
தை புத்தாண்டு – தமிழக அரசின் திட்டமிட்ட சதி – திராவிட இயக்கங்களின் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளவும்; அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ளவுமான முயற்சி என்று, இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
சித்திரைப் புத்தாண்டை மாற்றி மீண்டும் தை 1ம் தேதியை புத்தாண்டு தினமாக அறிவிக்கும் திமுக அரசின் முடிவை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
வெள்ள பாதிப்புகளால் மக்கள் அவதிக்குள்ளாகி நிவாரணத்திற்கு வழியின்றி தவிக்கும் வேளையில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மொழிவெறி, இனவெறி அரசியலை திமுக மீண்டும் கையில் எடுத்திருப்பது கண்டிக்க தக்கது.
கடந்த 2008ல் கருணாநிதியின் தலைமையிலான திமுக அரசு இதேபோன்று தை 1ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்தது. இதைத் தமிழ் அறிஞர்கள், சமயப் பெரியோர்கள், கண்டித்தார்கள். அறிவியல் பூர்வமாகவும், ஆதாரபூர்வமாகவும் சித்திரை ஒன்றாம் தேதி தான், தமிழ் புத்தாண்டு என்று ஆணித்தரமாக எடுத்துரைத்தனர். திமுகவின் அறிவிப்பை மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதைக்கருத்தில் எடுத்துக் கொண்ட ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு 2011ஆம் ஆண்டு தை1 புத்தாண்டு என்பதை விலக்கிக் கொண்டு சித்திரை முதல் நாள் புத்தாண்டு என்று அறிவித்தது. தற்போதைய அரசு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகின்ற புத்தாண்டின் மரபிற்கு பங்கம் விளைவித்து தமிழர்களின் மாண்பை சீர்குலைக்கலாமா?
புத்தாண்டு என்பது ஒரு நாள் விழாவாகும், ஆனால் தை திருநாள் என்பது அப்படி அல்ல, தொன்மையான காலம் தொட்டே இதை போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் விழாவாக கொண்டாடி வருகிறோம். வரலாற்றை திரித்துக் கூறுவதில் திமுகவிற்கு நிகர் வேறு யாருமில்லை என்பதை, தமிழுலகம் நன்குஅறியும். தீபாவளி என்பது தமிழர் பண்டிகை இல்லை என்று சமய நூல்களை திரித்து பேசினார்கள், விநாயகர் வடநாட்டு கடவுள் என்று பிரச்சாரம் செய்தார்கள், இந்துக்கள் கொண்டாடும் அனைத்து பண்டிகைகளிலும், விழாக்களிலும் இன, மொழி வெறியை திணித்து அதை சீர்குலைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திராவிட இயக்கங்களின் இருப்பை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும், அரசியல் ஆதாயம் தேடி கொள்வதற்காக மட்டும், இதுபோன்ற இன,மொழி வெறுப்புணர்வு தூண்டப்படவில்லை. இதன் பின்னணியில் மிஷனரிகளின் திட்டமிடப்பட்ட மதமாற்ற சதி வலை பின்னப்பட்டுள்ளது.
திருவள்ளுவர், தை1. போன்றவைகளுக்கு மதசார்பற்ற தன்மைகள் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகிறது. திருவள்ளுவர் பிறந்தநாள் ஆண்டுதோறும் வைகாசி மாசம் அனுஷ நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. இதே போன்று நாயன்மார்கள், ஆழ்வார்களுக்கு கொண்டாடப்படும் விழாக்களானது தமிழ் மாதத்தையும் நட்சத்திரத்தையும் மையமாகக் கொண்டே நடத்தப்பட்டு வருகிறது.
இந்த மரபை பின்பற்றிதான் ராஜராஜ சோழனுக்கு ஐப்பசி மாதத்தில் சதயவிழா நடத்தப்பட்டு வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மாதங்களின் அடிப்படையில் கொண்டாடி வந்த திருவள்ளுவரின் பிறந்த நாளானது திராவிட கொள்கைவாதிகளால் ஆங்கில தேதியான ஜீன் இரண்டாம் தேதிக்கு 1966ல் மடைமாற்றம் செய்யப்பட்டது. பிறகு கருணாநிதி ஆட்சிக்கு வந்த 1970ல், தை 2ஆம் தேதியை திருவள்ளுவர் தினமாக அறிவிக்கப்பட்டது.
