காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி அறை இன்று திறக்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் பழமையும் வரலாற்று சிறப்பும் மிக்க வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் 1961-இல் கண்ணாடி அறை புதிதாக அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 2006 இல் அந்த அறை பழுது பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கண்ணாடிகளின் பாதரசமும் அதிலிருந்த மரக்குச்சிகளும் செல்லரித்துப் போயிருந்தது. இதனால் பெருமாளின் பக்தர்களில் ஒருவரான தாமல்.எஸ்.நாராயணன் ரூபாய் 10 லட்சம் மதிப்பில் முழுவதுமாக திருப்பணி செய்து கண்ணாடி அறையை புதுப்பித்தார்.
இதற்கான திறப்பு விழாவில், கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
புதிதாக திறக்கப்பட்ட கண்ணாடி அறையில் உற்சவர் தேவராஜ சுவாமி ஸ்ரீதேவி – பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன. திருக்கோவில் அர்ச்சகர்கள் ஸ்தானீகர்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அர்ச்சனை செய்தனர்.
உபயதாரர்கள் தாமஸ் நாராயணன் கோவில் நிர்வாகத்தினால் கௌரவிக்கப்பட்டார். பக்தர்கள் அதிகாலை நீண்ட நேரம் காத்திருந்து உற்சவர் தேவராஜ சுவாமி கண்ணாடி அலங்காரத்தை தரிசித்தனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள பெருந்தேவி தாயாருக்கு விழா காலங்களில் கோயிலுக்கு உள்ளேயே உற்சவ புறப்பாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி விழாக்காலங்களில் பெருந்தேவித் தாயாரை சுமந்து செல்வதற்கு ஏற்றவாறு, வெள்ளி கவசத் தடிகளை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் மடத்தின் சீடரான சென்னையை சேர்ந்த லட்சுமி நரசிம்மன் வழங்கினார்.
தனது சொந்த செலவில் ரூ.13.35 லட்சம் மதிப்பில் 9 அடி ஆலமர விழுதை பயன்படுத்தி 19,446 கிராம் வெள்ளித் தகடு பதித்து, இந்த வெள்ளித்தடிகள் செய்யப்பட்டுள்ளன.
இதனை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் முன்னிலையில் வரதராஜ பெருமாள் கோயிலில் தாயார் சன்னதிக்கு மேளதாளங்கள் முழங்க வெள்ளிதடிகள் நேற்று ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
பின்னர் பெருந்தேவி தாயார் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பெருந்தேவி தாயாருக்கு பயன்படுத்த கோயில் செயல் அலுவலர் என்.தியாகராஜனிடம் வெள்ளி கவசத்தடிகள் வழங்கப்பட்டன.
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் நவராத்திரி உற்சவம் தொடங்குகிறது. தினசரி காலையில் பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும் மாலையில் பெருமாளும் தாயாரும் திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் திருவீதியுலா வரவுள்ளனர்.