
ராஜபாளையத்தில் முயல், காட்டுப்பன்றிகளை வேட்டையாடி, வன்முறையை தூண்டும் விதத்தில் டிக் டாக்கில் விடியோ பதிவிட்ட பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை வனத்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே வடகரையை அடுத்த குடல்பூரி நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. பாலிடெக்னிக் 2ம் ஆண்டு படித்து வரும் இவர், தற்போது பொது முடக்கம் என்பதால் வீட்டில் இருந்துள்ளார். இரவில் தான் வளர்க்கும் நாய்களை அழைத்துக் கொண்டு முயல் மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடி, அந்த காட்சிகளை, வன்முறையைத் தூண்டும் சினிமா வசனங்களுடன் டிக் டாக்கில் பதிவேற்றி உள்ளார்.
இது குறித்து ராஜபாளையம் வனத்துறைக்குக் கிடைத்த தகவலின் பேரில், வனச்சரக அலுவலர் சுப்பிரமணியன், பயிற்சி வனச்சரக அலுவலர் ரவிபெருமாள் மற்றும் வனவர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர் வடகரையைச் சுற்றி உள்ள பகுதிகளில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சுற்றித் திரிந்த சிவாவை பிடித்த வனத்துறையினர், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.