்தேவாடாவில் உள்ள அறிவியல் மையம் இப்போதெல்லாம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.  சில நாட்கள் முன்புவரை தந்தேவாடா என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே வன்முறை மற்றும் அமைதியின்மை என்ற காட்சியே மனதில் தோன்றும் ஆனால் இன்றோ அங்கே ஒரு அறிவியல் மையம், குழந்தைகளுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் நம்பிக்கையின் புதிய கிரணங்களை அளித்து வருகிறது. 

இந்த அறிவியல் மையத்திற்குச் செல்வதை குழந்தைகள் மிகவும் விரும்புகிறார்கள்.  அவர்கள் இப்போது புதிய புதிய இயந்திரங்களை உருவாக்குவது முதல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய பொருட்களை உருவாக்கவும் கற்றுக் கொண்டு வருகிறார்கள்.  3டி பிரிண்டர்கள் மற்றும் ரோபாட்டிக் கார்களைத் தவிர, மேலும் பல புதுமையான பொருட்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள அவர்களுக்குச் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.  சில நாட்கள் முன்பாக நான் குஜராத்தின் அறிவியல் நகரிலும் கூட அறிவியல் காட்சிக்கூடங்களைத் திறந்து வைத்தேன். 

இந்தக் காட்சிக்கூடங்களைக் காணும் போது, நவீன அறிவியலின் சக்தி என்ன, விஞ்ஞானம் எந்த அளவுக்கு நமக்கு உதவிகரமாக இருக்கக்கூடும் என்பதன் ஒரு காட்சி எனக்குக் கிடைத்தது.  இந்தக் காட்சிக்கூடங்களைப் பார்த்து, குழந்தைகளிடம் அதிக உற்சாகம் ஏற்படுகிறது என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.  அறிவியல் மற்றும் புதுமைகள் படைத்தல்பால் பெருகிவரும் இந்த ஈர்ப்பு, கண்டிப்பாக பாரதத்தைப் புதிய சிகரங்களுக்குக் கொண்டு செல்லும்.

          என் கனிவுநிறை நாட்டுமக்களே, நமது தேசத்தின் மிகப்பெரிய பலம் என்று சொன்னால் அது நமது 140 கோடி நாட்டுமக்கள், அவர்களின் வல்லமை, அவர்களின் மனவுறுதி தாம்.  கோடிக்கணக்கானோர் ஒன்றிணைந்து ஒரு இயக்கத்தோடு இணையும் போது, அதன் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும்.  இதற்கு ஒரு உதாரணம் என்று சொன்னால், தாயின் பெயரில் ஒரு மரம் இயக்கம் தான்.  

இந்த இயக்கம் நம்மை ஈன்றெடுத்த தாயின் பொருட்டு மட்டுமல்ல, நம்மனைவரையும் ஈன்று, சீராட்டி அரவணைத்துவரும் பூமித்தாய், அவள் பொருட்டும் தான். நண்பர்களே, ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று வரும் உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இந்த இயக்கம் ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைய இருக்கிறது.  இந்த ஓராண்டில் இந்த இயக்கத்தின்படி, நாடெங்கிலும் 140 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டிருக்கின்றன.  பாரதத்தின் இந்த முன்னெடுப்பைப் பார்த்து, தேசத்திற்கு வெளியேயும் கூட மக்கள் தங்களின் தாயின் பெயரால் ஒரு மரத்தை நட்டிருக்கின்றார்கள்.  நீங்களும் கூட இந்த இயக்கத்தோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள், ஓராண்டு நிறைவெய்தும் போது உங்களுடைய பங்களிப்பு உங்களைப் பெருமைப்பட வைக்கும்.

          நண்பர்களே, மரங்கள் நமக்குக் குளிர்ச்சியைத் தருகின்றன, இவற்றின் நிழலில் நமக்கு வெப்பத்திலிருந்து இளைப்பாறுதல் கிடைக்கிறது என்பதை நாமனைவரும் அறிவோம்.  ஆனால் கடந்த நாட்களில் நான் இது தொடர்பான ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன், அது என் கவனத்தை ஈர்த்தது.  குஜராத்தின் அஹமதாபாத் நகரில் கடந்த சில ஆண்டுகளில் 70 இலட்சம் மரங்களுக்கும் அதிகமாக நடப்பட்டிருக்கின்றன. 

இந்த மரங்கள் காரணமாக அஹமதாபாதின் பசுமைப்பகுதி கணிசமாக அதிகரித்திருக்கிறது.  இதோடு கூடவே, சாபர்மதி நதி ரிவர் ஃப்ரண்ட் எனும் நதிமுகப்பை ஏற்படுத்தியதிலும், காங்கரியா ஏரி போன்ற சில ஏரிகளின் மீள் அமைப்பாலும், இங்கே நீர் நிலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.  இப்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, கடந்த சில ஆண்டுகளில் உலக வெப்பமயமாதலுக்கு எதிரான போரில் பங்கெடுக்கும் முக்கிய நகரங்களில் ஒன்றாக அஹமதாபாத் ஆகியிருக்கிறது என்று தெரிய வருகிறது.  இந்த மாற்றத்தை, சுற்றுச்சூழலில் ஏற்பட்டிருக்கும் குளிர்மையை, அங்கிருக்கும் மக்களும் கூட உணர்ந்து வருகிறார்கள். 