திருவள்ளுவரை இந்துமதத்தின் பிடியிலிருந்து தந்திரமாக வெளியில் கொண்டு செல்லும் பணியை திராவிட இயக்கங்கள் செய்து வந்தன.தற்போது மிஷனரிகள் திருவள்ளுவரை கிருத்துவர் என்று சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விட்டன. திருவள்ளுவர் பிறந்தநாளை மோசடியாக மாற்றி அமைத்ததுபோல இந்துக்கள் மட்டுமே கொண்டாடும் தைப்பொங்கலுக்கு புத்தாண்டு போர்வை போர்த்தி மதசார்பற்ற தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
1921ல் பச்சையப்பா கல்லூரியில் மறைமலையடிகள் தலைமையில் தமிழறிஞர்கள் கூடியதாகவும் அங்கு தமிழ் புத்தாண்டு தை 1 என்று தீர்மானித்ததாகவும் பொய்யை பரப்புரை செய்து வருகின்றனர்.
தை1ம் தேதி தமிழ் புத்தாண்டு என்று இலக்கியங்கள், சரித்திரங்கள், தொன்மையான கல்வெட்டுகள் இவற்றில் ஒன்றில் கூட கூறப்படாத நிலையில் தமிழறிஞர்களால் எவ்வாறு அறிவியல் பூர்வமாக அறிவிக்க முடியும். தை1 இல் தான் திருவள்ளுவர் தினமும், புத்தாண்டு தினமும் கொண்ட படவேண்டும் என்று 1921ல் தமிழ் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தால் 1935ஆம் ஆண்டு இதே பச்சையப்பா கல்லூரியில் மறைமலைஅடிகள் தலைமையில் தமிழ் அறிஞர்கள் வைகாசி மாசம் அனுஷ நட்சத்திரத்தில் திருவள்ளுவர் தினத்தை ஏன் கொண்ட வேண்டும் என்னும் கேள்விக்கு திமுக தலைவர் ஸ்டாலினின் பதில் அளிக்க வேண்டும்.
தை திருநாள், தமிழர் திருநாள் மட்டுமே என்றால் இதே திருநாளை ஆந்திரம், கர்நாடகம், குஜராத், பஞ்சாப், மேற்குவங்கம், உத்தரப் பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலத்தவர்கள் பல்வேறு பெயர்களில் எதன் அடிப்படையில் கொண்டாடுகின்றனர் என்பதை கழகத்தார்களால் விளக்க முடியுமா?
இந்துக்கள் வானவியலின் நிகழ்வுகளை அறிவியல் பூர்வமாக கணித்து பஞ்சாங்கத்தை ஏற்படுத்தினார்கள், சூரியனை மையமாக வைத்து காலத்தை வினாடி, நாழிகை, மணி, நாள், வாரம், மாதம், ருது, அயனம்,ஆண்டு, யுகம், மன்வந்திரம், கல்பம், என்று கணக்கிட்டு தற்போது கலியுகாதி 5123 ஆம் ஆண்டு நடைபெறுகிறது.
இதை மாய்மாலம் செய்யும் விதமாக 1971ஆம் ஆண்டில் திருவள்ளுவர் பிறந்ததை கணக்கிட்டு தமிழர்களின் ஆண்டு 2002 என்று சுருக்கப்பட்டு திமுகவின் ஆட்சியில் அரசிதழ் வெளியிடப்பட்டது. இதனால் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்கள் கடைப்பிடித்து வந்த காலக் கணக்கு மோசடி செய்யப்பட்டது. இதே போன்று தான் ஐரோப்பியாவில் கிறிஸ்தவ மதத்தை திணிப்பதற்காக ரோமானியர்கள் ஏப்பரலிலும், பிரான்சில் மார்ச்சிலும் கொண்டாடி வந்த அவர்களின் பாரம்பரிய புத்தாண்டுகள், திட்டமிட்டு சீர்குலைக்க பட்டு கிறிஸ்தவ புத்தாண்டு புகுத்தப்பட்டதை வரலாறு உணர்த்துகிறது.
ஒரு இனத்தின் அடையாளத்தை அழிக்க வேண்டும் என்றால் அவர்களின் கலாச்சார பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பது சரித்திரம் கண்ட உண்மையாகும் அதன்படி, இந்துக்களின் மேன்மையை சிறுமை படுத்தும் வகையில் திமுகவானது, நெடுங்காலமாக, ஆரிய திராவிடம். நாத்திகம், தமிழ், தமிழர் என்னும் இனவாதத்தை முன்வைத்து தமிழர்களின் பண்பாட்டை சீர்குலைக்க முயற்சித்து வருகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல், தைத் திருநாளையும், திருவள்ளுவரையும் குறிவைத்து திமுக செயல்படுவதை பார்க்கும்போது இதன் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டம் அடங்கியுள்ளதை அறியமுடிகிறது.
மதமாற்ற சக்திகளுக்கு துணை போகும் திமுகவின் செயல்பாட்டை இந்துமுன்னணி கண்டிப்பதுடன், இதன்பின் விளைவுகள் அபாயகரமாக மாறிவிடும் என்றும் இந்து முன்னணி எச்சரிக்கிறது.