வாகனங்களில் ஹாரன் ஒலி எழுப்பினால் அதில் இந்திய இசை வருவதை கட்டாயமாக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலை திட்ட பணிகள்
துவக்க விழாவில் நிதின் கட்கரி பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது: போலீஸ் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களில் ஒலிக்கும் சைரன் சத்தம் கேட்பவர்களுக்கு எரிச்சல் கொடுக்கக் கூடிய வகையில் இருக்கிறது. எனவே அதை மாற்றி ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பாகும் இசை கோர்வையை, அவசர வாகனங்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
ஆகாசவாணி ரேடியோவில், இசை
கலைஞர் உருவாக்கிய இசை அதிகாலை நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படுவது வழக்கம்.
அந்த ஒலி கோர்வையை போலீஸ் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவற்றில் பயன்படுத்தலாம் என்று நான் நினைக்கிறேன். இதன் மூலம் கேட்பவர்களுக்கும் மனதில் பதட்டம் ஏற்படாது.
தற்போது உள்ள சைரன் ஒலி சத்தம் எரிச்சலை உண்டு செய்வதாக இருக்கிறது. இவை காதுகளுக்கும் கேடு விளைவிக்கக் கூடியவை.
வாகனங்களின் ஹாரன் சத்தம் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் செய்து வருகிறோம். இந்திய இசை கருவிகளின் ஒலி மட்டுமே வாகனங்களின் ஹாரன் சத்தத்தில் இருந்து வரும் வகையில் சட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
புல்லாங்குழல், தபலா, வயோலின், மவுத் ஆர்கன், ஹார்மோனியம் போன்ற ஒலி வரும் வகையில் ஏற்பாடு
செய்யப்படும்.
மும்பை-தில்லி இடையே ஒரு லட்சம் கோடி மதிப்பீட்டிலான நெடுஞ்சாலை திட்ட பணிகள் ஏற்கனவே கட்டுமான நிலையில் இருக்கின்றன. இது ஜவகர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை பகுதி வரை இணைக்கும்.
கடலில் ஒரு பாலம் கட்டி அதை பாந்த்ரா-வோர்லி கடல் இணைப்போடு இணைக்க திட்டமிட்டுள்ளேன். பின்னர் அது நரிமன் பாயிண்டிலிருந்து தில்லிக்கு 12 மணிநேரத்தில் வாகனங்களில் செல்ல வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும்.
இந்த சாலை அமைந்தால், மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் விபத்துகள் 1.5 லட்சம் மக்களின் உயிரைப் பறிக்கிறது. லட்சக்கணக்கானோர் காயமடைகிறாக்ல். சாலை விபத்துகளால் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்தை இழக்கிறோம்.
மும்பை-புனே நெடுஞ்சாலையில் விபத்துகள் 50 சதவீதம் குறைந்துள்ளன. தமிழக அரசு விபத்துகள் மற்றும் இறப்புகளை 50 சதவீதம் குறைத்துள்ளது, ஆனால் மகாராஷ்டிராவில் இதே போன்ற வெற்றியை அடைய முடியவில்லை, என்றார்.
மஹாராஷ்டிராவில் விபத்துகளால் அதிக மக்கள் இறப்பதாகவும் நிதின் கட்கரி கூறினார். மேலும், வாகனங்களுக்கு ஆறு ஏர்பேக்குகளை கட்டாயமாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.