
தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இன்று 12 லட்சம் தீப விளக்குகள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இன்று 12 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்படவுள்ளன.
சரயு நதிக்கரையில் உள்ள ராம் கி பைடி காட்டில் ( Ram Ki Paidi Ghat) சுமார் 9 லட்சம் தீபங்களும், நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் 3 லட்சம் தீபங்களும் ஏற்றப்படவுள்ளன.
கடந்த ஆண்டு சுமார் 6 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்த ஆண்டு அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக 12 லட்சம் தீபங்கள் ஏற்றப்படவுள்ளன.
15 பட்டயக் கல்லூரிகள், ஐந்து இடைக் கல்லூரிகள், 44 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் 35 துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் உட்பட சுமார் 12,000 தன்னார்வத் தொண்டர்கள் இதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
லேசர் மூலம் கண்கவர் நிகழ்ச்சியில் சரயு நதிக்கரையில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. நாட்டுப்புற கலைஞர்களின் நிகழ்ச்சி, ராமாயண சம்பவங்களை விளக்கும் அலங்கார ஊர்திகள் ஊர்வலம், ராமலீலா ஆகியவை நடைபெறவுள்ளன.
மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். யோகி ஆதித்யநாத் அழைப்பின்பேரில், மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியும் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்.