
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதைத் விழுப்புரம், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
பருவமழை தீவிரம் அடைந்திருப்பதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பெருக்கால் தண்ணீரில் மரக்கட்டைகள் மற்றும் கற்கள் அடித்து வரப்படுகின்றன. குற்றாலம் பஜார் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்த பிறகும் குற்றாலத்தில் மக்கள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் யாரும் குற்றாலத்திற்கு செல்லவில்லை. அருவிக்கரை பாலம் அருகே தண்ணீர் விழுந்ததால் பாதை கற்கள் உடைந்து காணப்படுகிறது..