அஹமதாபாதில் நடப்பட்டிருக்கும் மரங்கள் அங்கே புதிய உவகையை ஏற்படுத்தும் காரணிகளாக ஆகி வருகின்றன.  உங்களனைவரிடத்திலும் மீண்டும் என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், பூமியின் நலனைப் பேணிக்காக்க, சூழல் மாற்றம் உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள, நமது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, கண்டிப்பாக தாயின் பெயரில் ஒரு மரத்தை நடுங்கள்.

          நண்பர்களே, ஒரு பழமொழி உண்டு, மனம் போல் வாழ்வு.  நம் மனதிலே ஒன்றைச் செய்யவேண்டும் என்று உறுதி பூண்டு விட்டால், கண்டிப்பாக இலக்கை எட்டி விட முடியும்.  நீங்கள் மலைகளில் விளைந்த ஆப்பிளைச் சுவைத்து உண்டிருப்பீர்கள்.  ஆனால் கர்நாடகத்தில் விளைந்த ஆப்பிளைச் சுவைத்திருக்கிறீர்களா என்று நான் கேட்டால்   ஆச்சரியப்படுவீர்கள் இல்லையா?  பொதுவாக ஆப்பிள் பழங்கள் மலைகளில் விளைகின்றன என்று தான் நாமறிவோம்.  ஆனால் கர்நாடகத்தின் பாகல்கோட்டிலே வசிக்கும் ஸ்ரீஷைல்தேலி அவர்கள், மைதானங்களில் ஆப்பிள்களை பயிர் செய்திருக்கிறார். 

அவர் வசிக்கும் குலாலி கிராமத்தில் 35 டிகிரிக்கும் அதிக வெப்பநிலையிலும் கூட ஆப்பிள் மரங்களை நட்டு விளைவித்திருக்கிறார்.  ஸ்ரீஷைல்தேலிக்கு விவசாயத்தின் மீது ஆர்வம் இருந்தது, இவர் ஆப்பிள் சாகுபடியையும் செய்து பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டார், இதில் வெற்றியும் கண்டார்.  இன்று இவரால் பயிர் செய்யப்பட்ட ஆப்பிள் மரங்களில் கணிசமாக ஆப்பிள்கள் விளைகின்றன, இவற்றை விற்று நல்ல வருவாயையும் ஈட்டி வருகிறார்.

          நண்பர்களே, ஆப்பிள்களைப் பற்றி நாம் பேசும் போது, நீங்கள் கின்னௌரி ஆப்பிள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம்.  ஆப்பிள்களுக்குப் பெயர் போன கின்னௌரிலே குங்குமப்பூ சாகுபடியும் தொடங்கியிருக்கிறது.  பொதுவாக ஹிமாச்சலத்தில் குங்குமப்பூவை பயிர் செய்வது குறைவாகவே இருக்கும் ஆனால், இப்போது கின்னௌரின் அழகான சாங்க்லா பள்ளத்தாக்கிலும் கூட குங்குமப்பூ பயிர் செய்யப்படத் தொடங்கியிருக்கிறது.  இதே போன்ற மேலும் ஒரு எடுத்துக்காட்டு கேரளத்தின் வயநாட்டிலும் உண்டு.  இங்கேயும் கூட குங்குமப்பூவை பயிர்விப்பதிலே வெற்றி கிடைத்திருக்கிறது.  மேலும் வயநாட்டின் இந்தக் குங்குமப்பூ ஏதோ வயலிலோ, மண்ணிலோ அல்ல, மாறாக ஏரோபோனிக்ஸ் அதாவது, பனிமூட்டம் நிறைந்த காற்றில் விளைவிக்கும் உத்தியைப் பயன்படுத்தி பயிர் செய்யப்படுகிறது. 

இதைப் போன்றே ஆச்சரியம் அளிக்கும் விஷயம் லிச்சிப் பழம் அதாவது விளச்சிப்பழ சாகுபடியிலும் நடந்திருக்கிறது.  இந்த விளச்சிப்பழம் பிஹார், மேற்கு வங்கம் அல்லது ஜார்க்கண்டில் தான் விளையும் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  ஆனால் இப்போது விளச்சிப்பழ சாகுபடி தென் பாரதம் மற்றும் ராஜஸ்தானத்திலும் கூட ஆகி வருகிறது.  தமிழ்நாட்டின் திருவீர அரசு காபிப்பயிர் விவசாயம் செய்து வந்தார்.  கொடைக்கானலில் அவர் விளச்சி மரங்களை நட்டார், அவருடைய ஏழாண்டுக்கால உழைப்பிற்குப் பிறகு இப்போது இந்த மரங்கள் மகசூல் அளிக்கத் தொடங்கியிருக்கின்றன.  விளச்சிப் பழங்களைப் பயிர் செய்வதில் இவருக்குக் கிடைத்த வெற்றியைப் பார்த்து, அக்கம்பக்கத்தில் இருந்த மற்ற விவசாயிகளும் உள்ளெழுச்சி அடைந்தார்கள். ராஜஸ்தானத்தைச் சேர்ந்த ஜிதேந்திர சிங் ராணாவத்தும் விளச்சிப் பழங்களைப் பயிர் செய்வதில் வெற்றி பெற்றிருக்கிறார். 

இந்த எடுத்துக்காட்டுகள் அனைத்தும் உத்வேகம் அளிக்கவல்லவை.  நாம் புதியதாக ஒன்றைச் செய்யும் நோக்கத்தை மேற்கொண்டால், இடர்களைத் தாண்டியும் உறுதிப்பாட்டோடு நின்றால், அசாத்தியமானவைகளும் சாத்தியப்படும்.

