July 31, 2021, 6:15 pm
More

  ARTICLE - SECTIONS

  திருப்புகழ் கதைகள்: தேவர்களுடன் கண்ணன் போர் புரிந்தது!

  கண்ணபிரான் இந்திரன் முதலிய இமையவருடன் போர்புரிந்து வென்று பாரிஜாத விருட்சத்தை மண்ணுலகிற்குக் கொணர்ந்த

  thiruppugazh stories
  thiruppugazh stories

  திருப்புகழ் கதைகள் பகுதி 49
  வரைத்தடங் கொங்கை (திருப்பரங்குன்றம்) திருப்புகழ்
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  தேவர்களுடன் கண்ணபிரான் போர் புரிந்த வரலாறு

  செருக்கு எழுந்து உம்பர்சேனை
  துளக்க வென்று, அண்டம் ஊடு
  செழித்திடுஞ் சங்கபாணி

  இந்த ஏழாவது அடி, கண்ணபிரான் இந்திரன் முதலிய இமையவருடன் போர்புரிந்து வென்று பாரிஜாத விருட்சத்தை மண்ணுலகிற்குக் கொணர்ந்த வரலாற்றைத் தெரிவிக்கின்றது.

  பாரிஜாத மலர் வரலாறு

  பூபாரம் தீர்க்கவந்த புருஷோத்தமனாகிய கண்ணபிரான் துவாரகையில் வாழ்கின்றார். பாமா-ருக்மிணி இருவரும் அவருடைய மனைவியர்களாக விளங்கினார்கள். இவர்கள் சீதேவி பூதேவிகளின் அம்சங்கள்.

  ஒருநாள் திரிலோக சஞ்சாரியாகிய நாரதமுனிவர் இந்திரலோகத்திலிருந்து பாரிஜாத மலரால் தொடுத்த பரிமள மிக்க மலர் மாலையைக் கொணர்ந்து கண்ணபிரானிடம் கொடுத்து அவரைத் துதிசெய்து மகிழ்ந்து சென்றார். கண்ணபிரான் அப்பாரிஜாத மலர்மாலையை ருக்குமிணி அம்மையாரிடம் கொடுத்தார். மாலை அணிந்த உருக்குமணி அம்மையைக் காண மாலையில் சத்யபாமா வந்தார்.

  தேவலோக மலர்மாலையைக் கண்டு அதிசயம் உற்றார். அதன் நறுமணம் நாசியைத் தொளைத்தது. “இது ஏது?” என்று வினவினார். உருக்குமணியம்மை “இது இந்திரனுடைய நந்தவனத்திலுள்ள பாரிஜாத மலர்மாலை; இதை அணிந்து கொண்டவர் இளமை நலங்குன்றாது இருப்பர். இதனை இன்று பகவான் பரிந்தளித்தார்” என்று கூறினார்.

  சத்யபாமை தனது இல்லம் சென்று அந்த பாரிஜாதத்தை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா ஏன் தன்னிடம் கொடுக்கவில்லை என வருந்தினாள். அச்சமயம் நாரத முனிவர் அங்கு வந்து சத்யபாமையைக் கண்டார். சத்யபாமை அவரைத் தொழுது அழுதாள். அப்பொது நாரதர் – இது உலக இயல்பு.

  ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா உனிடம் காட்டும் அன்பு அவ்வளவுதான். நீ கொடுத்து வைத்தது அவ்வளவுதான். மனதைத் திடப்படுத்திக் கொள் – என்று கூறிவிட்டுச் சென்றார். நாரதர் சொல் சத்யபாமாவின் கோபத்தை, தாபத்தை அதிகப்படுத்திவிட்டது. இரவு வழக்கம்போல் கண்ணபிரான் சத்யபாமையின் திருமாளிகைக்கு வந்தார். அவளது கோலம் கண்டார்.

  அவளிடம் அவளது கோபத்திற்கு காரணம் யாது? என்று வினவினார். சத்யபாமா பாரிஜாதம் பற்றிச் சொல்ல ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா அதனை தேவலோகத்தில் இருந்து கோண்டு வருகிறேன் என உறுதி கூறுகிறார். அந்த வேளையில் நாரத முனிவர் அங்கு வந்தார். அவரிடம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா – சீக்கிரம் போய் இந்திரனைக் கண்டு, நான் கூறியதாகக் கூறி பாரிஜாத விருட்சத்தை இங்கு அனுப்புமாறு செய்யும். இப்போதே அம்மரம் இங்கு வரவேணும்” என்றார்.

  நாரத முனிவர் விரைந்து விண்ணுலகம் புகுந்து இந்திரனைக் கண்டு கண்ணபிரானுடைய கட்டளையைக் கூறினார். இந்திரன் அது கேட்டு புன்முறுவல் செய்தான். “நாரத முனிவரே! இது என்ன விந்தை! பொன்னுலகத்தில் உள்ள பாரிஜாதத்தை மண்ணுலகத்திற்கு அனுப்புவதா? இது பாற்கடலில் அமுதத்துடன் பிறந்த ஐந்து தருக்களாகிய கற்பகம், அரிசந்தனம், பாரிஜாதம், மந்தாரம், சந்தானம், என்ற தருக்களில் ஒன்று.

  இதன் மகிமை அளவிடற்கரியது. ஆதலின் இதனை அனுப்புவது முடியாத காரியம். வேண்டுமாயின் இதன் மலரை அனுப்புவேன்” என்றான். நாரதர் இச்செய்தியை வந்து பார்த்தசாரதியிடம் சொன்னார். உடனே வேணுகோபாலர் சினமடைந்தார்.

  “நரகாசுரனைக் கொன்று விண்ணுலகை அவனுக்குத் இந்தியனுக்கு அளித்த உதவியை ஒரு சிறிதும் அவன் நினைக்கவில்லை, அவனுக்கு புத்தி புகட்டுவேன்” என்று ஆயுதபாணியாகத் தேர் ஏறி விண்ணுலகம் சென்றார். தேவர்கட்கும் தேவகி புதல்வருக்கும் கடும் போர் நடந்தது. அமரர்கள் புறங்காட்டி ஓடினர். இந்திரன் வந்து எதிர்த்தான். அவனுடன் சிறிது நேரம் போராடி அவனை அழிக்கத் திருவுளங்கொண்டு ஸ்ரீகிருஷ்ணன் சக்கரப்படையை எடுத்தார்.

  அப்போது காசியப முனிவர் எதிரே தோன்றி இருவருக்குஞ் சமாதானம் செய்து போரை நிறுத்தினார். இந்திரன் கண்ணபிரானைத் வணங்கி பாரிஜாத விருட்சத்தைக் கொடுத்து அனுப்பினான். அதனைப் பகவான் கொணர்ந்து சத்யபாமையின் அரண்மனையில் வைத்தார். சத்யபாமை மனம் மகிழ்ந்தாள்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  28FollowersFollow
  74FollowersFollow
  1,331FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-