கட்டுரை – ராஜி ரகுநாதன், ஹைதராபாத்
வருடத்திற்கு ஒருமுறை சிராவண மாதத்தில் பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக் கிழமையன்று பெண்கள் ஸ்ரீமகாலக்ஷ்மியை வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமியாக விரத நியமத்தோடு பூஜை செய்து வணங்குகிறார்கள். அஷ்ட லட்சுமிகளின் ஒருமித்த வடிவம் வரலட்சுமி.
இந்த நோன்புப் பண்டிகை பல விஞ்ஞான உண்மைகளை விளக்குகிறது. நம் சம்பிரதாயங்கள் அனைத்தும் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டவை. பிரகிருதி சக்தியின் மீது பக்தியையும் சிரத்தையையும் வளர்க்கும் விதமாக நம் முன்னோர் இவற்றை ஏற்படுத்தி நமக்கு அளித்துள்ளனர்.
‘சம்பிரதாயம்’ என்றால் சம்+ப்ரதாயம். அதாவது சிறப்பாக அளிக்கப்பட்டது என்று பொருள். நம் முன்னோரால் நம் நலன் கருதி நமக்கு பாரம்பரியமாக வழங்கப்படும் சடங்குகள், தெய்வ வழிபாடுகள் இவை.
பருவமழை ஆரம்பித்துப் பெய்து வரும் ஆவணி மாதத்தில் விவசாயத்தை ஆதாரமாகக் கொண்ட நம் நாட்டில் செல்வத்திற்குத் தாயான லக்ஷ்மி தேவியின் கருணை வேண்டி பிரார்த்திக்கும் இந்த விரதத்தில் பல அர்த்தங்களும் பரமார்த்தமும் நிரம்பி உள்ளன.
நாம் பூஜை ஆரம்பிக்கும் முன் வீட்டையும் வாசலையும் சுத்தம் செய்து மாவிலை தோரணம் கட்டுகிறோம். அம்மனின் பூஜை மண்டபத்தையும் மாவிலை தோரணங்களால் அலங்கரிக் கிறோம். சுத்தமும் தூய்மையும் தெய்வீகத்தை வரவேற்று உபசரிப்பதற்கான முதற்படிகள். மாவிலைத் தோரணம் பிராண வாயுவை வெளியிட்டு பூஜைக்கு வரும் பெண்களின் ஆரோக்கியத்திற்கு உத்தரவாதமளிக்கிறது.
அடுத்து கலச ஸ்தாபனம். அழகாகக் கோலமிட்ட பீடத்தின் மீது வாழையிலையில் நெல் பரப்பி அதன் மத்தியில் கலசத்தை வைத்து, அதில் அரிசியிட்டு, பொன் அல்லது வெள்ளி நாணயம், வெற்றிலை, முழுப் பாக்கு, மஞ்சள் கிழங்கு, பேரீச்சை, காதோலை கருகமணி, ரூபாய் நாணயம் போன்றவற்றால் நிரப்புகிறோம்.
சில இல்லங்களில் கலசத்தில் நீர் நிரப்பி அதில் பொருட்களை இடுவதுண்டு. கலசத்தின் மேல் மாவிலை வைத்து மஞ்சள் பூசிய தேங்காயை அமர்த்துகிறோம். தாழம்பூவால் ஜடை பின்னுகிறோம். அம்மனுக்கு வளையலணிவிக்கிறோம். தேங்காய்க்கு மாவினால் கண், மூக்கு வைத்து அம்மனை அதில் காண்கிறோம். அல்லது வெள்ளி முகத்தை அதில் செருகி வைக்கிறோம்.
சிலர் கலசத்தின் மேல் சுண்ணாம்பு, கண் மை இவற்றால் முகம் எழுதி, குங்குமத்தால் வாயும் உதடும் சிவப்பாக வரும்படி வரைவதுண்டு. அவரவர் விருப்பத்திற்கேற்ப கலசத்தின் கழுத்தில் ஆபரணங்களும், அம்மனுக்கு ஆடை அலங்காரமும் இருக்கும்.
இதில் ஈடுபடும் சுமங்கலிப் பெண்களின் மனோ நிலையை நினைத்துப் பாருங்கள்! எத்தனை பரவசம்! பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து, அதனை நடத்துவிக்கும் இயற்கைச் சக்தியைத் தாயாக பாவித்து, “அம்மா!” என்றழைத்து, தன் கையால் அவளை அலங்கரித்து ஆராதிக்கும் நம் கலாசாரத்தில் உள்ள அன்யோன்ய பாவனையின் அற்புதம் விளங்கும்.
தாயின் அரவணைப்பில் கிடைக்கும் அன்பு, பாதுகாப்பு, வாத்சல்யம், தைரியம் போன்றவற்றை இந்த விரதத்தின் முற்பகுதியிலேயே உணரத் தொடங்கி விடுகிறோம்.
