லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் ஒரு வாரத்திற்கு முன்பு தவறி விழுந்த 13 வயது பள்ளி மாணவன் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லண்டனில் கடந்த ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி ஆர்க் குளோப் அகாதமி பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் சீருடைகளுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது டவர் பாலத்திலிருந்து எதிர்பாராதவிதமாக தவறி அந்த சிறுவன் தேம்ஸ் நதியில் விழுந்துவிட்டார். இதையடுத்து லண்டன் காவல்துறையினருக்கு அந்த நதியில் விழுந்தது யார் ? என்று தெரியாது. எனவே அவர்கள் காணாமல் போன வழக்கில் பதிவு செய்திருந்தனர்.
மேலும் அதே நாளில் அந்த சிறுவனுடைய பள்ளி முதல்வர் அந்த சிறுவனை காணவில்லை என்று புகார் அளித்ததையடுத்து நதியில் விழுந்தது அந்த மாணவனாக இருக்கலாம் என்று காவல்துறையினர் முடிவு செய்தனர்.
மேலும் அந்த சிறுவன் நதியில் விழுந்த போது அவரைக் காப்பாற்ற பெண் ஒருவர் அந்த நதியில் குதித்ததாகவும் ஆனால் அவரால் சிறுவனுடைய புத்தகப்பை மற்றும் ஸ்கூல் ஜாக்கெட்டை மட்டுமே மீட்க முடிந்ததாகவும் சாட்சிகள் தெரிவித்துள்ளன.
அதனை தொடர்ந்து படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களை கொண்டு அந்த மாணவனை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக அந்த சிறுவன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஏப்ரல் 28-ஆம் தேதி பிற்பகலில் ரோதெரஹிதே சுரங்கம் அருகே அழுகிய நிலையில் ஒரு சடலம் கிடந்துள்ளது. அதன்பின் அது அந்த 13 வயது பள்ளி மாணவனாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் காவல்துறையினர் அந்த மாணவன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று காலையில் பள்ளிக்கு சென்ற மாணவன் 8 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.