
இந்தியா வங்கதேசம் – இரண்டாவது டெஸ்ட் போட்டி –
இரண்டாம் நாள் – 23.12.2022
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
வங்கதேச அணி முதல் இன்னிங்க்ஸ் 227 (மொமிநுல் ஹக் 84, முஷ்ஃபிகர் ரஹீம் 26, லிட்டன் தாஸ் 25, ஷண்டோ 24, உமேஷ் யாதவ் 4/25, அஷ்வின் 4.71) ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்க்சில் 314 (ரிஷப் பந்த் 93, ஷ்ரேயாஸ் ஐயர் 87, ஷாகிப் அல் ஹசன் 4/79, டைஜுல் இஸ்லாம் 4/74) இந்தியா வங்கதேச அணிகள் விளையாடி வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் நாளில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்கள் எடுத்து அவுட் ஆனது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 19/0 என்று இருந்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கில் (20 ரன்கள்) மற்றும் ராகுல் (10 ரன்கள்) இருவரும் சொற்ப ரன் எடுத்து ஸ்பின் பவுலர் டைஜூல் இஸ்லாம் பந்தில் அவுட் ஆனார்கள்.
புஜாரா சர்ச்சையான முறையில் டைஜூல் இஸ்லாம் பந்தில் 24 ரன்களில் அவுட் கொடுக்கப்பட்டார். விராட்கோலி (24 ரன்கள்) டஸ்கின் பந்தில் அவுட் ஆன போது இந்திய அணி ஸ்கோர் 99/4. ஐந்தாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த பந்த் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக ஆடி 159 ரன்களை குவித்தனர்.
ரிஷப் பண்ட் தனக்கே உண்டான அதிரடி பாணியில் ஐந்து சிக்ஸர்கள் அடித்து விளையாடினார். எப்படி போட்டாலும் ஒத்த கையில் பவுண்டரி சிக்ஸர் என்று T20 மாதிரி விளையாடிய பந்த் 49 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இதுவரை ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் அடித்துள்ளார். இவை எல்லாமே கடினமான வெளிநாட்டு மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அடித்தவை. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மண்ணில் சதங்கள் அடித்து பந்த் சாதனை படைத்துள்ளார். ரிஷப் பந்த், இந்த டெஸ்ட் மேட்சில் தனது ஆறாவது சதத்தை அடிக்க போகிறார் என்று ஆவலாக பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 93 ரன்கள் அடித்திருந்த போது மெஹதி ஹசன் வீசிய பந்தில், சதம் அடிக்கும் பதட்டத்தில், தேர்ட்மென் திசையில் ஒரு ரன் எடுக்க பார்த்து கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அதன் பின்னர் ஏறத்தாழ 19 ஓவர்கள் ஆடிய இந்திய அணி வீரர்கள் 61 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தனர். அதன் பின்னர் ஆறு ஓவர்கள் ஆடிய வங்கதேச அணி விக்கட் இழப்பின்றி 7 ரன் எடுத்துள்ளது.