          என் உளம்நிறை நாட்டுமக்களே, இன்று ஏப்ரல் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை.  சில நாட்களில் மே மாதம் தொடங்கிவிடும்.  நான் உங்களை சுமார் 108 ஆண்டுகள் முந்தைய காலத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.  1917ஆம் ஆண்டு, ஏப்ரல் மற்றும் மே என்ற இதே இரண்டு மாதங்கள் – தேசத்தின் விடுதலைக்காக ஒரு வித்தியாசமான போராட்டம் நடந்து வந்தது.  ஆங்கிலேயர்கள் உச்சகட்ட அடக்குமுறையில் ஈடுபட்டிருந்தார்கள். 

ஏழைகள், வஞ்சிக்கப்பட்டவர்கள், விவசாயிகள் மீது அடக்குமுறை காட்டுமிராண்டித்தனத்தையும் கடந்த நிலையில் இருந்தது.  பிஹாரின் விளைநிலங்களில் இண்டிகோ அதாவது அவுரிச் செடியை பயிர் செய்ய விவசாயிகளை ஆங்கிலேயர்கள் வற்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.  அவுரிச் செடி சாகுபடியால் விவசாயிகளின் விளைநிலங்கள் மலடாகிக் கொண்டிருந்தன ஆனால், ஆங்கிலேய காட்டாட்சி இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.  இந்த நிலையில் 1917ஆம் ஆண்டில், காந்தியடிகள் பிஹாரின் சம்பாரணுக்கு வந்தார். 

விவசாயிகள் காந்தியடிகளிடம் சென்று – எங்களுடைய நிலம் இறந்து கொண்டிருக்கிறது, உண்ண உணவு கிடைக்கவில்லை என்று முறையிட்டார்கள்.   இலட்சக்கணக்கான விவசாயிகளின் இந்தத் துயரத்தை உணர்ந்து காந்தியடிகள் தன் மனதில் ஒரு உறுதிப்பாட்டை மேற்கொண்டார்.   அங்கிருந்துதான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பாரண் சத்தியாகிரகம் தொடங்கியது.  அண்ணலின் சத்தியாகிரகத்தால் ஒட்டுமொத்த ஆங்கிலேய ஆட்சியும் ஆட்டம் கண்டது.  வேறு வழியில்லாமல் இந்த அவுரிச் செடி பயிர் செய்ய விவசாயிகளை வற்புறுத்தும் சட்டத்தை ஆங்கிலேயர்கள் நிறுத்திவைக்க வேண்டியிருந்தது. 

சுதந்திரப் போராட்டத்தில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய ஒரு வெற்றி இது.  இந்த சத்தியாகிரகத்தில் பிஹாரைச் சேர்ந்த மேலும் ஒரு நல்மைந்தனுடைய மிகப்பெரிய பங்களிப்பும் இருந்தது, இவர் தான் நாடு விடுதலை அடைந்த பிறகு தேசத்தின் முதல் குடியரசுத் தலைவராக ஆனார்.  அவர் தான் மகத்தான ஆளுமையான டாக்டர். ராஜேந்திர பிரசாத்.  இவர் சம்பாரண் சத்தியாகிரகம் பற்றி ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் – Satyagraha in Champaran, சம்பாரணில் சத்தியாகிரகம் என்ற இந்தப் புத்தகத்தை அனைத்து இளைஞர்களும் படிக்க வேண்டும்.  சகோதர சகோதரிகளே, ஏப்ரலோடு தான் சுதந்திரப் போராட்டத்தின் பல, மறக்கமுடியாத அத்தியாயங்கள் இணைந்திருக்கின்றன. 

ஏப்ரல் மாதத்தின் 6ஆம் தேதியன்று தான் காந்தியடிகளின் தாண்டி யாத்திரை நிறைவடைந்தது.  மார்ச் மாதம் 12ஆம் தேதியன்று தொடங்கி, 24 நாட்கள் வரை நடந்த இந்த யாத்திரை, ஆங்கிலேயர்களை அசைத்துப் பார்த்தது.  ஏப்ரல் மாதத்தில் தான் ஜலியான்வாலாபாக் படுகொலை அரங்கேறியது.  பஞ்சாபின் மண்ணின் மீது, ரத்தத்தால் செம்மையான இந்த வரலாற்றின் அடையாளங்கள் இன்றும் கூட காணப்படுகின்றன.

          நண்பர்களே, சில நாட்களில் மே மாதம் 10ஆம் தேதியன்று, முதல் சுதந்திரப் போராட்டத்தின் ஆண்டு நிறைவு வரவிருக்கிறது.  சுதந்திரம் வேண்டி புரியப்பட்ட அந்த முதல் போரில் எழுந்த தீப்பொறி மேலும் வலுவடைந்து, இலட்சக்கணக்கான வீரர்களுக்கு பெருங்கனலாக உருமாறியது. 

ஏப்ரல் 26ஆம் தேதியன்று நாம் 1857ஆம் ஆண்டுப் புரட்சியின் மகத்தான நாயகனான பாபு வீர் குன்வர் சிங் அவர்களின் நினைவுநாளை அனுசரித்தோம்.  பிஹாரின் மாபெரும் போராளி காரணமாக தேசம் முழுமைக்கும் உத்வேகம் கிடைத்தது.  இப்படிப்பட்ட இலட்சோபலட்சம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் காலத்தால் அழியாத உத்வேகங்களை உயிர்ப்போடு வைத்திருக்க வேண்டும்.  நாம் அவற்றிலிருந்து சக்தி பெற வேண்டும், இவை அமுதக்காலத்தின் நமது உறுதிப்பாடுகளுக்குப் புதிய பலத்தை அளிக்கின்றன.

