
சமூக வலைத்தளங்களில் இன்று ஒரு வீடியோ வைரலானது. வாட்ஸ் அப் வாயிலாக அவற்றை பலரும் பகிர்ந்தனர். அந்த வீடியோவில், கடையநல்லூர் எனக்கு! நான் நாளைக்கு கத்தாருக்கு போக வேண்டும் என்று கூறி ஒரு ஒரு பொட்டலத்தை வீட்டில் வைத்து பிரித்துக் காட்டுகிறார்.
மிச்சர் பொட்டலம் என்று சொல்லி என்னிடம் கொடுத்தார்கள் என்று கூறும் அந்த நபர், எக்காரணம் கொண்டும் தெரியாதவர்கள் தரும் பார்சல்களை வாங்கிக் கொண்டு வெளிநாடுகளுக்குப் பறக்காதீர் என்று ஓர் அறிவுரையும் சொல்கிறார்.
அதாவது, வெளிநாட்டிற்கு மிக்சர் பார்சலில் கஞ்சா வைத்து, தம்மையும் அறியாமல் தம்மைக் கடத்தலில் ஈடுபடுத்துகிறார்கள் என்று பகிரங்கமாகப் போட்டுடைத்தார்.
ஏற்கெனவே, கடந்த கால் நூற்றாண்டு காலமாக நெல்லை மாவட்டம் கடையநல்லூர் பகுதி இஸ்லாமியர்களின் பகுதியாகவும், கடத்தல் பொருள்களின் கேந்திரமாகவும் மாறிப் போயுள்ளது. இஸ்லாமியர்களின் அரபு நாடுகளுடான தொடர்பால், இங்கே சர்வதேசப் பொருள்களின் நடமாட்டமும், முகம் தெரியாத அடையாளம் காண இயலாத நபர்களின் போக்குவரத்தும் அதிகரித்தே வந்திருக்கிறது.
இந்நிலையில், இன்றைய ஒரு சம்பவம் இதனை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது. மதுரை, சென்னை விமான நிலையங்களில் பிடிபடும் கஞ்சா, போதைப் பொருள்கள், கடத்தல் பொருள்கள் பலவும் கீழக்கரை, கடையநல்லூர், மேலப்பாளையம் பகுதிகளில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்களிடம் அல்லது வருபவர்களிடம் இருந்தே கைப்பற்றப் பட்டுள்ளன.
இந்நிலையில், நண்பர் தரும் பார்சல்களை பரிசோதனை செய்து கொண்டு, பின்னர் செல்லுங்கள் என்று கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறிவுறுத்தப் பட்டிருக்கிறது. நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் இருந்து, அதிக அளவில் அரபு நாடுகளிலும் மலேசியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளிலும் வேலை செய்து வருகின்றனர்
நேற்று, இக்பால்நகர் காயிதே மில்லத் தெருவில் வசிக்கும் ஆதில் என்பவரது பெயரைப் பயன்படுத்தி, அவருக்கு ஒரு பார்சலை அனுப்ப முயன்றுள்ளனர், கடையநல்லூரைச் சேர்ந்த அவரது நண்பர்கள்.
அப்போது, கடையநல்லூரில் இருந்து கத்தாருக்கு பயணம் செய்யத் தயாரான மலித்தரகன் ரஷீத்திடம் ஒரு மிக்சர் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு, அதனை வெளிநாட்டில் வேலை பார்க்கும் தமது நண்பர் ஆதிலிடம் கொடுக்குமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கத்தாரில் வேலை செய்து வரும் அப்துல் லத்தீப் என்பவர், தமது நண்பரான ரஷீத்துக்கு ஒரு தகவலைக் கூறியுள்ளார். அதில், ஆதிலின் பெயருக்கு யாராவது பார்சல் எதுவும் கொடுத்தால் வாங்கி வராதே! இங்கே கஞ்சா வியாபாரம் செய்து வருகிறது ஒரு குழு என்று கூறியுள்ளார்.
இதனால் அச்சம் அடைந்த ரஷீத் உடனடியாக தம்மிடம் சேர்க்கப்பட்ட பார்சலை பிரித்துப் பார்த்துள்ளார். அதில், பெரிய அளவுக்கு பேக்கிங் ஆகியிருந்தது. அரை கிலோ மிக்சருக்கு இவ்வளவு பேக்கிங்கா என்று கேள்வி கேட்டுக் கொண்டே அந்த பார்சலைப் பிரித்து, அதனுள் இருந்த சிறு சிறு பொட்டலங்களையும் பிரித்து அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார் ரஷீத்.

