மதுரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்ல தடைவிதிக்கப்படுவதாக மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்தார் .
பொது இடங்களுக்கு வரும் மக்கள் கட்டாயம் ஒரு டோஸ் மட்டுமாவது செலுத்தி இருக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் அங்கு வரும் மக்கள் சோதிக்கப்படுவார்கள்.
தடுப்பூசி செலுத்தாவிட்டால், ஊசி செலுத்த ஒரு வார காலம் அவகாசம் கொடுக்கப்படும். ஒரு வாரத்திற்கு பின்பும் தடுப்பூசி செலுத்தாமல் வந்தால், அவர்களுக்கான அனுமதி மறுக்கப்படும்.
பொது இடங்களுக்கு வரும் நபர்கள் மொபைல் குறும்செய்தியை காண்பிக்க வேண்டும். டாஸ்மாக், பார்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருந்தால் மட்டுமே மது வழங்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்திக்
கொள்ளாத நபர்கள் நியாய விலைக்கடை, ஓட்டல், தங்கும் விடுதி, பார், ஷாப்பிங் மால், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், தியேட்டர்கள், மார்க்கெட் உள்ளிட்ட 18 இடங்களுக்கு செல்லத் தடை விதிக்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் முதல் தவணை 71 சதவீதம் பேரும், 2ம் தவணை 32 சதவீதம் பேர் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனர். மதுரை மாவட்டம் தடுப்பூசி செலுத்திக்
கொள்வதில் மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்த நிலையில், ஆட்சியர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.