          நண்பர்களே, மனதின் குரலின் இந்த நீண்ட பயணத்தில் நீங்கள் இந்த நிகழ்ச்சியோடு ஒரு ஆத்மார்த்தமான உறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.  எந்தச் சாதனைகளை நாட்டுமக்கள் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்களோ, அவை மனதின் குரல் வாயிலாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன.  

அடுத்து வரவிருக்கும் மாதங்களில் நாம் மீண்டும் இணைவோம், தேசத்தின் பன்முகத்தன்மை, கௌரவமளிக்கும் பாரம்பரியங்கள், புதிய சாதனைகள் ஆகியவை குறித்துப் பரிமாறுவோம்.  தங்களுடைய அர்ப்பணிப்பு மற்றும் சேவை உணர்வால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவருவோரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.  எப்போதும் போலவே நீங்கள் உங்களுடைய கருத்துக்களையும், ஆலோசனைகளையும் அனுப்பி வாருங்கள்.  நன்றி, வணக்கம்.

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

ipl 2025 games - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ் மைதானம், கொல்கொத்தா – 26.04.2025

மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது

பஞ்சாப் கிங்க்ஸ் அணி (201/4, பிரப்சிம்ரன் சிங் 83, பிரியன்ஸ் ஆர்யா 69, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 25, வைபவ் அரோரா 2/34, வருண் சக்ரவர்த்தி 1/39, ஆண்ட்ரூ ரசல் 1/27) கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (ஒரு ஓவரில் 7/0) மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றன.

பூவாதலையா வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. அதன் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (35 பந்துகளில் 69 ரன், 8 ஃபோர், 4 சிக்சர்) 11.5 ஓவர் வரை விளையாடினார்.

முதல் விக்கட்டு அவர் பிரப்சிம்ரன் சிங் (49 பந்துகளில் 83 ரன், 6 ஃபோர், 6 சிக்சர்) உடன் இணைந்து 120 ரன் சேர்த்தார். அதற்குப் பின் வந்த வீரர்கள் இவர்களின் வேகத்தில் ரன் அடிக்க முடியவில்லை. எனவே 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கட் இழப்பிற்கு 201 ரன் சேர்த்தது.

202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கொத்தா அணி ஒரு ஓவர் மட்டுமே விளையாட முடிந்தது. அதன் பின்னர் மழை வந்துவிட்டது.

இச்சமயத்தில் மாலை/இரவு வேளைகளில் வரக்கூடிய “நார்வெஸ்டர்” என்று ஆங்கிலத்தில் அழைக்கபடுகின்ற இடிமழை இது. இதன் உக்கிரம் குறையாததால் 10.59க்கு ஆட்டம் கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

1766582 rn ravi - 2026

பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கே இத்தகைய மிரட்டல் என்றால்… சாமானியனை என்ன பாடு படுத்துவார்கள் திமுக., அரசின் காவல் துறையினர் என்ற குரல்கள் இப்போது எதிரொலிக்கத் தொடங்கி இருக்கின்றன.

இதன் பின்னணியில் தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவியின் குரல் இருக்கிறது.  ”மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என தமிழக அரசு பல்கலை துணைவேந்தர்களை போலீசார் மிரட்டி உள்ளனர்” என்று, தமிழக  ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியிருந்தார்.  

தமிழக அரசு, தனியார் மற்றும் மத்திய பல்கலை துணைவேந்தர்களின் மாநாடு, ஆளுநர் ரவி தலைமையில் ஊட்டியில் ஏப்.25 அன்று தொடங்கியது. குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தொடங்கி வைத்தார்.  அப்போது பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிக்கு கல்வித்துறை வளர்ச்சி அடைவது அவசியம். பயங்கரவாதம் உலக அளவில் அச்சுறுத்தலாக உள்ளது. நாட்டின் வளர்ச்சியை எந்தச் சூழலிலும் தடுக்க முடியாது. குருகுல கல்வி மிகவும் சிறந்தது என்று பேசினார். 

இந்த மாநாட்டில், 32 பல்கலைக்கழகங்களின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசுக்கு உட்பட்ட 17 பல்கலைக்கழகங்களில் இருந்து துணைவேந்தரோ, பிரதிநிதிகளோ பங்கேற்கவில்லை.

இந்த மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியபோது, தமிழகத்தில் உள்ள கல்வித் தரம் மோசமடைந்துள்ளதை சுட்டிக் காட்டினார். மேலும், இந்தக் கூட்டம் ஏன் நடத்தப் படுகிறது என்ற காரணத்தைச் சொல்லி, இதில் அரசியல் செய்யும் திமுக., அரசு, தனது காவல்துறையை வைத்து கடுமையாக துணைவேந்தர்களை மிரட்டி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் செய்துள்ளது என்ற குற்றச்சாட்டையும் தெரிவித்தார். 

அவர் பேசியபோது, தமிழகத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்தவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. நேரில் சென்று நிறைய பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பிறகே, இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் நிலைமை மோசமாக உள்ளது. 

இந்த மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என துணைவேந்தர்களை போலீசார் மிரட்டியுள்ளனர். இதனால் தமிழக அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் யாரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. துணைவேந்தர்களின் வீட்டின் கதவை நள்ளிரவில் தட்டி, ‘மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்ப முடியாது’ என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

மாநில பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படவில்லை. தமிழகத்தில் கல்வித் தரம் மோசமாக உள்ளது. ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாடு நடத்தப்படுவது பிடிக்கவில்லை. சில துணைவேந்தர்கள் ஊட்டிக்கு வந்தும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. 

