நீங்கள் ஆன்லைன் மோசடியில் சிக்கி கொண்டால் எப்படி புகார் அளிப்பது என்பதை பார்க்கலாம்.
இந்தியா முழுவதும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.. புதிய புதிய கண்டுபிடிப்புகள் தொழில் நுட்பத்தின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது.
அதன்மூலம் ஒருவகையில் மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தினாலும் மற்றொருபுறம் ஆபத்தான செயல்களும் அதன்மூலம் நிகழ்கின்றன. அதன்படி இணையதளம் மூலம் தான் பெரும்பாலான குற்றங்கள் நிகழ்கின்றன
பண மோசடி செய்யும் கும்பல் தற்பொழுது இணையதளத்தின் மூலமும் பணத்தை கொள்ளையடிக்க துவங்கிவிட்டனர். அவ்வாறு ஆன்லைன் மோசடியில் நீங்கள் பணத்தை இழந்தால் எப்படி புகார் அளிப்பது..? ஆன்லைன் மோசடியில் ஏமாறாமல் இருப்பது எப்படி என்பது நாம் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம்.
பெரும்பாலும் நாம் பகுதி நேர வேலை அல்லது ஒரு கம்பெனியில் முதலீடு செய்யும் பொழுது அந்த குறிப்பிட்ட கம்பெனி அரசாங்கத்தின் பதிவுடன் தான் இயங்குகிறதா போன்ற முழு விவரங்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அதற்காக நீங்கள் முதலில் கூகுள் இணைய தளத்திற்குச் சென்று Scamadviser டைப் செய்து முதலில் வரும் இணைப்பை சொடுக்கினால் உங்களுக்கு புதிய பக்கம் ஒன்று திறக்கும்..
அதில் சம்பந்தப்பட்ட கம்பெனியின் விவரத்தை டைப் செய்தால் அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைக்கும்.. 80 சதவீதத்திற்கு மேல் இருந்தால் நீங்கள் முதலீடு செய்யும் கம்பெனி பாதுகாப்பு என்பதை உறுதி செய்யலாம்.. அதற்கு குறைவாக இருந்தால் பாதுகாப்பற்றது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..
நீங்கள் இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் முதலில் https://cybercrime.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் File Complaint என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு எந்த மாதிரியான புகார் என்பதை தேர்ந்து எடுக்கவும். பின்னர் உங்களின் பெயர், கைபேசி எண் போன்ற தகவலை பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்த பின்னர் உங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ஆறு இலக்கு எண்கள் குறுஞ்செய்தி மூலம் வரும் அதனை சரியாக உள்ளிடவும். அதை உள்ளீட்டு செய்து புகார் அளிக்கும் பக்கத்திற்குள் நுழைய வேண்டும். பின்னர் உங்களுடைய குற்றம் தொடர்பான விவரங்களை பதிவு செய்யலாம்.
அதாவது குற்றம் எப்படி நடந்தது.? எதன் மூலம் நடந்தது..? எங்கு நடந்தது..? அவற்றின் ஆதாரம், இது போன்ற விவரங்கள் அதில் நீங்கள் கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும். நீங்கள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் முறையாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக அதற்கு சைபர் கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
அப்படி இல்லை என்றால் நீங்கள் 155260 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும், நீங்கள் தமிழக காவல் துறையின் https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?0 என்ற இணையம் மூலம் கூட புகார் அளிக்கலாம்.