அந்தப் பார்சலைப் பிரித்துப் பார்த்த போது, அதில் 5 பாக்கெட் கஞ்சாவும் சிகரெட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து வைத்து இருப்பதும் தெரிய வந்தது!
உடனே பார்சல் கொடுத்த நபர்களைப் பிடித்து விசாரிக்குமாறு ஒரு தகவலை உள்ளூர் நபர்களிடம் சொல்லிவிட்டு, மற்றவர்களுக்கும் விழிப்பு உணர்வு ஏற்படும் வகையில், கஞ்சா பார்சலை வீடியோவாக எடுத்து, வாட்ஸ்அப்பில் பரப்பினார்!
இந்த வீடியோ, கடையநல்லூர் பகுதியில் மட்டுமில்லை, வெளிநாடுகளிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ சம்பந்தப் பட்ட நபரால் காவல் துறை அதிகாரிகளுக்கும் பகிரப் பட்டுள்ளது.
ஆனால், காவல் துறை அதிகாரிகளோ, இந்த விவகாரத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் வேறு வேலைகளில் மிகவும் பரபரப்பாக இருந்து விட்டனர்.
இருப்பினும், இது குறித்த விவரத்தைச் சொல்லி, செதியாளர்கள் ஓரிருவர் காவல் துறையைத் தொடர்பு கொண்டு, இந்த விவகாரம் பெரிய அளவில் விவாதப் பொருள் ஆகியுள்ளது என்று எடுத்துரைத்தும், காவலர் தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க போலீசார் சில இடங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்க, வலிய வந்து தானே சிக்கிய விவகாரத்தை போலீஸார் கண்டுகொள்ளாமல் கோட்டை விட்டனர். இது ஒரு விளம்பர யுத்தி என்றும், சம்பந்தப் பட்ட நபரே விளம்பரத்துக்காகவும், தாம் யோக்கியர் என்று காட்டவும் இத்தகைய வீடியோவை பதிவு செய்து அனுப்பியுள்ளார் என்றும் கூறினர்.

இந்த வீடியோ பதிவில் கண்ட வீட்டுக்குச் சென்று போலீசார் விசாரிக்கவும் இல்லை. கடையநல்லூரில் எப்படி வந்தது இவ்வளவு கஞ்சா என்றும் போலீஸார் விசாரிக்கவில்லை. கடையநல்லூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா நடமாட்டம் அதிகம் இருப்பதையே இந்தச் சம்பவம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, மொத்தமாக அரை கிலோ ஒருகிலோ என்றால்தால் போலீஸார் வருவர் போலும், கிராம் கணக்கில் கஞ்சா குறித்து கசிந்தால் அதை விசாரிக்கக் கூட போலீஸார் வரவில்லையே என்றனர் பலர்.
இந்நேரம் மேற்படி நபரின் தெருவுக்குச் சென்று, யார் அந்த பார்சலைக் கொடுத்தது, எத்தனை காலமாக இந்த திருட்டுத்தன கடத்தல் நாடகம் நடத்தப் பட்டு வருகிறது என்றெல்லாம் போலீஸார் விசாரிக்கவே இல்லை.
இதுதான் இப்போது பொது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கத்தாருக்கு பயணம் செய்ய வேண்டிய ரஷீத்தோ, நேற்று வீடியோவை வெளியிட்டார். இன்று காலை கத்தாருக்கு விமானம் ஏறினார். இன்று முற்பகல் கத்தார் நாட்டுக்கும் சென்று சேர்ந்து விட்டார்.
இதனிடையே, கத்தாரில் உள்ள ஆதிலுக்கும் கஞ்சாவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தம் பெயரை கஞ்சா கடத்தல் கும்பல் தவறாகப் பயன்படுத்துகிறது என்றும் ஆதில் என்பவர் போனில் தொடர்பு கொண்டு சம்பந்தப் பட்ட ரஷீத்திடம் மறுத்துள்ளார்.
இத்தகைய நிலையில், மேற்படி ரஷீத்தே கூட இத்தனை நாள் கூட்டு நடவடிக்கையில் இருந்திருக்கலாம், இப்போது பேரம் ஏதோ படியாமல் திடீரென்று இப்படி மாட்டி விட்டிருக்கலாம் என்றும், கிராம் கணக்கில் உள்ள சிறு சிறு விஷயங்களில் எல்லாம் போலீஸார் இறங்க மாட்டார்கள் என்றும் சால்ஜாப்பு கூறியுள்ளனர் போலீஸார்.
இந்தச் சம்பவமும், போலிஸாரின் மெத்தனமும் கடையநல்லூர் தொகுதி மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களிலும் பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது.