கல்வி அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல துணைவேந்தர்கள் மாநாடு உதவியாக இருக்கும். துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசியல் செய்கிறார்கள். இதுபோன்ற சூழல் இதுவரை ஏற்பட்டதில்லை…. என்று வருத்தத்துடன் கூறினார்.   

இதன் பின்னர் தன் எக்ஸ் தளப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது… 

“மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் காவல்துறையைப் பயன்படுத்தி, இன்று முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை பங்கேற்க விடாமல் தடுத்த விதம், அவசரகால நாட்களை நினைவூட்டுகிறது. மாநில உயர்கல்வி அமைச்சர், துணை வேந்தர்களிடம் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று  தொலைபேசியில் மிரட்டல் விடுத்தது பலனளிக்காத நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காவல்துறையைப் பயன்படுத்தியுள்ளார்.

மாநாட்டு நாளில் ஒரு துணைவேந்தர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஊட்டியை அடைந்த மற்றவர்கள் தங்கிய விடுதிகளின் அறை கதவுகள் நள்ளிரவில் தட்டப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்றால் உயிருக்கு மோசமான விளைவுகள் நேரிடும் என்றும், மாநாட்டில் கலந்து கொண்டால் வீடு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டீர்கள் என்றும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இது காவல்துறையின் அப்பட்டமான துஷ்பிரயோகம் ஆகும்!

இங்கு காவல் ராஜ்ஜியமா நடக்கிறது? மாநிலத்துக்குள் ஒரு கல்வி மாநாட்டில் கலந்து கொள்ள துணை வேந்தர்களுக்கு கல்விச் சுதந்திரம் இல்லையா? அல்லது தலித் மற்றும் ஏழை மாணவர்களுக்குப் பெரிதும் உதவும் மாநில பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவதன் விளைவுகள், எந்தவொரு தர மேம்பாடும் மாணவர்களை ஆர்வமுள்ளவர்களாகவும் ஊக்கமளிப்பவர்களாகவும் மாற்றும் என்பதால் இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?” என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக சமூகத்தளப் பதிவில் குறிப்பிடப் பட்டிருந்தது.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை – 25.04.2025

சென்னை அணியின் பரிதாபத் தோல்வி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை (19.5 ஓவர்களில் 154, டிவால்ட் பிரிவிஸ் 42, ஆயுஷ் மஹத்ரே 30, தீபக் ஹூடா 22, ரவீந்த்ர ஜதேஜா 21, ஹர்ஷல் படேல் 4/28, பேட் கம்மின்ஸ் 2/21, உனத்கட் 2/21, ஷமி 1/28, மெண்டிஸ் 1/26) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி (155/5, இஷான் கிஷன் 44, கமிண்டு மெண்டிஸ் 32, ட்ராவிஸ் ஹெட் 19, அனிகேத் வர்மா 19, நிதீஷ் குமார் ரெட்டி 19, நூர் அகமது 2/42, ஜதேஜா 1/22, கலீல் அகமது 1/21, அன்ஷுல் காம்போஜ் 1/16) 5 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

அதனால் மட்டையாட வந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷேக் ரஷீத் (பூஜ்யம் ரன்) முதல் பந்தில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அவருக்குப் பதிலாக ஆடவந்த சாம் கரன் (9 ரன்) ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான

ஆயுஷ் மஹத்ரேயும் (19 பந்துகளில் 30 ரன்) ரவீந்தர் ஜதேஜாவும் (17 பந்துகளில் 21 ரன்) அனியின் ஸ்கோரை நிலைப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் மஹத்ரே ஆறாவது ஓவரிலும் ஜதேஜா பத்தாவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து, இன்று புதிதாகக் களமிறங்கிய டிவால்ட் ப்ரிவிஸ் (25 பந்துகளில் 42 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) ஷிவம் துபே (9 பந்துகளில் 12 ரன்) வேகமாக ரன் சேர்க்க முயன்று அவுட் ஆயினர்.

தீபக் ஹூடா (21 பந்துகளில் 22 ரன்), தோனி (10 பந்துகளில் 6 ரன்), அன்ஷுல் காம்போஜ் (2 ரன்), நூர் அகமது (2 ரன்) ஆகியொர் ரன் அடிக்கத் திணறி ஆட்டமிழந்தனர்.

ஹர்ஷல் படேல் அதிகபட்சமாக நாலு விக்கட்டுகள் எடுத்தார். சென்னை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 154 ரன் மட்டுமே எடுத்தது.

155 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி இரண்டாவது பந்தில் தனது தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவை (பூஜ்யம் ரன்) இழந்தது. ஆனால் ட்ராவிஸ் ஹெட் (16 பந்துகளில் 19 ரன்) மற்றும் இஷான் கிஷன் (34 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர் 1 சிக்சர்) இணைந்து ஹைதராபாத் அணியின் சேஸிற்கு நம்பிக்கை அளித்தனர்.

அடுத்து வந்த ஹென்றி கிளாசன் (7 ரன்) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த அனிகேத் வர்மா (19 பந்துகளில் 19 ரன்) பெரிதாக எதுவும் சாதிக்க வில்லை. எனினும் கமிந்து மெண்டிஸ் (22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ரன், 3 ஃபோர்) மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி (13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 19 ரன், 2 ஃபோர்) ஹைதராபாத் அணியின் வெற்றியை 18.4 ஓவர்களில் உறுதி செய்தனர்.

