
சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
97. எது நல்ல தானம்?
ஸ்லோகம்:
சதாம் தனம் சாதுபிரேவ புஜ்யதேதுராத்மபிர்துஸ்சரிதாத்மனாம் தனம் |
சுகாதயஸ்சூதபலானி புஜ்ஜதே பவந்தி நிம்பா: கலு காகபோஜனா: ||
பொருள்:
நல்லவர்களின் செல்வம் சத்புருஷர்களுக்கு உதவுகிறது. தீயவர்களின் செல்வம் தீய வழியில் செல்வோருக்கு உதவுகிறது. எது எவ்வாறாயினும் மாம்பழங்களை கிளிகள் தின்னும். வேப்பம்பழங்கள் காகங்கள் தின்னும்.
விளக்கம்:
சமுதாயத்தில் நற்செயல்களுக்கு உதவுவோர் இருப்பார்கள். அதற்கு மாறாக அதர்மச் செயல்களுக்கு மட்டுமே செல்வத்தை பகிர்பவர்களும் இருப்பார்கள். அது அவரவர் மன நிலையை வெளிப்படுத்துகிறது.
கோயில் கட்டுவது போன்ற நற்காரியங்களுக்கு நல்லோர் நன்கொடை அளிப்பர். நாட்டின் நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடிய, மத மாற்றங்களை ஊக்குவிக்கும் அமைப்புகளிலும் அழிவுச் செயல்களிலும் ஈடுபடுவோருக்கு நல்லோர் உதவி புரிய மாட்டார்கள்.
தேசத் துரோக செயல்களுக்கும் சமுதாய எதிர்ப்பு செயல்களுக்கும் தீயவர்களின் செல்வம் உதவி புரியும். இவர்கள் எப்போதுமே சமுதாய நலனுக்காக பைசா கூட செலவு செய்ய மாட்டார்கள். அவரவர்களின் பண்பாட்டைப் பொறுத்து அவரவர்களின் நடத்தை இருக்கும். இந்த உண்மையை எடுத்துரைக்கும் இந்த ஸ்லோகத்தில் பழங்களையும் பறவைகளையும் குறைத்து மதிப்பிடுவது கவியின் உத்தேசம் அல்ல.
இது ஒரு சமத்காரமான உவமேயம் மட்டுமே.
ஏரி, குளங்களை வெட்டுவது, மரம் நடுவது போன்ற நற்செயல் செய்வோரின் புகழ் நெடுங்காலம் நீடித்திருக்கும். குளங்களை ஆக்கிரமித்து வீடு கட்டுபவர்களையும் மரங்களை வெட்டியெறிபவர்களையும் இயற்கை கட்டாயம் தண்டிக்கும்.