
வாட்ஸ் ஆப் செயலியை ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ பதிவிறக்கி நம் அலைபேசி எண் பதிவு செய்து பயன்படுத்துகிறோம். நம் அலைபேசி எண்ணை தங்கள் போனில் உள்ள வாட்ஸ் ஆப் செயலில் பதிவு செய்து நம் தகவல்களை திருடுபவர்கள் தான் ‘ஸ்கேம்’ திருடர்கள்.
இவர்கள் நம் எண்ணை அவர்கள் வாட்ஸ் ஆப்பில் பதிவிடும் போது நம் அலைபேசி எண்ணுக்கு 4 இலக்க ஓ.டி.பி., எண்கள் வரும். உடனே நமக்கு போன் செய்து ‘தவறாக உங்கள் எண்ணுக்கு ஓ.டி.பி.,வந்து விட்டது தயவு செய்து கூறுங்கள்’ என மூளைச் சலவை செய்கிறார்கள்.
நாமும் ஏதோ ஒரு அவசரத்தில் யார், என்ன என்று கேட்காமல் ஓ.டி.பி.,யை கூறி விட்டால் அவ்வளவு தான் நம் ‘வாட்ஸ் ஆப் சாட்’ முழுதும் திருடர்கள் அலைபேசியில் ஓப்பனாகும்.
இந்த நேரத்தில் நம் அலைபேசியின் வாட்ஸ் ஆப் செயலி ‘லாக் அவுட்’ ஆகிவிடும். ஆனால் அதை கவனித்து மீண்டும் நாம் ‘லாக் இன்’ ஆகும் இடைப்பட்ட நேரத்தில் நம் தகவல்கள் திருடப்பட்டிருக்கும்.
வாட்ஸ் ஆப்பில் நண்பர்கள், குடும்பத்தினருக்கு நாம் அனுப்பிய ஏ.டி.எம்., பாஸ்வேர்ட், ஆதார் எண் உள்ளிட்ட பல ரகசியங்கள் திருடர்கள் கையில் சிக்கினால் நம் கதை கந்தல் தான்.
இதில் இருந்து தப்பிக்க நம்பகமான நபர்கள் தவிர வேறு யார் போன் செய்து ஓ.டி.பி.,யை கேட்டாலும் சொல்லவே கூடாது.
பிரவுசிங் சென்டர் உள்ளிட்ட இடங்களில் ஏதாவது ஆவணங்கள் பெற செல்லும் போது நம் அலைபேசிக்கு வரும் ஓ.டி.பி.,யை அங்குள்ளவர் ஆவணத்திற்காக தான் பயன்படுத்துகிறாரா என்றும் கவனிக்க வேண்டும்.
தகவல் திருட்டை தடுக்க சில ‘செட்டிங்’குகளை மாற்ற வேண்டும். வாட்ஸ் ஆப் செட்டிங், பிரிவில் அக்கவுண்ட் தேர்வு செய்து ‘டூ ஸ்டெப் வெரிபிகேஷன்’ கிளிக், எனேபில் செய்து 6 இலக்க பின் நம்பர் கொடுக்கவும்.
இதை செய்தால் திருடர்கள் ஓ.டி.பி., வைத்து நம் அலைபேசி எண்ணுள்ள வாட்ஸ் ஆப்பில் நுழையும் போது பின் நம்பர் கேட்கும்.
அடுத்து ‘ஸ்டோரேஜ் அண்ட் டேட்டா’ கிளிக் செய்து ‘மீடியா ஆட்டோ டவுண்லோட்’ பிரிவில் காட்டும் ‘வென் யூசிங் மொபைல் டேட்டா’, ‘வென் கனக்டட் ஆன் வைபை’, ‘வென் ரோமிங்’ மூன்றையும் தேர்வு செய்து போட்டோஸ், ஆடியோ, வீடியோஸ், டாக்குமென்ட் முன் ‘டிக்’கை எடுத்தால் ஆட்டோ டவுண்லோடு ஆகும் போது ‘மால்வேர்’ வருவது தடுக்கப்படும்.
அக்கவுண்ட், பிரைவசி கிளிக் செய்து கான்டாக்ட் லிஸ்டில் உள்ளவர்கள் மட்டும் புரைபல் போட்டோ, ஸ்டேட்டஸ் காட்டும்படியும், வாட்ஸ் ஆப் குழுவில் கான்டாக்டில் உள்ளவர்களில் யார் உங்களை இணைக்கலாம் என்றும் மாற்றலாம்.
சாட்ஸ், சாட் பேக்கப் பிரிவில் பேக்கப் டூ கூகுள் டிரைவ்’ல் ‘நெவர்’ வைத்து விட்டால் திருடர்களிடம் நம் வாட்ஸ் ஆப் சிக்கும் போது தகவல்களை பதிவிறக்க முடியாது.