ஆட்டநாயகனாக ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர், ஹர்ஷல் படேல் அறிவிக்கப்பட்டார்.

சென்னை அணி பிளேஆஃப் சுற்றுக்கு இனிமேல் தகுதி பெற முடியாது. அதனால் இனி வரும் போட்டிகளில் சென்னை அணி அடுத்தவர்களின் வாய்ப்பை பறிக்கும் அணியாக இருக்குமே தவிர பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் அனியாக இருக்காது.

ஹைதராபாத் அணிக்கு பிளேஆஃப் சுற்றுக்குச் செல்ல இன்னமும் ஒரு மெல்லிய வாய்ப்பு உள்ளது.

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

kanchi 71st acharya selected - 2026

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீ தத்து சத்ய வேங்கட சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா டிராவிட் என்கிற இயற்பெயர் கொண்ட இளைஞரை காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சார்யார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அறிவித்திருக்கிறார்கள்.

இவர் ரிக், யஜூர், சாம வேதங்களையும் சாஸ்திரங்களையும் முறைப்படி பயின்று தேர்ச்சி பெற்றவர். நிகழும் விசுவாசுவ வருடம் வருகிற சித்திரை 17 ஆம் நாள் அக்ஷய திருதியை நன்நாளில் காஞ்சி காமகோடி பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக ஸ்ரீகணேச ஷர்மா அவர்களுக்கு காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி சங்கராச்சார்யார் ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சன்யாச தீட்சை வழங்குகிறார்கள் என்று மடத்தின் சார்பில் வெளியான அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்தில் அட்சய திருதியை நாளில் (ஏப். 30, 2025) ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மாவுக்கு சன்யாச தீக்ஷை வழங்குகிறார். இந்த புனித நிகழ்வு கிமு 482 இல் காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தை நிறுவிய ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியாரின் 2534 வது ஜெயந்தி மஹோத்ஸவத்துடன் (மே 2, 2025) ஒத்துப்போகிறது.

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதியாகப் பொறுப்பேற்கும் ஸ்ரீ கணேச சர்மா குறித்த தகவல்கள்… காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக ஆந்திராவைச் சேர்ந்த கணேச சர்மா டிராவிட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களின் பூர்வீகம் தஞ்சாவூர்.

காஞ்சி மடத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ஆந்திராவின் அன்னவரத்தைச் சேர்ந்த ரிக் வேத அறிஞர் (சலக்ஷண கணபதி) ஸ்ரீ கணேச சர்மா டிராவிட், தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத், நிர்மல் மாவட்டம், பாசரா, ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் பணியாற்றினார்.

2006 ஆம் ஆண்டு வேதப் படிப்பில் ஈடுபட்ட காலத்திலிருந்தே, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசிகளையும் தொடர்ச்சியான அருளையும் அவர் பெற்றுள்ளார்.

அவரது அருளால், ஸ்ரீ கணேச சர்மா டிராவிட் ரிக் வேதத்துடன் கூடுதலாக யஜுர் வேதம், சாமவேதம், ஷடங்காஸ், தசோபநிஷத் ஆகியவற்றையும் முடித்து சாஸ்திரப் படிப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ துட்டு சத்ய வெங்கட சூர்ய சுப்ரமணிய கணேச சர்மா, ஆந்திராவில் உள்ள துனியில் 2001 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை ஸ்ரீநிவாச சூர்ய சுப்ரமணிய தன்வந்திரி. இவர் அன்னவரம் ஸ்ரீ வீர வெங்கட சத்தியநாராயண சுவாமி கோவிலில் விரத புரோகிதராக பணியாற்றி வருகிறார். தாயார் அலிவேலு மங்காதேவி.

ஸ்ரீ சர்மா தனது வேதக் கல்வியை கர்நாடகாவின் சந்துகுட்லு ஹோசமானே ரத்னாகர பட் சர்மாவிடம் கற்றார். ஸ்ரீ கணேச சர்மா, திருமலை திருப்பதி தேவஸ்தான வேத அறிஞரான பல்லாமுடி சத்திய வெங்கட ரமணமூர்த்தியிடம் ஷப்தமஞ்சரி, தாதுரூபாவலி, சமாசகுசுமாவலி மற்றும் பிற நூல்களைப் படித்தார்.

அவர் ரிக்வேத அறிஞரும் சமஸ்கிருத ஆசிரியருமான ஸ்ரீ கம்மம்பள்ளி சதீஷாச்சாரியாரின் கீழ் வேத அர்த்தத்தையும் சமஸ்கிருத கல்வியையும் தொடங்கினார். வேதப் படிப்புகள் தவிர, ஸ்ரீ கணேச சர்மா எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை சமகாலக் கல்வியையும் அன்னவரத்தில்10வது தேர்வையும் முடித்துள்ளார்.

மே 2009ல், கோடை விடுமுறையின் போது, ​​அவரது தாத்தா (மறைந்த ஸ்ரீ துட்டு சுப்பிரமணியம்) சுப்பிரமணிய கணேச சர்மாவை திருப்பதியில் உள்ள தனது தாய்மாமா வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒரு நாள் அவர்கள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட சங்கராச்சாரிய சுவாமிஜியின் தரிசனத்திற்காகச் சென்றனர்.

