
தில்லியில் உள்ள தீஸ் ஹசாரி, நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இதனால் ஏராளமான பொது மக்கள் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நவ.2 சனிக்கிழமை இன்று நீதிமன்ற வளாகத்தில் தில்லி போலீஸார் மற்றும் வக்கீ்ல்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசாரின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் காயமடைந்த வழக்கறிஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும் கூறப் படுகிறது. இந்த மோதல் சம்பவத்தால் தில்லி தீஸ் ஹசாரி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வாகன நிறுத்தம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது என்று கூறப் படுகிறது. இந்தச் சம்பவத்தில் இரு வழக்கறிஞர்கள் காயம் அடைந்து, செண்ட் ஸ்டீபன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
இந்த தகராறின் காரணம் குறித்து பேசிய டிஸ் ஹசாரி பார் அசோசியேஷனின் அலுவலக பொறுப்பாளர் ஜெய் பிஸ்வால், “ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வருகையில் அந்த வாகனத்தின் மீது ஒரு போலீஸ் வாகனம் மோதியது. வழக்கறிஞர் இந்த விவகாரத்தை எதிர்கொண்டபோது தகராறு வெடித்தது. அப்போது காவல்துறையினர் 6 பேர் அவரை உள்ளே அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர். மக்கள் இதைப் பார்த்து போலீஸை அழைத்தனர்.
“எஸ்.எச்.ஓ மற்றும் உள்ளூர் போலீசார் உள்ளே வந்தனர். அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் உயர் நீதிமன்றத்துக்கு தகவல் அளித்தோம். 6 நீதிபதிகளுடன் ஒரு குழு அனுப்பப்பட்டது. ஆனால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் அங்கிருந்து சென்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்,” என்று கூறினார் பிஸ்வால்.
தில்லியின் பார் கவுன்சில் “வக்கீல்கள் மீது போலீஸார் நடத்திய மிருகத்தனமான தாக்குதலை” கண்டனம் செய்தது.
இந்நிலையில், வக்கீல்கள் திங்களன்று மாவட்ட நீதிமன்றங்களில் பணியை முற்றிலுமாக புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.