‘ஸ்ரீ’ என்பது ஐஸ்வர்யங்களுக்குச் சின்னம். ‘வரம்’ என்றால் சிறப்பானது, சிரேஷ்டமானது என்று பொருள். நாம் சிறப்பானவற்றையே எப்போதும் அடைய விரும்புகிறோம். அவற்றை அளிப்பவளே வரலட்சுமி.
கலசத்தில் நாம் இடும் பொருட்களின் தாத்பர்யம் என்ன? குழந்தைக்குத் தாய் செய்து மகிழ்வது போல எதற்காக இப்படி அலங்காரம் செய்கிறோம்? வரலட்சுமி விரதம் காமிய வழிபாடு எனப்படுகிறது. அதாவது கோரிக்கையை ஈடேற்றும்படி இல்லறத்தார் தெய்வத்தை வேண்டிச் செய்யும் பண்டிகை.
பிரம்மாண்டத்தின் குறியீடான கலசத்தில் செல்வம், பசுமை, நற்பலன், மங்களம் இவை நிரப்பி வழிபடப்படுகின்றன. இவற்றின் மூலம் ஆண்டு முழுவதும் வயிறு நிரம்ப அன்னத்திற்குக் குறைவு வராமல் காக்கும்படி அம்மனை வேண்டுகிறோம்.
வெற்றிலை, பாக்கு, மஞ்சள் போன்ற மங்கலப் பொருட்கள் வீட்டில் ஆண்களின் ஆரோக்யத்தைக் காத்து பெண்களை சுமங்கலிகளாக வைக்கும்படிக் கோரும் பிரார்த்தனையின் வெளிப்பாடு. பொன், வெள்ளிக் காசுகளும், ரூபாய் நாணயமும் ஐஸ்வர்த்தை நாடும் நம் வேண்டுதலை அம்மனுக்குத் தெரிவிக்கின்றன.
அதே போன்று புதுப் புடவை அல்லது ரவிக்கைத் துணி நமக்கு வஸ்திரக் குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்படி அம்மனுக்கு நாம் வைக்கும் விண்ணப்பம்.
இவ்விதம் நம் தேவைகளையும் கோரிக்கைகளையும் ஒன்றாகச் சேர்த்து கலசத்தில் இட்டு அம்மனை ஆவாஹனம் செய்கிறோம்.
அதே போல் முழுமையைக் குறிக்கும் எண்ணான ஒன்பது முடிச்சுகள் இட்டு மஞ்சள் சரடு தயார் செய்கிறோம். அதில் பூ முடிக்கிறோம். ஏன்? இது நவகிரகங்களின், நவ துர்கைகளின் அருளால் நவ தானியங்கள் நன்கு விளைந்து நோய்களின்றி சமுதாயம் வாழவேண்டும் என்பதற்காக.
ஆரோக்கியம், சௌபாக்யம், ஐஸ்வர்யம் இவற்றை வேண்டிச் செய்யும் பூஜையாதலால் நம்மிடம் இருக்கும் சிறப்பான, சிரேஷ்டமான பொருட்களை அம்மனுக்குச் சமர்பித்து ஆனந்தமடைகிறோம்.
மாலையில் அண்டை அயல் பெண்களை அழைத்து மஞ்சள், குங்குமம், தாம்பூலம், கொண்டைக் கடலை சுண்டல் அளித்து மகிழ்கிறோம். அவர்களை அம்மனாக நினைத்து கௌரவிக்கிறோம்.
மெய்ஞானமும், விஞ்ஞானமும் இணைந்த இப்பண்டிகை சிநேகம், உதவும் குணம், ஒற்றுமை இவற்றை வளர்க்கும் உத்தேசத்தோடு அமையப்பெற்றது..
மஞ்சளும், குங்குமமும் சுபத்தைக் குறிக்கும் பொருட்கள். அதோடு கூட ஆரோக்யத்தையும், அழகையும் அதிகரிக்கச் செய்பவை. மஞ்சள் மருத்துவ குணங்கள் நிரம்பியது. கிருமி நாசினியும் கூட. தாம்பூலம் நட்பையும் உறவையும் வளர்க்கும் குணம் கொண்டது. கொண்டைக் கடலை போஷாக்கு நிறைந்த சத்துணவு. இவற்றைப் பெண்களுக்கு அளிப்பதன் உட்பொருள் அனைவரும் சுக சௌக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே. இது சமுதாய நலன் கோரும் நற்செயல்.
வரலட்சுமி அம்மனைப் பூஜித்து மகிழும் நாம் அவள் நம் வீட்டில் நிலைத்து நிற்க வேண்டுமானால் பெரியவர்களை மதித்து நல்ல பழக்க வழக்கங்களோடும் நியம நிஷ்டையோடும் வாழப் பழக வேண்டும்.
பக்தியோடு பூஜிப்போருக்கு வரங்களை அள்ளித் தரும் வரலட்சுமியை வணங்கி மகிழ்வோம்.