தூரத்தில் நின்று சுவாமியை தரிசனம் செய்தபோது, ​​ஆச்சார்யர் இதைக் கவனித்து, அவர்களை அருகில் அழைத்து, ஆசீர்வதித்து சிறுவனாக இருந்த சுப்ரமணிய கணேச சர்மாவுக்கு சில வழிகாட்டுதலை வழங்கினார்:

“நீங்கள் அன்னவரத்தைச் சேர்ந்தவர்கள். அருகிலேயே துவாரகை திருமலையின் புனித இடம் உள்ளது. அங்கு, எங்கள் பக்தரும் வேத அறிஞருமான ஸ்ரீ ரத்னகர பட் சர்மா, ரிக்வேத சலக்ஷண கனபதி, பகவானின் சேவையில் இருக்கிறார்.நீங்கள் சிறுவனை வேத படிப்புக்கு அங்கு அனுப்பலாம்” என்றார்.

அவர்கள் ஸ்ரீ ரத்னகர பட்டரைச் சந்தித்து, சுவாமி கூறியவற்றை விவரித்தனர், அதன் பிறகு அவர் சிறுவனை வேத படிப்பில் சேர்த்துக்கொண்டார். உபகர்மாவை முடித்த பிறகு, ஸ்ரீ ரத்னகர பட் சர்மாவின் வழிகாட்டுதலின் கீழ் வேதக் கற்றல் தொடங்கியது. அப்போது முதல் அவர் தனது ஆசிரியரின் வீட்டில் 12 ஆண்டுகள் தங்கி, குருவுக்கு சேவை செய்து வந்தார்.

ரிக் வேத சம்ஹிதை, ஐதரேய பிராமணம், ஆரண்யகம் மற்றும் உபநிடதங்களைப் படித்தார். பின்னர், அவர் பாதம் மற்றும் க்ரமம் ஆகியவற்றைப் படித்தார். ரிக்வேத அறிஞரும், ரத்னகர பட்டரின் மகனுமான ஸ்ரீ ஸ்ரீனிவாச சர்மா, தனது மந்திர உச்சாடனத் திறமைக்குப் பெயர் பெற்றவர்,

அவர் அரசவல்லியில் உள்ள சூரிய நாராயணரின் கோவிலில் சேவை செய்து வந்தார். இந்தக் காலகட்டத்தில் கணேச சர்மா, பிரதிஷாக்யம் மற்றும் வியாலி சிக்ஷா உள்ளிட்ட மேம்பட்ட வேத நூல்கள் மற்றும் பிற தொடர்புடைய நூல்களில் பயிற்சி பெற்றதோடு, அவருடன் ஜடபாதத்தையும் கற்றுக்கொண்டார்.

சமஸ்கிருதம், வேத நூல்கள் மற்றும் வேதாந்த படிப்பில் மூழ்கியதால், வேத அறிவை ஆராயும் ஆழ்ந்த விருப்பத்திற்கான விதைகளை கணேச சர்மாவுக்கு விதைத்தது. தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள பாசாரில் உள்ள ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் ரிக்வேத பாராயணதாரராகவும் ஸ்ரீ கணேச சர்மா பணியாற்றினார்.

விஜயவாடாவில் சாதுர்மாஸ்யத்தின் போது ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிஜியின் தரிசனம். கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகத்தின் போது, ​​மீண்டும் சுவாமிஜியின் தரிசனத்தைப் பெற்றார்.

2019ல் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்திற்குப் பிறகு, சென்னையில் சுவாமிஜியின் தரிசனத்தைப் பெறும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிஜி மஹாபூப்நகரில் முகாமிட்டிருந்த போது, ​​ தனது வேதப் படிப்பு முடிந்ததையும், கோயிலில் தனது சேவையைத் தொடங்கியது பற்றியும் தெரிவித்தார்,

2022ம் ஆண்டு காக்கிநாடாவில் நடந்த சாதுர்மாஸ்யத்தின் போது, ​​அவர் பிரதிஷாக்ய சதஸில் பங்கேற்றார், அங்கு அவர் மீண்டும் சுவாமிஜியின் ஆசிகளைப் பெற்றார். காசி யாத்திரையைத் தொடங்கு வதற்கு முன்பு சுவாமிஜி நிஜாமாபாத்தில் தங்கியிருந்தபோது, ​​முகாமில் வேதபாராயணம் செய்து வழக்கமான தரிசனம் செய்தார். சமஸ்கிருத படிப்பில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்,

டிசம்பர் 16, 2023 அன்று, காசி யாத்திரை முடிந்ததும், சுவாமிஜி பாசர சரஸ்வதி கோயிலுக்குச் சென்றார். மறுநாள், சுவாமிஜியிடமிருந்து தீர்த்த பிரசாதத்தைப் பெற்று, சமஸ்கிருதக் கற்றலில் தனது முன்னேற்றம் மற்றும் வேதார்த்தத்தைப் படிக்கும் விருப்பம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

இரண்டு இளம் மாணவர்களுக்கு ரிக்வேத பாதபதத்தைக் கற்பித்ததற்கான தனது முயற்சியையும் அவர் குறிப்பிட்டார். சுவாமிஜி தனது அன்பான ஒப்புதலை அளித்து அவரை ஆசீர்வதித்தார், மேலும் பரமாச்சார்ய ஆராதன உற்சவங்களில் பங்கேற்க அவரை ஊக்குவித்தார்.

