
இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட்,
அகமதாபாத், நான்காம் நாள், 12.03.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அகமதாபாத்தில் நடக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்க்ஸில் 167.2 ஓவர்கள் விளையாடி 480 ரன்னிற்கு ஆல் அவுட் (உஸ்மான் க்வாஜா 180, கிரீன் 114, மர்ஃபி 41, ஸ்மித் 38, நாதன் லியன் 34, ஹெட் 32, அஷ்வின் 6/91, ஷமி 2/134, ஜதேஜா 1/49, அக்சர் படேல் 1/47).
இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 178.5 ஓவர்கள் விளையாடி 571 ரன்னுக்கு ஆல் அவுட் (கோலி 186, கில் 128, அக்சர் படேல் 79, ஜதேஜா 44, புஜாரா 42, ரோஹித 35, லியன் 3/151, மர்பி 3/113, ஸ்டார்க் 1/97).
ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 ஓவர் விளையாடி விக்கட் இழப்பின்றி 3 ரன்.
நேற்றைய, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 289 ரன் எடுத்திருந்தது. விராட் கோலி 59 ரன்னுடனும் ஜதேஜா 16 ரன்னுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். இன்று காலை முதலே இருவரும் நன்றாக விளையாடினர். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு ரன் அதிகம் எடுக்க முடியாதபடி இருந்தது.
பேட்டர்கள் எப்போது சோர்வடைவார்கள் என பந்துவீச்சாளர்கள் காத்திருக்க, பந்துவீச்சாளர்கள் எப்போது சோர்வடைவார்கள் என பேட்டர்கள் காத்திருந்தனர். ஜதேஜா முதலில் ஆட்டமிழந்தார். அதுவும் ரன் ரேட்டை அதிகப்படுத்தும் முயற்சியில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு காயம் பட்டிருப்பதால் அவர் இன்று பேட்டிங் செய்யவில்லை. எனவே ஜதேஜா ஆட்டமிழந்த பின்னர் பரத் ஆடவந்தார். அவர் கீரீன் வீசிய ஒரு ஓவரில் இரண்டு சிக்சர், ஒரு ஃபோர் அடித்தார். மொத்தத்தில் ஆடுகளத்தில் நின்று விளையாடினால் அதற்குப் பலன் உண்டு என்பதை கில்லும் (235 பந்துகள் 128 ரன்), கோலியும் (364 பந்துகள் 186 ரன்), மற்ற வீரர்களுக்கு (474 பந்துகள் 257 ரன்) உணர்த்தினார்கள்.
கோலி 1205 நாள்களுக்குப் பின்னர் தனது 28ஆவது சதத்தை அடித்தார். கோலி கில்லுடன் இணைந்து 58 ரன்கள் (கோலி மட்டும் 32 ரன்), ஜதேஜாவுடன் இணைந்து 64 ரன் (கோலி மட்டும் 35 ரன்), பரத்துடன் இணைந்து 84 ரன் (கோலியின் பங்கு 31 ரன்), அக்சர் படேலுடன் இணைந்து 162 ரன் (கோலியின் பங்கு 79 ரன்) அடித்தார். மிக மிக அற்புதமான உடலுழைப்பு.
இந்திய அணி ஆட்டநேர முடிவில் 88 ரன்கள் அதிகம் என்ற நிலையில் உள்ளது. நாளை சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆட்டக்களம் அமைந்தால் இந்தியா வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் ஆட்டம் ட்ராவில் முடியும்.