ஜனவரி 2024ல், பரமாச்சரிய ஆராதனை உற்சவங்களின் ஒரு பகுதியாக ஸ்கந்தகிரியில் நடந்த ரிக்வேத சம்ஹிதா பாராயணத்தில் பங்கேற்றார்,

அங்கு அவர் வேதாந்தத்தில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். பாராயணம் முடிந்த பிறகும், அவர் ஸ்கந்தகிரி மடத்தில் சுவாமிஜியை அடிக்கடி சென்று தரிசித்து வந்தார்.

தண்டலம் (ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிஜியின் பூர்வாஷ்ரம கிராமம்), காகவாக்கம் மற்றும் சூலமேனி அக்ரஹாரம் உள்ளிட்ட புனித தலங்களுக்கு அவர் யாத்திரை மேற்கொண்டார்.

மார்ச் 2024ல், சுவாமிஜியின் அறிவுறுத்தலின்படி அவர் திருப்பதியில் பத்து நாட்கள் தங்கி பூஜ்ய ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிஜியின் ஆராதனை உற்சவங்களில் பங்கேற்றார்.

ஏப்ரல் 12, 2024 அன்று, அவர் பாசராவில் சரஸ்வதி தேவிக்கு தனது சொந்தக் கைகளால் அபிஷேகம் செய்து, உயர்கல்விக்காக காஞ்சிபுரம் செல்ல அனுமதி கேட்டு பிரார்த்தனை செய்தார்.

ஏப்ரல் 13, 2024 அன்று, அவர் காஞ்சிபுரம் வந்து, காமாக்ஷி தேவியின் தரிசனத்தைப் பெற்றார், மேலும் காஞ்சி பரமாச்சார்யா மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிஜியின் பிருந்தாவனங்களில் தரிசனம் செய்தார்.

ஏப்ரல் 14, 2024 அன்று, சுவாமிஜி தனது நேரடி மேற்பார்வையின் கீழ் படிப்பு, வழிமுறை, வழிகாட்டிகள் மற்றும் ஒரு படிப்புத் திட்டத்தை தனிப்பட்ட முறையில் கோடிட்டுக் காட்டினார்.

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

kasturi rangan - 2026

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

1940ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் கஸ்துாரிரங்கன் பிறந்தார். இவரது பூர்வீகம் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம். எர்ணாகுளத்தில் ஸ்ரீ ராம வர்மா பள்ளியில் பள்ளிப் படிப்பையும் பின்னர் மும்பையில் கல்லூரிப் படிப்பும் முதுநிலைப் படிப்பும் முடித்தார்.

1994ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான ‘இஸ்ரோ’வின் தலைவராக இருந்தார். இவரது பணிக்காலத்தில் இஸ்ரோ புதுப்புது சாதனைகளை படைத்து சர்வதேச அளவில் புகழ்பெற்றது.

இஸ்ரோவில் இருந்து பணி ஓய்வு பெற்ற பிறகு, ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணிபுரிந்துள்ளார்.

இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ , பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகிய 3 உயரிய விருதுகளை வழங்கியுள்ளது. ராஜ்யசபா உறுப்பினராகவும், மத்திய திட்டக்குழு உறுப்பினராகவும் கஸ்துாரி ரங்கன் பணியாற்றினார்.

கஸ்தூரிரங்கன் தலைமையில் உருவாக்கப்பட்ட வரைவுக் குழுவின் பரிந்துரைகளின் படியே புதிய கல்விக் கொள்கை 2020ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு சமர்ப்பித்த விரிவான அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் குறிப்பில்,

இந்தியாவின் அறிவியல் மற்றும் கல்விப் பயணத்தில் ஒரு உன்னத நபரான டாக்டர் கே. கஸ்தூரிரங்கனின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது தொலைநோக்குத் தலைமையும், தேசத்திற்கு தன்னலமற்ற பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும். அவர் விடாமுயற்சியுடன் இஸ்ரோவுக்கு சேவையாற்றினார். இந்தியாவின் விண்வெளித் திட்டத்தை புதிய உயரங்களுக்கு அழைத்துச் சென்றார். அதன்மூலம் நாம் உலகளாவிய அங்கீகாரத்தையும் பெற்றோம். அவரது தலைமைத்துவம் லட்சிய செயற்கைக்கோள் ஏவுதல்களையும் கண்டது புதுமைகளில் கவனம் செலுத்தியது. என்று பிரதமர் மோடி தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, இஸ்ரோ தலைவராகவும், தேசியக் கல்விக் கொள்கை வடிவமைப்புக் குழு தலைவராகவும், மேலும் பல்வேறு பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றிய, பெருமதிப்பிற்குரிய டாக்டர் திரு. கஸ்தூரி ரங்கன் அவர்கள், உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. டாக்டர் திரு. கஸ்தூரி ரங்கன் அவர்களது மறைவு, இந்திய விஞ்ஞானத் துறைக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி! – என்று, பாஜக.,வின் முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு
மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில்,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், புகழ்பெற்ற அறிவியலாளருமான முனைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கேரளத்தில் பிறந்த தமிழரான முனைவர் கஸ்தூரி ரங்கன், இந்திய வின்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக பதவி வகித்த காலத்தில் தான் ஏராளமான செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு, புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். மேற்குத் தொடர்ச்சி மலைகளை பாதுகாப்பதற்காக கஸ்தூரிரங்கன் குழு தயாரித்து அளித்த பரிந்துரை அறிக்கை வரலாற்று சிறப்பு மிக்கதாகும். நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினராக பணியாற்றியவர் கஸ்தூரிரங்கன். அவரது மறைவு இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், அறிவியலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். – என்று குறிப்பிட்டுள்ளார்.